Read in : English

Share the Article

ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை இரண்டும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்ததற்கு ஆர்வலர் ஆவேசம் ஒரு முக்கியமான காரணமென நினைக்கிறேன்.

சார்பட்டா பரம்பரையினை நான் முழுவதுமாகக்கூடப் பார்க்கவில்லை. நெடுக ஒரே பாக்சிங் காட்சிகள்.

எனக்கு அவை அதிகம் ரசிப்பதில்லை. திரைக்கதைகூட வழக்கமான சினிமா பாணியில் அமைந்திருந்தது. ஆனால் ஆங்கில நாளேட்டில் நடுப்பக்கக் கட்டுரை வெளியாகும் அளவு தாக்கத்தை அது ஏற்படுத்தியதற்குக் காரணம், தலித் அரசியல் பேசும் பா. ரஞ்சித் இயக்கியதும், நடுத்தரவர்க்கம் முகம் சுளிக்கும் வடசென்னையைச் சுற்றி அமைந்ததுமேயாகும்.

(Source:Twitter.com)

ஆர்வலர்கள் திரைப்படத்தைக் கொண்டாடுவதை தங்களின் முக்கிய கடப்பாடாகக் கருதினர். ரஜினியின் காலா பற்றியே வரிந்து வரிந்து முகநூலில் எழுதியவர்கள் விடுவார்களா? ஆனாலும் சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது என்ற அளவில் திருப்தி. அதேநேரம் கொண்டாட ஏதும் இருந்ததாக எனக்கு நினைவில்லை.

தற்போது உலக அளவிலேயே பரபரப்பாகப் பேசப்படுகிறது ஜெய் பீம். சற்று தாமதாகத்தான் நான் பார்த்தேன். சூர்யாவை எனக்குப் பிடிக்கும், ஏதோ இனம் புரியாத காரணங்களினால். ஆனால் எல்லாம் மசாலா படம்தானே. எனவே பார்க்கமாட்டேன்.

இதிலோ ஜெய்பீம் வேறு, நாடளவில் வீச்சிருக்கும் அம்முழக்கத்தை வைத்து காசு பார்க்கிறார்களோ என்ற தயக்கம் வேறு. போதாக்குறைக்கு இடதுசாரியினரும் தலித் தரப்பினரும் ஆகா ஓகோ என்று பேச, தயக்கம் கூடியது.

கலை கலைக்காக அல்ல, மக்களுக்காகத்தான். ஆனால் அதற்கான இலக்கணங்கள் வேறு. அதன் இயங்குதளம் வேறு. கட்சி/இயக்கம்/கருத்தியல் இவற்றின் கருவியாக மாறும்போது, கலை களையிழந்துவிடும் என்பதே வரலாறு. விவரிக்கவியலாத கலையம்சங்கள் ஊடாடினால்தான் எந்த ஒரு படைப்பும் வெற்றி பெறும்.

கலை கலைக்காக அல்ல, மக்களுக்காகத்தான். ஆனால் அதற்கான இலக்கணங்கள் வேறு.

ஜெய்பீம் எப்படியிருக்கும் என்ற கவலையுடனேதான் பார்க்கத் துவங்கினேன். முதல் 20-25 நிமிடங்களிலேயே போரடிக்கத் தொடங்கியது. அப்பாவிப் பழங்குடியினர், அவர்களது ஏழ்மை, ஏழ்மையிலும் பரஸ்பர கரிசனங்கள், காதல் எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தாலும், அவை பலமுறை சொல்லப்பட்டு தேய்ந்துபோனதுதான். திரையில் புதிதல்ல,.

ஒரு கட்டத்தில் கிராமத் தலைவர் சம்பந்தாசம்பந்தமில்லாமல் ’கொஞ்சம் எடத்தக் கொடுத்தா மடத்தைப் புடுங்கிவீங்களே’ என்ற ரீதியில் முடிப்பார். ஆள்வோரின் மமதையைக் காட்டுகின்றனராம். ஆனால், அந்த எரிச்சல், சலிப்பு அந்த உரையாடலுடன் ஒட்டாது.

துவக்கத்தில் சிறை வாயிலில் பகிரங்கமாக லஞ்சம் வாங்குவதுகூட அபத்தமாகவேபட்டது. அதனை வேறுவிதமாகக் காட்டியிருக்கமுடியாதா? பாம்பு பிடிக்கச் செல்லும் குழுவினரின் தலைவன், பின்னாலே ஸ்டார்ட் ஆகாத காரைத் தள்ளி உதவிசெய்துவிட்டு, நீங்க நமம ஊரில்லையாம்மா எனச் சொல்வதுகூட மிகச் செயற்கை. அப்படிச் சொல்லும் துணிவு எவருக்கு வரும்.

நகைகள் காணாமல் போன பிறகு அவரை சந்தேகிப்பதாகச் சொல்லும் அம்மணி, அவன் அப்பவே அப்படிச் சொன்னான் என்கிறார். இத்தகைய ஆதாரமில்லாத ஊகங்களின் பேரிலா போலீசார் அடாவடியில் இறங்குவர்?

அது மட்டுமல்ல, தொடர்ந்து அவனைக் கைது செய் என மிரட்டும் ஊர்ப் பெரிய மனிதர், நகை பற்றிப் பேசுவதே இல்லை. திரைப் படத்தின் இறுதிப் பகுதி வரை போலீசார் காணாமல் போன நகைகளைத் தேடுவதாகக் காண்பிக்கமாட்டார்கள்.

அப்போதுகூட ஏதோ இரண்டு தோட்டையாவது கொடுத்து முடிங்க சேட்டு என்கின்றனர். அதாவது ராஜாக்கண்ணுவைப் பிடித்துவிட்டால் போதும், பெரிசு திருப்தி அடையும் என்கிற ரீதியில் படமாக்கப்பட்டிருக்கிறது.

