Read in : English

Share the Article

வடகிழக்கு பருவ மழை வேகம் பெறுவதற்கு முன்பே சென்னை ஏற்கெனவே வெள்ளக் காடாகிவிட்டது. நகரமைப்புத் திட்டமிடல், நகர வசதிகளுக்கான திட்டங்கள் என ஆண்டு முழுவதும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள், 2015-ஆம் ஆண்டின் சென்னை வெள்ளத்தில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகள் என எல்லாம் இருந்த போதிலும், மழை தொடர்பான துன்பங்களை எதிர்கொள்வதற்கு சென்னை நகரம் தயாராக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படி இல்லை. புயல்/காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருவதற்கு முன்பே சென்னை நகரம் மூழ்கத் தொடங்கிவிட்டது. ஏனெனில், நமது மழை வெள்ள நீர் வடிகால்களை நாம் சரியாக கட்டியமைக்கவில்லை.

மழை வெள்ள நீர் வடிகால், வேளச்சேரி

எல்லா மழை வெள்ள நீர்க் கால்வாய்களும் (எல்லா இடங்களிலும் முறையாக வடிவமைக்கப்படாமல், மேலே வெளியேறுவதற்கு வழியில்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தோடு முடியும் வகையில் கட்டப்பட்டவை), கூவம், அடையாறு, பங்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, காட்டன் கால்வாய் போன்ற அருகில் உள்ள ஆறுகளுடனும் கால்வாய்களுடனும் முறையாக இணைக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் ஈர்ப்பு சக்தியின் காரணமாக வெள்ள நீர் ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள் தானாகவே வடிந்துவிடும். ஆகவே, நமது மழை, வெள்ள நீர்க் கால்வாய்கள் முடியும் இடங்கள் எல்லாம் நீர் நிலைகளுடன் இணைக்கப்படவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நமது மழை, வெள்ள நீர்க் கால்வாய்கள் முடியும் இடங்கள் எல்லாம் நீர் நிலைகளுடன் இணைக்கப்படவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது

வெள்ள நீர் வடிவதற்கான சரிவு முறையாக கட்டப்படவில்லை. ஈர்ப்பு சக்தியால் நீர் பாய்ந்தோடுவது எங்கெல்லாம் இயலவில்லையோ, சென்னை நகரின் அந்தப் பல்வேறு பகுதிகளில் சிறிய பம்பிங் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதை வெள்ள நீர் எந்த வழிகளில் செல்லும் என்பதை விளக்கி, 1980-இல் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தைச் (CMDA) சேர்ந்த பொறியாளர் கே.ராமலிங்கம் தயாரித்த வெள்ள நீர் மட்டக் கோடு வரைபடங்களை கருத்தில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்குள் வரும் பகுதியில் பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுவதை கண்காணிப்பதற்காக ஒரு டிவிஷனுக்கு ஒருவர் என போதிய களப் பொறியாளர்களை நியமித்து ஈடுபடுத்த வேண்டியது அவசர அவசியம். அப்போதுதான், இந்தக் கட்டடங்களால் வடிகால் வழிகளும், நீர் வழிகளும் இடைமறிக்கப்பட்டு இந்த தற்காலிக வெள்ளச் சேதம் ஏற்படுவதை தடுக்க முடியும். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பல்வேறு பல மாடிக் கட்டடடங்கள் எல்லா விதிகளையும் மீறி, திட்ட அனுமதியில் இருந்து விலகி, முறையற்று கட்டப்படுகின்றன.

வெள்ள நீர் ஈர்ப்பு விசை மூலம் சுலபமாக பாய்ந்தோடுவதற்கும், குறுகிய காலத்தில் குறைந்த செலவில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் உதவும் வகையில், (செவ்வகமான தட்டையானபிரிவுகளுக்கு பதிலாக NP2 & NP3 வகை குழாய்கள்) முன்வார்ப்பு செய்யப்பட்ட வலுவூட்டிய வட்டக் குழாய்களை (precast reinforced circular pipes) ஏற்றுப் பயன்படுத்துவதன் மூலம் வெள்ள நீர் வடிகால் வடிவமைப்பை மாற்றி அமைப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் (GCC) மழை, வெள்ள நீர் வடிகால் பிரிவுக்கு இதுவே சரியான நேரம்.

வெள்ள நீரை வடியச் செய்வதற்காகவும், தொடர்ந்து வேறு பயன்பாடுகளுக்காக அதை மறுசுழற்சி செய்வதற்கும் ஏற்ற வகையில் 0.1 அல்லது 0.05 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மினி சுரங்க நீர்த் தேக்கங்களை (mini Tunnel Reservoirs) சென்னை நகரத்தின் முக்கியமான பகுதிகளில் அமைக்க வேண்டும்.

மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் எளிதாக இருப்பதற்காக, மழை நீரை சேகரித்து அருகில் உள்ள கால்வாய்களில், ஆறுகளில் அல்லது ஓடைகளில் விடுவதற்காக தெருக்கள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் முக்கிய பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் இதர இடங்களில் அமைக்கப்படும் நகர வசதிகளில் ஒன்றுதான் வெள்ள நீர் வடிகால் வசதி.

எனினும், மழை, வெள்ள நீர் வடிகால்களை கட்டுவதற்காக இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நமது பொறியாளர்கள் இன்னும் வழக்கமாகப் பயன்படுத்தும் பழைய பொருள்களையே, பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வருகிறார்கள். இது மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துவதுடன், கட்டுமானச் செலவையும் அதிகரிக்கச் செய்கிறது.

மண்ணைத் தோண்டி அகழ்ந்தெடுத்தல், உடைந்த கற்களை சேகரித்தல், மணல், செங்கல் பக்கச் சுவர்களுடன் கூடிய செவ்வகப் பிரிவு, முறையான பதப்படுத்தல் இல்லாமல் கவர் ஸ்லாபுக்காக பணி இடத்திலேயே கான்கிரீட் போடுதல் போன்றவை மோசமான தரத்துக்கும், கட்டுமானக் காலம் நீடிப்பதற்கும் வழி செய்கின்றன. இந்த வடிவத்தில் சேறு மற்றும் உடைந்த துண்டுகளை அகற்றுவது கடி ன மானது. இது உள்ளுக்குள் வெள்ள நீர் தங்கு தடையின்றி ஓடுவதைத் தடுக்கிறது.

வேலையின் தரத்தை மேம்படுத்துவதோடு கட்டுமான காலத்தையும் துன்பங்களையும் குறைப்பதற்காக, முன்வார்ப்பு செய்யப்பட்ட RC கான்கிரீட் குழாய்கள் – 600mm முதல் 900mm விட்டம் உள்ள – NP2 வகையை இந்தப் பணிக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. RC குழாய்களை ஏற்றுப் பயன்படுத்துவதால் குழாய்ப் பாதைகள் அமைத்தல், தரம், மழை நீர் எளிதாகப் பாய்ந்தோடுவதற்குத் தேவையான சரிவு, பணியை முடிப்பதில் கணிசமான காலம் குறைப்பு ஆகியவற்றை எட்ட முடிகிறது. RC சுவர் பராமரிப்புக்கான செலவைவிட இதற்கு கட்டுமானச் செலவு குறைவு. மேலும் நீடித்து பயன்படுவதையும் உறுதிப்படுத்த முடியும்.

வழக்கமான பழைய வடிவமைப்பு முறை மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட நவீன முறை ஆகியவற்றில் செலவு மதிப்பிடுகள் கணக்கிடப்பட்டுள்ளன.

1. செங்கல் சுவர்கள் மற்றும் இயல்பான சூழல் கான்கிரீட் கவர் ஸ்லாபுடன் கூடிய மழை, வெள்ள நீர் வடிகால். 100RM-க்கு ரூ.5 லட்சம்.

2. RC சுவர்கள் மற்றும் RC கான்கிரீட் கவர் ஸ்லாபுடன் கூடிய மழை, வெள்ள நீர் வடிகால் (இரண்டுமே பணி இடத்தில்). 100RM-க்கு ரூ.8.90 லட்சம்.

3. RC கான்கிரீட் குழாய்களுடன் (NP2 வகை) எளிதில் தண்ணீர் பாய்ந்தோடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட மழை, வெள்ள நீர் வடிகால்கள். 100RM-க்கு ரூ.5.20 லட்சம்.

குறைந்த செலவு பிடிக்கின்ற, RC கான்கிரீட் குழாய்களுடன் (NP2 வகை) கூடிய மழை, வெள்ள நீர் வடிகால்கள் அமைக்கலாம் என 2010-லேயே இந்த ஆராய்ச்சி அறிஞரால் சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலாக்கப்படவில்லை. என்ன காரணம் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

இந்த வெள்ளக் காலத்தில் சென்னை மக்களின் துன்பங்களைப் போக்குவதற்காக ககன் தீப் சிங் அவர்களே, நீங்கள் எடுத்து வரும் நேர்மையான முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முதுநிலை பொறியாளர்களும் வல்லுநர்களுமான நாங்கள், இந்த முக்கியமான பணியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கும் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.

(பொறியாளர் ஏ. வீரப்பன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளர்கள் சங்கம் (Tamil Nadu PWD Senior Engineers Association – TANSEA )


Share the Article

Read in : English