Read in : English

Share the Article

பிக் பாஸ் ஐந்து சீசன்களாக நடத்தப்பட்டபோதும் ரசிகர்களின் வேட்கை தீராமல் இன்னும் இன்னும் எனக் கேட்கிறார்கள் போல. ஆகவே அவர்களது ஆர்வத்தை அரவணைக்கும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் பெயரில் ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் பிக் பாஸ் வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு பிக் பாஸ் ரசிகர்களுக்குக் கிடைத்தது. ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் வந்து தங்கியிருந்து விளையாண்ட பிரபலங்கள் பங்கேற்பாளர்களாக இருந்தனர். ஆகவே, வழக்கமான பிக் பாஸைவிட அமர்க்களமாகவும் அட்டகாசமாகவும் பிக் பாஸ் அல்டிமேட்டை வழங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.  வழக்கம்போல் நடிகர் கமல் ஹாசனே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 27 நாள்கள் அவர் தான் பிக் பாஸாக இருந்து நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.  திடீரென அவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக பிப்ரவரி 20ஆம் தேதி அறிவித்து விலகினார்.

தான் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் பிக் பாஸிலிருந்து தான் விலகுவதாக கமல் ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால், தொடர்ந்து பிக் பாஸை பார்த்துவரும் யாரும் அதைக் காரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே கமல் விலகல் பற்றிய பல வதந்திகள் உலவுகின்றன. அது நமக்குத் தேவையில்லை. கமல் விலகிவிட்டார் அவ்வளவுதான். இப்போது பிக் பாஸைத் தொடர்ந்து யார் நடத்துவார் என்ற கேள்வி எழுந்தது. கடந்த முறை கமல் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது, பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் நடத்தினார். இந்த முறை வாய்ப்பு சிம்புவுக்குக் கிடைத்திருக்கிறது. பிப்ரவரி 24ஆம் தேதி ஹாட் ஸ்டார் வெளியிட்ட புரோமா வீடியோவில் சிம்பு தோன்றி, தான்தான் அடுத்த பிக் பாஸ் என்பதை உணர்த்தினார். எதிர்பார்க்கலல்ல என்ற கேள்வியை எழுப்பி, தானும் எதிர்பார்க்கவில்லை என்ற செய்தியைத் தெரிவித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

இப்போதுபிக் பாஸாக சிம்புவின் செயல்பாடானது முந்தைய பிக் பாஸான கமலின் செயல்பாட்டுடன் ஒப்பிடப்படுவது இயல்புதான். அப்படி ஒப்பிடப்படும் என்பதை அறிந்துதான் சிம்புபிக் பாஸாக தோன்றிய மேடையிலேயே தான் கமலுக்குப் பதிலாக வரவில்லை  என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

பொதுவாகவே, ஒருவர் ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, திடீரென அவருக்குப் பதில் இன்னொருவர் அதே வேலையைச் செய்வதற்காக வரும்போது, புதியவரின் செயல்பாடுகள் பழையவரின் செயல்பாடுகளுடன்  ஒப்பிடப்படுவது உலக வழக்கம். ஆகவே, இங்கேயும் இப்போது, பிக் பாஸாக சிம்புவின் செயல்பாடானது முந்தைய பிக் பாஸான கமலின் செயல்பாட்டுடன் ஒப்பிடப்படுவது இயல்புதான். அப்படி ஒப்பிடப்படும் என்பதை அறிந்துதான் சிம்பு, பிக் பாஸாக தோன்றிய மேடையிலேயே தான் கமலுக்குப் பதிலாக வரவில்லை  என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். ஏனெனில், கமல் ஹாசன் டி.ராஜேந்தர் தலைமுறையைச் சேர்ந்தவர். இன்னும் சொல்லப்போனால் சிம்புவின் தந்தையான டி.ஆருக்கும் பல ஆண்டுகள் முன்னர் துறைக்கு வந்தவர். இளமை கொப்பளிக்கும் காதல் இளவரசனாக இளமை  இதோ இதோ என்னும் பாடலுக்கு நடனமாடியபடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய கமல் ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் திரைப்படம் வெளிவந்த ஓர் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர் சிம்பு. எனவே, சிம்புவையும் கமலையும் ஒப்பிடுவது என்பது, பிரதமர் என்பதற்காக நேருவையும் மோடியையும் ஒப்பிடுவது போல் ஒத்துவராத  ஒன்று.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் இப்படியான வழக்கமான சிந்தனையோட்டத்திலிருந்து விலகியவர்கள். யாரும் எதிர்பார்க்காததை எதிர்பார்ப்பவர்கள். எனவே, அவர்கள் சிம்புவை கமலுடன் ஒப்பிடத்தான் செய்வார்கள். அதில் கருத்து எதிர்க்கருத்து என்று மோதிக்கொள்ளவும்  செய்வார்கள். கமலுக்கும் சிம்புக்குமான ஒற்றுமை வேற்றுமை  என்ன வென்று பார்ப்போமா?