நிலப்பிரபுக்களின் ஆணவம், அரசியல் தொடர்புகள், கீழோரைப் படுகேவலமாக நடத்தல், தேவையானால் அதீத வன்முறையை நாடுதல் இதெல்லாம் வேறு.

ஆனால் விலையுயர்ந்த நகைகளை இழந்து புலம்புவோர் ஏதோ ஒரு சிலர் கைது செய்யப்படுவதோடு நிறுத்திக்கொள்ளமாட்டார்கள். என்ன ஆயிற்று நகைகளுக்கு என்றுதான் படாதபாடுபடுத்துவார்கள். அவர்கள் டார்ச்சரில் போலீசார் மிருகமாவர். ஆனால் அப்படியெல்லாம் சித்தரிக்கப்படவே இல்லை.

எல்லாம் பழைய டெக்னிக் என்றேன். செங்கேணியை அடித்து இழுத்துச் சொல்லும்போது சற்று சூடுபிடிக்கிறது. ஆனால் அந்தக் கர்ப்பிணி நடையாகவே பல காததூரம் நடந்து சிறைக்குச் செல்வது, கணவனைத் தேடுவது இதெல்லாம் ரொம்பவே ஓவர் என எவரும் சொன்னதாகத் தெரியவில்லை.
தப்பித்துவிட்டதாகச் சொல்லுவது வடிகட்டிய பொய் என்று பின்னால் தெரியவரும்போது சற்று ரிலீஃப். அவ்வளவு அமெச்சூர்தனமாக அதனைக் காட்டுவர்.

தப்பித்தவர்களைப் பார்த்ததாக வலுவாக சாட்சியமிருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்வார்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட. அப்படி என்ன வலுவான சான்று. மூவர் சொல்கின்றனர் அவ்வளவுதான். அவர்கள் சொல்வதாலேயே அது உண்மை என்று ஏன் நம்பவேண்டும்?

அதுமட்டுமல்ல அங்கேயும் லாஜிக் உதைக்கிறது. தப்பித்துவிட்டனர் என்பது போலீசார் கதை. அதைக் காட்சிப் படுத்துகையில் காட்டுத்தனமாக போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட காயங்களுடன் அம்மூவரும் தப்புவர். அதாவது நாங்கள் அப்படி அடித்தோம் என்று போலீசார் தப்புவது போன்றிருக்கிறது!

மில் உரிமையாளருக்கு போன் வந்தது குறித்து சொல்லியும் அப் பெண் சொல்லாமல் விட்டதால்தான் ஓரளவு அதற்கு நம்பகத் தன்மை கிடைக்கிறது. மற்றபடி ஒரு இன்ஸ்பெக்டர் ராஜாக்கண்ணு போல மிமிக்ரி செய்யமுடியும் என்பதெல்லாம் வெறும் உடான்ஸ்.

மற்ற சாட்சியங்களெல்லாம் முன்னரேயே வந்துபோகின்றனர். சேட்டு மட்டும்தான் இறுதிக்கட்டத்தில். அது சஸ்பென்சிற்காக என்றாலும் அவரை மற்றவர்களுடன் ஏன் காட்டவில்லை? அப்புறம் ஏன் மூன்று பேர் டெலிபோன் பூத்தில் முண்டி அடித்துக் கொண்டிருந்திருக்கவேண்டும். அதனால் தானே டீ.கடைக்காரருக்கு சந்தேகம் வருகிறது, கதை கந்தலாகிறது.

இத்தகைய ஓட்டைகளை மீறியும் படம் ரசிக்கும்படியே இருக்கிறது. 40, 50 நிமிடங்களுக்குப் பிறகு. செங்கேணியாகத் தோன்றும் மலையாள நடிகை அற்புதம், உண்மையிலேயே நம்மை நெகிழ வைத்துவிடுகிறார். ஐஜி முன் பேசும் அந்த வீர வசனத்தைத் தவிர்த்திருக்கலாம்.

செங்கேணியாகத் தோன்றும் மலையாள நடிகை அற்புதம், உண்மையிலேயே நம்மை நெகிழ வைத்துவிடுகிறார். ஐஜி முன் பேசும் அந்த வீர வசனத்தைத் தவிர்த்திருக்கலாம்.

பிரகாஷ்ராஜ் வழக்கம்போலவே சூப்பர். அவர் உடல்மொழி நம்மை எப்போதும் போல ஈர்க்கிறது.
சூரியா ஒரேயடியாக ஆக்கிரமித்துக்கொள்ளாமல், இருளர் குடியினருக்கு வழிவிட்டிருப்பது பாராட்டத்தக்கது – இதனை வேறு சிலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

போலீசாரின் கொடூரம் நம்மை பதறவைக்கின்றது, கொதிக்கவைக்கின்றது.இதற்கும் முன் அளவு தத்ரூபமாக அக்கொடுஞ் செயல்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இறுதியில் சூர்யாவின் பிரகடனம் சற்று நாடகத்தனமாக இருக்கிறதென்றாலும் சூர்யாவின் இறுதிப் பிரகடனமும், அன்றைய நிகழ்வுகளைச் சுருக்கமாக நினைவு கூறுவதும் பிரச்சார நெடிக்கப்பால், இன்றைய வரலாற்றுக் கட்டாயமாகிறது.

அண்ணாத்தைகளால் ரசிகர்களின் மூளையை மழுங்கச்செய்யாமல், அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிந்திக்க வைக்க முயன்றிருப்பதற்காகவே, ஜெய்பீம் திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


Share the Article

Read in : English