Read in : English

Share the Article

சரகர் ஷபத் அல்லது சரகர் உறுதிமொழி தற்போது தமிழ்நாட்டில் சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. சரகர் ஷபத் என்பது சரகர் சம்ஹிதை என்றறியப்படும் ஆதிகால மருத்துவ ஆராய்ச்சி சாசனத்தில் இருக்கும் ஒருபகுதி. வழிவழியாக மருத்துவ மாணவர்கள் எடுத்துவரும் ஹிப்போகிராட்டிக் உறுதிமொழியைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக சரக ஷபத்தை எடுக்கும்படி அவர்களை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் திமுக அரசு கடுமையாக எதிர்த்திருக்கிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கும் சரகர் சம்ஹிதைப் பிரதியில் சில வினோதமான கருத்துக்கள் இருப்பதால், சரக ஷபத் மாநிலத்தில் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

நயன ஷர்மா முகர்ஜி, வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர், தெற்கு கொல்கத்தா பெண்கள் கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகம், சொல்கிறார்: “சமஸ்கிருத வார்த்தை ’சரகர்’ என்பது தேசாந்திரி மதஅறிஞர் அல்லது மருத்துவத்தில் நிபுணத்துவம் கொண்ட முனிவர் என்று பொருள்படும்,”

’மருத்துவ வரலாற்றுக் கட்டுரைகள்’ என்ற புத்தகத்தை சுஸ்மிதா பாசு மஜும்தாருடன் இணைந்து எழுதிய நயன ஷர்மா முகர்ஜிவிடம் சரகர் சம்ஹிதை, அதன் வரலாற்றுத்தன்மை மற்றும் ஷபத் ஆகியவற்றைப் பற்றி இன்மதி செய்த மின்னஞ்சல் நேர்காணலில், நடுநிலை தவறாத அறிவுக் கண்ணோடத்தில் கவனமாக, விலாவாரியாக எடுத்துரைத்தார் முகர்ஜி.

பின்வருபவன அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளும் சொல்லப்பட்ட விடைகளும்:

1. இப்போது பரிந்துரைக்கப்படும் சரக ஷபத்தை உள்ளடக்கிய சரக சம்ஹிதை எவ்வளவு பழைமையானது? மூலப்பிரதி ஒன்று உண்டு என்பதும், பிற்காலத்தில் அதில் இடைச்செருகல்கள் வந்தன என்பதும் வாஸ்தவம்தானா?

சரகர் சம்ஹிதை அல்லது ஸரகர் சம்ஹிதை ஆதிஇந்திய மருத்துவத்தின் அடிப்படை சாசனங்களில் ஒன்று. இந்தியாவில் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி ஆவணங்களில் ஆகப்பழையதும், மிகவும் அதிகாரப்பூர்வமானதும் இதுதான். சரகர் சம்ஹிதை ஓர் ஒற்றை எழுத்தாளரின் படைப்பு அல்ல. இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால், இதை எழுதியவர் மகரிஷி சரகர் அல்ல. இந்த ஆய்வுநூல் அக்னிவேஷ தந்திரம் அல்லது அக்னிவேஷ சம்ஹிதை என்ற பழைய நூலின் திருத்தப்பட்ட வடிவம்தான். அந்தப் பழைய நூல் தற்போது இல்லை. அதன் காலமும் தெரியவில்லை. அக்னிவேஷ தந்திரம் என்ற பிரதியைத் திருத்தித் தொகுத்துச் செம்மையாக்கியவர் சரகர். அநேகமாக கிபி 2-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது நிகழ்ந்திருக்க வேண்டும். இப்படித்தான் அக்னிவேஷ தந்திரம் அதைத் திருத்தி மீளுருவாக்கம் செய்தவரின் பேரில் சரகர் சம்ஹிதை என்று அறியப்படலானது. ஆனால் மகரிஷி சரகரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ‘சரகர்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கும் தேசாந்திரியாகச் சுற்றிக்கொண்டே போகும் மத அறிஞர் அல்லது மருத்துவ அறிவுகொண்ட முனிவர் என்று அர்த்தம். ஒருவேளை சரகர்கள் என்று அறியப்படும் தேசாந்திரி அறிஞர்க் கூட்டத்தினர் அல்லது சரகர் என்ற தனிமனிதர் மூலப்பிரதியைத் திருத்திச் செம்மையாக்கியிருக்கலாம்.

