Read in : English

Share the Article

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். சினிமா, தொலைக்காட்சி, பிக்னிக் என்று அந்த விடுமுறையை விருப்பம் போல குடும்பத்தினருடன் பொழுதுபோக்கவே பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அல்லது ஓய்வு எடுப்பார்கள். அல்லது சொந்தப் பணிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் எஸ்.வி.எம். சத்யநாராயணாவுக்கு (வயது 50) ஞாயிறு விடுமுறையிலும் ஓய்வு இல்லை.

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட்டாக பணிபுரியும் தனது மனைவியுடன் மதியச் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கிண்டியில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நியூக்கிளியர் பிசிக்ஸ் துறைக்கு வந்து விடுவார். அங்கு,கல்வி உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிப்பார். இது ஒரு நாளில் முடிந்து போன விஷயம் இல்லை. கடந்த 25 ஆண்டு காலமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 25 ஆண்டு காலமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது

இவரிடம் பயிற்சி பெற்ற பலர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளிகளிலும் அரசுக் கல்லூரிகளிலும் படித்த கிராமப்புற சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் என்பதும் பலர் பள்ளிகளில் தமிழ் மீடியம் வகுப்புகளில் படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள உப்பளப்பாடு என்ற கிராமத்தில் சாமானியக் குடும்பத்தில் பிறந்தவர் சத்யநாராயணா. அவரது தந்தை சுப்பாராவ், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளராக இருந்தவர்.

மைசூரில் உள்ள மண்டலக் கல்வியியல் கல்லூரியில் எம்எஸ்சிஎட் படித்து விட்டு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்து, பின்னர் பிஎச்டி பட்டமும் பெற்றார். கல்பாக்கம் ஆராய்ச்சி நிலையத்தில் சயின்டிஸ்ட் வேலையும் கிடைத்தது. 2006ஆம் ஆண்டு முதல் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

“இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற பல மாணவர்கள், பிஎச்டி போன்ற படிப்புகளில் ஃபெல்லோஷிப்புடன் சேருவதற்கு நடத்தப்படும் சிஎஸ்ஐஆர் தேர்வில் வெற்றி பெற முடிவதில்லை. அவர்களிடம் புராப்ளம் சால்விங் ஸ்கில்ஸை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும்.

இதன் மூலம் அந்த மாணவர்களை சிஎஸ்ஐஆர் தேர்வுகளிலும் கேட் (GATE), கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் நடத்தும் நுழைவுத் தேர்வுகளிலும் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியும்” என்று நினைத்த சத்யநாராயணா இயற்பியல் படித்து ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக 1996ஆம் ஆண்டில் இலவசப் பயிற்சியைத் தொடங்க முன்வந்தார்.

அனைவரும் வந்து போகும் வகையில் பயிற்சியை சென்னையில் தொடங்க நினைத்தார். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அப்போது சென்னைப் பல்கலைக்கழக நியுக்கிளியர் பிசிக்ஸ் துறை பேராசிரியராக இருந்த பி.ஆர். சுப்பிரமணியன். இந்தப் பயிற்சி குறித்த அறிவிப்பை கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமைதோறும் இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதியும் வாங்கித் தந்தார். அதையடுத்து, ஆர்வமிக்க மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமைதோறும் நியூக்கிளியர் பிசிக்ஸ் துறை வகுப்பறைக்குப் பயிற்சிக்கு வர ஆரம்பித்தார்கள்.

இந்தப் பயிற்சி சென்னையில் நடந்தாலும்கூட, புதுக்கோட்டை, வந்தவாசி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், வேலூர் போன்ற பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் பயிற்சி வகுப்புக்கு வந்து போகிறார்கள். சிலர் தொடர்ந்து வருவார்கள். சிலர் இடையிலேயே விட்டுவிடுவார்கள். எனினும், இந்தப் பயிற்சி வகுப்புக்குச் சராசரியாக 30 பேர் வருகிறார்கள்.

இவரது இலவசப் பயிற்சித் திட்டத்தை கேள்விப்பட்டு, மேட் சயின்ஸ் நிறுவனத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ராஜசேகரன், கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற எச்.எஸ். மணி ஆகியோர் தாங்களே முன்வந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வந்துள்ளார். அவரது முன்னாள் மாணவர்களும் நியூக்கிளியர் பிசிக்ஸ் பேராசிரியர்களும் இந்தப் பயிற்சிக்கு உதவியுள்ளனர்.

இவரது இலவசப் பயிற்சித் திட்டத்தை கேள்விப்பட்டு, மேட் சயின்ஸ் நிறுவனத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ராஜசேகரன், கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற எச்.எஸ். மணி ஆகியோர் தாங்களே முன்வந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வந்துள்ளார்

ஞாயிற்றுக்கிழமைதோறும் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் இந்த நல்ல முயற்சிக்கு தொடர்ந்து இடம் அளித்து உதவி வருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளையைச் சேர்ந்த அன்னலட்சுமி, தமிழ் மீடியத்தில் பிளஸ் டூ படித்தவர். அவரது தந்தை கூலி வேலை பார்த்தவர். இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்த அவர், சத்தியநாராயணாவின் பயிற்சி மையத்தில் படித்து விட்டு பிஎச்டி முடித்தார்.

