Read in : English

Share the Article

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புடன் தீபாவளி நாளில் வரவிருக்கிறது. ரஜினியின் தீபாவளிப் படங்களில் மறக்கமுடியாதது அவள் அப்படித்தான்.

அது பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவில்லை. பெரிய வெற்றியையும் பெறவில்லை. அது இயக்குநருக்கு முதல் படம். அண்ணாத்த போல் அது வணிக வெற்றியைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட படமன்று.

தமிழ் சினிமாவின் உள்ளடக்கத்தை அடியோடு மாற்றிவிட வேண்டும் என்னும் இயக்குநர் ருத்ரய்யாவின் அடி நெஞ்சில் கனன்று கொண்டிருந்த உந்துதலில் வெள்ளித்திரைக்கு வந்திருந்தது. ரஜினி ஒத்துழைத்திருந்தால் அவள் அப்படித்தான் போன்ற அரிய சில படங்களை ருத்ரய்யா படைத்திருப்பார்; ஆனால், ரஜினி நம்பும் ஆண்டவன் கலைப் படங்களுக்கான தாகத்தை அவருக்குத் தந்திருக்கவில்லை.

ருத்ரய்யா பற்றித் தொடர்ந்து தமிழ்த் திரையுலகம் பேசுகிறது. அவர் யார், அவரது தனித்துவம் என்ன?

ருத்ரய்யா

ருத்ரய்யா அரிதாகத் தமிழ்ப் படங்களைத் திரையரங்கில் பார்த்திருக்கிறார். இடைவேளைக்கு மேல் அவரைத் தக்கவைக்கும் திராணி தமிழ்ப் படங்களுக்கு இருந்திருக்கவில்லை. அறுபத்து ஏழு வயதுவரை சினிமா கனவின் கதகதப்புடன் வாழ்ந்து மறைந்த அவர் இயக்கிய முழுநீளத் திரைப்படங்கள் மொத்தம் இரண்டு. ஒன்று, அவள் அப்படித்தான், மற்றொன்று, கிராமத்து அத்தியாயம்.

சில முயற்சிகள் வெளியிலிருந்து கிடைத்திருக்கின்றன என்றபோதும் இரண்டையும் அவரே தயாரித்திருக்கிறார். குமார் ஆர்ட்ஸைத் தயாரிப்பு நிறுவனம் போல் அவர் நடத்தவில்லை; எல்லாரும் ஒன்றாக உழைத்து ஒன்றாகச் சாப்பிடும் ‘கம்யூன்’ போல் நடத்தினார் என்கிறார் எழுத்தாளர் வண்ணநிலவன்.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குச் சம்பளம் பேசப்படவில்லை; செலவுக்குத் தேவைப்படும்போது பணம் பெற்றுக்கொள்வார்களாம். அவள் அப்படித்தான் திரைப்படத்தின் மஞ்சுவின் பால்ய காலத்தைத் திரைக்கதையாக எழுதியவர் வண்ணநிலவன்.

மொத்தமாக நான்கு மணி நேரம் செலவிட்டால் அவரது படங்கள் இரண்டையும் பார்த்துவிட முடியும். அந்தப் படங்களை உருவாக்குவதற்கு அவர் ஆயுளையே தந்திருக்கிறார் என்று எண்ணும்போது தூக்கிவாரிப் போடுகிறது. அப்படி உருவான அந்தப் படங்களை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்களோ? 1980 செப்டம்பர் 19 அன்று வெளியான கிராமத்து அத்தியாயம் படத்துக்குப் பிறகு 34 ஆண்டுகள் வாழ்ந்திருந்த ருத்ரய்யா 2014 நவம்பர் 18 அன்று காலமானார்.

இந்த 34 ஆண்டுகளும் படமெடுக்க வேண்டும் என்ற அவரது முயற்சி கைகூடவில்லை; ஆனாலும் அவரது திரைக் கனவு அவர் கண்மூடும்வரை கலையவில்லை. அவரது திரைப்பட முயற்சிகள் சூழ்நிலையையும் காலத்தையும் காலனையும் வெல்ல முடியவில்லை. ஆனால், காலத்தை மீறிய ஒன்றாக அவரது அவள் அப்படித்தான் நிலைபெற்றுவிட்டது. ஓரிரு படத்துடன் ஒடுங்கிவிட்ட இயக்குநர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இரண்டு படங்களுக்குப் பின்னரும் இத்தனை ஆண்டுகள் ஒரு படத்தைப் படமாக்கிவிட முடியாதா எனப் போராடியவர் ருத்ரய்யாவாகத்தான் இருக்க வேண்டும்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த, திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்த ருத்ரய்யா வழக்கமான தமிழ்ப் படங்களால் அதிருப்தி அடைந்திருக்கிறார். ஆகவே, எழுபதுகளில் உருவான பிரெஞ்சின் நியூ வேவ் திரைப்படங்களைப் போலத் தமிழிலும் படங்களை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை அவருக்கு இருந்திருக்கிறது.