காலப்போக்கில் இந்தப் படைப்பின் பெரும்பகுதி காணாமல் போனது அல்லது சிதைந்துபோனது என்று நூலின் இறுதிப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. கிபி நான்கு-ஐந்து நூற்றாண்டைச் சார்ந்த த்ரிதபாலா என்ற ஒரு காஷ்மீர் அறிஞர் மற்ற மருத்துவப் படைப்புகளை ஆய்வு செய்துவிட்டு மூலப்பிரதியில் மேலும் சில அத்தியாயங்களை எழுதிச் சேர்த்தார். தான் எழுதிய அத்தியாயங்களையும், அக்னிவேஷர், சரகர் ஆகியோரின் பெரும்பங்களிப்பையும் த்ரிதபாலா ஒத்துக்கொள்கிறார். இப்படித்தான் அவர் சரகர் சம்ஹிதையை மீண்டும் மீண்டும் வாசித்து, திருத்திச் செம்மைப்படுத்தி அதற்கொரு முழுமையான வடிவம் கொடுத்தார். இந்தப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கொள்கள் கிபி 5-ஆம் நூற்றாண்டிலிருந்து உருவான சமஸ்கிருதப் படைப்புகளில் காணமுடியும்.

சரகர் சம்ஹிதை அல்லது ஸரகர் சம்ஹிதை ஆதிஇந்திய மருத்துவத்தின் அடிப்படை சாசனங்களில் ஒன்று. இந்தியாவில் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி ஆவணங்களில் ஆகப்பழையதும், மிகவும் அதிகாரப்பூர்வமானதும் இதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் வளரும் மருத்துவ அறிவுக்கேற்ப ஆவணத்தில் பிற்சேர்க்கைகள் சேர்க்கப்பட்டன.

திருத்தியும், செம்மைப்படுத்தியும்தான் அக்னிவேஷரின் படைப்பு ஒரு தொகுப்பானது. சம்ஹிதை என்னும் வார்த்தையே தொகுப்பு என்று பொருள்படும். அதாவது, ஆதிகாலத்திலிருந்து வழிவழியாகப் பெறப்பட்ட மருத்துவ அறிவு முறையாக ஓர் ஆவணமாகத் தொகுக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வளரும் மருத்துவ அறிவுக்கேற்ப ஆவணத்தில் பிற்சேர்க்கைகள் சேர்க்கப்பட்டன.

2. சரகர் சம்ஹிதை எழுதப்பட்ட காலத்தில் இருந்த மருத்துவ அறிவின் பின்னணியில், ஒரு படைப்பு என்ற முறையில் இதன் சிறப்புத்தகுதி என்ன?

சரகர் சம்ஹிதையின் முக்கியத்துவத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துரைக்க முடியாது. சுஷ்ருதா சம்ஹிதையோடும், அஷ்டாங்க ஹிருதய சம்ஹிதையோடும் சரகர் சம்ஹிதையை இணைத்துப் பார்த்தால், இந்த மூன்று ஆய்வு ஆவணங்களும் சேர்ந்துதான் ‘பிருகத் த்ரயி’ அல்லது ‘ஆகப்பெரிய முத்தொகுதி’யாக உருப்பெற்று ஆயுர்வேதத்திற்கு அடிக்கல் நாட்டின என்று புரியும். சரகர் சம்ஹிதை காய சிகிச்சைக்கு அல்லது உடலுக்குள்ளான மருத்துவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுஷ்ருதா சம்ஹிதை அறுவைச் சிகிச்சைக்கானவோர் அதிகாரப்பூர்வப் படைப்பு. அஷ்டாங்க ஹிருதய சம்ஹிதையின் ஆசிரியர் வாக்பட்டா சரகர் சம்ஹிதையின், சுஷ்ருதாவின் நிறைய பகுதிகளைத் தொகுத்து அந்த இரண்டு படைப்புகளுக்கும் கடன்பட்டிருக்கிறார்.

