Read in : English

Share the Article

தமிழ்நாட்டின் பெருமை சென்னை அருங்காட்சியகம். அதனுள்ளே இருக்கும் மிகப்பரந்த சேகரிப்புகளும், உயர்தரமாகப் பேணிக்காக்கும் ஆய்வுக்கூடம் போன்ற வளங்களும் வருபவர்களுக்கு சுவாரஸ்யமான, அறிவுபுகட்டக்கூடிய, கேளிக்கைமிக்க ஓர் ஆழ்ந்த அனுபவத்தைத் தருகின்றன.

தங்கள் வேர்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் வரும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த மியூசியம் வழங்குவது மரங்கள் அடர்ந்த வனம்போன்ற பெரியதொரு களமும், ஜீவனற்ற ஆனால் எண்ணற்ற காட்சிப்பொருட்களும்தான். இந்தப் பழங்காலத்துக் கட்டிடத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் இங்கே அரசு சிசிடிவியைப் பொருத்துவதிலே அதிகக் கவனம் செலுத்துகிறது.

டிக்கெட் கவுண்டர் மியூசியத்தில் இருக்கும் பழங்காலத்துக் காட்சிப்பொருள் போலவே காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நபரிடமும் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிச்சயமாக கூடவே வசூலிக்கலாம். ஆனால் பணம் இங்கே ரொக்கமாகத்தான் கட்டவேண்டும். அடிக்கடி சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மின்னணுக் கட்டணத்தைப் பற்றி யாரும் கேள்விப்பட்டது போலத் தெரியவில்லை.

அருங்காட்சியகம்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள தேசியக் கலைக்கூடம்.

மியூசியத்தின் பலங்களில் அதிலிருக்கும் வெண்கலச் சிலைகள், ரவிவர்மா ஓவியங்கள், அமராவதிப் பிரிவு போன்றவை அடங்கும். ஆனால் அவை அடிக்கடி காணாமல் போய்விடுகின்றன.

உதாரணமாக, நவீன கலைக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் காணப்படும் சுதந்திரப்போராளிகளின் இடுப்பளவுச் சிலைகளில் கலையம்சம் பெரிதாக இல்லை. இடைமட்ட மாடியில்தான் ரவிவர்மாவின் மாணிக்கங்கள் இருக்கின்றன. தரைத்தளத்தின் கடைக்கோடியில் ஒதுங்கியே நிற்கின்றன ஆர்.பி. பாஸ்கரின் பூனைத் தொடர் ஓவியங்கள். இந்த ஓவியங்களுக்குக் கீழே தரப்பட்டிருக்கும் சிறுவிவரணையைத் தாண்டி வேறு என்ன தகவல்களைப் பெறமுடியும் என்று பார்வையாளர்கள் நினைப்பதுண்டு. ஒருவேளை பார்வையாளர்களுக்கு இவ்வளவு தகவல் மட்டுமே தரமுடியும் என்று எண்ணியிருப்பார்களோ என்று அவர்கள் யோசிக்கக்கூடும். கட்டிடத்தில் இருக்கும் எல்சிடியில் வெண்கலச் சேகரிப்புகளைப் பற்றிய தகவல்கள் பொருத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்ற்றன. நவீன கலைச்சேகரிப்புகள் பற்றி ஒரு தகவலையும் அது தருவதில்லை.

எக்மோர் அருங்காட்சியகத்தில் ஏராளமான ஆதிகாலத்து மற்றும் சமீபத்துக் காட்சிப்பொருட்கள் இருக்கின்றன; விலைமதிப்பற்ற அபூர்வமான அந்தப் பொருட்கள் நாம் பார்ப்பதற்கு மட்டுமே இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தரவுக்காகிதங்கள் கொஞ்சம்தான் தகவல்கள் தருகின்றன.

சராசரி மனிதன் முதல் அறிஞர் வரை எல்லாவிதமான மக்களும் ஒன்றிரண்டு விசயங்களைக் கற்றுக்கொள்ளும் வண்ணம் காட்சிப்பொருட்கள் இருக்க வேண்டும்.  