அவரது திரைக்கதை உத்தி வழக்கமான திரைக்கதைகளின் பாதையிலிருந்து மாறுபட்டது. இரண்டாம் படத்துக்கு அவர் கிராமத்து அத்தியாயம் என்று பெயரிட்டதற்குப் பின்னர்தான் அவரது முதல் படமான அவள் அப்படித்தான் ஒரு நகரத்து அத்தியாயம் என்பதை உணர்ந்து மெல்லிய வியப்பை வெளிப்படுத்துகிறோம்.

முதல் படம் நகரப் பின்னணியிலானது என்றால் இரண்டாம் படம் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவானது. இரண்டு படங்களும் கதை அளவிலும் களம் அளவிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. முதல் படத்தில் முதன்மை வேடமேற்றோர் அனைவரும் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்கள். இரண்டாம் படத்தில் எல்லோரும் புதுமுக நடிகர்கள். ஆனால், அடிப்படையில் அவை இரண்டும் ஒரே விஷயத்தையே பேசின. அது பெண்களின் துயரம்.

ஆண்களால் அலைக்கழிக்கப்படும் பெண்களின் வேதனையையும் விசும்பலையும் விம்மலையும் அவை காட்சிகளாக வரித்திருந்தன. பட்டணத்துப் பெண்களின் பிரதிநிதி மஞ்சு என்றால், சிற்றூர்ப் பெண்களில் ஒருத்தி பவானி. தமிழ்ப் படங்களில் ஒருவனைக் காதலித்து மற்றவனைக் கரம்பிடித்த பெண்கள் பலர். அந்த ஏழு நாட்கள், இங்கேயும் ஒரு கங்கை, மௌன ராகம் போன்ற பல படங்களில் அவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கிராமத்து அத்தியாயம் படத்தின் பவானி.

அவள் கரம் பற்றிய கணவன் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறான். கணவனின் அன்பில் தன்னையே மறந்துவிடும் அவள் வாழ்வில் மீண்டும் காதலன் குறுக்கிடுகிறான். இருவரையும் அவளால் விலக்கிவைக்கவும் முடியவில்லை; இருவருடனும் விலகி இருக்கவும் முடியவில்லை. அலைமீதாடும் படகாய் இருகரையிலும் சேரமுடியாமல் அல்லாடுகிறாள்.

மரபு வலியுறுத்தும் கணவனா, உள்ளம் கவர்ந்த காதலனா யாருடன் செல்வது என முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவளும் மரபின் பாதையிலேயே நடைபோடுகிறாள். ஆனால், அந்தப் பாதையை ருத்ரய்யா அமைத்திருந்தவிதம் குறிப்பிடத் தகுந்தது.

கிராமத்து அத்தியாயம் படத்தில் பவானியை ஒருதலையாகக் காதலிக்கும் கூத்து வாத்தியார் ஒருவர் உண்டு. படத்தின் இறுதியில் அவர் பவானியின் காதலனைக் கொன்றுவிடுவார்.

பவானி கணவனுடன் புதிய அத்தியாயம் படைக்கப் புறப்படுவார். திரைக்கதையின் சிக்கலை இப்படித் தீர்த்துவைத்ததன் வாயிலாக, அதுவும் கூத்து வாத்தியார் வாயிலாக இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்ததால் எழுத்திலும் திரையிலும் தான் இது சாத்தியம்; நடைமுறை வாழ்க்கையில் துயரமே தொடரும் என்பதை உணர்த்தியிருப்பார்.

சிறப்பான நடிகர், நடிகைகள் கிடைத்திருந்தால் கிராமத்து அத்தியாயம் தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக மாறியிருக்கும். அப்படி அமையாமல் போனதால் அவள் அப்படித்தான் படத்தின் வாயிலாகவே ருத்ரய்யாவின் புகழ் வெளிச்சம் தொடர்ந்து பரவுகிறது. ஆனால், கிராமத்து அத்தியாயமும் ஒரு சினிமாவாக ருத்ரய்யாவின் முத்திரைகளைக் கொண்ட படமே.

ருத்ரய்யா கவனிக்கப்பட வேண்டிய இயக்குநர் என்பதற்கான தடயங்கள் கிராமத்து அத்தியாயத்தில் காணப்படுகின்றன. அவரது இரண்டு படங்களுமே காட்சிகளால் நகர்பவை. வசனங்கள் மிகவும் சுருக்கமாக ஆனால், சுரீரென வெளிப்படுபவை.