நயன ஷர்மா முகர்ஜி கூட்டாக எழுதிய புத்தகம், “மருத்துவச் சரித்திரக் கட்டுரைகள்.”

சரகர் சம்ஹிதை ஒரு கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) போன்றதுதான். எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே, நோய்களின் ஆதிமூலம், நோய்களின் வளர்ச்சிமுறை, நோய்களைக் கண்டுபிடித்தல், நோய்கள் எப்படி வளரும் என்பதைக் கணித்தல், நோய்களை கட்டுக்குள் கொண்டுவருதல், மருந்து, மாத்திரைகளுக்கான சித்தாந்தங்கள், அவற்றைத் தயாரிக்கும் முறைகள் என்று எல்லா விசயங்களும் இந்தப் படைப்பில் விவரிக்கப்படுகின்றன. மருத்துவ விஞ்ஞானத்தின் மூலத்தைப் பற்றியும், அதன் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றியும், ஆரோக்கியத்தைப் பேணி நோய்களை வராமல் தடுக்கும் வழிகள் பற்றியும், மருத்துவ விஞ்ஞானத்தின் அஸ்திவாரமாக இருக்கும் தத்துவங்கள் பற்றியும் எவரேனும் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர் இந்த ஆய்வு ஆவணத்தை வாசிப்பது உத்தமம். ஆரோக்கியத்திற்கும் பருவகாலங்களுக்கும் உள்ள உறவு, சுகாதாரப் பழக்கங்கள், உணவுப் பழக்கங்கள், தனிமனித நடத்தைவிதி ஆகியவையும் இதில் விளக்கப்படுகின்றன. மூன்று தோஷங்கள் பற்றிய தேற்றம் போன்று இந்தப் படைப்பு வகுத்திருக்கும் அடிப்படைக் கருத்தியல் சித்தாந்தங்களை ஆதியிலிருந்து பிற்காலம்வரை பல்வேறு சிந்தனாவாதிகள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அறுவைச்சிகிச்சை, நச்சுயியல், குழந்தை மருத்துவயியல், மனோதத்துவம், முதியோர் மருத்துவம், புத்துணர்ச்சி சிகிச்சை போன்ற மருத்துவத்தின் பல்வேறு பிரிவுகளைப் பற்றியும் சரகர் சம்ஹிதையிலிருந்து ஒருவர் தெரிந்துகொள்ள முடியும். மருத்துவக் கல்விமுறையும், மருத்துவத் தொழில் நெறிமுறைகளும் விளக்கப்படுகின்றன. கிபி 4-ஆம் நூற்றாண்டிலிருந்து சரகர் சம்ஹிதை பற்றி சமஸ்கிருதத்திலும், மற்ற மொழிகளிலும் ஏராளமான பாஷ்யங்கள் (விளக்கயுரைகள்) புனையப்பட்டன என்பது அந்தப் படைப்பின் பிரபல்யத்திற்குச் சான்று. கிபி 11-ஆம் நூற்றாண்டில் ஆயுர்வேத தீபிகாவை எழுதிய சக்ரபாணி தத்தா மிகவும் புகழ்பெற்ற ஓர் உரையாசிரியர். அவரது படைப்பு பாரசீகத்திலும், அரேபிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. உண்மைத்தன்மை நிறைந்த மற்றொரு படைப்பு சுஷ்ருத சம்ஹிதை; அது முற்றிலும் வேறுபிரிவைச் சார்ந்தது. பிற ஆய்வு ஆவணங்களும் ஏராளமாகவே இருந்தன. ஆனால் அவற்றில் சில காணாமல் போய்விட்டன. எனினும் எதுவும் சரகர் சம்ஹிதை சாதித்த புகழையும், நிஜத்தன்மையையும் அடையவில்லை. இதன் சரித்திரத்தன்மையைப் பற்றி சந்தேகம் ஏதும் இங்கில்லை.

3. சரகர் ஷபத் என்ன சொல்கிறது? அதன் நேர்மறை அம்சங்கள், எதிர்மறை அம்சங்கள் என்ன? ஷபத் ஓர் இடைச்செருகலா?

