Read in : English

Share the Article

காண்டஸா கார் ஒருகாலத்தில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று. தற்போது அது திரும்பி வரும் சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கார் உலகம் ‘மஸ்ல் காரை’ப் பற்றிப் பேசும்போது, மனதிற்கு வருவது அமெரிக்காவின் மஸ்ல் கார்கள்தான். கலாச்சாரச் சின்னமான ஃபோர்டு முஷ்டாங், வெறித்தனமான டாட்ஜ் சாலஞ்சர் மற்றும் அசுரத்தனமான ப்ளைமவுத் பாரகுடா ஆகிய கார்கள் மனதிற்குள் ரீங்காரமிடுகின்றன.

இந்த அமெரிக்கன் கார்களின் பானட்டுகளில் கேட்கும் அதிரடியான அதிசக்திமிக்க சத்தங்களும், நிரம்பியிருக்கும் வாயுவை கார்கள் குடிக்கும் சத்தமும் தனித்துவமானவை. அவற்றின் கனத்த, அகலமான தோற்றங்கள் அச்சமூட்டும் தன்மையானவை.

இந்தியாவிலும் ஒருகாலத்தில் இந்தமாதிரியான மஸ்ல் கார் வகை இருந்தது. 1984-லிருந்து பலரைத் திரும்பிப்பார்க்க வைத்தது. பெரும்புகழ் கொண்ட அம்பாசடரைத் தயாரித்த அதே ஹிந்துஸ்தான் மோட்டார் (எச்எம்) நிறுவனமே மஸ்ல் கார்வகையான காண்டஸாவை உற்பத்தி செய்தது.

அந்தக் காலத்தில் காண்டஸா இந்தியாவில் பாதுகாப்பு, பகட்டு, அதிகாரம், கெளரவம் ஆகியவற்றிற்குப் புதிய தரங்களை உருவாக்கியது.

மேலும் படிக்க:

அம்பாசடர் மீண்டு(ம்) வருகிறது, மின்சாரக் கனவோடு

காண்டஸா தொடர்ந்து தனது பாரம்பரிய பெருமையை நிலைநாட்டுவதற்கான அறிகுறிகள் இப்போது தெரிகின்றன.

சமீபத்தில்தான் எச்எம் நிறுவனம் அம்பாசடரை பாரம்பரிய வழியிலும், புதிய மின்சார அவதாரத்திலும் மீட்டெடுக்கப் போவதாக அறிவித்தது.  இதற்காக பிஎஸ்ஏ (பியூஜியாட்) குழுமத்தோடு எச்எம் கொண்ட கூட்டு ஒப்பந்தம் புதிய அம்பாசடர் என்ற கனவை நிஜமாக்கவிருக்கிறது.

திருவள்ளூரில் நிறுவப்பட்ட ஆலை அம்பாசடர் காரை மட்டுமல்ல, மின்சார இருசக்கர வாகனத்தையும் உற்பத்தி செய்யவிருக்கிறது. எச்எம்-மின் கம்பீரமான திட்டத்தில் காண்டஸா உற்பத்தியும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

நவீன காண்டஸாவின் அறிகுறிகள்
அறிவுசார் சொத்து இந்தியா’ நிறுவனத்தின் ட்ரேட்மார்க்ஸ் துறையிலிருக்கும் யாரோ ஒரு மோட்டார்வாகன ஆர்வலர் நடத்திய விரிவான ஆராய்ச்சியில் சில சுவையான தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஹிந்துஸ்தான் மோட்டார் இந்த வருடம் மார்ச் 16 அன்று ’காண்டஸா’ பெயர்க்கான அறிவுசார் உரிமையைப் பெற்றிருக்கிறது. இந்தத் தகவல் ட்ரேட் மார்க்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது.

