Read in : English

Share the Article

தமிழ்நாட்டில் பெருகிக்கொண்டிருக்கும் நெகிழிக்கழிவுக்கு (பிளாஸ்டிக் வேஸ்ட்) எதிரான போர், மற்ற பிரதேசங்களில் இருப்பதுபோலவே, நல்ல நோக்கங்களும், பசுமைச்செய்திகளும் நிறைந்த ஒரு சாலைதான்; ஆனால்   இந்தச் சாலையில் தோற்றுப்போன பரப்புரை ஆயுதங்கள் குப்பைகளாகக் குவிந்துகிடக்கின்றன.

நெகிழிக்கழிவுகள் டன்கணக்கில் பெருகி சென்னையை, சின்ன நகரங்களை, நகர்களை, நீர்வழித்தடங்களை மூச்சுமுட்ட வைக்கின்றன. வருடந்தோறும் வருகின்ற பருவமழை வெள்ளங்கள்தான் நெகிழிக்கழிவு, கழிவுநீர் வடிகால் கட்டமைப்பை அடைத்துவிடுவதைக் கவனத்தில் கொண்டுவருகிறது. இது ஒரு பெரும் பிரச்சினை என்று அடையாளப்படுத்தப்பட்டது 2012, 2015, 2021 ஆகிய ஆண்டுகளில்தான்.

எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, 2018-ஆம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் ஒற்றைப்பயன்பாட்டு நெகிழிக்குத் தடைவிதிக்கப்பட்டது. அந்தத் தடை 2019 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அந்தத் தடை வெகுவிரைவில் நீர்த்துப்போனது; திமுக ஆட்சி செய்கின்ற இன்றைய காலத்திலும் அது அப்படியேதான் கிடக்கிறது.

கண்துடைப்பும், பசுமைத் துடைப்பும்

நெகிழித் தட்டுக்கள், உணவுப் பரிமாறும் கருவிகள், மேஜை விரிப்புகள், ’கேரிபேக்ஸ்’ எல்லாம் திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளில் குறைந்துவிட்டன. ஆனால் டன்கணக்கில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள் பூவிலிருந்து, இட்லி, தோசை மாவுவரை விற்கும் சிறுவியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு நிமிடங்களில் தூக்கியெறியப்படுவது யாரும் அறியாத ரகசியம் அல்ல. இந்தக் கழிவுப் பைகளை, குப்பைகளைச் சேகரித்து விற்பவர்கள்கூட வாங்குவதில்லை; ஏனென்றால் மறுசுழற்சி செய்யும் வியாபாரிகள் அவற்றை வாங்குவதில்லை. தமிழ்நாட்டில் நெகிழிப் பைகள் மீதான தடை என்பது வெறும் காகிதத்தில்தான் இருக்கிறது. சட்டம் வழிவகுத்திருக்கும் வண்ணம், மக்களே நெகிழிக் கழிவை மூலத்திலே பிரித்தெடுப்பதை மாநகரச் சென்னை மாநகராட்சியோ அல்லது கழிவு மேலாண்மைத் தனியார் நிறுவனமான அர்பசேர் சுமீத்தோ வலியுறுத்தி நடைமுறைப்படுத்தவில்லை.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த 2019-20க்கான அறிக்கை நெகிழிக் கழிவில் ஆகப்பெரிய உற்பத்தியாளர்களில் தமிழ்நாடும் ஒன்று என்று சொல்கிறது.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டு சுற்றுச்சூழல் துறைச் செயலர், நெகிழித் தடை தீவிரமாகச் செயல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் ஒற்றைப்பயன்பாட்டு நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்ச்சியூட்டும் வகையில்  பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். விடாப்பிடியான பரப்புரைகள்தான் பொதுஜனபங்களின் போக்கை மாற்றும் என்று நீதிமன்றமும் கூறியிருக்கிறது.