பின்வரும் விசயம் நிறைய பேர்க்கு தெரியாமல் இருக்கலாம். ஆதிஇந்திய மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கருத்தாக்கத்தை இந்த நவீன உலகில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு திட்டத்தைச் சில அமெரிக்க மருத்துவர்கள் முன்மொழிந்தார்கள். 1898-ல் அவர்கள் நியூயார்க்கில் உருவாக்கிய மருத்துவச் சரித்திரச் சங்கத்திற்குப் பின்னர் ’சரகர் சங்கம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. இந்திய மருத்துவத்தைப் பற்றி டாக்டர் பெர்னார்டு சாக்ஸ் நிகழ்த்திய உரை மற்றவர்களின் ஆர்வத்தைக் கிளறியது. அந்தக் கூட்ட நிகழ்வு பற்றிய புத்தகத்தின் ஆறாவது தொகுதியில், “இந்து மருத்துவரின் உறுதிமொழி” என்று ஒரு பக்கம் இருக்கிறது. சரகர் சம்ஹிதையில் ஆசிரியர் தன்சீடருக்கு வழங்கிய போதனைகளிலிருந்து எடுத்துக் கட்டமைத்த ஓர் உறுதிமொழியை அந்தச் சங்க உறுப்பினர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.

  சரகர் சம்ஹிதை ஒரு கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) போன்றதுதான். நோய்களின் ஆதிமூலம், நோய்களின் வளர்ச்சிமுறை, நோய்களைக் கண்டுபிடித்தல், நோய்கள் எப்படி வளரும் என்பதைக் கணித்தல், நோய்களை கட்டுக்குள் கொண்டுவருதல், மருந்து, மாத்திரைகளுக்கான சித்தாந்தங்கள், அவற்றைத் தயாரிக்கும் முறைகள் என்று எல்லா விசயங்களும் இந்தப் படைப்பில் விவரிக்கப்படுகின்றன. ஆனால் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க மறுத்தல் முக்கியம் என்று சொல்லப்படுகிறது

மருத்துவ விஞ்ஞானத்தின் கற்பிக்கும், கற்றல் முறைகள் சரகர் சம்ஹிதையில் விளக்கப்படுகின்றன. குருவின் தன்மைகள், சீடனின் குணாம்சங்கள், பாடங்களைத் தேர்ந்தெடுத்தல், கற்றல்முறை என்று பல்வேறு விசயங்கள் அதில் விரிவாகச் சொல்லப்படுகின்றன. பின்பு மருத்துவ மாணவனுக்குக் கொடுக்கப்படும் அரிச்சுவடிப் பயிற்சியை அது விளக்குகிறது. புனித நெருப்பின் முன்பு ஆசிரியர் சீடனுக்குச் சில கட்டளைகளைப் போதிக்கிறார். குருவிற்குக் கீழ்ப்படிந்துக் கற்பதாகச் சீடன் சபதம் எடுத்துக் கொள்கிறான். மாணவப்பருவத்தில் சீடன் அந்தக் கட்டளைகளைப் பின்பற்றுகிறான். தகப்பன் முன்பு மகனைப்போல, எஜமானன் முன்பு வேலைக்காரனைப் போல சீடன் குருவிடம் மரியாதை காட்டவேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்புப் படித்து விட்டு வருபவர்கள் எஃப்எம்ஜிஇ என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது. (Photo Credit: Flickr- Sadasiv Swain)

