Read in : English

Share the Article

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும் கிராமப்புற ஏழை மாணவரால் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படித்து சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் கள்ளக்குறிச்சி அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த கே. ரமேஷ் (28). அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியும்கூட.

ஸ்கூலுக்குப் போவதற்கு முன்னால், தோட்டத்தில் விளையும் காய்கறி, கீரைகளை பக்கத்து கிராமங்களில் கொண்டு போய் விற்பதற்குச் செல்வேன். . வார விடுமுறை நாட்களில் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பேன். வயல் காட்டில் களை எடுக்கப்போவேன். எந்த வேலை செய்தாலும், அதை எனது படிப்புக்குத் தடையாக இருக்கவிட மாட்டேன்.

பிளஸ் டூ படிக்கும்போது நெடுமானூர் கிராமத்தில் தனது வீட்டின் முன்பு ரமேஷ்

ரமேஷின் அப்பா கிருஷ்ணனுக்கு நெடுமானூரில் ஒரு ஏக்கர் விவசாய நிலமும், மாடும் இருக்கிறது. வயலுக்கு நடுவே கூரை வீடு. அதுதான் அவர்களது வசிப்பிடம். அவரது அம்மா செல்வியால் நடக்க முடியாது. அதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. ரமேஷ் அப்பாவும், அம்மாவும் பள்ளிப் படிப்பையே படிக்காதவர்கள். ரமேஷ் அக்கா கிரிஜா 7ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அவருக்குத் திருமணமாகிவிட்டது.

விவசாயத்தில் பெரிய வருமானம் இல்லை. அதற்காக வாங்கிய கடன் கட்டவே சிரமப்பட்டது அவரது குடும்பம். தன்னைப் போல தனது மகனும் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்து, எப்படியாவது மகனைப் படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தார் அவரது அப்பா கிருஷ்ணன்.

பள்ளியில் படிக்கும்போதே, வீட்டுக்கு வருமானம் ஈட்டுவதற்காக மற்ற நேரங்களில் வேறு வேலைகள் செய்ய வேண்டியதிருந்தது. ஸ்கூலுக்குப் போவதற்கு முன்னால், தோட்டத்தில் விளையும் காய்கறி, கீரைகளை பக்கத்து கிராமங்களில் கொண்டு போய் விற்பதற்குச் செல்வேன். காலையில் 6 மணிக்குப் புறப்பட்டு காய்கறி, கீரைகளை விற்றுவிட்டு, வீட்டுக்கு வந்து 8.30 மணிக்குப் பள்ளிக்குக் கிளம்பிவிடுவேன். வார விடுமுறை நாட்களில் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பேன். ஒரு மரத்தில் தேங்காய் பறித்தால் ரூ.10 கிடைக்கும். நான்கு, ஐந்து மரங்கள் ஏறுவேன். வயல் காட்டில் களை எடுக்கப்போவேன். எந்த வேலை செய்தாலும், அதை எனது படிப்புக்குத் தடையாக இருக்கவிட மாட்டேன். எந்த வேலைக்குச் சென்றாலும் பள்ளிப் பாடங்களைப் படித்து விடுவேன். எப்படியாவது படித்து நல்ல வேலைக்குச் சென்று விட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்கிறார் ரமேஷ்.

ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னியில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜியில் 2018இல் ஓராண்டு ஜாயிண்ட் பிஎச்டி படிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த ரமேஷ், ஆர்வத்துடன் படித்தார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 448 மதிப்பெண்கள் பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள். பள்ளியிலேயே இரண்டாவது ரேங்க். அதையடுத்து பிளஸ் டூ படிக்க அவரது ஊரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கராபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ந்தார். பள்ளிக்கு அரை மணி நேரத்தில் சைக்கிளில சென்றுவிடுவார். மழை நேரத்தில்தான் சிரமம்.

பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றார். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1030 மதிப்பெண்கள். கணிதத்தில் 200க்கு 199 மதிப்பெண்கள். அப்போதும் பள்ளியில் அவர் இரண்டாவது ரேங்க்.
“2010இல் அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் பிஇ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்த எனது குடும்பம், என்னை எப்படி படிக்க வைப்பது திகைத்து நின்றது. அந்தச் சூழ்நிலையில் அகரம் பவுண்டேஷன் மூலம் படிக்க எனக்கு உதவி கிடைத்தது. அங்கு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால், கல்லூரியில் முதல் ஆண்டில் மிகவும் சிரமப்பட்டேன். அகரம் பவுண்டேஷன் நடத்தும் பயிற்சி வகுப்புகள் எனக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. ஹாஸ்டலில் இருக்கும்போது புத்தகத்தையும் ஆங்கில அகராதியையும் வைத்துக் கொண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்த்துத் தெரிந்து கொள்வேன். எனது வகுப்பில் உள்ள மற்றவர்களிடம் கேட்டு பாடத்தைப் புரிந்து கொள்வேன். இப்படி எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வந்தேன்.

