Read in : English

Share the Article

முத்துநகர் அது. வேட்டிக் கட்டிய ஒரு மனிதன் சாலையில் கிடக்கிறான்; உடல் கொஞ்சங்கூட அசையாமல் கிடக்கிறது. போராட்டச் சீருடை அணிந்த போலீஸ்காரர்கள் ‘போ, போ’ என்று ஆட்களை விரட்டிக் கொண்டே அங்குமிங்கும் திரிகிறார்கள். பிணத்தருகே இன்னொரு மனிதன் முகத்தில் வடியும் ரத்தத்துடன் அழுதுகொண்டே நிற்கிறான். இதையெல்லாம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்து அவன், “என்னை இங்கிருந்து கூட்டிக் கொண்டு போ. இல்லாவிட்டால் போலீஸ் என்னையும் கொன்று விடுவார்கள்,” என்று கெஞ்சுகிறான். இப்படி உணர்ச்சிப்பெருக்கான காட்சிகளோடு ’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ (முத்துநகர்ப் படுகொலை) என்னும் ஆவணப்படம் ஆரம்பமாகிறது.

ஸ்டெர்லைட்டின் செயற்பாடுகளைப் பற்றி மட்டுமே பேசும் ஆவணப்படம் அல்ல இது. தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவங்களில் யார் யாரெல்லாம் போராடினார்கள், பாத்திரங்கள் என்ன என்ன அல்லது போராட்டம் எப்படி தீவிரமாக மடைமாறி இறுதியில் 2018 மே 22 அன்று போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போய் முடிந்தது – இவற்றின் நுண்மைகளை எல்லாம் ஆவணப்படம் ஆராயவில்லை.

’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ ஆவணப்படத்தில் ஸ்டெர்லைட் ஒரு பின்புலமாக இருக்கிறது. மாசுப்படுத்தும் ஓர் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களின் போராட்டத்தைப் பற்றிய படம் இது. அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மக்களை எப்படி அடக்குமுறைகளால் ஒடுக்கினார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. மறைந்திருந்து சுடும் இராணுவ வீரர்களைப் போல, மஃப்டியில் போலீஸ்காரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி மக்களைச் சுட்டுத்தள்ளும் காட்சி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தோடு எப்போதுமே பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு படிமமாக மனிதகுல ஞாபகத்தில் அழியாமல் உறைந்திருக்கும்.

‘பேர்ல் சிட்டி மாஸக்கர்’ ஆவணப்படத்தின் தொடக்கக் காட்சிகளில் ஒன்று

அதிகாரிகளும், போலீஸ்காரர்களும் தொடர்ந்து விதிகளையும், சட்டங்களையும் மீறிச் செய்த செயல்களை ’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ பதிவுசெய்கிறது. உதாரணமாக, சுட்டுத்தள்ளப் பட்டவர்கள் அனைவருமே மாவட்ட ஆட்சியரின் கட்டிடத்திற்கருகே நின்றவர்கள் அல்லர். துப்பாக்கிச் சூட்டுக்கான தரவிதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதைப் படம் சொல்கிறது. போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது, வெறும் காயங்களை ஏற்படுத்தவோ அல்லது மக்களை முடமாக்கவோ அல்ல; கொல்வது அதன் நோக்கமாக இருந்தது.

அந்த நிகழ்வின் எல்லாப் பக்கங்களையும் சொல்வது ’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ படத்தின் நோக்கமல்ல. ஆனாலும் அது நிஜத்தைப் பூசிமெழுகாமல் அப்படியே சொல்கிறது. இறுதியாக அது சொல்லும் சேதி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்: போலீஸ் உட்பட அதிகாரிகாரிகள் மனித உரிமைகளை மீறியவர்கள் என்பதுதான் அந்தச் செய்தி. அதிர்ச்சியான படிமங்களை நிரல்பட அள்ளித் தெளிக்கிறது படம்.

அதிகாரிகளும், போலீஸ்காரர்களும் தொடர்ந்து விதிகளையும், சட்டங்களையும் மீறிச் செய்த வன்முறைகளை ’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ பதிவுசெய்கிறது. உதாரணமாக, சுட்டுத்தள்ளப் பட்டவர்கள் அனைவருமே மாவட்ட ஆட்சியரின் கட்டிடத்திற்கருகே நின்றவர்கள் அல்லர்

மேலும் காயம்பட்டவர்களின் மற்றும் இறந்தவர் குடும்பங்களின் நேரலை நேர்காணல்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இந்த ஆவணப்படம் கட்டமைக்கும் கதை, என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி, நமக்குள் அதிர்வையும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் விளைவிக்கிறது.

மேலும் படிக்க:

ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த அந்த நாளில் யார் இருந்தார்கள்?

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? போராடுவார்களா?

M S ராஜ்

’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ படத்தின் இயக்குநர் எம்எஸ் ராஜ் மைக்கேல் மூரிடமிருந்து தன்னெழுச்சி பெற்றவர். மைக்கேல் மூரின் கொரில்லாப் பாணித் திரைப்படக்கலை பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதுதான் கடுமையான பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து பார்வையாளர்களை ஒரு நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்கிறது. மூரின் ‘பவுலிங் ஃபார் கொலம்பைன்’ படம், துப்பாக்கிகள் மீதான அமெரிக்கர்களின் காதலையும், அதனால் பள்ளிகளில் நிகழ்ந்த கொடுமைகளையும் விவரித்து அமெரிக்கச் சமூகத்தின் மீதான ஒரு பெருங்குற்றச்சாட்டாக ஒலிக்கிறது.

