Read in : English

Share the Article

எழுத்தாளர் ஆர்.சூடாமணி (1931–2010) பெண்ணியம் பேசும் சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக தன் படைப்புகளை பேச வைத்தவர். 1950-60களில் பெண்களின் நியாயம் பிறழாத உணர்ச்சிகளை எழுத்தில் இறக்கிவைத்து, வாசிப்பின் புதிய சாளரமாக தங்கள் படைப்புகளை சித்திரித்தவர்களில் சூடாமணியும் முக்கியமான ஓர் எழுத்தாளர்.

சூடாமணியின் கதைகள் தொகுப்பின் பின்னட்டையில், ‘‘ஓர் ஆலமரமாய் விழுதுகளை பூமி மேல் தழைய விட்டவர் சூடாமணி. பலருக்கு நிழல் தந்தவர். தன் கிளைகளில் கூடு கட்டிக்கொள்ள இடம் தந்தவர். அந்த ஆழ்ந்த வாஞ்சையும், மனித நேயமும் எல்லாக் கதைகளிலும் பொதிந்திருக்கும். எந்தக் கதையை யார் திறந்தாலும் அந்த உணர்வுகள் அவர்களை எட்டும்” என்று எழுத்தாளர் அம்பை குறிப்பிட்டிருப்பார்.

எழுபதுகளில் எழுதப்பட்டதாயினும் தற்காலத்திற்கும் தொடர்புடையதான ஆண், பெண் உறவுகளை உளவியல் ரீதியில் சித்திரிக்கும் இவரது ‘அம்மா பிடிவாதக்காரி’, ‘பதில் பிறகு வரும்’, ‘தனிமைத் தளிர்’, ‘களங்கம் இல்லை’, ‘இரண்டின் இடையில்’ ஆகிய ஐந்து சிறுகதைகளை தொகுத்துக் கட்டி ‘ஐந்து உணர்வுகள்’ என்கிற திரைப்படத்தை படைத்திருக்கிறார் இயக்குநர் ஞான ராஜசேகரன்.

இயக்குநர் ஞான ராஜசேகரன்

ஏற்கெனவே, மோகமுள்’, பெரியார்’, பாரதி’, ராமானுஜன்’ போன்ற படங்களின் வாயிலாகப் பல்வேறு விருதுகளைப் பெற்று தனது தனித்துவமான அடையாளத்தோடு இயங்கி வரும் இவர், தற்போது ஆர். சூடாமணியின் வல்லமைமிக்க படைப்புகளை தன் திரைமொழியில் படைத்திருக்கின்ற அவரிடம் பேசினேன்.

கேள்வி: ‘பொதுவாகவே இயக்குநர்களின் படங்களை வைத்தே அந்தந்த இயக்குநர்கள் குறித்த ஒரு பிம்பம் மக்கள் மனத்தில் நிலைத்துவிடும். அவ்வகையில், உங்களை வாழ்க்கை வரலாறுகளையும் புதினங்களையும் திரைமொழியில் மொழியும் இயக்குநர் என்று சொல்லலாமா?”

ஞான ராஜசேகரன்: ‘‘அப்படி ஆனதென்னவோ உண்மைதான். நான் எடுத்த ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ இப்படியெல்லாம் வாழ்க்கை வரலாறுகளையும் நாவல்களையும் வைத்து எடுத்ததால், எனக்கு அப்படியொரு பிம்பம் உருவானது உண்மைதான். ஆனால், ஓர் இயக்குநருக்கு இப்படி தனிப்பட்ட பிம்பம் எதுவும் இருக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. ஓர் இயக்குநர் என்பவர் எல்லாவிதமான சப்ஜெக்ட்களையும் கையாளக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ரொம்பவும் சென்சிட்டிவாகவும் நேர்மையாகவும் படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவன். ஒரு நுட்பமான நல்ல கருத்துகளைப் பேசுகிற உள்ளடக்கத்தைக் கொண்ட படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே தவிர, வாழ்க்கை வரலாற்றுப் படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்கிறதெல்லாம் கிடையாது எல்லா சப்ஜெக்ட்களையும் எடுக்க வேண்டும் என்றுதான் எண்ணுகிறேன்.”

