Read in : English

Share the Article

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக இருக்கிறார். அந்தக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக நீதிமன்றத்தின், தேர்தல் ஆணையத்தின படிகளில் ஏறி காய்களை நகர்த்தி வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.

பொதுக் குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு ஈபிஎஸ் வசம் இருக்கும் போது, ஒற்றைத்தலைமை ஏற்படுத்துவதை சட்ட நடவடிக்கைகளால் தாமதம் வேண்டுமானால் செய்யலாமே தவிர, சட்டத்தின் உதவியுடன் கட்சியைக் ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றிவிட முடியுமா என்பது சந்தேகமே. அதேசமயம், பாஜக ஆசி இருந்தால் இரட்டை இலை சின்னத்தை கொஞ்ச காலத்துக்கு முடக்கி வைப்பதற்கான முயற்சி வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால், அதிமுக கட்சியில் நெருங்கிய ஆதரவாளர்களே கடைசி நேரத்தில் ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டு ஈபிஎஸ் பக்கம் தாவிவிட்டார்கள்.

க.அன்பழகன்

கடந்த முறை பாஜக செய்து வைத்த சமரசம் போன்று இந்த முறை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் மீண்டும் ஒட்ட வைக்க உதவாது. அதிமுக நாளேடான நமது அம்மா இதழின் முதல் பக்கத்தில் நிறுவனர்கள் என்று ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயர்கள் இருந்தன. தற்போது அதில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இப்படி இரு தரப்புக்கும் இடையே விரிசலும் மோதலும் அதிகரித்து வருகிறது. ஈபிஎஸ் தலைமையை ஏற்றால் மட்டுமே, அதாவது நம்பர் டூ ஆக இருக்க ஒத்துக் கொண்டால் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் தொடர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

கட்சிகளில் நம்பர் டூ ஆக இருந்தவர்கள் முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் போனதே கடந்த கால வரலாறு. அது ஓ.பன்னீர்செல்வம் விஷயத்திலும் உண்மையாகி வருகிறதோ என்பதையே தற்போதைய அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன.

கட்சிகளில் நம்பர் டூ ஆக இருந்தவர்கள் முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் போனதே கடந்த கால வரலாறு. அது ஓ.பன்னீர்செல்வம் விஷயத்திலும் உண்மையாகி வருகிறதோ என்பதையே தற்போதைய அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன

திமுகவில் இரட்டைக் குழல் துப்பாகிகள் போல் இருந்த அண்ணாவும் சம்பத்தும், திமுக, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட சமயத்தில், அண்ணாவுடன் முரண்பட்ட சம்பத் திமுகவிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். திமுகவிலிருந்து வைகோ பிரிந்தபோது, அவரால் கட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. அப்புறம் தனியே மதிமுக கட்சியைத் தொடங்க வேண்டியதாகிவிட்டது. எம்ஜிஆருடன் முரண்பட்ட எஸ்.டி. சோமசுந்தரம் அதிமுகவிலிருந்து விலகி, நமது கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கி, பின்னர் அதிமுகவில் மீண்டும் சேர்ந்தது தனிக்கதை. திமுகவில் சீனியராக இருந்தாலும்கூட பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி தலைமையை ஏற்று கட்சி விசுவாசத்துடன் தொடர்ந்து இருந்ததால் அவரால் கடைசி வரை திமுக பொதுச் செயலாளராக இருக்க முடிந்தது.

மேலும் படிக்க:

எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி: மீண்டும் பிளவுபடுகிறது அதிமுக!

அதிமுக கட்சி ஈபிஎஸ் கையில்; சட்டத்தின்பிடி ஓபிஎஸ் கையில்: வெற்றி யாருக்கு?

தம்பி வா தலைமை ஏற்க வா என்று அண்ணாவால் அழைக்கப்பட்டு அவரது காலத்திலேயே திமுக பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டவர் நாவலர் நெடுஞ்செழியன். திராவிடர் கழகத்திலிருந்து பெரியாரை விட்டு வெளியேறி திமுக என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கிய அண்ணா, திமுகவில் கட்சித் தலைவர் பதவியை பெரியாருக்காகக் காலியாக விட்டு வைத்திருந்தார். 1967 தேர்தலில் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணா 1969இல் மரணமடைந்ததும், ஆட்சியிலும் கட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வரானார்.

இரா. நெடுஞ்செழியன்

ஆனால், பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலைஞர் கருணாநிதியை ஆதரித்தனர். கலைஞர் முதல்வர் ஆவதை கட்சியில் செல்வாக்குடன் இருந்த எம்ஜிஆரும் ஆதரிக்கவே, நெடுஞ்செழியன் போட்டியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது கலைஞர் முதல்வரானார்.

திமுக அமைச்சரவையில் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என்ற சொன்ன நாவலர் நெடுஞ்செழியன், கட்சியிலாவது முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். கலைஞர் அமைச்சரவைக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய எம்ஜிஆர், முதலமைச்சராக இருப்பவரே திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்க வேண்டும் என்றார். முதல்வராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தால் கட்சியில் இரட்டைத் தலைமை ஏற்படும் நிலை உருவானது. அந்தச் சூழ்நிலையில் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனே இருக்கலாம் என்றும், தலைவர் பதவி புதிதாக ஏற்படுத்தப்பட்டு அந்தப் பதவியில் கலைஞர் இருப்பார் என்றும் சமரசம் பேசப்பட்டது.

