Read in : English

Share the Article

சமீபத்தில் தமிழ்நாடு பருவநிலை மாற்றம் சம்பந்தமாகப் பலமான நடவடிக்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பெரிய மாநிலமாக மாறியிருக்கிறது. நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 8-ன் படி, அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஐந்துகோடி ரூபாய் மூலதனத்தோடு தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது அரசு. வேளாண்மை, கரியமில வாயு வெளிப்பாடுகளைக் குறைத்தல், அனுசரணை, சதுப்புநிலங்கள் ஆகியவை சம்பந்தமான குறிப்பிட்ட பணிகளைச் செய்யும் இலக்குடன் அந்த நிறுவனம் உருவாகியிருக்கிறது. பருவநிலை விசயத்தில் தமிழகம் அதிதிறனோடு செயல்படுகிறது என்ற முழக்கத்தை முன்வைக்கும் ஓர் இலட்சிய செயற்பாட்டின் மையத்தில் இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சுற்றுப்புறச்சூழலின் சில அம்சங்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் அரசின் புதிய நிறுவனம், பருவநிலை மாற்றத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் பற்றி நீண்டகாலமாக இருந்த விட்டேத்தியான அணுகுமுறையை மாற்றப் போவதாக உறுதிபூண்டிருக்கிறது. கட்டிட விதிகள், ஆக்ரமிப்பு, பாழாகும் சதுப்புநிலங்கள், காற்றுமாசுக் கட்டுப்பாடு, நிஜமான காட்டுவளத்தை மதிப்பீடு செய்தல், கூரைமீதான சூரியவொளி மின்சாரத்தை விரிவுபடுத்தல் ஆகியற்றைப் பற்றிய கொள்கைகளுக்கு மக்களின் பிரக்ஞை வேண்டும்; ஆதரவான செயல்களும் வேண்டும்.

முதல்வரும், திமுக தலைவர்களும் இந்தியாவின் ஆண்டு 2030-ன் கடமைகளை நிறைவேற்ற பருவநிலை மாற்றம் சம்பந்தமாகச் செயல்பட வேண்டிய தேவையைப் புரிந்துகொண்டவர்கள் போலத் தெரிகிறார்கள். ஆனால் கீழ்நிலை அரசியல்வாதிகள் அதைச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள்; கடுமையான சுற்றுப்புறச்சூழல், நிலம் தொடர்பான கட்டுப்பாடுகளைப் பற்றி அவர்கள் உஷாராக இருக்கிறார்கள். நிதியுதவி செய்யும் தேசிய, உலக முகமைகள் நிதியின் பலன்களை தணிக்கை ஆய்வு செய்யக்கூடும் என்பதைப் பற்றியும் அவர்கள் எச்சரிக்கையோடு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தனிநபர் பசுமையில்ல வாயு வெளிப்பாடு 1.59 டன் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2019-ல் இந்தியா முழுமைக்குமாக இது 1.87 டன்னாக இருந்தது.

குறுங்காலச் செயல்கள்
பருவநிலை விசயத்தில் அதிதிறனோடு செயல்பட குறுங்காலம் முதல் நடுத்தரம் மற்றும் நீண்டகாலம் வரையிலான செயற்பாடுகள் தேவை. நிலக்கரியிலிருந்து வரும் உயர் வாயுவெளிப்பாடுகளைக் குறைப்பது மிகவும் சிரமமானது; ஆனால் அவற்றைக் குறைக்க வேண்டும்; அதற்கு மின்சார ஆலைகளைச் சுத்திகரிக்க வேண்டும்; புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதே சமயம், காற்றை மாசுபடுத்தும் மற்ற காரணிகளிலும் குறுங்கால முயற்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வரும், திமுக தலைவர்களும் இந்தியாவின் ஆண்டு 2030 கடமைகளை நிறைவேற்ற பருவநிலை மாற்றம் சம்பந்தமாகச் செயல்பட வேண்டிய  தேவையைப் புரிந்துகொண்டவர்கள் போலத் தெரிகிறார்கள். ஆனால் கீழ்நிலை அரசியல்வாதிகள் அதைச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள்

தமிழ்நாடு பசுமைப் பருவநிலை நிறுவனம் செய்யவேண்டிய நற்பலன் தரும் முக்கிய பணிகள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளன: சதுப்புநிலங்களுக்கான வரைபடம் தயாரித்தல், காட்டுவளத்தையும், மரங்களின் வளர்ச்சியையும் 23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்துதல், சூரியவொளி மின்சாரம், காற்று மின்சாரம், மின்வாகனங்கள், தொடர்ந்து தாக்குப்பிடிக்கும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுத்தல், சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தேசிய மற்றும் அனைத்துலக அனுபவங்களிலிருந்து ஓர் அறிவுத்தளத்தை உருவாக்குதல், மிக முக்கியமாக, மக்களின் விழிப்புணர்வையும், ஆதரவையும், ஈடுபாட்டையும் அதிகரித்தல். இவையே அந்த முக்கிய பணிகள்.