புதிய காண்டஸா பற்றி எச்எம் நிறுவனம் அறிவிப்பு எதையும் செய்யவில்லைதான். ஆனால் இப்போது இரகசியமாக திட்டம்தீட்டி, இந்திய மோட்டார்வாகன ஆர்வலர்களுக்கு பின்பு ஆகப்பெரியதோர் ஆச்சரியத்தை அளிக்க எச்எம் விரும்புவது போலத் தெரிகிறது. ட்ரேட் மார்க்ஸ் பத்திரிகைத் தகவல் சரியான (அல்லது தவறான) கண்ணில்தான் பட்டிருக்கிறது.

பெரும்புகழ் கொண்ட அம்பாசடரைத் தயாரித்த அதே ஹிந்துஸ்தான் மோட்டார் (எச்எம்) நிறுவனமே மஸ்ல் கார்வகையான காண்டஸாவை உற்பத்தி செய்தது.  

பிரியத்துக்குரிய ஆம்பியை மீட்டெடுத்துக் கொண்டுவர சமீபத்தில் எச்எம் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டபோதே, காண்டஸாவின் எதிர்காலம் பற்றிய சூட்சகம் அதில் இருந்தது. அதுவோர் ஆச்சரியம்தான். என்றாலும் தற்போது அந்த நிறுவனத்தின் திட்டம் என்னவென்பது நமக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

தேசிய ‘மஸ்ல் காரின் சரித்திரம்
ஒரு ’மஸ்ல்’ காருக்கு அதிசக்தி வாய்ந்த வீ-8 எஞ்சின் இருக்க வேண்டும் என்று யார் சொன்னது? தோற்றமே ஒரு ’மஸ்ல்’ காரை உருவாக்கிவிடும். இந்த நவீன யுகத்தில், மிகவும் புகழ்பெற்ற ஃபோர்டு முஷ்டாங் கூட 2,300 சிசி கொண்ட 4 எஞ்சினோடுதான் வருகிறது. அதிசக்தி கொண்ட அதன் சகோதர வாகனங்களோடு ஒப்பிடுகையில், இந்த 2.3-லிட்டர் வகையறா வெறும் சிறியதுதான்.

இதை மனதில் வைத்துப் பார்க்கும்போது, காண்டஸா இந்தியாவில் 1984-ல் தொடங்கப்பட்ட போது அது காலம் தாண்டிய ஒரு வாகனமாகத் திகழ்ந்தது. டாட்ஜ் சாலஞ்சரின் நெருங்கிய உறவைப் போல அதன் தோற்றம் இருந்தாலும், அதன் வடிவமைப்பு அதிகம் புகழ்பெறாத ’வாக்ஸால்’ என்ற பிரிட்டன் காரிடமிருந்துதான் இரவல் வாங்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கேட்டதை மறுக்கமுடியாத வாக்ஸால் இந்தியாவுக்குக் கருவிகளை அனுப்ப ஒப்புக்கொண்டது. 1980-ல் 1.5 மில்லியன் பிரட்டிஷ் பவுண்டுகளை விலையாகக் கொடுத்து, வாக்ஸால் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமைகளையும், திட்டங்களையும் எச்எம் வாங்கிக் கொண்டது.

பிரிட்டிஷ் வாக்ஸாலின் ‘விக்டர் எஃப்ஈ’ நம்நாட்டுக்கேற்ப காண்டஸா என்று பெயரிடப்பட்டது

வாக்ஸாலின் ‘விக்டர் எஃப்ஈ’ காரை இந்தியாவில் உற்பத்தி செய்த எச்எம், அதற்கு நம்நாட்டுக்கேற்ப காண்டஸா என்று பெயரிட்டது. ஆரம்பத்தில் காண்டஸா, வேகம் குறைந்த 1,500-சிசி 4-வேக பிரிட்டிஷ் எஞ்சினில்தான் ஓடியது. அதைப் பலர் பரிகசித்தனர்.