ஆனால், ‘பிரேக் ஃப்ரீ ஃப்ரம் பிளாஸ்டிக்’ என்னும் இயக்கத்தின் தேசியக் கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தபோது, தமிழ்நாடு நெகிழி உற்பத்திக்கான வசதிகளைப் பெருக்குவதில் பெருமை கொள்கிறது. பெட்ரோகெமிக்கல் உற்பத்தியில் தமிழ்நாட்டை உச்சத்தில் கொண்டுபோக முதலீடுகளை அரசு பலமாகச் செய்கின்றது என்று நவம்பர் 26-இல் நடந்த ”இந்தியாவில் கெமிக்கல், பெட்ரோகெமிக்கல் உற்பத்தி ஸ்தலங்கள்” என்ற சர்வதேச  மாநாட்டில் தொழில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தூத்துக்குடி, நாகப்பட்டினம், மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஆலைகளை நிறுவ திட்டமிடப்பட்டிருக்கின்றது என்றும் அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புழுதிவாக்கத்தில் 257 ஏக்கர் நிலத்தில் பாலிமர் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அது அதிமுக ஆட்சியில் 2020-இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் துறையைக் கவனிக்கும் நாடாளுமன்றத்தின் ரசாயனம், மற்றும் உரத்திற்கான நிலைக்குழுவின் தலைவரே திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழிதான்.

பல நெகிழிகள்

நெகிழிகளில் ஒரேவொரு வகைமட்டும் இல்லை. சில நெகிழிகள் மறுசுழற்சியாளர்களுக்குக் கவர்ச்சியானவை; மற்றவை அப்படி அல்ல. மேலும், நெகிழி உற்பத்தி அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் விற்பனைக்கல்ல, வெளியிடங்களுக்கான விற்பனைக்கு என்று நெகிழி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், தமிழ்நாட்டின் நெகிழி உற்பத்திப் பொருளாதாரம், நெகிழியின் ஆயுள் வட்டம், மாசுடன் சம்பந்தப்பட்ட விலைகள், கழிவுச் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் ஆகியவை பற்றிய தரவுகள் தெளிவாக இல்லை. சராசரி குடிமகனுக்கு இதில் ஈடுபடுவதற்கு எந்த ஊக்கமும் ஆர்வமும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவகை நெகிழியையும் மறுசுழற்சி செய்யும் முறையை அடையாளங்காணும் நெகிழி ரெஸின் குறியீடு (கோட்) என்பது பொதுவெளி விவாதத்திற்கான விஷயம் அல்ல. குறைவான அடர்த்தி கொண்ட பாலியெதிலீன் நெகிழிப் பைகளின் குறியீடு 4; ’பெட்’ என்றழைக்கப்படும் பாலியெதிலீன் டெரஃப்தலேட் நெகிழியின் குறியீடு 1.

வருடந்தோறும் வருகின்ற பருவமழை வெள்ளங்கள்தான் நெகிழிக்கழிவு, கழிவுநீர் வடிகால் கட்டமைப்பை அடைத்துவிடுவதைக் கவனத்தில் கொண்டுவருகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த 2019-20க்கான அறிக்கை நெகிழிக் கழிவில் ஆகப்பெரிய உற்பத்தியாளர்களில் தமிழ்நாடும் ஒன்று என்று சொல்கிறது. வருடந்தோறும், தேசத்தின் கழிவில் 12 சதவீதம்; தனிநபர் பயன்பாடு 6 கிலோ; இவைதான் தமிழ்நாடு பற்றிய நெகிழிப் புள்ளிவிவரங்கள். இந்த விசயத்தில் தமிழ்நாட்டுக்கு இணையானது குஜராத். மஹாராஷ்ட்ராவுக்கு (13 சதவீதம்) அடுத்த இடத்தில் தமிழ்நாடு. இவையெல்லாம் தன்னிச்சையான தரவுகள். இன்னொரு பக்கத்தில், நெகிழிக் கழிவைச் சேகரிப்பதில் 92 சதவீதத் திறன் கொண்டது தமிழ்நாடு என்று அரசு சொல்கிறது. ஆனால் கீழோடைக் கழிவைப் பதப்படுத்தலின் விளைவுகள் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

