Read in : English

Share the Article

இலங்கையில் நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்‌ஷ நாட்டைவிட்டு தப்பியோடினார். அதற்கு முன்னதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மே மாதம் 9ஆம் தேதி பதவி விலகினார். இதனால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாகப் புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்காக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதிபரைத் தேர்வு செய்வதற்காக நடந்த இந்த இலங்கை தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. இதில், இடைக்கால பிரதம மந்திரியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று புதிய அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு வடக்கு கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவைத் தெரிவிக்கவில்லை.

கோத்தபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராடினார்கள். அவருடைய அதிகாரபூர்வ மாளிகையைப் போராடும் மக்கள் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணிலும் பதவி விலக கோரி, முழக்கம் எழுப்பிவருகின்றனர். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதற்கு இது சான்று. இலங்கை தேர்தல் நடந்த ஜூலை 20 அன்றுகூட காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்து மக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாகப் புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்காக ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது

இந்த ஆட்சியாளர்கள் மக்களுக்காக அரசியல் செய்யாமல், சுய லாபத்துக்காக அரசியலில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றார்கள் என்பதாலே இந்த எதிர்ப்பு இருந்துவருகிறது. இதில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இல்லை. இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தையும் அரசியல்வாதிகளையும் தேர்தல் முறையையும் உற்று நோக்கினால், பணம் இருப்பவர்களும் செல்வாக்கு இருப்பவர்களும் அரசியலுக்கு வரலாம் அரசியலில் வெற்றி நடை போடலாம் என்ற நிலை காணப்படுகின்றது.

இப்படி அரசியலுக்கு வருபவர்கள் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை; மக்களுக்குத் தேவைப்படும் தீர்வைப் பெற்றுக் கொடுப்பவர்களாகவும் இல்லை. அதாவது, விவசாயிகளின், மீனவர்களின் பிரச்சினைகளைப் பேசக் கூடியவர்களாகவோ அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக் கூடியவர்களாகவோ எந்த அரசியல்வாதியும் இலங்கை அரசியல் களத்தில் இல்லை என்றே கூற வேண்டும்.

மேலும் படிக்க:

இலங்கைப் போராட்டம்: குடும்ப ஆட்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வாரா புதிய ஜனாதிபதி? 

”இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களோடு இணைந்து போராடுவது நல்லது”

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் இலங்கையில் இருக்கும் எந்த அரசியல் கட்சியிலும் ஒரு விவசாயியோ மீனவரோ முறைசாரா தொழில் செய்பவரோ அரசியல்வாதியாக இல்லை. இவ்வாறான தொழில் செய்பவர்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனுவில் இடம் கொடுக்காது; தேர்தல் என்று வந்தால் கோடி கோடியாகச் செலவழிக்க அவர்களிடம் பணமும் இருக்காது. இலங்கையில் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் அரசியல்வாதிகள் யார் என்று தேடிப் பார்த்தால் அவர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபடும் குடும்பத்தினராக இருப்பார்கள் அல்லது அந்தந்தப் பகுதிகளில் தொழிலதிபர்களாகவோ பணம் படைத்தவர்களாகவோ இருப்பார்கள்.