கேள்வி: கமர்ஷியலான படங்களை இயக்க ஏன் நீங்கள் முற்படவில்லை?”

ஞான ராஜசேகரன்: ரொம்ப பேருக்கு இதில் ஒரு சரியான புரிதல் இல்லை என்றுதான் நினைக்கிறேன். என்னைப் பார்த்து சிலபேர் அனுதாபப்படுகிறார்கள். ‘ஏன் சார், ரொம்ப நல்லா படம் எடுக்கிறீங்க, கமர்ஷியலாவும் எடுக்கலாமே’ என்பார்கள். பக்கா கமர்ஷியலான படங்கள் எடுக்க வேண்டிய அவசியமும் எண்ணமும் எனக்கு இல்லை.

ஆனால், சினிமாத் துறையைப் பொறுத்தவரையில் கமர்ஷியல் உலகம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். சினிமா என்கிற பவர்ஃபுல் மீடியாவில் எல்லாம் இருக்கத்தான் வேண்டும். பொழுதுபோக்கு, சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள் என பலவிதமான சப்ஜெக்ட் உள்ள படங்களும் வரும். எனவே, ஜனரஞ்சகமாகவும் இருக்கத்தான் செய்யணும். ஏனென்றால், சினிமா பவர் ஃபுல்லானா மீடியமாக ஆனதற்கு காரணமே அந்த ஜனரஞ்சகத் தன்மைதான். சினிமாவைப் படைப்பதிலும் ரசிப்பதிலும் எல்லாவிதமான தரப்பினரும் உண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தொன்றும் இல்லை.

இந்தியாவிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துகொண்டே திரைப்படம் எடுத்த ஒரே ஆள் நான் மட்டும்தான். இத்தனைக்கும் எனது நான்கு படங்களை அதிகாரியாக இருந்துகொண்டே அனுமதி பெற்று அந்தப் படங்களைச் செய்தேன்.

நான் வேறொரு துறையில் இருந்து இங்கே வந்தவன். இங்கே வந்ததற்கான ஓர் அர்த்தமும் நியாயமும் வேண்டும். சென்சிடிவான நல்ல திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்கிற வேட்கையோடுதான் நான் இங்கே வந்தேன். அதைமீறி, ஒரு கமர்ஷியலாகப் பண்ண வேண்டும் என்கிற அவசியம் எனக்குத் தோன்றவில்லை.

என்னுடைய படங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். அதேநேரம், என்னுடைய தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண்டும் என்கிற அக்கறை எனக்கு உண்டு. ஒரு படம் என்றால் அது ஒரு நல்ல விஷயத்தை தொடர்புப்படுத்த வேண்டும். அதில் ஒரு நுட்பமான உணர்வுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இன்றைக்கு பெரும்பாலும் நடிகர்களுக்காகத்தான் கதை சமைக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில், நான் முதலில் ஸ்கிரிப்ட் எழுதி முடித்துவிடுவேன். பிறகு அதற்கேற்ற நடிகர்களைத் தேர்வு செய்வேன். நடிகர்களை முதலில் தேர்வு செய்துவிட்டு அவர்களுக்கேற்ப கதை எழுதும் பழக்கமும் விருப்பமும் எனக்கு இல்லை.

கதையை எழுதிவிட்டுத்தான் நடிகரைத் தேர்ந்தெடுப்பேனே தவிர, நடிகரைத் தேர்ந்தெடுத்துவிட்டு அவருக்காக கதை எழுதுகிற பழக்கம் எனக்கு இல்லை.