சிக்கலான நெகிழி வலை

‘பிரேக் ஃப்ரீ ஃப்ரம் பிளாஸ்டிக்’ செயற்பாட்டாளர்களின் சில ஆய்வுகள், நெகிழித்தடை சிக்கலான பிரச்சினைகளுக்கு ஆயத்த விடைகளைத் தருவதில்லை என்று சொல்கின்றன. இந்தியாவில் உருவாகும் நெகிழிக் கழிவுகளின் நிஜஅளவு பற்றி நம்பும்படியான தரவுகள் இல்லை; ஏனென்றால் அந்தத் தரவுகள் கடுமையான தணிக்கைக்கு ஆட்படுத்தப்படவில்லை.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கழிவு சம்பந்தமான தங்கள் செயற்பாடுகள் பற்றி சரிபார்க்கப்படாத கருத்துகளையே முன்வைக்கின்றன. குப்பைகளைச் சேகரித்து ஜீவனம் நடத்தும் பெருங்கூட்டமொன்று வாழ்வாதாரத்திற்கு ஒருசில நெகிழி வகைகளையே சார்ந்திருக்கிறது. திடக்கழிவு, நெகிழிக்கழிவு மேலாண்மை விதிகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், பெங்களூரு தவிர்த்த பெரும்பாலான மாநகரங்களில் விதிச் செயல்பாட்டு அமைப்புக்குள் அந்த ஏழை, எளிய ஜீவன்கள் கொண்டுவரப்படவில்லை. குறைந்த மதிப்புக் கொண்ட, பல்லடுக்கு நெகிழி (உதாரணமாக, பை கட்டுமானம் – பாக்கேஜிங்) சாலைக் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது உண்மையா என்று சுயாதீனமாகப் பரிசோதிக்கப்படவில்லை. சாலை அமைக்கும் ஒப்பந்தக்காரர்கள் தணிக்கை நோக்கத்திற்காக மட்டுமே கழிவை வாங்கியதாக பில்களைக் கொடுக்கிறார்கள். முறையாகப் பதிவுசெய்யப்பட்ட தேசிய மறுசுழற்சி மையங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டன; அதிகாரப்பூர்வமற்ற மையங்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. முறையான மறுசுழற்சியில் போடப்படும் முதலீடு உருவாக்கப்படும் கழிவின் அளவுக்கு இணையாக இல்லை.

மறுசுழற்சி செய்யமுடியாத கழிவைச் சமாளிக்க எரித்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு கோரிக்கைகள் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே இருப்பது பிரச்சினையைச் சிக்கலாக்குகிறது. இந்த விஷயத்திலும், ‘பிரேக் ஃப்ரீ ஃப்ரம் பிளாஸ்டிக்’ செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியதுபோல, எவ்வளவு கழிவு பயன்படுத்தப்படுகிறது; மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி தணிக்கையே இல்லை. ஆஸ்ட்ரியாவில் ஒரு சிமெண்ட் ஆலை, மாசுபடிந்த ஆலைக்கழிவுகளை எரித்து ஹெக்ஸாகிளோரோபென்ஷீன் என்னும் விஷ வாயுவை வெளியிடுகிறது என்று இந்த வருடம் அக்டோபர் மாதத்து ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. கழிவுகளை எரித்து எரிபொருள் தயாரிக்கும் முறையான ’இணைஉற்பத்தியை’ (கோஜெனரேஷன்) தாங்கள் செய்வதாக உரிமைகொண்டாடும் சிமிண்ட் ஆலைகள் அளவுக்கு அதிகமான நிலையில் சூடாக்கப்படும் காளவாய்கள் விஷம் உள்ளிட்ட எல்லாவற்றையும் எரித்துவிடுகின்றன என்ற கொள்கைப்படி தாங்கள் செயல்படுவதாகச் சொல்கின்றன. அந்த ஆலைகளைச் சுற்றுப்புறச் சூழல் கோணத்தில் தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