ஆக, பணமும் செல்வாக்கும்தான் இலங்கை அரசியலிலும் இலங்கை தேர்தல் நடைமுறையிலும் முதலிடம் பிடிக்கும் காரணிகள். இதுவே தெற்காசியாவின் அரசியல் கலாச்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. மாறாக, முதலாளிகளைக் காப்பாற்றுகிறார்கள்; முதலாளிகளுக்கு அதிக வருமானம் தரக்கூடியக் கொள்கைகளை, சட்டங்களை, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம், 2021 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ இரவோடு இரவாகப் பசலை இறக்குமதியைத் தடைசெய்யும் கொள்கையைக் கொண்டு வந்ததாகும். இவ்வாறு ஒரு கொள்கையைக் கொண்டு வரப் போகின்றபோது, அதிலுள்ள சாதக பாதகங்கள் என்ன என்பது பற்றி விவசாயிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதில் தலையிட்டார்கள் என்று சொல்லிடவும் வழியில்லை. இப்படியான விஷயங்கள் இரவோடிரவாகக் கட்சிக்காரர்கள் அனுமதியுடன் கொண்டுவரப்படும். இவ்வாறு இறக்குமதியைச் சத்தமில்லாமல் தடைசெய்தால் அப்படியான பிரச்சினைகளுக்கு விவசாயிகள் முகம் கொடுப்பார்கள் என்பதைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தக் கொள்கையை மாற்றுவதற்கோ இந்தக் கொள்கைக்கு எதிராகவோ எந்த அரசியல்வாதியும் குரல் கொடுக்கவும் இல்லை. இதே போன்றுதான் ஆடைத் தொழில் செய்வோர், தேயிலை உற்பத்தியாளர், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைதேடி செல்வோர் ஆகியோரது பிரச்சினைகள் இருக்கின்றன. இவர்கள்தான் இலங்கையின் அந்நியச் செலாவணியை நாட்டுக்குக் கொண்டுவரும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள்.

ஆட்சியில் இருக்கும் அல்லது அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகள் செல்வாக்கும், செல்வமும் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். இவர்களோ இவர்களுடைய குடும்பத்தினரோ பாரிய குற்றங்களைச் செய்தால், சட்டத்தின் மூலம் இலகுவாகத் தப்பித்துக்கொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கு எல்லாம் இவர்களுக்குச் சாமரம் வீசுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர் ஆக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

இப்படி ஒரு அரசியல் கலாச்சாரம் இலங்கையில் தொன்றுதொட்டு இருப்பதனால்தான் இப்போது இருக்கும் ஆட்சிமுறையும் ஆட்சியாளர்களும் எங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் கூறிவருகிறார்கள். ஆட்சியாளர்களை மட்டுமல்ல சகல நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் வெளிநாட்டுத் தூதரகங்களிலும் இருக்கும் சகலரையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

மக்களைச் சுரண்டும் சகலரும் அந்தந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களுடைய கோரிக்கை. இப்படியான சூழலில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபரை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்? ஆனால், தற்போது இருக்கும் அரசியல் யாப்பு முறைமைகளுக்கு அமைவாக இவர் அதிபராக வந்துவிட்டார். கோத்தபயவை வீட்டுக்குப் போ என்று முழங்கியதைப் போல, “ரணிலும் வீட்டுக்குப் போ” என்று முழங்கிக்கொண்டே இருப்பார்கள்.

புதிய அதிபராகப் பதவியில் அமர்ந்தாலும் அவர் மக்களால் கடந்தமுறை இலங்கை தேர்தல் நடவடிக்கைகளில் நிராகரிக்கப்பட்டவர். இப்போதும் அவருக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பதே மக்களுடைய கோரிக்கை. ஆனால், அரசியல் சூழல் காரணமாகப் பதவிக்கு வந்தததால், அவர் நாட்டு மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்; பழைய நிலைக்கு நாட்டைக் கொண்டுவருவேன், அடிப்படைப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வேன் என்கிறார்.

இப்படி ஒரு அரசியல் கலாச்சாரம் இலங்கையில் தொன்றுதொட்டு இருப்பதனால்தான் இப்போது இருக்கும் ஆட்சிமுறையும் ஆட்சியாளர்களும் எங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் கூறிவருகிறார்கள்

ஆனால், சர்வதேச நிதி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, பணத்தைப் பெற்றுக்கொண்டு அடிப்படைத் தேவைகளுக்காக மக்களுக்கு வழங்கினாலும் சர்வதேச நிதி அமைப்பின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டி வரும். இந்த நிபந்தனைகள் சாதாரண உழைக்கும் வறிய மக்களின் சமூகப் பாதுகாப்பைப் பாதிப்பவையாக ஆக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். மக்களுடன் கலந்தாலோசித்து மக்களுடைய சமூக உரிமைகளைப் பாதிக்காத வண்ணம் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாற்றுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு அதிபருக்கு இருக்கின்றது.

