Read in : English

Share the Article

எங்கு பார்த்தாலும் கட்சிக் கொடிகள் பறப்பதையும், கட்சி நிர்வாகிகள் பளபளப்பான கார்களில் வலம் வருவதையும் நாம் பார்க்க முடிகின்ற போதிலும், தமிழகத்தில் பா.ஜ.க. இன்னும் வேரூன்றவில்லை என்பதே உண்மை.

ஹிந்துத்துவா வளர்ச்சிக்கு திராவிட மண் ஏற்றதில்லை என்பது பொதுவான புரிதல்.ஆனாலும், நிலைமைகள் மாறலாம்.

அண்ணாமலை வகுப்புவாத நிலைப்பாடுகளைத் தவிர்ப்பதில் கவனமாயிருக்கிறார். ஒருவேளை அது தமிழக அரசியலில் எடுபடாது என்று அவர் தெரிந்துவைத்திருக்கக்கூடும்.  

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கே.அண்ணாமலை, ஆளும் திமுகவை எதிர்த்து நாள்தோறும் அறிக்கை வெளியிடுகிறார், அல்லது கருத்து தெரிவிக்கிறார். எப்போதும் ஊடகங்களின் பார்வையில் கட்சி இருப்பதை உறுதி செய்கிறார். அதைவிட முக்கியமானது, அவர் வகுப்புவாத நிலைப்பாடுகளைத் தவிர்ப்பதில் கவனமாயிருக்கிறார். ஒருவேளை அது தமிழக அரசியலில் எடுபடாது என்று அவர் தெரிந்துவைத்திருக்கக்கூடும்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கோமா நிலையில் இருக்கும்போது, அவரது அணுகுமுறை பலரை ஏன் ஈர்க்கக்கூடாது?

தற்போது ஹிந்து பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் சுரேஷ் நம்பத் 1997 ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் கருப்பையா .மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், அஇஅதிமுகவுக்கு எதிர்க்கட்சி இடத்தைக் விட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முந்தைய ஆண்டில்தான் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு மக்களவையில் 20 இடங்களையும், சட்டப்பேரவைத் தேர்தலில் 41 இடங்களிலும் வென்றிருந்தது. முழுவதும் செல்வாக்கு இழந்த அஇஅதிமுகவுடன் கை கோர்ப்பது என்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்டதுதான் தமிழ் மாநில காங்கிரஸ். பின்னர் அது திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது.

தங்களுக்கு பெரும்பான்மை இருந்ததால் மாநில அளவில் கூட்டணி அரசு அமைக்க மறுத்த திமுக, மத்திய ஆளும் ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகிக்க முன்வந்தது. மாநிலத்தில் மட்டும் பங்கு கிடையாதா எனக் கேட்கக்கூட அப்போது மூப்பனாருக்கு இயலவில்லை. அவரது கட்டாயங்கள் அவருக்கு. அதைவிடவும் சோகம் அவரால் தமிழகத்தில் தன்னிருப்பைக் காட்டிக்கொள்ள முடியவில்லை.

  தமாகா களத்தில் இறங்கி துடிப்பாகச் செயல்பட்டாலன்றி திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அது பார்க்கப்படாது என்ற நிலையிலும், திருச்சியில் நடந்த மாநாட்டில் மலைக்கோட்டையிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு என முழங்கியும், ஆவேசமான எதிர்க்கட்சியாக அது செயல்படமுடியவில்லை.

புதுடில்லியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக வலம் வந்த அவர் திமுகவை விரோதித்துக்கொள்ளாமல் இருப்பதில் மேலதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. தமாகா களத்தில் இறங்கி துடிப்பாகச் செயல்பட்டாலன்றி திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அது பார்க்கப்படாது என்ற நிலையிலும், திருச்சியில் நடந்த மாநாட்டில் மலைக்கோட்டையிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு என முழங்கியும், ஆவேசமான எதிர்க்கட்சியாக அது செயல்படமுடியவில்லை.