குப்பைகளைச் சேகரித்து ஜீவனம் நடத்தும் பெருங்கூட்டமொன்று வாழ்வாதாரத்திற்கு ஒருசில நெகிழி வகைகளையே சார்ந்திருக்கிறது. திடக்கழிவு, நெகிழிக்கழிவு மேலாண்மை விதிகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், பெங்களூரு தவிர்த்த பெரும்பாலான மாநகரங்களில் விதிச் செயல்பாட்டு அமைப்புக்குள் அந்த ஏழை, எளிய ஜீவன்கள் கொண்டுவரப்படவில்லை.

தமிழ்நாட்டில் 116 நகர உள்ளாட்சி அமைப்புகள் 20,000 டன் கழிவை சிமிண்ட ஆலைகள் பயன்படுத்திக்கொள்ள அந்த ஆலைகளோடு ஒப்பந்தங்கள் போட்டிருக்கின்றன என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சொல்கிறது. மேலும் அந்த உள்ளாட்சி அமைப்புகள், கழிவை அதிக வெப்பமூட்டி எரிபொருளாக்கும் ஆலைகளுக்கு 400 டன் கழிவை வழங்கும் ஒப்பந்தங்களையும் போட்டிருப்பதாகத் தகவல். ’கழிவிலிருந்து எரிபொருள்’ என்னும் தொழில்நுட்பம்கூட சர்ச்சைக்குரிய ஒன்றுதான்; இந்த விஷயத்தில் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைப் பற்றிய எந்த அடிப்படையும் இன்னும் சரியாகத் தெரியவில்லை. தூத்துக்குடி மீனவர்கள் ‘நெகிழி எண்ணெய்’ வாங்கி தங்கள் படகுகளை இயக்குகிறார்கள் என்று சமீபத்தில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிப்படுத்தியது. டீசல் விலைகள் உயர்ந்துவிட்டபடியால், அந்த மீனவர்கள் ‘நெகிழி எண்ணெயை’ லிட்டருக்கு 70 ரூபாய் என்ற விலையில் சேலத்தில் உள்ள ஆத்தூர்-சங்ககிரி பகுதியிலும், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலும் வாங்குவதாக அந்தச் செய்தி சொல்கிறது. துரதிர்ஷ்டவசமாக, ‘நெகிழி எண்ணெய்’ தங்கள் படகுகளைச் சேதமாக்கிவிடும் என்பது மீனவர்களுக்குத் தெரியவில்லை.

நெகிழிலியிருந்து விடுதலை என்பது உற்பத்தி நின்றால் நெகிழிப் பயன்பாடு நின்றுவிடும் என்ற கருத்தைச் சார்ந்தது. அதற்குப் பெட்ரோ கெமிக்கல் தொழில் வளர்ச்சியின் வேகத்தை சற்று குறைத்துவிட வேண்டியதுதான். பின்பு நுகர்வோர் போக்கு மாறும்; மாற்றுவழிகளைத் தேடுவது தொடரும். உலக அளவில் நடைபெறும் கழிவுத் தொழிலை நிறுத்திவிடுவது, ருவாண்டா, பெரு ஆகிய நாடுகள் முன்வைத்திருக்கும் கடுமையான நெகிழி உடன்பாட்டைக் கடைப்பிடிக்கும்படி அனைத்து நாடுகளையும் வற்புறுத்துவது – இவைதான் இன்றைய உலகத்தின் திட்டங்கள். வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நைரோபியில் மெய்நிகர் முறையில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் மாநாட்டில் உறுதியான  நிலைப்பாட்டை எடுக்கும்படி மத்திய அரசை மாநில அரசுகள் கட்டாயப்படுத்த வேண்டும். அப்போதுதான் நெகிழியிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய ஒரு பாதையை நம்மால் உருவாக்க முடியும்.


Share the Article

Read in : English