ஆயினும் உலகம் முழுவதிலும் இருக்கின்ற மியூசியங்கள் காட்சிப் பொருள்களுக்கேற்ற ஒளி-ஒலி வடிவங்களையும், பொருட்கள் சார்ந்த காலத்திற்கேற்ற சூழல் வடிவமைப்பையும் கொண்டு கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகும் அனுபவத்தை வழங்குகின்றன. “இந்தியாவின் மியூசியங்கள் காலம், இடம் ஆகிய வர்த்தமானங்களை விட்டுவிட்டு அளவுக்கு அதிகமானதைக் காட்சிப்படுத்துகின்றன,” என்கிறார் வினோத் டேனியல். அவர் ஓர் அருங்காட்சியக நிபுணர்; மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி (சிஏஓ) மற்றும் நிர்வாக அறங்காவலர்.

உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் பணிபுரிந்து செழுமையான அனுபவம் பெற்ற டேனியல் எக்மோர் மியூசியத்தின் உள்ளிருக்கும் பலத்தைக் கொண்டு அதை எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றி இன்மதியோடு உரையாடினார்.

எக்மோர் மியூசியத்தில் ஏகப்பட்ட சேகரிப்புகள் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். பின் ஏன் மியூசி்யம் பெரிதாக வளரவில்லை? எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது?

இந்த மியூசியத்திலும் சரி, இந்தியாவிலுள்ள மற்ற மியூசியங்களிலும் சரி, அவற்றின் தகவல்தொடர்பு முறையில்தான் பிரச்சினை. என்னவிதமான பார்வையாளர் தொடர்பை அவை கொண்டிருக்கின்றன? பார்வையாளர்களுக்கு அவை ஓர் அனுபவத்தைக் கொடுக்கின்றனவா? அதிகாரிகள் இந்தக் கேள்விகளை தங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டும்.

சேகரிப்புகளுக்குச் சரியானதொரு சூழலை உருவாக்க வேண்டும். உலக அருங்காட்சியகங்கள் சூழலை உருவாக்குவதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன.

பெரும்பாலான உலக மியூசியங்களில் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப் படுவதில்லை; மாறாக அவை பத்திரமாகப் பேணிக் காக்கப்படுகின்றன; சேமிக்கப்படுகின்றன. அதுதான் வழக்கம். சேமிப்புப்பகுதிகளில் சரியான வெப்பநிலையும், நெருப்பெதிர்ப்பு வசதியும், ஈரப்பதமும் இருக்க வேண்டும். அங்கே அளவுக்கு அதிகமான வெளிச்சம் கூடாது. சரியான ஆதரவு வசதிகள் வேண்டும். பேணிக்காக்கும் அமைப்பு உலக மியூசியங்களில் நன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பார்வையாளர்களுக்கு இணக்கமான அணுகுமுறை நம்மிடம் இல்லை. பல்வேறு பார்வையாளர்கள் இருக்கிறார்கள். சராசரி மனிதன் முதல் அறிஞர் வரை எல்லாவிதமான மக்களும் ஒன்றிரண்டு விசயங்களைக் கற்றுக்கொள்ளும் வண்ணம் காட்சிப்பொருட்கள் இருக்க வேண்டும். அதிகம் தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பிய தகவல்களை அளிக்கும் வசதியும் உருவாக்கப்பட வேண்டும்.

நமக்கு இப்போது தொழில்நுட்பம் இருக்கிறது. காட்சிகளை நம்மால் மீளுருவாக்கம் செய்யமுடியும். ஆவணப்படங்கள் மூலம் நாம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தேக்கநிலைத் தகவல் சரிப்பட்டுவராது. சமூக ஊடகங்கள் வழியான ஓர் ஊடாட்டம் வேண்டும். விவாதங்களை ஆரம்பித்து வைக்கலாம். பல்வேறு வயதினர்களையும் இது கவர்ந்திழுக்கும்.  

எக்மோர் மியூசியத்தில் ஏராளமான காட்சிப்பொருட்கள் உள்ளன; ஆனால் போதுமான தகவல்கள் இல்லை என்கிறீர்கள்; அப்படித்தானே?

