Read in : English

Share the Article

விக்ரம் 1980-களில் வந்த மிகத் தெனாவட்டான தமிழ்த் திரைப்படம். அப்போது நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தது, இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று. ஆனால் விக்ரம் படத்தில் காட்டப்பட்ட ராக்கெட் மற்ற நாடுகளைத் தாக்கியது. ஏன், அணு ஆயுதங்களைக் கூட அது சுமந்துகொண்டு பறந்தது.

நிஜமாகவா? 1980-களின் மத்தியில் இந்தியா ஏவுகணைகளைத் தயாரித்ததா? அப்போது இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இருந்ததா என்ன? கூல்!

அந்த விக்ரமைப் பார்த்திருந்தால் புத்தர் புன்னகைத்திருப்பார். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் மகாத்மா காந்தி இன்னும் தேசத்தந்தையாகத்தான் கருதப்பட்டார். நாம் எல்லோரும் அமைதி, அகிம்சை, கூட்டுச்சேரா இயக்கக் கருத்துகளில் சத்தியமாக உடன்பட்டிருந்தோம்; அதாவது அதிகாரப்பூர்வமாக.

கமல்ஹாசன் விக்ரம் என்ற கூலான பையனாக, ஜேம்ஸ்பாண்டாக நடித்தார்; அவருக்கு முந்தி ஜெய்சங்கரும் தமிழ்ப்படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருந்தார். ஆனால் அவரது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மிகவும் செயற்கையானவை; அபத்தமானவை. அவற்றில் காட்டப்படும் விஞ்ஞானம் என்பது அறியாமல் வந்துவிழுந்த நகைச்சுவைதான்.  

விக்ரம்தான் ஒளிந்திருந்த ரகசியத்தைப் பொதுவெளியில் போட்டுடைத்தது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் வெறும் விண்வெளியை ஆய்வு செய்து பிரபஞ்ச அதிசயங்களைக் கண்டு வாய்பிளந்து ஆச்சரியப்படுவதற்காக உருவாக்கப்படவில்லை. நிஜத்தில் அந்தத் திட்டத்தின் பிரதான இலக்கே ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதுதான். இந்தியா சொந்தமாக ஏவுகணைத் திட்டத்தை தொடங்கி மூன்றாண்டு கழித்து வெளிவந்த விக்ரமில் இந்திய ஏவுகணை என்பது சகஜமாகிவிட்ட விசயம். ஏதோ தர்மசங்கடத்துடன் சங்கோஜத்துடன் தயங்கி வெளியே சொன்ன ரகசியம் அல்ல.

இந்தியாவின் அணு மின்திட்டம் நிஜத்தில் அணுவிலிருந்து மின்சாரம் எடுப்பது பற்றியல்ல. நாம் ஒருபோதும் அணுவை மெனக்கெட்டுப் பிளந்து ஆகப்பெரிய அளவில் மின்சாரம் தயாரித்தவர்கள் அல்ல. நமது உண்மையான நோக்கமே அணுஆயுதங்கள் தயாரிப்பதுதான். பொக்ரான்-2-க்கு பத்தாண்டுக்கு முன்பே விக்ரம் சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டது, இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இருந்தனவென்று. இந்தியாவிடம் அணுகுண்டுகள் இருந்தனவென்று என்பது எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள், பெரிதாக அசடுவழியாமல்.

கமல்ஹாசன் விக்ரம் என்ற கூலான பையனாக, ஜேம்ஸ்பாண்டாக நடித்தார்; அவருக்கு முந்தி ஜெய்சங்கரும் தமிழ்ப்படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருந்தார். ஆனால் அவரது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மிகவும் செயற்கையானவை; அபத்தமானவை. அவற்றில் காட்டப்படும் விஞ்ஞானம் என்பது அறியாமல் வந்துவிழுந்த நகைச்சுவைதான்.

பழைய விக்ரம் பாலியலும், பெண்வெறுப்பும் கலந்த ஒரு டினோசர்; அதை அப்போது தமிழ்நாடு ரசனையுடன் ரசித்தது. ஆனால் டினோசர்கள் டினோசர் காலத்திலே இருக்கட்டும்; அவற்றை மீட்டெடுப்பது பிரச்சினையைக் கூட்டிவருவது போலாகிவிடும். .

