Read in : English

Share the Article

தமிழகத்தின் ஒரு பகுதியில், பெண்ணின் முறை மாமனும் அவரது வீட்டாரும் மாப்பிள்ளையை கேலி செய்யும் திருமண சடங்கு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 1917ஆம் ஆண்டில், ஆங்கிலேய மாவட்ட ஆட்சியராக இருந்த ஐசிஎஸ் அதிகாரியாக இருந்தவரும், திருநெல்வேலி மாவட்ட அரசிதழை தொகுத்தவருமான எச்.ஆர். பேட் இது பற்றி பதிவுசெய்திருக்கிறார்.

தூத்துக்குடியில் உள்ள நெய்தல் நில மக்களான ‘பரதவர்கள்‘ என்றழைக்கப்படும் கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தில், ‘வாசற்படி மறியல்’ என்ற சடங்கு நடைமுறையில் உள்ளது. பரதவர் சமூகத்தில் ஒரு பெண்ணை முறை மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுக்காமல், வேறு யாருக்காவது மணம் செய்து கொடுத்தால் இந்தச் சடங்கை செய்கிறார்கள். திருமணம் முடிந்து வரும் மணமக்களை வீட்டுக்குள் விடாமல் முறை மாப்பிள்ளை வாசலை மறித்து நிற்பார். இரு தரப்பினரும் பாட்டுப் பாடி, ஒரு போலியான வாக்குவாதத்தில் ஈடுபடுவர். இது, ஒரு சுவாரஸ்ய நடைமுறையாக பரதவர் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முறை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட்டு சமாதானம் செய்த பிறகே மணமக்கள் வீட்டினுள் நுழைய அனுமதிக்கக்படுகிறது.

அந்தச் சடங்கின்போது பாடப்படும் நகைச்சுவையான பாடல்களை அதிகாரி பேட் அப்போதே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தச் சமூகத்தில், உறவுகளுக்குள்ளே நடக்கும் திருமணங்களை தவிர்க்கத் தொடங்கிய பின்னர் இந்தச் சடங்கு உருவானதாகக் கூறுகிறார் நாட்டுப்புறவியலாளரான பேராசிரியர் அ. சிவசுப்ரமணியன்.

  நெருங்கிய உறவுகளுக்கிடையேயான திருமணங்களால் கிடைக்கும் சமூகப் -பொருளாதாரப் பலன்களை விட, அத்தகைய திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் அதிகமாக உள்ளன.

தற்போதும் தொடரும் ‘உறவுகளுக்குள்ளே திருமணம் செய்துவைக்கும் முறை -சாதியை விட பழமையானது’ என்று கூறும் ஆய்வாளர்கள், சொத்து தங்கள்குடும்பத்தை விட்டுப் போய்விடாமல் பாதுகாக்கவே இந்த நடைமுறை உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். உடன்கட்டை ஏறுவது, குழந்தைத் திருமணங்கள் ஆகியவையும் குடும்பச்சொத்து கைமாறுவதைத் தடுக்கவே ஏற்பட்டதாகக் கூறுகிறார் சிவசுப்பிரமணியன். ஆனால், நெருங்கிய உறவுகளுக்கிடையேயான திருமணங்களால் கிடைக்கும் சமூகப் -பொருளாதாரப் பலன்களை விட, அத்தகைய திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் அதிகமாக உள்ளன.

நெருங்கிய உறவுகளுக்கிடையேயான திருமணங்கள், தமிழர்களிடையே மரபணு முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இதுபோன்ற திருமணங்கள் குறைந்தபாடில்லை. தென் மாநிலங்களில் ரத்த அழிவுச் சோகை எனப்படும் தலசீமியா நோய் பாதிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்க ரத்தச் சிவப்பணுக்கள் தொடர்ந்து அழிந்து கொண்டே இருக்கும். இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு பத்தாயிரம் குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுகின்றனர். தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி ரத்தமாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.

தமிழர்களைப் பாதிக்கும் மற்றொரு மரபணுக் கோளாறு, ஹீமோஃபிலியா என்ற ரத்தம் உறையா பிரச்சினை ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினரிடையே சிக்கில் செல் அனீமியா எனப்படும் ரத்த சோகை அதிகமாக காணப்படுகிறது. இது கருப்பின மக்களிடையே பொதுவாகக் காணப்படும் ஒரு மரபணுக் குறைபாடு ஆகும். பழங்குடி சமூகத்தினர் தங்கள் நெருங்கிய குழுக்களுக்குள்ளேயே திருமண உறவை மேற்கொள்கின்றனர்.

ஆனால் தீமையிலும் நன்மையாக, இந்த மரபணு குறைபாடே அவர்களை மலேரியா நோயிலிருந்து காக்கிறது. கறுப்பின மக்களுக்கும் இந்த மலேரியா எதிர்ப்பு சக்தி உள்ளது.