மெரினாவில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றி எம்எஸ் ராஜ் முன்பு எடுத்த ‘மெரினா புரட்சி’ சென்சாரிடம் மாட்டிக் கொண்டது. கலவரத்தில் முடிந்த மெரினாப் புரட்சியின் இறுதிநாளில் நடந்த வன்முறக்குப் பின்னால் இருந்தவர்கள் யார், இருந்தது எது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றது படம். உயர்நீதிமன்றம் தலையிட்டு படவெளியீட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொல்லும்வரை, தணிக்கைச் சான்றிதழ் இருமுறை மறுக்கப்பட்டது என்று எம்எஸ் ராஜ் சொல்கிறார். ’மெரினா புரட்சி’ 13 நாடுகளில் வெளியானது.

அவர் அந்தப் படத்தை முடித்து பின்பு சர்ச்சையைச் சந்தித்து எல்லாம் முடிந்த நேரத்தில்தான், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. தூத்துக்குடியில் படித்த அவர் ஒரு மாணவராக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார். அதை வைத்தே அவர் தனது அடுத்த படத்தை இயக்குவது என்று முடிவு செய்தார்.

ஆனால் இடையில் கோவிட் பெருந்தொற்றுப் பிரச்சினை அவர் திட்டத்திற்குத் தடையாக வந்தது. ஊரடங்குக் காலம் முடிந்தவுடன் அவர் மீண்டும் போராட்டச் சரடுகளை எடுத்து பின்னிப் படமாக்கினார். காலத்தில் முன்பும், பின்புமாக நகரும் கதைசொல்லல் பாணியில் 2018-ல் எடுத்த நேரலைக் காட்சிகளும், மற்றும் சமீபத்தில் எடுத்த நேர்காணல்களும் அடர்ந்திருந்தன.

நான்கு வருடமாகியும் தூத்துக்குடி போலீஸின் கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை என்று சொல்கிறார் அவர்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடியில் எடுக்க முடியவில்லை என்று சொல்லும் ராஜ், நேர்காணல் கொடுத்தவர்களை போலீஸ் கண்ணில் படாமல் நகரத்திற்கு வெளியே கொண்டுவந்துதான் படமாக்க முடிந்தது என்று கூறுகிறார். படமாக்கும்போது பெரிய ஊழியர் பட்டாளம் இருந்தால், அது போலீஸ் கவனத்தை ஈர்க்கும் என்பதால், இரண்டே இரண்டு ஊழியர்களை மட்டும் வைத்து படமாக்கினோம் என்கிறார் ராஜ். நான்கு வருடமாகியும் தூத்துக்குடி போலீஸின் கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை என்று சொல்கிறார் அவர்.

மெரினா புரட்சி’ படத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், தனது சமீபத்துப் படத்தை வெளியிட ஓடிடி தளத்தைத் தேர்ந்தெடுத்தார் ராஜ். என்றாலும் ஓடிடி வருமானம் அந்த தளத்திற்கான செலவுக்குக்கூடப் போதவில்லை என்கிறார். அவர் தனது படத்தை அரசியல் தலைவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும், துப்பாக்கிச் சூட்டில் தப்பிப் பிழைத்தவர்களுக்கும் போட்டுக் காட்டியபோது, அங்கேயும் போலீஸ் வந்தது; ஆவணப்படத்தின் ஹார்டு டிஸ்கைக் கேட்டது. படத்திற்காக அவர் சேகரித்து வைத்திருந்த சான்றுகளை வழக்கிற்குச் சாட்சியங்களாகக் கொடுக்கும்படி போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியது. இதற்கிடையில் சிறந்த ஆவணப் படவிருது அவருக்குக் கிடைத்தது. அதை வாங்குவதற்காகத் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அவர் டில்லிக்குக் கிளம்ப தயாராக இருந்தபோதுதான் போலீஸ் சம்மன் அவருக்கு வந்தது.

மெரினாவில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றி எம்எஸ் ராஜ் முன்பு எடுத்த ‘மெரினா புரட்சி’ சென்சாரிடம் மாட்டிக் கொண்டது

மேலும் சிங்கப்பூர் உலகத் திரைப்பட விழாவிற்குப் ’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அகில உலக சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித உரிமை திரைப்பட விழாவிற்கு வந்த 2,200 படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 43 படங்களில் ராஜ் இயக்கிய ’பேர்ல் சிட்டி மாஸக்கர்’ படமும் ஒன்று.

ராஜ் எடுக்கப்போகும் அடுத்த படம் தற்கொலை என்று முத்திரை குத்தப்பட்ட 185 மரணங்களை நிஜமான கொலைகள் என்று வெளிக்காட்டப் போகிறது. அதைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அவர் அமைதியாக இருந்தார்.

அந்த அமைதியில் ஓர் அமானுஷ்யம் உறைந்திருந்தது.


Share the Article

Read in : English