ஃபிரெஞ்சு இயக்குநர் கோதார்த்தின் விசிறி, ருத்ரய்யா என்கிறார் அவருடைய நண்பரான இயக்குநர் ஹரிஹரன். வழக்கமான படங்களைப் போன்ற தொடக்கம், முடிவு என்னும் வகையிலான படங்களை உருவாக்கக் கூடாது என்று இருந்திருக்கிறார் ருத்ரய்யா.

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்ற விரும்பிய அவர் தனது போக்கைச் சிறிதுகூட மாற்றிக்கொள்ளவில்லை. ரஜினியையும் கமலையும் வைத்து மீண்டும் படங்களை உருவாக்கிட அவர் முயன்றிருக்கிறார். ஆனால், அந்த எண்ணம் ஈடேறவில்லை. அவள் அப்படித்தான் படத்துக்காகப் பணமே பெற்றிடாத ரஜினி காந்த் கலைப் படம் எடுக்கும் எண்ணத்துடன் தன்னை அணுக வேண்டாம் என்று கறாராகத் தெரிவித்திருக்கிறார். ரஜினியின் தெளிவு அவரை சூப்பர் ஸ்டாராக்கியது.

உன்னத சினிமா பற்றிய கனவு ருத்ரய்யாவைத் தின்றுதீர்த்தது. இது கலையின் விபரீத விளையாட்டே.
ருத்ராய்யாவின் தயாரிக்க பாலுமகேந்திரா இயக்க தான் நடிக்க விரும்பி ஒரு படத்தை உருவாக்க கமல்ஹாசன் முயன்றிருக்கிறார். ஆனால், ருத்ரய்யா தானே இயக்க விரும்பி அந்த வாய்ப்பை இழந்திருக்கிறார்.

பிற தயாரிப்பாளர்களுக்காகப் படத்தை இயக்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் முடிவுசெய்திருக்கிறார் ருத்ரய்யா.
எழுத்தாளர் வண்ணநிலவன் எழுதிய, சோகரசம் ததும்பிய கடலோரக் காதலைச் சித்தரித்த கடல் புரத்தில் நாவலைத் திரைப்படமாக்கும் எண்ணத்தில் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். முதன்மை வேடத்தில் அர்ச்சனா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஆனால், ஓரிரு வாரப் படப்பிடிப்புக்குப் பின்னர் தயாரிப்பாளர் அந்த முழுநீளப் படத்தைத் தொலைக்காட்சிப் படமாக்கிவிட்டார். ஆகவே, இயக்குநரும் மாற்றப்பட்டார். இந்தத் தகவல்களை ருத்ரய்யாவின் இரு படங்களிலும் பணியாற்றிய இயக்குநர் அருண்மொழி தெரிவித்திருக்கிறார்.

அமரன் படத்தை இயக்கிய கே.ராஜேஸ்வர், அவள் அப்படித்தான் திரைக்கதையில் பங்காற்றியவர், மகன் நாயகனாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோமியோ-ஜூலியட் கதையைப் போன்ற ஒரு காதல் படத்தை உருவாக்கும் முயற்சியும் தோல்வியடைந்தது. இப்படி, கிராமத்து அத்தியாயத்துக்குப் பின்னர் அவரது அத்தனை அத்தியாயங்களும் தொடங்கியும் தொடங்காமலும் முற்றுப்பெற்றுவிட்டன.

திரைப்படத்துறையில் இயக்கத்துக்கான திறமை பெற்றிருந்தும், வணிகரீதியான அதன் பக்கத்துடன் எப்போதுமே ருத்ரய்யாவுக்கு உரசலே இருந்திருக்கிறது.

இடதுசாரிப் பார்வையும், முற்போக்கு எண்ணமும் கொண்ட ருத்ரய்யாவுக்கு சினிமாவின் நடைமுறை அரசியலுடன் ஒத்துப்போக இயலவில்லை. அதனால்தான் அவரது பல படங்கள் வளராமல் வந்த வேகத்திலேயே முடங்கிவிட்டன. ஆனாலும், ஓர் இயக்குநராக ருத்ரய்யா கடைசிவரை முடங்கவில்லை.

தரமான படங்களைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் அப்படித் தராமல் போனதற்கு அவரது தடுமாற்றத்தை மட்டும் காரணமாகச் சொல்ல முடியவில்லை. எத்தனை படம் பண்ணினார் ருத்ரய்யா என்பது ஒருபோதும் கேள்வியாகவில்லை ஏன் மீண்டும் அவர் படம் பண்ணிடவில்லை என்பதே எப்போதும் கேள்வியாக இருக்கிறது.

அதுதான் ருத்ரய்யாவின் சாதனை. அவர் இயக்கிய இரு படங்களும் இயக்காத பல படங்களும் அவரது பெருமையைச் சொல்லும். திரையுலகின் ஓர் அத்தியாயமான அவர் அப்படித்தான்.


Share the Article

Read in : English