Read in : English

Share the Article

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் மூன்றாவது தம்பதியினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த கே. ஏஸ். செந்தில் முருகனும் எஸ். சாந்தியும். 

விதுஷி சாந்தி தனது ஆறு வயதில் இருந்து நாகஸ்வரம் பயின்று வருகிறார். முதலில் அவர் தாத்தா இராமனிடமும், பின்னர் தந்தையார் கலைமாமணி டி. ஆர். பிச்சாண்டியிடமும் ஆரம்பப் பாடங்கள் கற்றுள்ளார். நாகஸ்வரம் தவிர திருவண்ணாமலையில் இருந்த கல்யாணி என்கிற விதுஷியிடம் வாய்ப்பாட்டும் கற்றபடி சுமார் இருபது வருடங்களுக்கு தன் தந்தையாருடன் சேர்ந்து கச்சேரிகள் வாசித்துள்ளார்.

வித்வான் செந்தில் முதலில் அவர் தந்தையார் சண்முகத்திடம் நாகஸ்வரம் பயின்றார். பின்னர் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றார். அவ்வெளையில் நாகஸ்வர ஜாம்பவான்களான இசைப்பேரறிஞர் திருவிடைமருதூர் பி.எஸ்.வி. ராஜா, சிக்கில் கே. உமாபதி, திருப்புலிவனம் உத்தரக்குமார் போன்ற பெரியோர்களிடம் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். மூன்று/நான்கு தலைமுறைக்கு மேலாக நாகஸ்வர கலைஞர்களாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்/சாந்தி தம்பதியினரின் மகன் பொறியியல் படிப்பை முடித்திருந்தும் கூட நாகஸ்வரம் வாசிப்பதிலேயே கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தால் இசையுலகிலும் இணைந்த இந்த ஜோடி இருபத்தைந்து வருடங்களாக கச்சேரி உலகிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள்.

கச்சேரிகளைப் பற்றிக் கூறும்போது, “கச்சேரியில் என்னை விட அவரும், அவரை விட நானும் இன்னும் சிறப்பாக ஒரு சங்கதியை வாசித்து விட வேண்டும் என்று எண்ணிதான் வாசித்து வருகிறோம். திருமணம் முடிந்து முதல் முதலாக நாங்கள் பங்காரு அடிகளாரின் பெரிய மகன் திருமணத்தில் வாசித்த பொழுது, தம்பதிகளாக மிக அழகாக வாசிக்கிறீர்கள் என்று பாராட்டி ஆசிர்வதித்தார். 2010ல், 136 சிவாச்சார்யார்களுடன் திருக்கைலாயம் சென்றிருந்தோம். ஏழு நாட்கள், காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் நாங்கள் வாசித்தோம். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் இடத்தில் மந்திரம் ஓதவே நாங்கள் சிரமப்படும் போது நீங்கள் எப்படி நாகஸ்வரம் வாசிக்கிறீர்கள் என்று அவர்கள் குறிப்பிட்டு, தினமும் கைத்தட்டி பாராட்டியதை மறக்க முடியாது.”, என்கிறார் சாந்தி.

இந்தியாவில் பல மாநிலங்களுக்கு பயணம் செய்து கச்சேரிகள் செய்துள்ள இவர்கள் திருவண்ணாமலை சங்கர மடத்தில் ஆஸ்தான நாகஸ்வர வித்வான்களாக கடந்த 15 வருடங்களாக இருந்து வருகிறார்கள். 2010ல் இத்தம்பதியினரிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்துள்ளது.

பெண்கள் நாகஸ்வரத்துறையில் ஈடுபடுவதற்கான சூழல் எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கு, “பெண்கள் பொழுது போக்கிற்காக ஏனோ தானோ என்று இல்லாமல், முறையாக ஈடுபாடுடன் கற்க வேண்டும். உடலை வருத்து மூச்சைப்பிடித்து ஒருங்கிணைத்து வாசிக்க வேண்டிய வாத்தியம் என்பதால் இளம் பெண்களுக்கும், பிள்ளைகள் பெற்ற பெண்களுக்கும் சிரமான வாத்தியம் என்றே சொல்ல வேண்டும். ஆனால், அதை சவாலாக எடுத்துக் கொண்டால் சாதிக்க முடியும். அதற்கான முன்னோடிகள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். என் வாசிப்புக்கு நான் கலீஷாபி அம்மாவின் வாசிப்பைத்தான் ஆதர்சமாகக் கொண்டு வருகிறேன்.

வருகிற நவராத்திரி நவசக்தி நாகஸ்வர விழாவில் கே.மனோகரும் ஈ.வி.கணபதியும் இந்த ஜோடிக்குத் தவில் வாசித்துக் கச்சேரியைச் சிறப்பிக்கவுள்ளனர்.


Share the Article

Read in : English