எனது ‘பெரியார்’’ படத்தை எடுத்துக் கொண்டால், பெரியார்தான் நாயகன். படம் முழுக்க அந்த கதாபாத்திரம் வரும். எனவே, கதையை எழுதிவிட்டுத்தான் நடிகரைத் தேர்ந்தெடுப்பேனே தவிர, நடிகரைத் தேர்ந்தெடுத்துவிட்டு அவருக்காக கதை எழுதுகிற பழக்கம் எனக்கு இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

நான் திருச்சூரில் கலெக்டராக இருந்தேன். ஆயுர்வேத மருந்துகளுக்கு ரொம்பவும் பிரசித்தி பெற்ற இடம் அது. அங்கே ஒரு பழமொழி உண்டு. அதை எப்படி சொல்வார்கள் என்றால், அடிப்படையில் எல்லா லேகியமும் ஒன்றுதான் அதன் மீதுள்ள லேபிள் மட்டும்தான் வெவ்வேறு என்பார்கள். அதுபோல, இன்றைக்கு உள்ள நம்ம சினிமாவைப் பார்த்தீர்கள் என்றால், கமர்ஷியல் சினிமா என்பது ஒரே லேகியம்தான். இது இந்த நடிகரின் படம்… இது அந்த நடிகரின் படம் என்று லேபிள்தான் வெவ்வேறாக இருக்கும். அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கென ஒரு இன்ட்ரோ வைக்கிறார்கள். அவருக்கேற்றார்போல் ஒரு சண்டைக்காட்சி வேண்டும் என்கிறார்கள். க்ளைமாக்ஸ் வேண்டும் என்கிறார்கள். அடிப்படையில் பார்த்தால், எல்லாம் ஒரே லேகியம்தான். இது ஒரு விளையாட்டுதான்… ஒரு கேம்… மணி கேம்…(பண விளையாட்டு) அந்த மணி கேமில் இன்ட்ரஸ்ட் உள்ளவங்களால்தான் அதில் போக முடியும். அதில் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை.

இந்தியாவிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துகொண்டே திரைப்படம் எடுத்த ஒரே ஆள் நான் மட்டும்தான். இத்தனைக்கும் எனது நான்கு படங்களை அதிகாரியாக இருந்துகொண்டே அனுமதி பெற்று அந்தப் படங்களைச் செய்தேன்.

நாவலை, சிறுகதையைப் படமெடுப்பது என்று எனது களம் வேறு. வாழ்க்கை என்பது பறத்தல் கிடையாது. நடத்தல்.. நான் நடக்க விரும்புகிறேன். இங்கே பலபேர் மிகைப்படுத்தலே சுவாரசியம் என்று நினைக்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற வர்த்தக சினிமாவில் மென்மையான உணர்வுகளை சொல்வதற்கான ஸ்கோப்பே இல்லை. நுண்மையான உணர்வுகள் நுட்பமான உணர்வுகள் எல்லாம் அங்கே அருகிப்போய்விட்டது.”

கேள்வி: நாவல் மற்றும் சிறுகதைகளை படிக்கும்போது வாசகன் அடையும் முழுமையைத் திரைப்படங்களால் அளிக்கமுடியுமா… அது எப்படிசாத்தியப்படும்?”

ஞான ராஜசேகரன்: நிச்சயமாகக் கொடுக்க முடியும். என்ன ஒன்று என்றால், அதில் உள்ள சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நாவலைப் படிக்கும்போது நீங்கள் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். ஒரு நாவலில் உள்ள பெண் கதாபாத்திரத்தினை உங்கள் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெண் கதாபாத்திரமாகக்கூட நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். இப்படி படிக்கும்போதே, அதில் உள்ள கதாபாத்திரங்களை உங்கள் கனவுலகத்தில் நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள். ஒரு நாவலைப் படிக்கும்போது உங்களுடைய உலகம் விரிவடைகிறது. அந்த உலகத்தில் நீங்கள் அந்தக் கதையைக் கொண்டு சென்று, அது ரொம்பவும் பிடித்துப் போனால், என்ன அர்த்தம்… கதாபாத்திரங்கள் பிடித்துப் போகிறது கதையின் சம்பவங்கள் பிடித்துப் போகிறது என்பதுதானே. ஒருவகையில் நீங்களே ஒரு கிரியேட்டிவிட்டியை உருவாக்கிக்கொள்கிறீர்கள். அதற்கு நாவல் ஓர் உந்துதலாக அமைந்துவிடுகிறது. கதாபாத்திரங்கள் எல்லாம் உங்கள் கதாபாத்திரங்களாக ஆகிவிடுகின்றன.

