Read in : English

Share the Article

நாகர்கோவிலை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் புகைப்பட நிபுணருமான டேவிட்சன் அவர்கள் இந்த வருடம் எதிர்பாராதவிதமாக காலமான பிறகு அவரெடுத்த 800 பறவைகள் புகைப்படங்களை குடும்பத்தினர் கண்டெடுத்தனர். அவற்றை புத்தகமாக பிரசுரிக்க அவரது குடும்பத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். அவரைப்போன்று தமிழகத்தில் எண்ணற்ற மனிதர்கள் தங்களுடைய ஆர்வத்திற்க்கேற்ப பலவற்றை சேகரிக்கிறார்கள். புத்தகங்கள், நாணயங்கள், பழம்பொருட்கள், அரிய ஆவணங்கள், புகைப்படங்கள், குறிப்புகள் என இந்த பட்டியல் நீளும்.
இவ்வாறு சேகரிப்பவர்களுக்கு ஏதாவது  எதிர்பாராவிதமாக நடந்தால் அவர்களது பல ஆண்டு தொகுப்பு என்னாவது? இறப்பு மட்டுமல்ல, இயற்கை சீற்றங்கள் கூட இந்த சேகரிப்புகளுக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்புகள் உண்டு. சைவ மடங்களை பற்றி ஆராய்ச்சி செய்பவரும் நூலகருமான ரங்கையா முருகனின் அரிய புத்தகங்களும் வடகிழக்கு மற்றும் இமயமலை பகுதிகளில் வாழும் பழங்குடியினரை பற்றிய அரிய குறிப்புகளும் புகைப்படங்களும் கடந்த 2015 சென்னை வெள்ளத்தில் அழிந்து போனதை பற்றியும் இன்மதியில் முன்பு பதிவு செய்திருந்தோம். நாட்டுப்புறவியல் அறிஞர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய பல ஆண்டு தகவல் சேகரிப்புகளை எலிகளுக்கு பலி கொடுத்ததை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

தனி மனிதர்கள் பல ஆண்டுகள் உழைத்து சேகரித்து வைக்கும் ஆவணங்களை எவ்வாறு காப்பாற்றுவது?

எனில், தனி மனிதர்கள் பல ஆண்டுகள் உழைத்து சேகரித்து வைக்கும் ஆவணங்களை எவ்வாறு காப்பாற்றுவது? புத்தகங்களை பொறுத்தவரை அவரது குடும்பத்தினருக்கு புத்தகங்களில் விருப்பம் இல்லையெனில் அவற்றை நூலகங்களுக்கோ அல்லது பழைய புத்தக விற்பனையாளர்களுக்கோ கொடுத்துவிடுவார்கள். நாணயங்கள் கதை வேறு. பழைய நாணயங்களின் மதிப்பு நாணயம் சேகரிப்போரின் மத்தியில் மிக அதிகம். பழம்பொருட்களை அரசு அருங்காட்சியகங்களில் கொடுக்கவும் சாத்தியங்கள் இருக்கின்றன என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் சாந்தலிங்கம் அவர்கள்.

ஆவணங்கள் அல்லது குறிப்புகளை காப்பகப்படுத்துவதில் எந்த நெறிமுறையும் இருப்பதாக தெரியவில்லை

காப்பகப்படுத்துதல் எனும் கலை 

முகலாயர்கள் தங்களுடைய பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் அவைக்குறிப்புகளை காப்பகப்படுத்தியதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவை அதிகம் கிடைக்கப்பெறுவதில்லை. பலவீனப்பட்டிருந்த முகலாய அரசை கிழக்கிந்திய கம்பெனி 1857ல் சிப்பாய் புரட்சியை ஒடுக்குவதன்பேரில் அழித்தொழித்த போது பல ஆவணங்கள் அழிந்து போனதாக கருதப்படுகிறது. இந்தியாவில் காலூன்றிய எல்லா காலனியாதிக்க சக்திகளும் தங்கள் ஆவணங்களை பேணுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார்கள்

காலனியாதிக்க சக்திகள் இந்தியாவை விட்டு அகன்ற போது இந்த ஆவணங்களும் அங்கு கொண்டுசெல்லப்பட்டு காப்பகப்படுத்தப்பட்டன. போர்த்துகீசிய, டச்சு மற்றும் டேனிஷ் ஆவணங்களில் பல வரலாற்று தரவுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவற்றை பற்றி நாம் ஆங்கிலேய, பிரெஞ்சு ஆவணங்களை படித்த அளவுக்கு கவனம் செலுத்தவில்லை என்கிறார் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்கள்..