சுற்றுப்புறச் சூழல் கட்டுப்பாட்டு விதிகள் களத்தில் உண்டாக்கிய விளைவுகள் கலவையாகவே இருக்கின்றன: ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான தடை முழுவதுமாக அமலாகவில்லை. கூரைமீது சூரியவொளி மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்திய கட்டிடவிதிகள் பெரும்பாலும் தோற்றுப்போயின. சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்புநில மீட்பு இன்னும் நத்தை வேகத்திலேதான் போய்க்கொண்டிருக்கிறது.

விதியைப் பற்றி சந்தேகம் இருக்கிறது. ஏப்ரலில் சுற்றுப்புறச்சூழல் நிபுணர்களுக்கும், மந்திரிகள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலில் சில சட்டசபை உறுப்பினர்கள் அரசிற்கு விடாப்பிடியான அணுகுமுறை தேவை என்பதைப்பற்றி வெளிப்படையாகவே சந்தேகம் கொண்டனர். அந்த நிகழ்வைப் பற்றிய ஓர் ஊடகச் செய்தி, மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் டாக்டர். ஜே. ஜெயரஞ்சன், கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இலக்குகளுக்காக இருக்கும் கொஞ்சநஞ்சம் வளங்களையும் பயன்படுத்த வேண்டுமா என்பது போல கடுமையான கேள்விகள் கேட்டார்.

ஆனால் பருவநிலை மாற்றத்திற்கு இணக்கமான நடவடிக்கைகளில் தமிழ்நாட்டில் உலகளவிலான ஒரு செயற்பாடு மும்முரமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. காவிரி வடிகால் பிரதேச நதிகளின் தீரத்தில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான பாதைகளில் ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருந்த 1,855 வீடுகளுக்கு மாற்று இடம் கொடுக்கும் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி செய்துகொண்டிருக்கிறது. அந்த வேலை போய்க்கொண்டிருக்கிறது. இதைப்போல பல இடங்களிலும் செய்ய வேண்டியிருக்கலாம்.

அதீதங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்
எதிர்காலத்தில் வானிலை நிகழ்வுகள் இன்னும் அழுத்தமாகவும், கணிப்பதற்குச் சிரமமாகவும் கூட இருக்கலாம். அதனால் நதிகளையும், சதுப்புநிலங்களையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் மிகவும் அவசியம். மாநகரங்கள், நகரங்கள் உட்பட பல பகுதிகளில் நதிப்பாதைகளிலும், சதுப்புநிலங்களிலும், நீர்ப்பிடிப்பு ஏரியாக்களிலும் வசிக்கின்ற மக்களை வெளியேற்றி வேறு இடங்களில் வசிக்க வைக்க வேண்டும். இதுவோர் அவசரகாலத் தேவை.

தமிழ்நாடு பசுமைப் பருவநிலை நிறுவனம் செய்யவேண்டிய முக்கிய பணிகள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளன: சதுப்புநிலங்களுக்கான வரைபடம் தயாரித்தல், காட்டுவளத்தையும், மரங்களின் வளர்ச்சியையும் 23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்துதல், சூரியவொளி மின்சாரம், காற்று மின்சாரம், மின்வாகனங்கள், தொடர்ந்து தாக்குப்பிடிக்கும்  தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுத்தல், மக்களின் விழிப்புணர்வையும், ஆதரவையும், ஈடுபாட்டையும் அதிகரித்தல்

அரசுக் கொள்கையில் பெரிதாக வெற்றி பெறாத அம்சம் திட, திரவக் கழிவு மேலாண்மைதான். பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டில் தேசிய அளவில் 4 சதவீதம் பங்களிப்பைத் திட, திரவுக் கழிவுகள்தான் தருகின்றன (2015-ஆம் ஆண்டுத் தரவுப்படி). சென்னையில் சுமார் 3,500 டன் கழிவுப்பொருட்களை உள்வாங்கிக் கொள்ளும் குப்பைமேட்டு நிலங்கள் பெருந்தீயை கொளுத்திப்போடும் மீத்தேனின் உற்பத்திக்கிடங்குகளாக இருப்பதால், அவற்றிலிருந்து வெளிவரும் பசுமை இல்ல வாயு கரியமில வாயுவை விட ஆகப்பெரும் பலம் கொண்டது. பெரிய குப்பை நிலங்களிலிருந்து இயற்கைக் கழிவை நீக்கவோ, சில உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளியில் கழிவை எரிக்கும் செயலைத் தடைசெய்யவோ சென்னை மற்றும் பெரும்பாலான மாநகரங்களால் முடியவில்லை.

தமிழ்நாடு பசுமைப் பருவநிலை நிறுவனம் முன்னுரிமை தரவேண்டிய பணி கழிவு மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதுதான். மேலும் கூரைமீதான சூரியவொளி மின்சாரத் திட்டத்தை விரிவுபடுத்துவதை டான்ஜெட்கோவும், நகர்ப்புற வளர்ச்சி முகமைகளும் எப்படி அணுக்கின்றன என்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்.

