Read in : English

Share the Article

தமிழருக்கு ஒரு துயரென்றால் அவர்கள் சரணாகதி அடைவது இளையராஜாவின் இசை மடியில்தான். இது சற்று மிகைப்படுத்து போல இருந்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில், அந்த அளவுக்குத் தமிழரிடையே ஆட்சி செலுத்தி வருகிறது இளையராஜாவின் இசை. ஆனால், கடந்த சில நாட்களாக இளையராஜாவின் பெயர் ஊடகங்களில் அவர் எழுதிய எழுத்தின் காரணமாக ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படி என்ன எழுதினார் இளையராஜா? ப்ளூக்ராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெளியிட்ட ’அம்பேத்கரும் மோடியும் – சீர்திருத்தவாதியின் கருத்துகள் செயல்பாட்டாளரின் அமலாக்கம்’ என்ற நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார். முன்னுரை இளையராஜா என நூலின் முகப்பிலேயே விளம்பரப்படுத்தப்பட்டிருப்பதிலிருந்து அந்த முன்னுரைக்கான மதிப்பை உணர இயலும். இந்த முன்னுரையின் பொருட்டுத்தான் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார் இளையராஜா. வாழ்த்திய உள்ளங்களே வசை பாடும் நிலை ஏன் ஏற்பட்டது?

குறிப்பிடப்பட்ட இந்த முன்னுரை பொதுவெளியில் பரவலானதற்குச் சில நாள்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்த, கையில் ’ழ’கர ஆயுதம் ஏந்தியிருந்த தமிழ்த் தாயின் ஓவியத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அமித் ஷா இணைப்பு மொழியாக இந்தியை முன்னிருத்திப் பேசியதை ஒட்டி இப்படி ரஹ்மான் பகிர்ந்திருந்தது பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. இணைப்பு மொழி தமிழ்தான் என்றும் ரஹ்மான் கருத்துத் தெரிவித்திருந்தார். பாஜகவின் கருத்தியல் வளையத்துக்கு வெளியே இருப்பவன் தான் என்பதைத் தெள்ளத் தெளிவாக ரஹ்மான் வெளிப்படுத்திய வேளையில் இளையராஜாவின் முன்னுரை பொதுவெளியில் உலவுகிறது; விமர்சனத்துக்கு ஆளாகிறது; சர்ச்சைகளை உருவாக்குகிறது. அதனால்தான் இளையராஜாவின் முன்னுரையால் உருவாகும் கருத்தியல் அதிர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

பாஜகவின் நடவடிக்கைகளுக்கு இளையராஜா தரப்பிலான ஒப்புதல் என்று இந்த முன்னுரை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட நூலின் முன்னுரையில் நரேந்திர மோடியின் திட்டங்களைப் புகழ்ந்து மட்டும் இளையராஜா எழுதியிருந்தால் அது பெரிதாகப் பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதில் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ள விஷயங்கள்தாம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளன. அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிடுவது சரியா என்பதுதான் இளையராஜாவின் கருத்தை எதிர்ப்பவர்களின் பொதுவான குற்றச்சாட்டு. பொதுவாகவே இளையராஜாவின் இசையில் வெளிப்படும் ஆன்மிக உணர்வோ, நிதானமோ, பக்குவமோ, முதிர்ச்சியோ அவருடைய எழுத்திலோ கருத்திலோ வெளிப்படுவதில்லை என்பது அவரைத் தொடர்ந்து கவனித்துவரும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே, இந்த முன்னுரை விஷயத்தில் இளையராஜா இப்படி எழுதியிருப்பது அப்படி ஒன்றும் ஆச்சரியமான விஷயமன்று. இளையராஜாவின் அரசியல் புரிதல் அந்த அளவில்தான் இருக்கும். ஏனெனில், அவர் இசை விற்பன்னரே தவிர அரசியல் விற்பன்னரல்ல.

நூலின் தலைப்பில் அம்பேத்கர் மோடி என்னும் பெயர்களைத் தவிர்த்து அடுத்து இருக்கும் ஒரே மனிதரின் பெயர் இளையராஜாவினுடையது. ஆகவே, இந்த நூலின் நோக்கத்தை அரசியல் புரிதல் உள்ளோர் எளிதில் தெரிந்துகொளார்கள். நூலைப் படித்துவிட்டுத்தான் முன்னுரை எழுதியதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்றால், நூலின் கருத்துப் புரியாமல் முன்னுரை எழுதிய அப்பாவியாக இளையராஜாவைக் கருதிவிட முடியாது. நூலைப் படித்து அதன் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னர்தான் இளையராஜா முன்னுரையை எழுதியிருக்கிறார் என்பதை அவரது தரப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆக, மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுகிறோம் என்பதை நன்கு உணர்ந்துதான் அதை எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் இளையராஜா. அந்தக் கருத்திலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்தும் இருக்கிறார் அவர். ஆகவே, முன்னுரை ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்தும் இளையராஜா முன்னுணர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்த இடத்தில், தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து விமர்சிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இளையராஜாவின் முன்னுரை இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் இந்த நூல் கவனம் பெற்றிருக்காது. இந்த அடிப்படையில் யோசித்தால் இந்த நூலே இளையராஜாவை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்குக் கூட வர இயலுகிறது. ஏனெனில், மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் தனது ஆதரவுத் தளத்தை உருவாக்கத் தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்குத் தகுந்த அறியப்பட்ட முகத்தை பாஜக தேடிக்கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரியும் சேதி.

