Read in : English

Share the Article

பல்கலைகழக மானியக் குழுவுக்குப் பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் என்று சில கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

“1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, உயர்கல்வி பொதுப் பட்டியலில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த நகல் சட்ட முன்வடிவு உயர்கல்வியில் மாநிலங்களின் பங்கை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அப்பட்டமான முயற்சி. எந்தவித அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எதுவும் செய்யாமல், உயர்கல்வியை முழுவதும் மத்தியப் பட்டியலில் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி ஆட்சிமன்றக் குழு முன்னாள் தலைவருமான பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன்.

“இந்த நகல் சட்ட முன்வடிவு உயர்கல்வியில் மாநிலங்களின் பங்கை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அப்பட்டமான முயற்சி.” – பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன்.

பல்கலைக்கழக மானியக் குழு திறம்பட செயல்படவில்லை என்பதற்கான காரணங்களைக் கூறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அவர்,  நிதி தவிர, பல்கலைக்கழக மானியக் குழுவின் பல செயல்பாடுகள் உயர் கல்வி ஆணையத்தின் வரம்பிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் , இந்த நகல் சட்ட முடிவு அளவற்ற அதிகாரங்களையும் அந்த அமைப்புக்கு வழங்குகிறது என்கிறார்.

“இந்த ஆணையத்தின் கட்டமைப்பையும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் பார்த்தால், முடிவு எடுக்கும் நடவடிக்கைகளில் கல்வியாளர்களைவிட அதிகாரிகளே அதிகம் இருப்பது தெரியவரும். உயர்கல்வி ஆணையத்தில் மாநில அரசுகளின் பங்கு அர்த்தமற்றதாக உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தலைமையிலான ஆலோசனைக் கவுன்சலின் பிரதிநிதிகளாக மாநில உயர் கல்வி கவுன்சலின் பிரதிநிதிகள் இடம் பெறலாம். இந்தக் குழுவில் முடிவு எடுப்பதில் கருத்து வேறுபாடு இருந்தால், மத்திய அரசின் முடிவே இறுதியானது” என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார்.

“புதிய பல்கலைகழகங்களைத் தொடங்குவதற்கு மாநிலங்களுக்குத் தற்போதுள்ள அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இந்தச் சட்டமுன்வடிவு உள்ளது. இதேபோல பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தை வழங்குகிறது.  பல்கலைக்கழகங்கள் புதிய படிப்பைத் தொடங்குவதற்கு முன்னதாக உயர்கல்விக் கவுன்சலின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதிமுறை பல்கலைக்கழகத்தின் போர்டு ஆஃப் ஸ்டடீஸ் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த உயர் கல்வி ஆணையம் எந்த வகையிலான மானியத்தை வழங்கப்போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. உயர்கல்வி நிதி முகமை (Higher Education Funding Agency ) மூலம் வங்கிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் அமைப்புகள் பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிடும் நிலை ஏற்படும். உயர் கல்வி நிலையங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த அமைப்பு மூலம் கடனுதவியாக அளிக்கப்படும். அதற்கான வட்டியை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செலுத்திவிடும். அந்தக் கடனைப் பல்வேறு தவணைகளில் செலுத்த வேண்டியது அந்தக் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு. அந்தக கல்வி நிறுவனங்கள் எப்படி வருவாய் ஈட்டி இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்? மாநில அரசுக் கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் இந்தக் கடனுதவியைப் பெற முடியுமா?” என்ற கேள்விகளை எழுப்புகிறார் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன்.

“மத்திய அரசின் இந்த முன்வரைவுச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246வது பிரிவு  தந்துள்ள மாநில உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது.” – பிரின்ஸ் கஜேந்திர பாபு

மத்திய அரசுடன் ஆதரவுப் போக்கைக் கடைப்பிடித்து வரும் தமிழக அரசும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “தற்போது வெளியிடப்பட்ட வரைவு மசோதாவின்படி நிதி அதிகாரம் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அல்லது வேறு ஏதேனும் ஒரு அமைப்புக்கு வழங்கப்படும். இதனால் தற்போது வழங்கப்படும் 100 சதவீத மானியம், மத்திய அரசு 60 சதவீதம்,  மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதாச்சாரத்துக்கு மாறிவிடும்” என்பதை பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போதைய நிலவரப்படி, மாநிலச் சட்டத்தின் கீழ் மாநில அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தை முறைப்படுத்துவதற்கு அல்லது மூடுவதற்கான விதிகளுடன் ஒரு சட்டத்தைக் கொண்டு வர முடியாது. ஆனால் இந்த முன்வரைவுச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246வது பிரிவு  தந்துள்ள மாநில உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது. அதாவது, இந்த வரைவுச் சட்டம் அமலுக்கு வந்தால், பல்கலைக்கழகங்களைப் புதிதாகத் தொடங்குவதற்குக்கூட, இந்த ஆணையத்தின் அனுமதி பெற வேண்டிய நிலை உருவாகும்” என்பதை பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சுட்டிக்காட்டியுள்ளார்.

“முன்வரைவுச் சட்டத்தின் 19, 20வது பிரிவுகள் மாநில சட்டமன்றத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் உயர்கல்வி ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகின்றன. பரிந்துரைக்கப்பட்ட தர நிர்ணயத்தை ஒரு பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை என்று உயர் கல்வி ஆணையம் கருதுமானால் அந்தப் பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை ஆணையம் விலக்கிக் கொள்ளும் என்று இந்த இரண்டு பிரிவுகளும் கூறுகின்றன. இவை மாநில அரசின் உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும். அத்துடன், அரசுப் பல்கலைக்கழகங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் இது வேறுபடுத்திப் பார்க்கவில்லை” என்று கூறும் அவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரையின் அடிப்படையில் தொடங்கப்பட்ட தனித்துவமான அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவை வலுப்படுத்த வேண்டுமே தவிர, அதை பலவீனப்படுத்தவோ அல்லது நீக்கிவிடவோ கூடாது என்பதை வலியுறுத்துகிறார்.


Share the Article

Read in : English