பொதுச் செயலாளர் நிறைவேற்ற வேண்டிய பணிகளைத் தலைவருடன் கலந்துபேசி இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் திருத்தப்பட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் முதலிடத்தில் இருந்த கலைஞர் கட்சித் தலைவராகி கட்சியிலும் முதலிடத்தை பெற்றுவிட்டார். இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்து, பின்னர் அவரும் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் நம்பர் டூவாக சேர்ந்தார்.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்து எம்ஜிஆர் தமிழக முதல்வரானார். திமுகவில் இரண்டாம் நிலையிலேயே இருந்த நெடுஞ்செழியன் மக்கள் திமுக என்ற தனிக் கட்சியை ஆரம்பித்து பின்னர் அந்தக் கட்சியை அதிமுகவில் சேர்த்து எம்ஜிஆர் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சராக பொறுப்பேற்றார் நெடுஞ்செழியன். ஆனால், எம்ஜிஆரை அடுத்து தானே முதல்வராக இருக்கலாம் என்ற நெடுஞ்செழியனின் கனவு அப்போதும் நிறைவேறவில்லை. அப்போது அதிமுகவில் செல்வாக்குடன் இருந்த ஆர்.எம். வீரப்பனின் விருப்பப்படி, எம்ஜிஆரின் மனைவி ஜானகி முதல்வரானார். அதிலும் நெடுஞ்செழியனுக்கு இரண்டாவது இடம்தான். அதிமுக கட்சி ஜானகி தலைமையில் ஒரு அணியாகவும் ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தது.

அதைத் தொடர்ந்து அதிமுகவை தன்வசம் கைப்பற்றிய ஜெயலலிதா தமிழக முதல்வரானார். ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். நடமாடும் பல்கலைக்கழகம் என்று பாராட்டப்பெற்ற திராவிட இயக்க முன்னோடியான நாவலர்

நெடுஞ்செழியன் தனது அரசியல் வாழ்க்கையில் தற்காலிக முதல்வராக இருந்த போதிலும் நிரந்தர முதல்வராகவோ அல்லது கட்சியில் முதல் இடத்தையோ பிடிக்க முடியாமல் இரண்டாம் இடத்திலேயே இருந்து வாழ்ந்து மறைந்தது வரலாறு.

எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இருந்தவரை ஒற்றைத் தலைமைதான். அவர்கள் தான் அசைக்க முடியாத தலைவர்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக முதல்வர் பதவியில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது தற்காலிகமாக முதல்வர் பதவியில் ஜெயலலிதாவால் அமர்த்தப்பட்டவர்தான் ஓ. பன்னீர்செல்வம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அவர்தான் தற்காலிக முதல்வராக இருந்தார். கட்சிப் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதையடுத்து, முதல்வர் பதவி ஓ.பி.எஸ். கைக்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘தர்மயுத்தம்’ நடத்திப் பார்த்த ஓ. பன்னீர்செல்வம், பாஜக தலையிட்டு சமரசம் செய்ததை அடுத்து, எடப்பாடி அமைச்சரவையில் துணை முதல்வராகவும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராகவும் ஆனார்.

இணை ஒருங்கிணைப்பாளரானார் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. ஆனால், அண்ணன், தம்பி என்ற முறைக்கேற்ப நாங்கள் ஒருங்கிணைந்து அதிமுகவை நடத்திச் செல்கிறோம். எங்களுக்குள் பிரச்சினை இல்லை என்று அவர்கள் பொது வெளியில் இருகரம் கூப்பி சிரித்துக் கொண்டே இருப்பது போல காட்சியளித்தாலும்கூட, பங்காளிகள் இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் புகைச்சல் மண்டிக் கொண்டே வந்து பனிப்போர் ஏற்பட்டது என்பது ரகசியமல்ல.

தேர்தல் ஆணையத்தை அணுகியோ நீதிமன்றத்தை அணுகியோ தற்காலிகமாக சாதகங்களைப் பெறலாமே தவிர, அதிமுக கட்சியை ஓ. பன்னீர்செல்வம் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இயலாது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தது. அப்போதும் எதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஓபிஎஸ் ஆக முடியவில்லை. அப்போதும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி கண்டார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் வெற்றிகண்ட எடப்பாடி கட்சியிலும் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்றி கட்சி அதிகாரத்தைக் கைபற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்.

“தேர்தல் ஆணையத்தை அணுகியோ நீதிமன்றத்தை அணுகியோ தற்காலிகமாக சாதகங்களைப் பெறலாமே தவிர, அதிமுக கட்சியை ஓ. பன்னீர்செல்வம் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இயலாது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இருந்த எதிர்ப்புக் குரலே, கட்சியில் அவருக்கான இடம் எது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், கட்சியில் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதுடன் மக்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே, எடப்பாடி ஒற்றைத் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்” என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

அரசியல் வாழ்க்கையில் பணிவுகாட்டி, மௌனமாக, வெகுளி போல் இருந்ததால்தான் ஜெயலலிதா, தனக்குப் பதிலாக ஓபிஎஸ்ஸை தற்காலிகமாக முதலமைச்சராக்கினார். அமைச்சரவையிலும் இரண்டாம் இடம் தந்தார். பெரும்பாலும், கட்சியில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் முதலிடத்திற்கு வர வேண்டும் என்ற அரசியல் கணக்கு சரியாக இருப்பது இல்லை. நெடுஞ்செழியனைப் போல, பன்னீர்செல்வத்துக்கும் வரலாறு மீண்டும் திரும்புகிறதா?.

நடந்து முடிந்த பொதுக் குழுவில் இடையிலேயேய ஓபிஎஸ் வெளியேறியது, கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான அடையாளமோ என்று தோன்றுகிறது. தன் இயற்பெயர் பேச்சிமுத்து என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு பேசாமல், செயல்படாமல் சிரித்துக் கொண்டு மட்டும் இருந்ததுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வை இப்படிப் புரட்டிவிட்டதோ?


Share the Article

Read in : English