நிறைய காட்சிப்பொருட்களைக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றின் இடம், காலம் ஆகிய வர்த்தமானங்களை விளக்கியாக வேண்டும்.

வெண்கலப் பிரிவில் சிலை தயாரிப்பை ஆவணப்படமாக்கலாம் (இதைக் காட்டும் தற்போதைய படத்தில், இழந்துபோன மெழுகுச்சிலை அமைப்புமுறையைக் காட்டும் காட்சி இல்லை). சிலை கோயிலில் எப்படி புனிதத்துவம் அடைந்தது என்பதே மற்றோரு ஆவணப்படத்திற்குக் கருவாகலாம்.

அந்தச் சூழலை மீளுருவாக்கம் செய்யமுடியும். ஹோலோகிராம்களும், முப்பரிமாணமும் (3டி) காட்சித்தாக்கத்தை ஏற்படுத்த பயன்படும்.

அறிஞர்களின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்வது பத்தாது. தங்களுக்குத் தேவையான தரவுகளைப் பட்டைக்குறியீடு (பார்கோடு) கட்டமைப்புகள் மூலம் அவர்களால் பெறமுடியும்.

புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட ஈ.கே. நாயனார் அருங்காட்சியகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் வினோத் டேனியல். அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாயனாரின் ஹாலோகிராம் அவரைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்

சமீபத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் திறந்துவைத்த ஈகே நாயனார் அருங்காட்சியகம் நீங்கள் வடிவமைத்தது. அங்கே நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது பற்றி சொல்லுங்களேன்.

நாங்கள் ஹோலோகிராமைப் பயன்படுத்தி நாயனாரின் ஆளுமையை மீளுருவாக்கம் செய்தோம். உதாரணமாக, நீங்கள் அவரிடம் கேள்வி கேட்கலாம்; அவர் பதில் சொல்வதைக் கேட்கலாம். அசையாத, நிலையான காட்சிப்பொருள்களை விட இந்தமாதிரி ஜீவன்ததும்பும் காட்சிப்பொருள்கள் பார்வையாளர்களின ஆர்வத்தைத் தூண்டிவிடும். நாயனாரை நேரில் பார்த்திராத மனிதர்களுக்கு இந்த உத்தி அவரை அப்படியே உயிரோடு மீட்டெடுத்ததைப் போலிருக்கும்.

ஆனால் அதிகப்படியான தொழில்நுட்பம் என்பது ஜீவனற்றதாகி விடாதா?

நீங்கள் சொல்வது சரிதான். வெண்கலத்திற்குச் சரியாக இருப்பது சிந்துப் பள்ளத்தாக்கிற்குச் சரிப்பட்டுவராது.

எக்மோர் அருங்காட்சியகத்திலிருக்கும் அமராவதிப் பிரிவைப் பார்த்தால், உங்களுக்குப் புரியும். அங்கே இருப்பது பொருட்களையும் வாசகங்களையும் மட்டுமே பயன்படுத்தும் பழைய பாணியிலான அருங்காட்சியகக்கலை. நாம் காகிதங்களில் கடிதம் எழுதிக்கொண்டிருந்த காலத்தைப் போன்றது அது.

தேக்கநிலைத் தகவல் சரிப்பட்டுவராது. சமூக ஊடகங்கள் வழியான ஓர் ஊடாட்டம் வேண்டும். விவாதங்களை ஆரம்பித்து வைக்கலாம். பல்வேறு வயதினர்களையும் இது கவர்ந்திழுக்கும்.

உதாரணமாக மியூசியத்தின் இயற்கை விஞ்ஞானப்பிரிவில், நிலைத்த காட்சிப்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால் அவை எப்படி பல்லுயிரி, பருவநிலை மாற்றம் போன்ற இன்றைய இயற்கை விஞ்ஞான விவாதங்களோடு தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும் வண்ணம் அவற்றை மடைமாற்றம் செய்யலாம்.

எக்மோர் அருங்காட்சியகம் சம்பந்தமாக அரசிற்கு உங்களால் என்ன சொல்ல முடியும்?

அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் திட்டம் தீட்டும் செயலுக்குத் திரும்ப வேண்டும். என்னவொரு பெரிய திட்டம் வைத்திருக்கிறார்கள்? இந்த விசயத்தில் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

அதீதமாக நவீனப்படுத்த வேண்டாம். அதே சூழலே இருக்கட்டும். ஆனால் அவர்கள் ஒரு ‘மாஸ்டர் பிளான்’ கொண்டுவர வேண்டும். இருக்கும் சேகரிப்புத் தொகுப்புகளில் எட்டு அல்லது பத்து தொகுப்புகளை ஆறு அல்லது ஏழு கட்டிடங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தொகுப்பு என்ற முறையில் காட்சிப்படுத்தலாம். தற்போது ஏராளமான காட்சிப்பொருட்கள் நெருக்கடியாக நிரல்படுத்தாமல் இறைந்து கிடக்கின்றன.

அருங்காட்சியகத்தில் உள்ள அமராவதி என்ற பிரிவில் பழைய மாதிரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காட்சிப்பொருட்களின் இடம், காலம் ஆகிய வர்த்தமானங்களை தொழில்நுட்பம் மூலம் விளக்க வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்களின் ஆர்வம் தூண்டப்படும். பல்வேறு தகவல் அடுக்குகள் மியூசியத்தில் இருக்க வேண்டும். துரித எதிர்வினை சங்கேதங்களை (கியூஆர் கோட்) அலைபேசியில் அளவெடுத்தால் உடனே தோன்றும் சாளரத்தில் அறிஞர்களுக்குத் தேவையான தகவல்கள் கொட்டப்படும்.

அரசாங்கத்தால் இதைச் செய்யமுடியுமா?

சிங்கப்பூரிலும் சீனாவிலும் அருங்காட்சியகங்களின் மீளுருவாக்கம் வெற்றிகரமாகவே நிகழ்ந்திருக்கிறது.

அருங்காட்சியகத் தலைவரின் தலையை சும்மா உருட்டக்கூடாது. அவருக்கு (ஆணோ, பெண்ணோ) எட்டு அல்லது பத்துவருடத் தொழில்காலம் தரப்பட வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தொழில்முறையாளர்களை தலைமைப் பதவிக்கு நியமிக்க வேண்டும்.

இப்போதிருக்கும் ஊழியர்களில் 90 சதவீதத்தினருக்கு வேலைக்குப் பொருத்தமான திறன்கள் இல்லை. விசேடப் பயிற்சி இல்லாத வெறும் அரசு ஊழியர்கள்தான் அவர்கள். அருங்காட்சியகம், அகழ்வாராய்ச்சி ஆகிய துறைகளில் இருக்கும் நிபுணர்களை இங்கே கொண்டுவரலாம்.

இந்தியாவில் இருக்கும் 1,000 அருங்காட்சியகங்களை நிர்வகிக்க 50,000 அருங்காட்சியக நிபுணர்கள் தேவை. ஆனால் இருக்கும் ஊழியர்களில் வெறும் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே நிபுணர்கள். பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்கள் வேண்டும். ஒரு புதிய அணுகுமுறை தேவை.

காட்சிப்பொருட்களின் இடம், காலம் ஆகிய வர்த்தமானங்களை தொழில்நுட்பம் மூலம் விளக்க வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்களின் ஆர்வம் தூண்டப்படும்

அருங்காட்சியகங்களின் ஆகப்பெரும் ஆதரவாளர்களில் அரசும் ஒன்று. அரசு கொஞ்சம் நிதி தரலாம். ஆனால் தனியார் நிதியும் வேண்டும். அருங்காட்சியகத்திற்கு கொஞ்சம் சுயாட்சியும் வேண்டும்.

ஒரு நல்ல தீட்டம் தீட்டப்பட்டால் அது 20 ஆண்டு காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். தற்போது அருங்காட்சியகத் தலைவர்கள் அடிக்கடி பணிமாறுதல் செய்யப்படுகிறார்கள்; சில நேரங்களில் அவர்கள் பதவியேற்று ஆறு மாதங்களிலேகூட மாறுதல் செய்யப்படுகிறார்கள்.


Share the Article

Read in : English