உறவுகளுக்குள் திருமணம் செய்வதாலேயே, தசைச் சிதைவு நோய், ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் போன்றவை தமிழர்களிடையே அதிகம் காணப்படுவதாகக் கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை தலைவரும் பேராசிரியருமான ஏ. கே. முனிராஜன்.

மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்புத் துறையைச் சேர்ந்த ஆர்.எம். பிச்சப்பன் தனது ‘தென்னிந்தியாவில் சாதிகள், இடம்பெயர்வு, நோயெதிர்ப்பு மற்றும் தொற்று நோய்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரைக்காக மதுரையின் 70 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மூன்று மக்கள்தொகை குழுக்களை ஆய்வு செய்துள்ளார். வேளாளர் சமூகத்தினர் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகளும், பிறன்மலைக் கள்ளர்களும், சௌராஷ்டிரர்களும் காசநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த மூன்று சமூகங்களும் மரபணுக் குறைபாட்டைக் கொண்டிருக்கின்றன. மேலும், அவை குறிப்பிட்ட நோய்களுக்கு  எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதைத் தடுக்கின்றன.  ஆனால், இது ஒரு நோய் அல்ல, மரபணு குறைபாடு என்கிறார் முனிராஜன். ஆர்ய வைஸ்ய செட்டி சமூகத்தினரும் உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால், இதே போன்ற பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

சில சமூகங்களில் வித்தியாசமான நடைமுறை இருந்தது. உதாரணமாக, சில தசாப்தங்களுக்கு முன்பு வரை, திருநெல்வேலி நாடார்கள் கன்னியாகுமரியில் உள்ள தங்கள் பிரிவினருடன் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். கரிசல் பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேளாளர்கள், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வேளாளர்களை திருமணம் செய்ய மாட்டார்கள்.  அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், வெவ்வேறு பிராந்தியத்தில் வாழ்ந்ததால், தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றியே அவர்களுக்குப் பயமும், தவறாக அபிப்பிராயங்களும் இருந்தன. எனவே, அவர்கள் ஒரே கிராமம், நகரம் அல்லது மாவட்டத்தில் உள்ளவர்களை திருமணம் செய்வதையே விரும்பினர். தங்கள் சொந்த ஊர்களில் இருப்பதற்கும், சொத்து வேறொருவர் கைக்கு செல்வதைத் தடுப்பதற்கும், உறவுக்குள்ளேயான திருணமங்கள் உதவியதாகக் கூறுகிறார் பேராசிரியர் சிவசுப்ரமணியன்.

  ஆரோக்கியமான ஒரு ஆணும், பெண்ணும் உறவுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மரபணுக் குறைபாடுடன் பிறக்க 50 சதவிகித வாய்ப்புள்ளதாகக் கூறும் முனிராஜன், உறவுக்குள்ளே நடத்தப்படும் திருமணங்களைத் தவிர்ப்பதே இதற்கு தீர்வு என்கிறார்.

மரபணு நோய்கள் சுமையாக மாறிவருவதாகக் கூறும் முனிராஜன், ஒரு குழந்தை தலசீமியா, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம் அல்லது தசைநார் சிதைவு ஆகியவற்றால் பாதிக்கப்படும்போது ஒரு குடும்பம் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.

ஆரோக்கியமான ஒரு ஆணும், பெண்ணும் உறவுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மரபணுக் குறைபாடுடன் பிறக்க 50 சதவிகித வாய்ப்புள்ளதாகக் கூறும் முனிராஜன், உறவுக்குள்ளே நடத்தப்படும் திருமணங்களைத் தவிர்ப்பதே இதற்கு தீர்வு என்கிறார்.

தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபின், அது தேசிய சுகாதார இயக்கத்தில் சேர்க்கப்பட்டது. அதையடுத்து, நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கருத்தரித்த பின் நடத்தப்படும் சோதனைகளில் மரபணுக் கோளாறு கண்டறியப்பட்டால் கர்ப்பத்தைக் கலைத்துவிடலாம். ஆனால், கருவுற்ற பெண் ஒருமுறை இந்தச் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றால் பத்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே உறவினர்களுக்கிடையே நடைபெறும் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகளை கருவிலேயே கண்டறியலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இலவசமாக செய்துவிடலாம். ஆனால், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சோதனைகளை ஏழை மக்கள் செய்ய மாட்டார்கள். இதுவே நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால் என்கிறார் முனிராஜன்.

மரபணு நோய்கள் மற்றும் உறவுகளுக்குள்ளேயே நடைபெறும் திருமணங்கள் ஏற்படுத்தக்கூடிய குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்பிரச்சினைக்கு மிகச்சரியான தீர்வாகும். மேலும், நம் நாட்டு கலாச்சாரச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தொலைதூர உறவுகளுக்கு இடையேயான திருமணங்களை  ஊக்குவிப்பது ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.


Share the Article

Read in : English