விக்ரமின் விஞ்ஞானம் நிஜமானது. காலஞ்சென்ற எழுத்தாளர் சுஜாதாதான் அந்தக் கதையை உருவாக்கியவர். அவர் நிஜமான ஒரு பொறியாளர்; தொழில் ரீதியான சிறப்பு அங்கீகாரங்களைப் பெற்றவர்.

ராஜீவ்காந்தி கணினிகளைப் பெருமளவில் பிரபலமாக்கி இந்தியப் பொதுப்புத்தியைத் தீப்பிடிக்க வைக்க முயன்ற காலகட்டம் அது.

படத்தில் ’விக்ரம் விக்ரம்’ என்று வித்தியாசமான பிஜிஎம்மில் ரோபோ போல் உச்சரிக்கப்படுவதைக் கேட்டோம். மீண்டும் கூல்!

இந்தியாவைக் காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகியாக படத்தில் வந்தவர் ஓர் அலட்சியமான, அழகான வில்லன் அல்ல. தொப்பைவயிறு கொண்ட நடுத்தர வகுப்பினர் ஒருவர்தான்; மைலாப்பூரில் வசிப்பவர்.

விக்ரம் போகிற போக்கில் ஒரு விசயத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்திய உளவுத்துறையில் மைலாப்பூர்வாசிகள் நிறையபேர் இருந்தார்கள் என்பதுதான் அது.

படத்தின் கதை நகர நகர பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக்கொண்டன. இடையில் களம் மாறி நம்மைத் திடீரென்று ஒரு அந்நியப் பாலைவன தேசத்திற்கு இட்டுச்சென்றது. அங்கே மக்கள் ஒரு வித்தியாசமான மொழியைப் பேசினார்கள். கூர்த்தமதி படைத்த பார்வையாளர்கள் ஆஃப்கானிஸ்தானிற்கு மேற்கே எங்கோவொரு இடத்தில் இருந்த சலாமியாவில் பேசப்பட்ட மராத்தி வார்த்தைகளை இனங்கண்டு கொண்டனர்.

சலாமியாவின் ராணியாக முழுக்கத் தமிழ்பேசும் தமிழச்சியான மனோரமா ஆச்சி வந்தார். புலம்பித்தள்ளும் பதிவிரதையல்லாத அந்த ராணி உடனே கட்சிமாறி இந்திய ஏஜெண்ட்டான கமலுக்கு உதவுகிறார் (ஊர்ப்பற்று வேறு அங்கே இருந்தது; கமல் பரமக்குடியைத் தன் சொந்த ஊரென்று சொல்ல, “ஓ, அதுக்குப் பக்கத்தில பள்ளத்தூர் என் ஊர்,” என்று சொல்வார் மனோரமா). அவர் அம்ஜத்கானின் ஜோடி; வினோதமான கூட்டணி!

விக்ரமில் தீவிரவாதிகள் இருந்தனர்; ஆனால் தீவிரவாதிகள் என்று அவர்கள் அழைக்கப்படவில்லை. விக்ரமில் ஏவுகணைகள் இருந்தன; ஆனால் அவை ராக்கெட்டுகள் என்றே அழைக்கப்பட்டன. மத அடிப்படைவாதத்தின் தீமையை சற்றும் உணராதிருந்த காலகட்டம் அது; அப்போதே மதம் போலி என்றும், அறநெறி வழுவியதென்றும் விக்ரம் சுட்டிக்காட்டியது. மறுபடியும், கூல்!