கூடவே சீனா உடன் வைத்துக் கொள்ளும் கொடுக்கல் வாங்கல் போன்ற விடயங்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை இருக்குமா என்பதும் பெரிய சந்தேகம்.இது ஒருபுறமிருக்க, ராஜபக்‌ஷ குடும்பம் இலங்கையில் உள்ள பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடி விட்டது என்பது உலகத்துக்கே தெரிந்த விடயம். ஆதாரம் இல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. ஆக இந்தக் குற்றச்சாட்டு உலகம் பூராகவும் வலுப்பெற்று இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நீதியான, நேர்மையான, விசாரணையை ரணில் விக்கிரமசிங்க உருவாக்குவாரா என்பது பெரிய கேள்வி.

போராட்டக்காரர்களும் மக்களும் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்றே கேட்டுக்கொள்கிறார்கள். ராஜபக்‌ஷ அரசை நீதியின் முன் நிறுத்தி அவர்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனை கொடுப்பதோடு அவர்கள் நாட்டைச் சுரண்டி கொள்ளை அடித்த பணத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பாரா புது அதிபர்? மேலும் மேலும் கடன்களை வாங்கி மக்களைக் கடனாளியாக ஆக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அது மாத்திரம் அல்ல, ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பிழையான பொருளாதாரக் கொள்கைகள், மிக மோசமான பொருளாதார முகாமைத்துவம், துறைசார் நிபுணத்துவம் இல்லாதவர்கள் கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கைகள் போன்றவை இலங்கை பொருளாதாரரீதியில் திவாலாகப் போவதற்கான காரணங்கள்.

அதனால்தான் இன்று மக்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போக்குவரத்து வசதி இல்லாமல் வேலைவாய்ப்பு இல்லாமல் எரிபொருள் இல்லாமல் பசியிலும் பட்டினியிலும் வாடுகிறார்கள். இந்த நிலை உருவான பின் மேலும் மேலும் ஐஎம்எப் போன்ற நிறுவனங்களிடம் நிபந்தனைகளுக்கு இணங்கிக் கடனைப் பெற்று மக்களை மேலும் மேலும் பிரச்சினைக்கு உள்ளாக்குவாரா?

ராஜபக்‌ஷ குடும்பம் நாட்டை அதலபாதாளத்தில் தள்ளியிருக்கிறது. அவர்கள் செய்த தவறினால் பெற்ற கடன்களை ஒவ்வொரு குடிமகனும் கட்டினால்தான் இந்த நிலை மாறும் என்ற நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படியான நிலைமையில் இருந்து மக்களை மீட்கும் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அப்படி இல்லாமல் மக்களைப் பாதிக்கும் வண்ணம் இவர் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் மக்கள் போராட்டம் இன்னும் வலுப்பெறும்.

இது சகல மக்களும் ஒன்றாகச் சேர்ந்து மேற்கொள்ளும் ஒரு போராட்டம். இந்தப் போராட்டத்திற்குப் பின்புலமாக அரசியல் கட்சியோ வெளிநாட்டுத் தலையீடோ இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகார முறை கொண்ட அதிபர் முறையை இல்லாமலாக்கி அரசியல் அமைப்பைத் திருத்த வேண்டும். குறிப்பாக அந்த அரசியல் அமைப்பு திருத்தத்தில் அதிபர் மக்களுக்குப் பதில் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும், அவரையும் நீதிமன்றம்வரை கொண்டு செல்லக்கூடிய அதிகாரம் மக்களுக்கு அரசியல் அமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை தேர்தல் முறையில் அரசியல்வாதிகள் மக்களிடம் வாக்குகளைப் பெற்று வென்ற பின்னர், தங்களுக்குப் பிடித்த நேரத்தில் கட்சி தாவுவதைத் தடுக்கும் வகையில் அரசியலமைப்பு அமைய வேண்டும். ஒட்டுமொத்தமான அரசியல் சீர்திருத்தம் ஒன்று இடம்பெற வேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்குப் பதில் சொல்லக் கூடியவர்களாக இருக்கும் வகையில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்போதைய அதிபர் அடுத்த தேர்தல் எப்போது நடக்கும், என்ன வகையான திட்டங்களின் மூலம் தற்போதைய பிரச்சினைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போகின்றார் என்பன பற்றித் தெளிவாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அரசியல் அமைப்பு திருத்த முறையானாலும், பொருளாதாரக் கொள்கை வகுப்பாக இருந்தாலும், ஐஎம்எப் சீனா போன்றவர்களிடம் கடன் வாங்குவதாக இருந்தாலும் மக்களின் பங்களிப்போடு செய்யக்கூடிய ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