பின்பு வெற்றி, புகழ், செல்வம் ஆகியவற்றிற்கான தொழில்தர்மம் பற்றிய போதனைகள் தொடர்கின்றன. இந்தப் போதனைகள்படி நோயாளியைக் குணமாக்கும் முயற்சியில் கற்றுக்கொண்ட சீடன் இறங்க வேண்டும்; எவர்மீதும் வன்மம் கொள்ளக்கூடாது; பொறாமையுடன் செயல்படக் கூடாது; சமபந்தப்பட்ட நோயாளியின் குடும்ப இரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது; தன்மருத்துவ அறிவை அவன் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தோற்றத்தில் எளிமை, பேச்சில் இனிமை, உண்மையான உணர்வு, கர்வத்தை, பகட்டை விலக்குதல் ஆகிய குணங்களும் வலியுறுத்தப்படுகின்றன. தொழிலில் வெற்றி பெறுவதற்கு, பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் மரியாதை கொடுத்தல், தீயவர்களை விட்டு விலகிநிற்றல், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க மறுத்தல் ஆகியவை முக்கியம் என்று சொல்லப்படுகிறது. மோசமான நடத்தை, தீயகுணம் கொண்டவர்களுக்கும், கெளரவம் இழந்தவர்களுக்கும், நோயிலிருந்து பிழைக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், அரசனால் வெறுக்கப்படுபவர்களுக்கும், அரசனை விமர்சிப்பவர்களுக்கும் மருத்துவச்சிகிச்சை தரக்கூடாது. ஆண்காவல் இல்லாமல் வருகின்ற பெண் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யக்கூடாது. மருத்துவர்களுக்கான நெறிமுறைகளில் இதுவொரு பாரபட்சமான அம்சம்.

இந்த அறிவுரை பட்டதாரி மருத்துவர்களுக்கு உறுதிமொழியாக வழங்கப்படுகிறதா? இது அந்தப் பிரதியில் தெளிவாகத் தெரியவில்லை. குரு போதனைகள் கொடுத்தபின்பு, சீடன் ‘ததா’ என்று, அதாவது, “நீங்கள் சொன்னபடி நடந்துகொள்வேன்,” என்று சொல்ல வேண்டும் என்று மட்டும்தான் பிரதி சொல்கிறது. பின்பு சீடன் பயிற்சிக்குத் தகுதியாகிறான். மருத்துவக் கல்வி ஆரம்பமாகும் முன்பு இந்தக் கட்டளைகள் வழங்கப்படுகின்றன. தொழிலில் வெற்றியடையக் கொடுக்கப்படும் போதனைகள் வழிகாட்டுதலாக அல்லது புத்திமதியாக மட்டும்தான் தோன்றுகின்றன. கல்வி முடிந்தவுடன் தொழிலுக்குள் அடியெடுத்து வைக்கும் முன்பு சீடன் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதியில் சொல்லப்படவே இல்லை. பல்வேறு ஆவணங்களை வாசித்துப் பார்த்து ஒப்பீடு செய்தால்தான் இந்தப் பகுதி இடைச்செருகலா என்று கண்டுபிடிக்க முடியும்.

4. ஷபத் என்பது மருத்துவரின் தொழில் பற்றி ஒரு கலாச்சார நிலைப்பாட்டை எடுக்கிறது என்று சிலர் சொல்லலாம்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  ஹிப்போகிராட்டிக் நெறிமுறை முதன்முதலில் வகுக்கப்பட்டது ஆண்மருத்துவர்களுக்காகத்தான். ஒப்பீடு செய்தால், சரகர் உறுதிமொழி மருத்துவரின் தர்ம குணத்திற்கும், மருத்துவத் தொழிலின் மரியாதையைக் கட்டமைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.சரகர் ஷபத்தைப் பற்றிய சில சமீபத்து செய்திகளின்படி, உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் மருத்துவர்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருக்க வேண்டும்; நீண்டமுடி வளர்த்துக்கொள்ள வேண்டும்; சரகர் சம்ஹிதையில் சொல்லப்பட்டது போல மதுவைத் தவிர்க்க வேண்டும். ஆனால் சரகர் சம்ஹிதையில் சைவ உணவையும், பிரம்மச்சர்யத்தையும் வலியுறுத்திய விதிகள் படிப்புக்காலத்திற்கு மட்டுமே. மருத்துவ மாணவர்களுக்கான வித்யாரம்பச் சடங்கு, வேதக்கல்விக்குள் இறங்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும் உபநயனச் சடங்கைப் போலவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவத் தொழிலுக்கு ஒரு மரியாதையைப் பெற்றுத்தரும் நோக்கத்துடன் இச்சடங்கு நடத்தப்படுகிறது. மனுஸ்மிருதி போன்ற பிராமணச் சாஸ்திர நூல்களில் மருத்துவர்கள் மட்டமாகப் பேசப்படுகிறார்கள்; சமூகக் கட்டமைப்பில் அவர்களுக்கு மிகவும் கீழானவொரு இடம்தான் கொடுக்கப்படுகிறது. மருத்துவர்கள் எப்போதும் ரத்தம், சீழ், மலம் ஆகியவற்றோடு தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களின் உணவை உயர்சாதி மக்கள் தொடக்கூடாது என்று விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் மருத்துவ மாணவர்களின் வித்யாரம்பச் சடங்கின் புனிதத்தன்மைக்காக அந்தச் சடங்கைப் புனித நெருப்பின் முன்பும், முனிவர்களின் முன்பும் நடத்துவதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கம், பணிவு, சாந்தம், தன்னடக்கம், சரியான நடத்தை, பேச்சைக்குறைத்தல், தூய்மை, பொருள்சார்ந்த ஆசைகளைத் துறத்தல் ஆகியவை மருத்துவர்களின் குணங்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. இந்த அம்சங்கள்தான் நவீன சரகர் உறுதிமொழியிலும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இந்தச் சாஸ்திரம் ஆணின் கோணத்திலே எழுதப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இது எழுதப்பட்ட காலம் பெண்கள் மருத்துவத்துறைக்குள் நுழைவது என்பது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காலம்.