கமல் ஹாசனைப் போல் குழந்தை நட்சத்திரமாகத் தான் அறிமுகமானார் சிம்பு. கமல் ஹாசனாவது பேசும் வயதில் அறிமுகமானார். ஆனால், சிம்புவோ பேசுவதற்கு முன்னரே கேமராவுக்கு முன்னால் வந்துவிட்டார். கமல் குடும்பத்தில் முதல் நட்சத்திரம் கமல்தான். ஆனால், சிம்புவோ நடிப்புப் பெற்றோரின் வாரிசு. கமல் ஹாசன் காதல் இளவரசன் என்றால் சிம்பு மன்மதன். கமல் ஹாசனுக்கு வயது காரணமாக, அனுபவம் காரணமாக ஒரு முதிர்ச்சி இப்போது வந்திருக்கிறது. அந்த முதிர்ச்சி பெற்ற கமலுடன் இப்போதைய சிம்புவை ஒப்பிடுவது சரியன்று. ஆகவே, பருவ வயது கமலையும் பருவ வயது சிம்புவையும்தான் ஒப்பிட வேண்டும். ஆக, அந்த வயதுக்குரிய பண்புகளுடன் ஒப்பிடும்போது, சிம்புவுக்கு கமல் குருதான், சிம்பு கமலுக்குச் சீடன்தான். அதிலும் பிக் பாஸ் பற்றிய கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, சிம்புவும் கமலைப் போல பிக் பாஸின் பத்துப் பொருத்தங்களும் கூடிவந்த கலைஞன்தான்.

பிக் பாஸ் அல்டிமேட் போன்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு முதிர்ச்சி கொண்ட மனிதரைவிடத் துள்ளிப் பாயும் இளைஞரே தேவை சிம்புவின் வரவால் பிக் பாஸின் அறிவுஜீவி மூஞ்சி சற்று வாடிப்போகும். ஆனால்உற்சாகம் கரைபுரண்டு ஓடும் வாய்ப்பு உண்டு.

எனவே, கமலுக்குப் பதில் சிம்புவை பிக் பாஸாக கூட்டி வந்த விஜய் தொலைக்காட்சியின் முடிவு சரியானதே. மேலும், சிம்புக்கு இன்னும் திருமணம்கூட ஆகவில்லை. கமல் ஹாசனுக்கோ திருமண வயதில் மகள் இருக்கிறார். எனும்போது, கமலைவிட இளமைத் துள்ளலான ஆள் சிம்பு என்பதை மறுக்க முடியாது. பிக் பாஸ் அல்டிமேட் போன்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு முதிர்ச்சி கொண்ட மனிதரைவிடத் துள்ளிப் பாயும் இளைஞரே தேவை. அந்த வகையில் துள்ளிப் பாயும் வயது தாண்டியவரானவர் சிம்பு என்றபோதும், ஒப்பீட்டளவில் ஒத்துவருபவர். இந்தப் பின்னணியில் சிம்புவின் வரவால் பிக் பாஸின் அறிவுஜீவி மூஞ்சி சற்று வாடிப்போகும். ஆனால், உற்சாகம் கரைபுரண்டு ஓடும் வாய்ப்பு உண்டு.

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து எனச் சொன்ன தருமி நாகேஷ் இப்போது இருந்திருந்தால் சண்டையும் சச்சரவும் பிக் பாஸின் நிரந்தரச் சொத்து என்று கூறியிருக்கக் கூடும். ஏனெனில் திருமணமான பங்கேற்பாளர்களைக் கொண்டு சர்ச்சையை உருவாக்கி பார்வையாளர்களைக் கிளுகிளுப்படையச் செய்த நிகழ்ச்சிக்கு திருமணமாகாத ஒருவர் அதுவும்  சிம்பு போன்ற வல்லவனை பிக் பாஸாக்கும்போது சர்ச்சை சும்மா சரமாரியாக வந்து விழாதா என்னும் எதிர்பார்ப்பு நிகழ்ச்சி நடத்துநர்களுக்கு இல்லாது இருக்குமா? அந்த வகையில் பார்க்கும்போது, சிம்பு ஒரு நல்ல தேர்வாகவே தோன்றிவிடுவார்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று ஒரு சொலவடை உண்டு. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முழுமையா பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளித்துவிட்டு அறிவுஜீவித்தனம் என்னும் வெற்று ஆரவாரம் எதற்கு? ஆனால், கமல் போன்ற அறிவுஜீவி என அறியப்பட்டவர் ஒருவரின் நிழலில் மறைந்துகொண்டு, பிக் பாஸின் வீட்டைச் சப்புக்கொட்டிப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் சமூக அறிவைப் பெறும் பொருட்டே பிக் பாஸைப் பார்க்கிறோம் என இனியும் சல்லியடிக்க முடியாது. அவர்களது சல்லித்தனம் சட்டென்று தலைகாட்டிவிடும் வாய்ப்பை சிம்பு தந்துவிடுகிறார்.

சிம்பு தோன்றிய முதல் நாளிலேயே பங்கேற்பாளர்கள்  அனைவரிடம்  எல்லையற்ற பன்னுக்கு உத்தரவாதம் கேட்டார். ஆகவே, அவரைப் பொறுத்தவரை நிகழ்ச்சி சும்மா ஜாலியா பிச்சுகிட்டுப் போகணும். பார்க்கிறவர்களைச் சந்தோஷக் கடலில் தள்ளிவிட வேண்டும். ஒரு நடிகராக கமல் ஹாசனைவிடச் சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பு இல்லாத நடிகராக சிம்பு இருக்க வாய்ப்பேயில்லை. ஆகவே, குரு எட்டடி பாய்ந்தால் சீடன் பதினாறு அடி பாயும் முனைப்புடனே இருப்பார். பதினாறு என்றாலே பதநீர்ச் சுவை கொண்டதுதானே? கமல் விலகும்போதே இது ஒரு சிறு  இடைவேளை மட்டும் என்று கூறியுள்ளார். எனில், மீண்டும்  அவர் வரக் கூடும். அதுவரை மட்டுமே சிம்புவுக்குக் களம். ஆக, அவர் அடித்துவிளையாடுவாரா, அமைதியாய்ப் போய்விடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Share the Article

Read in : English