அப்படியான ஒரு முயற்சியாக இந்த நூல் இளையராஜாவுக்கான வலைவிரிப்பாக இருந்திருக்கக்கூடும். இதையெல்லாம் அவர் ஊகித்தறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஊகித்தறியாமல் இருந்திருக்க வாய்ப்புமில்லை. எனில், இளையராஜா இதை விருப்பத்துடன் செய்திருக்க வேண்டும். பாஜகவின் நடவடிக்கைகளுக்கு இளையராஜா தரப்பிலான ஒப்புதல் என்று இந்த முன்னுரை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இதனால்தான் பாஜக தரப்பிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன் முதல் நட்டா வரை இளையராஜாவுக்கு ஆதரவான கருத்தை வெளியிடுகிறார்கள். மத்திய அமைச்சர் எல். முருகன் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கடிதம் எழுதுவேன் என்று கூறுகிறார். இத்தகைய சூழலில், பாஜகவின் தந்திரப் பொறியில் சிக்கிவிட்டதாகக் கருதி இளையராஜாவைச் சித்தாந்த ரீதியில் திராவிட இயக்க ஆதரவாளர்கள் எதிர்த்துவருகிறார்கள். அதனால்தான் தொல். திருமாவளவன்கூட, இளையராஜா ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இளையராஜாவின் அடையாளம் இசையே தவிர வேறெதுவுமில்லை. ஆனால், இளையராஜா சார்ந்த இப்போதைய சர்ச்சையில் அவரது பிறப்பு சார்ந்த அடையாளம் இசை ஆதரவு என்னும் பெயரில் கையாளப்படுகிறது. அதனால்தான் அந்தப் போக்கு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

இளையராஜாவுக்கு அவருடைய கருத்தைச் சொல்ல உரிமையில்லையா, என்ன? தாராளமாக உள்ளது. அதேபோல் இளையராஜாவின் கருத்தை விமர்சிப்பவர்களுக்கும் அதே கருத்துரிமை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதை இளையராஜா உணர்ந்திருக்கிறார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கு இந்த உணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. ஏனெனில், இளையராஜாவின் கருத்து தொடர்பான விமர்சனத்தை அவரது இசை நிபுணத்துவத்தால் தடுத்து ஆடப் பார்க்கிறார்கள். இளையராஜா இசை மேதை என்பதிலோ இளையராஜா தமிழ்நாட்டின் கலைப் பொக்கிஷமாகக் கருதப்படும் ஆளுமை என்பதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இதில் இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

இளையராஜா அடைந்திருக்கும் உயரமும், பெற்றிருக்கும் புகழும் பெருமையும் அவர் தாமாகத் தேடிக்கொண்டவை. இசையில் அவருக்கிருக்கும் புலமைத் தன்மையாலேயே இளையராஜா முன்னுக்குவந்திருக்கிறார். இளையராஜாவின் அடையாளம் இசையே தவிர வேறெதுவுமில்லை. ஆனால், இளையராஜா சார்ந்த இப்போதைய சர்ச்சையில் அவரது பிறப்பு சார்ந்த அடையாளம் இசை ஆதரவு என்னும் பெயரில் கையாளப்படுகிறது. அதனால்தான் அந்தப் போக்கு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

தனிப்பட்ட முறையில் இளையராஜா இசை என்னும் அடையாளத்தைத் தவிர பிறிதொரு அடையாளத்தை விரும்பாதவர்; எந்தச் சூழலிலும் அப்படியோர் அடையாளத்தை வெளிப்படுத்தாதவர். பிறப்பு சார்ந்து ஒருவரை ஒடுக்குவது எவ்வளவு ஆபத்தானதோ அபத்தமானதோ அதே அளவுக்கான ஆபத்தையும் அபத்தத்தையும் கொண்டது பிறப்புசார்ந்து ஒருவரை உயர்த்துவதும். ஏனெனில், நாகரிகச் சமூகத்தில் ஒருவரது உயர்வும் தாழ்வும் பிறப்பைச் சார்ந்ததன்று என்ற புரிதல் உண்டு. இந்த விஷயத்தில் இளையராஜா விரும்பாத, ஒடுக்கப்பட்டவர் என்ற அடையாளத்தை அவர் மீது போர்த்தி அரசியல் அறுவடைக்கு ஆசைப்படுகிறது பாஜக.

இளையராஜா போன்ற சொந்தத் திறமையாலும் நிபுணத்துவத்தாலும் முன்னேறியிருக்கும் ஒரு கலை ஆளுமை இப்படியான அடையாளத்தை விரும்பமாட்டார். ஆகவே, அந்த அடையாளத்தை அவர் மீது போர்த்துவது இளையராஜாவுக்கே உவப்பில்லாதது. அது அவருக்கு நலம் பயக்கப் போவதுமில்லை. இது தெரிந்தும் அவர் மீது அப்படியான அடையாளத்தை ஏன் போர்த்துகிறார்கள்? ஏனெனில், போர்த்துபவர்கள் இளையராஜா பயன்படுத்தாத அந்த அடையாளத்தைத் தாங்கள் அறுவடை செய்துகொள்ளப் பார்க்கிறார்கள். இதனால் இளையராஜா அவரது எதிர்ப்பாளர்களைவிட அவரது ஆதரவாளர்களிடம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியதிருக்கிறது.


Share the Article

Read in : English