சினிமா எடுக்கும்போது, அப்படியல்ல. ஒரு நடிகரோ, ஒரு நடிகையோ அந்தக் கதாபாத்திரமாக ஆகி விடுகிறார்கள். அது உங்கள் கற்பனையைக் குறைத்துவிடுகிறது. நிஜமாக யாரோ ஒருவர் வந்துவிடுகிறார்கள். நிஜமாக உள்ள நடிகராக அந்தக் கதாபாத்திரம் ஆகிவிடுகிறது. அதிலேயே அந்த கற்பனை குறைந்து விடுகிறது. இதுதான் அதில் உள்ள சவால் என்பது. நாவல் படிக்கும்போது நமக்கு இருந்த உலகம் இங்கே சுருங்கிவிடுகிறது. ஆனால், அந்த சுருக்கத்திலேயும் அந்த நாவலின் ஆன்மாவை அங்கே கொண்டு வரவேண்டும். அப்போதுதான் படமாகும் அந்த நாவல் வெற்றி பெறும். நாவலில் நீங்கள் கண்ட உலகத்தை இங்கே மறு உருவாக்கம் செய்ய வேண்டும். அதில் அந்தக் கதாபாத்திரங்களை உலவவிட வேண்டும். இதுதான் ரொம்ப சவாலானது. படிப்பது சுலபமானது. ஆனால், அதனை படமாகப் பார்க்கும்போது, அதுதான் ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய சவாலான ஒன்றாகும்.

‘மோகமுள்’’ நாவலை நான் படமாக எடுத்திருக்கேன். அதைப் படிக்கும்போது கிடைத்த உலகத்தையோ அதேமாதிரியான சந்தோஷத்தையோ, என்னுடைய சினிமா அப்படியே கொடுக்காது. ஆனால், இது வேறுவிதமாகக் கொடுக்கும். இது ஒரு மாற்று உலகம். நாவலின் ஆன்மா கெடாதவகையில் இங்கே கொடுக்க வேண்டும். அதைத்தான் வெற்றி என்று நான் நினைக்கிறேன். எழுத்து மேஜிக் என்பது வேறு. சினிமா மேஜிக் என்பது வேறு. எழுத்து மேஜிக்கை எழுத்தில்தான் பார்க்க முடியும். சினிமா மேஜிக்கை சினிமாவில்தான் பார்க்க முடியும்.”

 

கேள்வி: ஆர். சூடாமணி எழுபதுகளில் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு இப்போது திரைப்படமாக எடுக்கக்காரணம் என்ன?”

ஞான ராஜசேகரன்: பாரதியை நான் ஏன் எடுக்கிறேன்… பெரியாரை நான் ஏன் எடுக்கிறேன்… ராமனுஜனை நான் ஏன் எடுக்கிறேன்… மோகமுள்ளை நான் எடுக்கிறேன் என்றால், அவை இன்றைக்கு ஆடியன்ஸோடு கனெக்ட் பண்ண வேண்டும் எனபதுதான். ஏதோ ஒன்றை நான் எடுத்தேன் என்றால், அதற்கு மதிப்பு இல்லை. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மோகமுள்ளில் இன்றைக்கு கனெக்ட் பண்ணக்கூடிய கேள்விகள் அதில் இருந்தன. ‘‘இதுக்குத்தானா?’” என்று அந்த படத்தில் யமுனா கேட்பார். அந்தக் கேள்விக்கு என்றைக்குமே வேல்யூ உண்டு. அதனால்தான் அந்தப் படத்தை எடுக்கிறேன்.

அன்றைக்கு கேட்ட கேள்வி, இன்றைக்கும் நம்மைத் தொடர்கிற, தூண்டுகிற விஷயம் அதில் இருந்ததால்தான் நாம் அதனை எடுப்பதில் ஒரு நியாயம் இருந்தது. அதனால்தான், என் ஒவ்வொரு படத்திலும் அதற்கான ஒரு கேள்வி கேட்டு ஒரு பதில் தேடுவேன். பாரதி இன்றைக்கும் தொடர்புடையவராக இருக்கிறார். அதேபோல்தான் பெரியார். இவங்கெல்லாம் இன்றைக்கும் தொடர்புள்ளவர்களாக இருப்பதால்தான், அப்படியான படங்களை எடுக்க முடிகிறது. பார்க்க முடிகிறது.