காங்கிரசில் இருந்தபோது, மூப்பனாரே திராவிட கட்சிகளான திமுக மற்றும் அஇஅதிமுகவுக்கு மாற்று காங்கிரஸ்தான் என்பதை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும், அவற்றுக்கு வால் பிடிக்கும் கட்சியல்ல காங்கிரஸ் என்று மக்களை நம்பச் செய்யவேண்டுமென வலியுறுத்தி வந்தார். காங்கிரஸ் பிளவிற்குப் பின்பு 1971ல் நடந்த தேர்தல்களில், நேருவின் திருமகளே வருக, நிலையான ஆட்சி தருக என முகமன் கூறிய மு.க., தொகுதிப் பங்கீடு என வந்தபோது மிக சாமர்த்தியமாக, சட்ட மன்றக் களத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள், மக்களவைக்கு ஒன்பது இடங்களை ஒதுக்குகிறேன் என்றார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்பதே காமராஜர்தான், அவருடைய காங்கிரஸ்-ஓ தான். இந்திராவை ஆதரித்தவர்கள் தலைவர்களேயன்றி தொண்டர்களில்லை. கட்சியமைப்பே இல்லை. எனவே இந்திராவும் கருணாநிதியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.

இறுதியில் அபார வெற்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு. ஒதுக்கப்பட்ட ஒன்பது இடங்களிலும் இ.காங்கிரசுக்கு வெற்றி. காமராஜர் காங்கிரஸ் படு தோல்வி ஒரே ஓர் இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. சட்ட மன்றத்திலும் வெறும் 15 இடங்களே. தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில் பெற்ற அபரிமித வெற்றிக்கு இந்திரா காந்தியின் செல்வாக்கு ஓரளவு உதவியிருக்கலாம், ஆனால் அந்நேரத்திய சூறாவளிக்கு திமுகவின் அமைப்பு ரீதியான வலிமையே காரணம் என்றால் மிகையில்லை.

அகில இந்திய அளவில் பெரும் வெற்றியை ஈட்டிய இந்திராவோ, தமிழகத்தில் தனது கட்சியில் பரிதாப நிலை குறித்து கவலைப் பட்டது போலவே தெரியவில்லை. மேலும் காமராஜர் மறைந்த பிறகு காங்கிரஸ்-ஓவும் இந்திரா கட்சியுடன் இணைந்துவிட்டது. கட்சி இயந்திரம் தொண்டர்கள் எல்லாம் கிடைத்த பிறகு அவர் ஏன் தமிழக காங்கிரஸ் நிலை குறித்து சிந்திக்கவேண்டும். திமுக முதலில், பின்னர் அ இ அ திமுக என மாறி மாறி மாநிலக் கட்சிகளின் தோள்களில் சவாரி செய்வது அவருக்கு வசதியாக இருந்தது.

ஆனாலும் கட்சியின் அவல நிலையை மாற்ற மூப்பனார் தொடர்ந்து முயன்று வந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட ராஜீவ் காந்தியை சம்மதிக்க வைத்தார். அவரையும் 13 முறை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யவைத்தார். ஆனால் அதிக பயனில்லை. முடிவுகள் மிக மோசமான பின்னடைவு எனக் கூற முடியாது. ஜெயலலிதா பிரிவு அ இ அதிமுக 27 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கதே. ஆனாலும் அது ராஜீவிற்குப் போதவில்லை. ஜெயலலிதா தலைமையில் அ இஅதிமுக ஒன்றுபட்ட பிறகு அக்கட்சியுடனே கூட்டணி அமைக்கவே ராஜீவ் காந்தி முடிவு செய்தார். அப்போது முதல் பலி மூப்பனாரே. அவர் தலைமையிலிருந்து அகற்றப்பட்டார், வாழப்பாடி இராமமூர்த்தி தமிழகத் தலைவரானார்.

இந்த பின்னணியில், அஇஅதிமுக 1996 தேர்தல்களில் படுதோல்வி அடைந்த நிலையில் மூப்பனார் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கோ ஐக்கிய முன்னணி ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். எனவே எக்கட்டத்திலும் திமுகவுடன் மோதுவதைத் தவிர்த்தார். பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுகவுடன் தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டார். கூட்டணி மீண்டும் பெரு வெற்றி ஈட்டியது. அது ஒரு வகையில் மூப்பனாரின் செல்வாக்கை வலுப்படுத்திய சூழலில் அவர் ஏன் தனக்கு சிக்கல்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும்? தணிந்தே போனார். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி என்பதெல்லாம் வெற்று முழக்கமாயிற்று.

சேலம் தி மு க தலைவர், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது சீடர், துடிப்பு மிகு இளைஞர் செல்வகுமாரையே பகிரங்கமாகக் கடிந்து கொண்டார் மூப்பனார். அ இஅதிமுக மிகவும் பலவீனப்பட்டிருந்த நேரம் அது. ஜெயலலிதா என்றாலே ஊழல், அத்து மீறல் என்று மக்கள் நினைத்தனர். உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட பல அ இஅதிமுகவினர் ஜெயலலிதா பெயரைத் தவறிக்கூட உச்சரிக்க வில்லை. அவரது படங்கள் பயன்படுத்தப்படவில்லை.