ஹிந்துஸ்தான் மோட்டார் அந்தப் பழைய, காலாவதியான பிரிட்டிஷ் எஞ்சினை தூர எறிந்துவிட்டு புதிய, அதிசக்தி கொண்ட ஜப்பான் எஞ்சின்களை வாங்கி மாட்டியது. நான்கு வருடத்திற்குள், உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட 2.0 லிட்டர் டீசல் கார் இசுசூ வந்தது. அதில் ஒருவகையான காண்டஸாவும் கூட  அதி மின்னேற்றம் கொண்ட 2,000 சிசி எஞ்சினைக் கொண்டிருந்தது. நெடுஞ்சாலைகளுக்கேற்ற ஆகச்சிறந்த கார் என்று காண்டஸாவை எச்எம் முன்னெடுத்துச் சென்றது.

அடிக்கடி மாறுதல்களுக்கு உள்ளான காண்டஸா இந்தியர்களுக்குப் பிடித்துப் போனது. குளிர்சாதன வசதி, அதிதிறன் ஜன்னல்கள், மரப்பலகையிலான டாஷ்போர்டு, பவர் ஸ்டீயரிங், கை வைத்துக்கொள்ள வசதி ஆகிய அம்சங்கள் இதை ஆகச்சிறந்த ஆடம்பரக் காராக்கியது.

எச்எம்-மின் கம்பீரமான திட்டத்தில் காண்டஸா உற்பத்தியும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.  

காருக்குள் ஓர் ஓற்றை படுக்கை வசதியைக் கொண்டுவந்து அதற்கு ‘ஸ்லம்பரெட்’ என்று பெயரிட்டது நிறுவனம். முன்பக்கத்து இருக்கையை மடித்து பின்னிருக்கையோடு சேர்த்து ஒரு நல்ல படுக்கையை உருவாக்கி அதில் உறங்கலாம்; அல்லது ஓய்வெடுக்கலாம்.

கவர்ச்சியான தோற்றம், இரண்டு பக்கங்களிலும் முகப்பு விளக்குகள், முன்னிருக்கும் கிரில், உள்ளே அதிக இடம் கொண்ட வசதி ஆகிய அம்சங்கள்தான் காண்டஸாவை இந்தியாவில் பிரபலமாக்கின.

இந்திய திரைப்படத்தில்
ஏராளமான இந்திய திரைப்படங்களில் காண்டஸா இடம்பெற்றிருக்கிறது. பாலிவுட் முதல் தென்னிந்திய திரைப்படங்களில் இது பெருத்த கவனத்தைப் பெற்றிருக்கிறது.

தமிழ் கதாநாயகர் தளபதி விஜய் தனது சமீபத்து படமான மாஸ்டரில் நீலவர்ண காண்டஸாவை ஓட்டியிருக்கிறார்.

2018-ல் ‘டாக்ஸிவாலா’ தெலுங்குப் படத்தில் கறுப்புநிற காண்டஸா வருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு நடந்த விளம்பர நிகழ்விலும் இந்தக் கார் காண்பிக்கப் பட்டது.

கதைக்குத் தேவையோ இல்லையோ, பல படங்களில் இசைக் காட்சிகளில் பகட்டுக்காக காண்டஸா காண்பிக்கப்பட்டிருக்கிறது.

’கிரிக் பார்ட்டி’ என்னும் கன்னடப் படத்தில், கூரை மடிக்கப்பட்ட மஞ்சள்நிற காண்டஸாவைக் கதாநாயகன் ஓட்டி வருவார். கூரை மடிக்கப்பட்டதால் காரின் அசல் தோற்றம் கெட்டுத்தான் போயிருக்கிறது. ஆனாலும் அந்தப் படம் காண்டஸாவை அழகாகவே காட்டியிருந்தது.