சூடாமணி, எழுபதுக்கு முன்னால் எழுதினாலும்கூட அவங்க அந்த கதைகளில் வைத்திருந்த விஷயங்கள் இன்றைக்கும் தொடர்புடையதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கதைகளைத்தான் நான் எடுத்திருக்கிறேன். இன்றைக்கு தொடர்பில்லாதவற்றை எல்லாம் நான் எடுத்தால், அதற்கு வேல்யூ இல்லை. அந்தம்மா சைக்காலஜிக்கல் அடிப்படையில் எழுயிருக்காங்க. உளவியல் தெரிஞ்சுக்கிட்டு எழுதியிருக்காங்க. குழந்தைகளின் உளவியலை அறிந்துதான் எழுதியிருக்காங்க. எனவே, அப்படிப்பட்ட ஐந்து

ஆர். சூடாமணி (விக்கிபீடியா)

கதைகளைத்தான் நான் எடுத்திருக்கேன். அவை இன்றைக்கும் தொடர்புடையவை. அவை கேட்கின்ற கேள்விகள் இன்றைக்கும் தொடர்புள்ளவையாக இருப்பதால்தான், அதைப் பார்ப்பவர்கள் இன்று பாராட்டுகிறார்கள். பெண்ணியம் பேசும் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. எனக்கு திருப்தியான விஷயம் என்னவென்றால், இன்றைக்கு இருக்கிற கமர்ஷியல் சூழ்நிலையில் இப்படிப்பட்ட படங்களை யாரும் பார்க்க வரவில்லை என்கிற நிலையில், மிகவும் சிரமத்துக்கிடையேயும் படத்தை வெளிக்கொண்டு வந்ததுதான்.”

கேள்வி: ‘ஐந்து உணர்வுகள்’ படம் குறித்தும் படத்திற்கான வரவேற்பு எப்படி இருந்தது என்பது குறித்தும் கூறுங்களேன்.”

ஞான ராஜசேகரன்: என்னுடைய படத்தைப் பொறுத்தவரையில், உள்ளே வந்துட்டாங்கன்னா, எல்லோரும் பாராட்டுகிறார்கள் ரசிக்கிறார்கள். அந்தவகையில், ‘ஐந்து உணர்வுகள்’ ரொம்ப நல்லா பாராட்டப்பட்டது. ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றது. ஆனால், கமர்ஷியலாக சாத்தியப்படவில்லை. ஏனென்றால், ஒருபடத்தை ஒரே தியேட்டரில் ஒரு காட்சி மட்டுமே திரையிட்டால் எப்படி சாத்தியப்படும் என்பதுதான். முன்பெல்லாம், எல்லா ஊரிலும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மனப்பாங்கு உள்ளவர்கள் அதிகம் இருந்தார்கள். எல்லோரும் மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பது. வாரத்திற்கு ஒரு படம் பார்ப்பது என்று ஒரு குரூப் இருந்தது. அந்த குரூப் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து வாய் மூலமாக ஒரு படம் பாராட்டைப் பெற்று, எல்லோரும் திரண்டு தியேட்டருக்குப் போய் படம் பார்க்கும் பார்வை என்பது இன்று இல்லை.

ஐந்து உணர்வுகள்’ ரொம்ப நல்லா பாராட்டப்பட்டது. ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றது. ஆனால், கமர்ஷியலாக சாத்தியப்படவில்லை. ஏனென்றால், ஒருபடத்தை ஒரே தியேட்டரில் ஒரு காட்சி மட்டுமே திரையிட்டால் எப்படி சாத்தியப்படும் என்பதுதான்.

என்னுடைய படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு வாரம் இரண்டு வாரத்துக்குப் பிறகுதான் தியேட்டருக்கு வருவார்கள். முதல்நாளே அதிகம் வரமாட்டார்கள். அதை இப்போது செய்யமுடியவில்லை. ஆனால், ‘ஐந்து உணர்வுகள்’ படம் நவம்பர் 26 அன்று திட்டமிட்டபடி வெளியாகி, ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது. அதுவரையில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்.”


Share the Article

Read in : English