அப்படிப் பட்ட சூழலிலும் மூப்பனார் துணிச்சலுடன் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட முன்வரவில்லை. ஆனால் ஜெயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், காரணமிருந்ததோ, இல்லையோ திமுகவைத் தாக்கி அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். இத்தகைய பின்னணியில்தான் சுரேஷ் நம்பத் தனது அரசியல் விமர்சனத்தை எழுதியிருந்தார்.

அப்போது நான் ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக, ஞாயிறன்று இடத்தை நிரப்ப, எழுதப்பட்டது அது என்றுதான் நினைத்தேன். ஆனால் இறுதியில் அவரது கணிப்பே மெய்யானது. எதிர்க்கட்சி இடத்தை அ இஅதிமுக வென்றது, மூப்பனார் மெல்ல மெல்ல தன் செல்வாக்கை இழந்தார். அவரே அ இ அதிமுக ஆதரவை நாடவேண்டிய சூழலும் உருவாகியது.

1997 நிலையினையும் இப்போதுள்ள அரசியல் நிலவரத்தையும் ஒப்பிடவே நான் இந்த நீண்ட கதையை நினைவுகூர்ந்தேன். கருணாநிதியை எதிர்த்துப் பேசுவதை மூப்பனார் விரும்பவில்லை. அதேபோல இப்போது காங்கிரசால் கருணாநிதியின் மகனை எதிர்க்கத் துணிவில்லை.

தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அது மீண்டும் வலுப்பெற்று ஆட்சிக்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்தான். எனவே முன்போல் திமுக ஆதரவிற்காகத் தவம் கிடக்கவேண்டியதில்லை என நாம் நினைக்கலாம். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் திமுகவே. ஸ்டாலின் மதச்சார்பின்மை பேசுகிறார்.

ஒப்புக்கேனும் கூட்டணி என்றாலும் திமுக இல்லாமல் அந்தத் தோற்றமிருக்காது, அடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் வந்தாலும் திமுக ஆதரவில்லாமல் சாத்தியமில்லை. எனவே காங்கிரஸ் திமுகவை அனுசரித்தே போகும், எதிர்க் கட்சியாகக் காட்டிக்கொள்ளாது. தொடர்ந்து மூப்பனார் வழிதான்.

ஜெயலலிதா இல்லாத அஇஅதிமுகவின் செல்வாக்கு வெகு வேகமாக சரியத் தொடங்கியிருக்கிறது என்றே பலரும் கருதுகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு வன்னியர் பகுதிகளுடனேயே நின்று விட்டது. அ இஅதிமுக தேய்ந்து வீழ்ந்தால் திமுக உதவியையே அது நாடும். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறித்து துவக்கத்தில் இருந்த நம்பிக்கை இப்போது எங்கும் காணோம்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான அளவில் இளைஞர்களை ஈர்த்தே வருகிறது, ஆனால் அவர்களது தீவிர தமிழ்த் தேசியத்தை பெரிதாக வாக்காளர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இச் சூழலே பாஜகவிற்கு ஆதரவாக அமையக்கூடும்.

மத முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி குளிர்காய முயல்வது இங்கே அதிக பயனளிக்காதுதான். ஆனால் இதர பிற்பட்ட வகுப்பினர்-உயர்சாதியினர் கூட்டணி உருவாக்கியும், திமுக எதிர்ப்பு உணர்வு கொண்டோரின் நல்லெண்ணத்தை வென்றும், பாஜக தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயலலாம்.

மத முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி குளிர்காய முயல்வது இங்கே அதிக பயனளிக்காதுதான். ஆனால் இதர பிற்பட்ட வகுப்பினர்-உயர்சாதியினர் கூட்டணி உருவாக்கியும், திமுக எதிர்ப்பு உணர்வு கொண்டோரின் நல்லெண்ணத்தை வென்றும், பாஜக தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயலலாம். இந்துத்துவா சற்று காத்திருக்கலாமே அவசரமென்ன?

இன்னும் இரண்டு முறை மத்தியில் மோடியின் ஆட்சி தொடருமானால், தமிழகத்திலும் பாஜக வலுப்பெறுவதை எவராலும் தடுக்க முடியாது. அப்பயணத்தில் இன்று ஆட்டுக்குட்டி அண்ணாமலை என எள்ளி நகையாடப்படும் இவருக்கு முக்கிய பங்கிருக்கும்.


Share the Article

Read in : English