5. சரகர் ஷபத்தை (உறுதிமொழியை) ஹிப்போகிராட்டிக் உறுதிமொழியுடன் எப்படி ஒப்பிடுவது?

ஹிப்போகிராட்டிக் உறுதிமொழி ஆசிரியர்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆகியோர்க்கு மருத்துவர் செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகிறது.

ஹிப்போகிராட்டிக் உறுதிமொழி கிபி 400-லிருந்து பயன்பாட்டில் இருக்கிறது. மருத்துவக் கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், நோயாளிகள் ஆகியோரிடம் மருத்துவர்களுக்கு இருக்கும் கடமைகளை அது பேசுகிறது. இந்த நெறிமுறைப்படி, அறிவைப் பரப்புதல் மருத்துவரின் தலையாய கடமையாகிறது. இதன்படி ஒரு மருத்துவர் தனது அறிவை தன்மகன்களுக்கும், தன்மாணவர்களுக்கும் ஆசிரியர்களின் மகன்களுக்கும் கடத்துவது அவசியம். தன் திறமையையும், தீர்மானிக்கும் ஆற்றலையும் முழுவதாகப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு ஆகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதாக, தீமை செய்யும் எதையும் கொடுப்பதில்லை என, ஓர் உதாரண வாழ்க்கையை நடத்துவதாக மருத்துவர் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார். ஹிப்போகிராட்டிக் கோட் வைத்தியத்தில் பாரபட்சம் பார்ப்பதில்லை, வைத்தியம் செய்துகொள்ள வரும் எல்லாவிதமான நோயாளிகளையும் மருத்துவர் கவனிக்க வேண்டும் என்று அது சொல்கிறது. நோயாளிகளின் சமூக அந்தஸ்து அல்லது அரசியல் கொள்கை அல்லது பால்வித்தியாசம் முக்கியமில்லை. எனினும் ஹிப்போகிராட்டிக் நெறிமுறை முதன்முதலில் வகுக்கப்பட்டது ஆண்மருத்துவர்களுக்காகத்தான். காலப்போக்கில் பல்வேறு மாற்றங்கள் அதில் செய்யப்பட்டிருக்கின்றன. ஒப்பீடு செய்தால், சரகர் உறுதிமொழி மருத்துவரின் தர்ம குணத்திற்கும், மருத்துவத் தொழிலின் மரியாதையைக் கட்டமைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த இரண்டுவகை உறுதிமொழிகளும் தொழில் தர்மத்திற்கும், சமூகத்தில் புழங்கும் மருத்துவரின் நடத்தைக்கும் முக்கியத்துவம் தருகின்றன. தற்கால மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன முன்னேற்றங்களும், நவீன சிகிச்சைமுறைகளும் ஆராய்ச்சிகளும் பல்வேறு புதிய கண்ணோட்டங்களை உருவாக்கியிருக்கின்றன. அதனால் மருத்துவர்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகள் நவீனகாலத்துக் கொள்கைகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.


Share the Article

Read in : English