தற்போதைய போராட்டக்காரர்கள் எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்தில் பங்கேற்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு கட்சியை ஆரம்பித்து இலங்கைத் தேர்தல் என்பதில் போட்டியிடலாம் அல்லது அவர்களுக்குப் பிடித்த கட்சியுடன் இணைந்து அரசியல் செய்யலாம். ரணில் விக்கிரமசிங்க அதிபரான பின் ராணுவ உதவியுடன் அடக்கு முறையைக் கையாண்டு மக்கள் போராட்டத்தை ஒடுக்கிவிடுவார் என மக்கள் சந்தேகப்படுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால வரலாற்றில், அடக்குமுறையைக் கையில் எடுத்து ஜேவிபி இளைஞர்களை அடக்கினார் என்பதை அறிய முடியும்.

ஒட்டுமொத்தமான அரசியல் சீர்திருத்தம் ஒன்று இடம்பெற வேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்குப் பதில் சொல்லக் கூடியவர்களாக இருக்கும் வகையில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

ஆக, இப்போது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. ஏனெனில், மக்கள் தாங்கள் தெரிவுசெய்த தங்களுடைய பிரதிநிதிகளை நிராகரித்திருக்கிறார்கள். நிராகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களது வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அதிபர் நிச்சயமாக மக்களுக்கான அதிபராக இருக்க முடியாது.

பல கோத்தபய ராஜபக்‌ஷக்கள் அதிபராக வரலாம், ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் ஆட்சிக்கு வரலாம். அவர்களுக்கு எதிராக எழுச்சிப் போராட்டங்கள் வெடிக்கலாம். ஆனால், நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளான அடக்குமுறை, இராணுவமயமாக்கல், காணாமல் ஆக்குதல், கடத்துதல், சித்திரவதை, சட்டத்தையும் ஒழுங்கையும் மதியாமல் நடத்தல், நல்லாட்சி இன்மை, ஊழல், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல், மக்களுடைய உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவம் போன்ற நடைமுறைகள் இல்லாத ஒரு ஆட்சி முறை உருவாகாவிட்டால் யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையைக் காப்பாற்ற முடியாது.

மக்களுக்காக, மக்களுடன் மக்களாக இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் இலங்கையில் உருவாகி, ஒரு புது அரசியல் கலாச்சாரத்தையும் சூழலையும் உருவாக்க வேண்டும். அந்தச் சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாடு குடிமக்களுக்கு இருக்கிறது. அதை இப்போது இலங்கையில் இருக்கும் சகலரும் உணர்ந்து இருக்கின்றார்கள். ஆகவே, இவ்வாறான மக்களின் போராட்டங்கள் தொடரட்டும்; இலங்கையில் ஒரு புது அரசியல் கலாச்சாரம் உருவாகட்டும். பெரும்பான்மை ஜனநாயகமாக இல்லாமல் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கும் அரசாட்சி உருவாகட்டும்.

இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் உலகமெங்கும் மக்களாட்சி உருவாக வேண்டும். முதலாளித்துவத்தில் இருந்து மக்கள் விடுபட்டு வெற்றிபெற வேண்டும். அதற்கு இருபத்தியோராம் நூற்றாண்டில் இலங்கை ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்.


Share the Article

Read in : English