கடற்கரை மாவட்டங்களில் எந்த மாதத்தில் எந்த மீன்பாடு கிடைக்கும் என்னும் அளவுக்கு ஆவணங்களை தொகுத்த ஆங்கிலேய அதிகாரிகள் இருந்தார்கள். 

தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் காப்பகப்படுத்துவதிலும் ஆங்கிலேயர்கள் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்கள். ஆங்கிலேய அரசு அதிகாரிகள் இந்தியாவில் பிரசுரமான எல்லா செய்தித்தாள்களையும் தொகுத்தார்கள். ஆங்கிலம் அல்லாத செய்தித்தாள்களை மொழி பெயர்த்து தொகுத்தார்கள். பாரதியாரின் பாடல்களை மொழிபெயர்த்து தொகுத்து வைத்திருக்கிறார்கள். கடற்கரை மாவட்டங்களில் எந்த மாதத்தில் எந்த மீன்பாடு கிடைக்கும் என்னும் அளவுக்கு ஆவணங்களை தொகுத்த ஆங்கிலேய அதிகாரிகள் இருந்தார்கள்.

சுதந்திர இந்தியாவில் ஆவண காப்பகங்கள்

இந்தியாவிற்கான ஆவண காப்பகத்தை வெள்ளை அரசாங்கம் 1891ம் ஆண்டு கல்கத்தாவில் அமைத்தது. சுதந்திரத்துக்கு பின்பு கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அரசாங்கம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இங்கு தொகுத்து பாதுகாக்க படுகின்றன. தேசிய தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத் போன்றோரது தனிப்பட்ட ஆவணங்களும் இங்கு பாதுகாக்க படுகின்றன.

தேசிய ஆவண காப்பகம் வெளியிடும் இதழ்கள் வரலாற்று அறிஞர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தனியார் ஆவண காப்பகங்கள்

இந்தியாவை பொறுத்தவரை தனியார் ஆவண காப்பகங்களுக்கான முயற்சிகள் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக கருதுகிறார் முனைவர் ஜெயசீல ஸ்டீபன். போர்த்துகீசிய ஆவணங்களை படித்து ஆராய்ச்சி செய்துள்ள இவரது அனுபவத்தை டாடா குழுமம் தங்களுடைய ஆவண காப்பகம் அமைக்கும் போது பயன்படுத்திக்கொண்டது.

ஆவண காப்பக படுத்துதல் என்பது தனியாருக்கும் கிடைக்கும் பட்சத்தில் தனி மனிதர்கள் தொகுக்கும் அரிய ஆவணங்கள் பாதுகாக்கப்படும் வாய்ப்புகள் பெருகும்.

டாடா குழுமத்தை தவிர்த்து தனியார் ஆவண காப்பகங்கள் என்றால் இந்தியாவில் மறைபணியாற்றிய சேசுசபை துறவிகள் தங்களுடைய ஆவணங்களை பாதுகாத்து வைத்துள்ள கொடைக்கானல் செண்பகனூர் இல்லத்தை சொல்லலாம். அதை பின்பற்றி தென்னிந்திய திருச்சபை ஒரு ஆவண காப்பகத்தை சென்னையில் அமைத்துள்ளது.

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் சேகரித்து வைத்திருந்த அரிய சுவடிகளும் நூல்களும் அவரது மறைவுக்குப் பிறகு, ருக்மிணி தேவி அருண்டேல் மூலம் சென்னை அடையாற்றில் உள்ள பிரம்ம ஞான சபையின் தலைமை அலுவலகக் கட்டடத்தில் மகாமோகபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் என்ற பெயரில் 1943 முதல் செயல்பட்டு வருகிறது.
கோட்டையூரில் ரோஜா முத்தையாவின் சேகரிப்பில் இருந்த பழமை வாய்ந்த ஏராளமான நூல்கள், சிறு பிரசுரங்கள் உள்ளிட்ட அரிய ஆவணங்கள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழக உதவியால் பாதுகாக்கப்பட்டு, 1994 முதல் சென்னை தரமணியில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகமாகச் செயல்பட்டு வருகிறது.
இதுபோல தனிநபர் சேகரிப்புகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். ஆவண காப்பக படுத்துதல் என்பது தனியாருக்கும் கிடைக்கும் பட்சத்தில் தனி மனிதர்கள் தொகுக்கும் அரிய ஆவணங்கள் பாதுகாக்கப்படும் வாய்ப்புகள் பெருகும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

Share the Article

Read in : English