கொள்ளைக்கூட்டத் தலைவனோ அல்லது அரசு அதிகாரியோ காண்டஸா ஓட்டிக்கொண்டு பகட்டாக வருவதைப் பல பாலிவுட் படங்கள் காட்டியிருக்கின்றன. 1980-களிலும், 1990-களிலும் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் அந்தஸ்துக் குறியீடு காண்டஸாதான்.

ஒருவேளை இன்மதி ரகசிய உலகத்தைப் பற்றியோர் படமெடுத்தால், அதில் வரும் தலைவனின் முக்கிய அதிகாரக் குறியீடாகக் காண்டஸா திகழும் என்பது நிச்சயம்.

காண்டஸாவின் எதிர்காலம்
புதிய வடிவில் காண்டஸா வந்தால், அம்பாசடரில் இருந்ததைப் போன்றே அதிலும் உள்ளிருந்து எரிந்து ஆற்றல்தரும் எஞ்சின் இருக்கும். எச்எம் ஆம்பி விசயத்தில் செய்ததைப் போன்றே காண்டஸாவிலும் மின்வடிவம் வரலாம் என்பது நமது ஊகம்.

காண்டஸாவின் ரெண்டர்கள் சிறப்பானவை; ஆனாலும் இன்னும் சிறப்புத் தேவை. ஒரு ‘மஸ்ல்’  காருக்கான சாராம்சம் அவற்றில் இல்லை. மாறாக அம்பாசடர் ரெண்டர்கள் ‘மஸ்ல்’ காரைப்போல தோன்றுகின்றன.

இந்தியாவில் ஆடம்பரக் கார் துறையில் பாதுகாப்புத் தர அளவுகோல்கள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் காண்டஸா பல்வேறு உடனடியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம்

கேரளா நிறுவனமான ‘மைட்டி சீட்’ உருவாக்கிய ரெண்டர், பின்னாடி சாய்ந்துகொண்ட ஒரு ‘கூப்பே’ தோற்றத்தைத் தருகிறது. இன்னும் சிறப்பான வடிவத்தை எச்எம் கொண்டுவரும் நாம் நம்புகிறோம். இந்த வடிவத்தின் முன்தோற்றம் நாம் ஆவலோடு எதிர்பார்ப்பது.

கனமான, பாதுகாப்பான கார்களுக்குப் பேர்போனது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். அதனால் அதன் புதிய கார்களும் அப்படியே இருக்கலாம்.

இந்தியாவில் ஆடம்பரக் கார் துறையில் பாதுகாப்புத் தர அளவுகோல்கள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் காண்டஸா பல்வேறு உடனடியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம்.

அகில உலகக் கோணத்தில் பார்க்கும்போது, அம்பாசடரையும், காண்டஸாவையும் ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்புகள் எச்எம்-க்கு உண்டு.

ஃபோர்டு சமீபத்தில் முழுக்க மின்மயமாக்கப்பட்ட முஷ்டாங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எதிர்காலத்திற்குத் தயாரான நிலையில் அது வெகுவிரைவில் வெளிவரலாம். அதைப்போல எச்எம்-மும் கூட மின்மயமான ‘மஸ்ல்’ கார் சந்தையில் இந்தியாவைக் கொண்டு சேர்ப்பது நிச்சயம். மேலும், இந்தியாவில் இருக்கும் மஸ்ல் கார் ஆர்வலர்களும், தூய்மை வாதிகளும் அவர்கள் முன்பு வைத்திருந்த கார்களைப் போன்ற ஒரு டீசல்/பெட்ரோ வகை காரை பார்க்கக்கூடும்.

ஆம்பியின் மீளுருவாக்கம் பற்றிய நமது முந்தைய கட்டுரையில், எச்எம்-மின் இன்னொரு சிறப்புவாகனம் திரும்பிவரும் என்று கணித்திருந்தோம். அதை நாம் தெரிந்து கொள்ளும் முன்னமே, காண்டஸா பெயர்ப்பலகையின் அறிவுசார் உரிமை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது.


Share the Article

Read in : English