சென்ற ஆண்டு பிச்எடி படித்து முடித்தேன். எனக்கு, ரூர்க்கி, கரக்பூர், தன்பாத் ஐஐடிக்களிலும் லக்னோவில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்திலும் வேலைவாய்ப்புகள் வந்தன.

இரண்டாவது செமஸ்டரில் படிப்பில் நான் பிக் அப் ஆகிவிட்டேன். மூன்றாவது செமஸ்டரில் வகுப்பிலேயே முதலிடம் பெற்றேன். இரண்டாம் ஆண்டிலிருந்தே கேட் (GATE ) நுழைவுத் தேர்வுக்காக எனது நண்பர் ராஜிவுடன் சேர்ந்து தயாராகத் தொடங்கினேன். ஜிஐடி என்ற கோச்சிங் நிறுவனம் எங்களுக்கு உதவியாக இருந்தது” என்கிறார் ரமேஷ்.

சிட்னியில் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜியில் ஜாயின்ட் பிஎச்டி படிக்கச் சென்றபோது ரமேஷ்.

பிஇ படித்து முடித்ததும் சொனாலிகா டிராக்டர் என்ற தனியார் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்து. •• அத்துடன், எனக்கு திருச்சி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்டெக் இன்ஸ்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் படிப்பில் இடம் கிடைத்தது. வேலைக்குச் சேராமல் அந்தப் படிப்பில் சேர்ந்து படித்தேன். எனக்கு ஸ்காலர்ஷிப்பாக ரூ.12,400 கிடைத்தது. அதைப் படிப்புச் செலவுக்குப் பயன்படுத்தினேன். அத்துடன் இதரச் செலவுகளுக்காக வார விடுமுறை நாட்களில் மற்ற மாணவர்களுக்கு கேட் (GATE) நுழைவுத் தேர்வுப் பயிற்சி அளித்தேன். அதன் மூலம் கிடைத்த வருவாய் எனது படிப்புச் செலவுக்கு உதவியாக இருந்தது” என்கிறார் அவர்.

“எம்டெக் முடிந்ததும் ஹைதராபாத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஜெனரல் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் 6 மாதம் இன்டர்ன்ஷிப் கிடைத்தது. அதேசமயம், சென்னை ஐஐடியில் பிஎச்டி படிக்க ஃபெல்லோஷிப்புடன் வாய்ப்பு கிடைத்தது. ஆய்வுப் படிப்பில் சேருவது என்று முடிவு செய்து, 2016இல் சென்னை ஐஐடியில் படிக்கச் சேர்ந்தேன். மாதம் 25 ஆயிரம் உதவித் தொகை கிடைத்தது. ‘Improving sustainability of food supply chain’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டேன். அத்துடன், ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னியில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜியில் 2018இல் ஓராண்டு ஜாயிண்ட் பிஎச்டி படிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. சென்ற ஆண்டு பிச்எடி படித்து முடித்தேன். எனக்கு, ரூர்க்கி, கரக்பூர், தன்பாத் ஐஐடிக்களிலும் லக்னோவில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்திலும் வேலைவாய்ப்புகள் வந்தன. ஆசிரியப் பணியில் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே, நான் லக்னோவில் உள்ள ஐஐஎம்-இல் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்து வருகிறேன். ஊரில் எனது பெற்றோருக்கு வீடு கட்டிக் கொடுத்து, அவர்களைக் கவனித்துக் கொள்கிறேன். இரு வீட்டார் அனுமதியுடன் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த எனது கல்லூரித் தோழி ராகவியைத் திருமணம் செய்து கொண்டேன். இது லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ். எனது குடும்பத்தினரை எளிதாகத் தொடர்பு கொள்ளும் இடத்தில், எனது நண்பர்கள், தொடர்புகள் உள்ள இடத்தில் பணி செய்ய வேண்டும் என்பது ஆசை. ஆசிரியப் பணியிலும் ஆராய்ச்சியிலும் ஆர்வமாக இருக்கிறேன். எதையும் சிறப்பாக முனைப்புடன் செய்தால் யாருக்கும் எதுவும் சாத்தியம்” என்கிறார் ரமேஷ்.


Share the Article

Read in : English