பசுமைப் போக்குவரத்து புறக்கணிக்கப்பட்டது
போக்குவரத்தின் கரியமிலவாயு வெளிப்பாடுகளைக் குறைக்க (குறிப்பாக, நாள்முழுக்க ஓடும் ஆயிரக்கணக்கான பொதுப்போக்குவரத்துப் பேருந்துகள் வெளியிடும்), குறைவான, முற்றிலும் பூஜ்ய அளவில், வாயுவெளியிடும் பேருந்துகளை வாங்க ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கிறது. பொதுப்போக்குவரத்து பேருந்துப் பயணத்தின் தரத்தை உயர்த்துதல், டிக்கெட் விலைகளைக் குறைத்தல், பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் ஆகியோர்க்கு குறுக்கு மானியத்தை அறிமுகப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் இப்போது அவசரகாலத் தேவைகள். தமிழ்நாட்டில் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட பேருந்து அமைப்பு இருக்கிறது; அதற்கு மேலும் வலுவைச் சேர்க்கும் நகர்ப்புற ரயிலும், மெட்ரோ ரயிலும் இருக்கின்றன. ஆனால் பேருந்துப் பயணத்தில் தரமில்லை; நகர்ப்புற ரயிலிலும், மெட்ரோ ரயிலிலும் பயணிப்பது விலையுயர்ந்தது.

மின்வாகனங்கள் உட்பட ’சுத்தமான வாகனங்களுக்கு’ மாறுவது, நடப்பதற்கும், சைக்கிளில் செல்வதற்குமான உட்கட்டமைப்பை விரிவாக்கல் – இவற்றிற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால் இந்தப் பணிகளை யார் செய்வது என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மோட்டார் அல்லாத முறைகளில் பயணிப்பதற்கு மிகவும் குறைச்சலான முக்கியத்துவமே தருகிறார்கள். பாதசாரிகளுக்கு விரோதமான குடிமை உட்கட்டமைப்பு கொண்டிருக்கிறது என்று சென்னைக்கு ஓர் அவப்பெயர் உண்டு.

செழிப்பான காடுகள்
புத்தம்புதிய காடுகள் வளர்வதற்குத் தோதுவான எல்லா நிலங்களையும் இனங்காண்பது பசுமைப் பருவநிலை நிறுவனத்தின் குறுகிய கால முன்னுரிமையாக இருக்கும். அதில் சமூகக் கண்காணிப்பும் இருக்கும். குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கும், பிரதேசங்களுக்கும் (ஆதிகால குறிஞ்சி, முல்லை) பொருத்தமான உள்ளூர் வகை மரங்களை, சமூகத்திற்கு பிரயோஜனமான கனிதரும் மரங்களை, வளர்த்தெடுத்தல் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்மடங்கு நல்விளைவை ஏற்படுத்தும்.

அரசின் தனிப்பட்ட செயற்பாடுகள் போகிற திசைகள் கூர்மையாக அவதானிக்கப்படும். பசுமை தமிழ்நாடு மிஷன். தமிழ்நாடு பருவநிலை மாற்ற மிஷன் மற்றும் தமிழ்நாடு சதுப்புநிலங்கள் மிஷன் – இந்த மூன்றும் பருவநிலையின் தூண்கள். வரவிருக்கும் நவீனப்படுத்தப்பட்ட பருவநிலை செயற்திட்டத்தில் இந்த மூன்றும் பங்குவகிக்க வேண்டும்.

தனிமனிதர்களும் செயல்பட்டு மாற்றத்தை உண்டாக்க முடியுமா? கனடாவில் வசிக்கும் தாவரவியலாளரும், மருத்துவ விஞ்ஞானியுமான டயனா பெரஸ்ஃபோர்டு-கிரோஜர் மரங்களின் மற்றும் மனிதகுலத்தின் விஞ்ஞான, ஆன்மீகப் பரிமாணங்களின் ஒருங்கிணைப்பைப் பிரதானப்படுத்தும் எழுத்துகளுக்காகவே புகழ்பெற்றவர். உலகம் இழந்திருக்கும் காடுகளை மீட்டெடுக்கும் ஒரு வழியாக, எல்லா இடங்களிலும் ஒவ்வொரு தனிமனிதனும் ஆறு மரங்கன்றுகளை நடவேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். கரியமில வாயு வெளிப்பாடுகளைத் தொழில்நுட்பத் தீர்வுகளின் மூலம் குறைக்க வேண்டும். மரங்களுடனும், புனிதமான சோலைகளுடனும் தமிழ்நாட்டுக்கு ஓர் ஆன்மிகப் பிணைப்பு உண்டு. அதனால் பாரம்பரிய மரங்களைப் பொருத்தமான நிலங்களுக்கு மீட்டெடுத்துக் கொண்டுசென்றால் அதுவொரு ஆன்மிகம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் பிரயோஜனமான கலவையாக இருக்கும்.


Share the Article

Read in : English