தற்போது கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் சயின்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். சத்யநாராயணவிடம் பயிற்சி பெற்று தற்போது பயிற்சி வகுப்புகளில் துணை நிற்கும அன்னலட்சுமி அவரது வாழ்க்கைத் துணை.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த விஜயக்குமார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். அவர் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துக்கு கோடைகாலப் பயிற்சிக்கு வந்த அவர், சத்யநாராயணாவின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றவர். தற்போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) சயின்டிஸ்டாக கடந்த இருபது ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். கொரோனா ஆய்வுத் திட்டத்தில் அவரும் ஒரு ஆய்வாளர்.

பச்சையப்பன் கல்லூரியில் இயற்பியல் படித்த பொன். முருகன், அந்தக் கல்லூரியிலிருந்து சிஎஸ்ஐஆர் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவர். அவர் தற்போது திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பிரிட்டனில் யுனிவர்சிட்டி ஆஃப் ரீடிங்கில் போஸ்ட் டாக்டரல் பட்டம் பெற்றவரும்கூட. இங்கு பயிற்சி பெற்ற ப்ரீத்தி திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திலும், அவரது கணவரும் இங்கு பயிற்சி பெற்றவருமான அய்யப்பன் சாஸ்திரா பல்கலைக்கழகத்திலும் பணிபுரிகின்றனர்.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையத்தில் பிஎச்டி படித்த சித்ரா, தற்போது சென்னையில் ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்டாகப் பணிபுரிகிறார். ரஞ்சித் ராமதுரை ஹைதராபாத்தில் உள்ள ஐஐடியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற ராஜ்மோகன், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர். திருச்செந்தூர் தண்டுபத்தைச் சேர்ந்த தங்கதுரை, வெளிநாட்டில் பழனியைச் சேர்ந்த கமலபாரதி போன்றவர்கள் வெளிநாடுகளில் பணிகளில் உள்ளனர். இப்படிப் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரிடம் பயிற்சி பெற்ற பலர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பண்டமெண்டல் ரிசர்ச், பாபா அணு ஆராய்ச்சி மையம், ஐஐடிக்கள் போன்ற நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும கிடைத்துள்ளன. இவையெல்லாம் சத்யநாராயணாவின் 25 ஆண்டு கல்விச் சேவைக்குக் கிடைத்த வெற்றி என்றால் மிகையில்லை.

இவரிடம் பயிற்சி பெற்ற பலர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பண்டமெண்டல் ரிசர்ச், பாபா அணு ஆராய்ச்சி மையம், ஐஐடிக்கள் போன்ற நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும கிடைத்துள்ளன

சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் படித்த நயினா முகமது, தற்போது உடுமலைப்பேட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர். அவரிடம் பயிற்சி பெற்று தற்போது லயோலா கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியராகவும் பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கும் உதவி வரும் சி. ஜோசப் பிரபாகரும், பிளஸ் ஒன், பிளஸ் டூ இயற்பியல் பாடத் திட்டக் குழுவில் இடம்பெற்று, அதில் முக்கியப் பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎச்டி படிப்பில் சேர்ந்து விடுவது எளிது. ஆனால் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வை எழுவது சிரமம். தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறும் மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தப் பயிற்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சிக்கு வரும் பல மாணவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று இத்தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். இதுதவிர, கேட்(GATE) போன்ற வேறு சில தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று நல்ல பணியில் இருக்கிறார்கள்.

“இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளிகளில், அரசுக் கலைக் கல்லூரிகளில் படித்த மாணவர்கள்தான். அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் சத்யநாராயணாவின் அர்ப்பணி உணர்வை மறக்க முடியாது. அவர்களிடம் கேள்வி கேட்டு, அவர்•களை இக்கட்டில் ஆழ்த்தமாட்டார். கிராமங்களிலிருந்து வரக்கூடிய மாணவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஊக்கமூட்டுவார். கொஞ்ச நாளில் அவர்களும் சகஜநிலைக்கு வந்து விடுவார்கள். தியடிக்கல் பிசிக்ஸ் மிகவும் கஷ்டமான பாடம். அவரது ஊக்கத்தால், பல மாணவர்கள் அந்தப் பாடப்பிரிவில் ஆய்வு செய்திருக்கிறார்கள்” என்கிறார் ஜோசப் பிரபாகர்.

“போஸ்ட் டாக்டரல் படிப்பு படிப்பதற்காக சத்யநாராயணா ஜெர்மனிக்கு சென்ற காலத்திலும்கூட, அவரது பயிற்சி முகாம் தொய்வின்றி நடைபெற்றது. அவரிடம் பயிற்சி பெற்று தற்போது வேலையில் இருப்பவர்கள் வகுப்புகளை எடுத்தனர். கொரோனா காலத்தில் நேரடிப் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியவில்லை.

ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தற்போது, மீண்டும் நேரடி வகுப்புகளை வருகிற ஜனவரியிலிருந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் அவர்.


Share the Article

Read in : English