அந்நியக் கவர்ச்சி வழிந்தோடிய டிம்பிள் கபாடியாவும் இப்போது அப்படியில்லை. இப்போது அவர் நமக்குப் பரிச்சயமான ஒரு பாட்டி; பாட்டியாகவே திரையில் வலம்வருகிறார்.(Photo credits: https://creativecommons.org/licenses/by/3.0)

விக்ரமின் ஆகக்கவர்சியான பகுதி டிம்பிள் கபாடியாதான். கோலிவுட் அப்போது தெற்குமயமாக இருந்தது. பாம்பே என்ற மும்பையிலிருந்து இறக்குமதி செய்வது அப்போது மிகவும் அபூர்வம். பாலிவுட்டின் வித்தியாசமான அழகை தமிழ்ப்படத்தில் நடிக்க மீள்தோற்றம் கொள்ள வைத்தது நடிகர்கள் தேர்வுமுறையில் செய்த ஒரு புரட்சி. டிம்பிள் நடனமாடினார்; நயமாக நெளிந்தார்; நன்றாகக் கொஞ்சிப் பேசினார்; இறுதியில் கமலின் இதயத்திலும் நம் இதயங்களிலும் குடிபுகுந்தார். (அவர் தனது 16-ஆவது வயதில் இந்தியா முழுவதும் ராஜ்கபூரின் ‘பாபி’யில் இளமை அழகுக் கொஞ்சும் இனிய நாயகியாய்த் தோன்றி தமிழ்நாட்டுக்கும் நன்றாக அறிமுகமானவர்தான்).

சலாமியாவின் புரியாத மொழி கங்கை அமரனுக்கு அல்வா சாப்பிட்டது போலாகி அவரை சலாமிய மொழிப் பாடலையும் எழுதவைத்தது.

விக்ரமில் அன்று வித்தியாசமாகத் தெரிந்த உள்ளடக்கம் எல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது; மீண்டும் அதைப் பார்த்தால் அலுப்புகூடத் தட்டிவிடலாம். இன்றைய காலகட்டத்தில் எதுவும் நமக்கு அதிர்ச்சி தருவதில்லை; எதுவும் நமக்கு அதிசயமாகத் தோன்றுவதில்லை. ஆகப்பெரிய அமானுஷ்யங்கள் என்று இன்றைய உலகத்தில் எதுவுமில்லை; ஆராய்ச்சிக்குள்ளாகாத விசயங்கள் அகிலத்தில் இல்லை; புதுமையென்றும் வித்தியாசம் என்றும் சொல்வதற்கு எதுவும் மிச்சமில்லை. அந்நியக் கவர்ச்சி வழிந்தோடிய டிம்பிள் கபாடியாவும் இப்போது அப்படியில்லை (பிகினியில் ரிஷிகபூருடன் தயங்கித் தயங்கிப் பேசிய அந்தப் பதின்மவயது அறியா இளம்பெண் 1970-களில் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தது ஒரு தொன்மக்கதை). இப்போது அவர் நமக்குப் பரிச்சயமான ஒரு பாட்டி; பாட்டியாகவே திரையில் வலம்வருகிறார்.

கமலும் தன் வயதிற்கேற்ற பாத்திரங்களில் நடிப்பதில்லை. பழைய விக்ரமில் ஒலித்த டைட்டில் பாடல் வைரமுத்தின் தூய தமிழில் எழுதப்பட்டது; அது இன்னும் புத்தம்புதிதாகவே ஒலிக்கிறது; அந்தப் பாட்டுக்கு வயதாகவில்லை. ஆனால் 2022-ன் விக்ரமில் கமலின் குத்துப்பாட்டுக்கள் செயற்கையாகவும், வலிந்தும் திணிக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படைவாதம், தீவிரவாதம், ஏவுகணை, அனைத்துலக ஒற்றன் திகில்கதைகள் – இவையெல்லாம் 2022-ல் சலித்தும் புளித்தும் போன கருப்பொருட்கள்.

பழைய விக்ரம் பாலியலும், பெண்வெறுப்பும் கலந்த ஒரு டினோசர்; அதை அப்போது தமிழ்நாடு ரசனையுடன் ரசித்தது. ஆனால் டினோசர்கள் டினோசர் காலத்திலே இருக்கட்டும்; அவற்றை மீட்டெடுப்பது பிரச்சினையைக் கூட்டிவருவது போலாகிவிடும். .

இனி யார் ‘கூல்’ என்று சொல்வார்கள்?


Share the Article

Read in : English