Read in : English

Share the Article

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் செல்லாத இடங்களே இல்லை எனலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவற்றையும், அவற்றின் கொள்கைகளையும் ஏற்று தனக்கேயுரிய பாதையில் பயணிக்கின்றனர் குமரி மக்கள். ஆகவே, தான் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி ‘ நெல்லை எங்களுக்கு எல்லை, குமரி எங்களுக்கு தொல்லை’ என ஒரு முறை வருணித்தார். திராவிட கட்சிகள் இங்கு பெறும் வெற்றிகள் கூட தேசியக் கட்சிகளின் அடித்தொற்றியே இருக்கிறது. தேசியக் கட்சிகள் தான் குமரியில் கோலுச்சுகின்றன என்பதற்கான கடந்த கால அனுபவமாக ஜனதா தளத்தையும் நாம் கூற முடியும். அக்கட்சி தேசிய கட்சியாக வலுவாக இருந்து வந்த காலக்கட்டத்தில், குமரி மாவட்டத்தில் நன்கு செல்வாக்கும், அடித்தளமும் மிக்க கட்சியாக இருந்து வந்தது கவனிக்கத்தக்கது.

இவ்வாறு, அரசியலில் தனக்கேயுரிய பாதையில் நடைபோடும் தமிழகத்தின் தென்கோடியான குமரி மாவட்டம், தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல் அல்லாது எண்ணற்ற வகைகளில் வித்தியாசமான பாதையில் பயணிப்பதாகவே கூறலாம். கலாச்சாரம், பண்பாடு, உணவுப்பழக்க வழக்கங்கள் என தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில்குமரி வேறுபட்டிருப்பதற்கு, அதன் தனித்தன்மையான நிலவியல் அமைப்பும் ஒரு காரணம் எனக் கூறுகிறார், ‘குளச்சல் போர்’ நூலின் ஆசிரியர் என்.டி. தினகர். மேலும் அவர், “ குமரி மாவட்டம் ஒரு வளமானப் பகுதி. அதன் பச்சை பசேலென்ற வளத்தை தக்க வைப்பதற்கு முதன் முதல் காரணம் நிலவியல் அமைப்பு தான்” எனக் கூறுகிறார்.

“நிலவியலைப் பொறுத்தவரை, சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஐவகை நிலங்களான குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை ஆகியவற்றில் பாலை நிலத்தை தவிர்த்து நால்வகை நிலங்களும் குமரி மாவட்டத்தில் இருக்கிறது. அது, மக்களின் வாழ்க்கை முறையையும், உணவுப்பழக்க வழக்கங்களையும் தீர்மானிப்பதாக அமைந்துள்ளது” எனச் சொல்லுகிறார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் சமூக கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். எஸ். லாசரஸ்.

மேற்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கில் இந்திய பெருங்கடல் எனவும் சுற்றிலும் மூன்றுபக்கம் கடல் சூழ்ந்திருக்கும் குமரியில் மேற்கு தொடர்ச்சி மலையும், அதனைத் தொடர்ந்துள்ள சமவெளிப்பகுதிகளும் அமைந்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில்  நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை மட்டுமே பெய்து வரும் நிலையில்,  குமரி மாவட்டம் தென் மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் ஒருங்கே பெற்ற பகுதியாக அமைந்துள்ளது. இதனால், ஆண்டின் பெரும்பாலான காலங்களில் இதமான தட்பவெப்ப நிலை நிலவுவதால், நீண்ட வயல் பரப்புகளுடன், முக்கனியும் விளையும் நிலமாக குமரி மாவட்டம் திகழ்கிறது. இவ்வாறு,வளமிக்க இம்மாவட்டத்தில் கிடைக்கும் உணவு வகைகளை சார்ந்தே மக்களுடைய வாழ்க்கைமுறையும் அமைந்துவிடுகிறது.

“ஜூன் மாதம் துவங்கிவிட்டாலே தென் மேற்கு பருவ மழை குமரி மாவட்டத்தில் துவங்கிவிடுகிறது. இக்காலக்கட்டத்தில், முதல் போக நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கி விடுவர்.  அத்தகைய முதல் போக சாகுபடி முடிந்து அறுவடை செய்யப்பட்ட உடனேயே, கேரளா முழுவதும் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை,இங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டுவிடும். “காணம் விற்றேனும் ஓணம் உண்ணணும்” என்பர். அந்த ஓண உணவும் கூட அறுசுவை உணவாகவே இருக்கும்.” என விவசாயிகள் சங்கத் தலைவரான கெ.மாதவன் கூறுகிறார்.

விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தேவையான பாசனங்களை பழங்காலத்தில் குமரி மக்கள் திட்டமிட்டே செய்துவந்துள்ளனர். ஒவ்வொரு ஊர்களிலும் 5, 6 என மிகப்பெரிய குளங்கள் வெட்டி அவற்றின் மூலம் நீரைத் தேக்கி வைத்தனர். ஒரு குளம் நிறைந்து வழியும் போது, அக்குளத்தில் உள்ள நீரானது, வயல்பரப்புகளை வளமாக்கி மறு குளத்தை நிரப்பும் வகையில் நன்கு  திட்டமிட்ட விவசாய முறைகளைக் கடைபிடித்தனர். இதன் மூலம் ஆண்டின் எல்லா காலங்களிலும் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைத்து வந்தது. முப்போகமும் விளைவித்து வரும் இடைப்பட்ட கோடை காலத்தில், காணம் எனப்படும் கொள்ளு பயிறை அதே விவசாய நிலங்களில் பயிரிட்டு வந்தனர். “குமரி மாவட்ட நில அமைப்பை பொறுத்தவரை,  மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், சமவெளிப் பகுதியில் தங்காது, விரைவாகவே வடிந்து போகவோ அல்லது, கடலில் கலந்து வீணாகவோ செய்தது. அதனைத் தடுக்கவே ஒவ்வொரு ஊரிலும் எண்ணற்ற குளங்கள் வெட்டப்பட்டது.” என்கிறார் சமூக ஆய்வாளரான திற்பரப்பு ஜெயமோகன். அதுபோன்றே19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பஞ்சகாலத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மரவள்ளிக் கிழங்கும் குமரி மக்களின் முக்கிய உணவாக இருந்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல், குமரி மாவட்ட மீனவர்களும் கூட மீன்பிடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர்கள் எனக் கூறுகிறார் டாக்டர் எஸ்.லாசரஸ். “குமரி மீனவர்களின் தனித் திறமைகளுக்கும் இங்குள்ள கடலியல் சூழலுக்கும் மிகப்பெரும் தொடர்பு உண்டு. மூன்று கடல்கள் ஒன்று சேரும் இங்கு, கடல் எப்போதுமே ஆக்ரோஷமாகவே இருக்கும். அவற்றை, எதிர்கொண்டு மீன்பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் குமரி மீனவர்கள். கருங்கற் பாறைகள் அதிகம் உள்ள குமரி கடல் பகுதி, அதிக சீற்றமாக இருப்பதுடன், நீரோட்டமும் வேகமாக இருதிசைகளிலும் இருக்கும்” என்கிறார் அவர். அதாவது, குமரி கடல்பகுதியில், மேல்மட்ட நீரோட்டம் வடக்கு தெற்காக இருந்ததென்றால், கீழ்மட்ட நீரோட்டம் 5 மீட்டர் ஆழத்திற்கடியில் தெற்கு வடக்காக இருக்கும். இதையும் சமாளித்து, சராசரியாக 8 அடி உயரம் வரை எழும்பும் அலைகளையும், கருங்கல் பாறைகளையும் சமாளித்து நுணுக்கமாக மீன் பிடிக்கும் திறமைகளைப் பெற்றிருப்பவர்கள் குமரி மீனவர்கள் என விளக்கிக் கூறுகிறார்  டாக்டர் எஸ்.லாசரஸ்.

அரசியல், நிலவியல் மற்றும் கலாச்சார ரீதியான வேறுபாடுகளுடன், குமரி மக்கள் எவ்வாறு தமிழகத்தின் பிற மாவட்ட மக்களுடன் வேறுபட்டனரோ அதைப் போன்றே சமூக மேம்பாட்டு அம்சங்களிலும் குமரி மக்கள் வெகுதூரம் கடந்து வந்திருந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த தமிழகத்தின் பிற பகுதிகளில்  பெரியாரின் திராவிட இயக்கங்கள் வழியே சமூக சீர்த்திருத்ததை நோக்கி நடக்க துவங்கியது 20 ஆம் நூற்றாண்டில் தான். ஆனால் அதற்கும் ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே, அன்றைய திருவாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த குமரி மாவட்டத்தில் சமூக சீர்த்திருத்தத்துக்கான போராட்டம்  அய்யா வைகுண்டரால்  முன்னெடுக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து,சட்டம்பி சுவாமிகள், ஸ்ரீ நாராயண குரு, அய்யங்காளி என பல சீர்த்திருத்த இயக்கத் தலைவர்கள் உருவாகத் துவங்கினார். இந்த சீர்த்திருத்த இயக்கங்களுக்கும் கூட நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அடிப்படை பின்புலம் இருந்தது எனக் கூறுகிறார் வரலாற்றாய்வாளர்  கொல்லங்கோடு விஸ்வன். “சமணமும், புத்தமும், இம்மண்ணில் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தான், கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இங்கு வந்தன. பல மதங்களும் வர,வர மக்களிடையே பன்முகத்தன்மை வளர்ந்து கொண்டிருந்தது. இம்மண்ணை ஆண்டவர்களும் கூட, சாதாரணமானவர்களாக தான் இருந்தனர்.  தொடர்ந்து வந்த காலக்கட்டங்களில், பிராமணீயத்தின் பிடியில் ஆள்பட்டிருந்த மக்கள், அந்தந்த காலக்கட்டங்களில் தங்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத்துவத்திற்கு எதிராக போராடியுள்ளனர்” எனக் கூறுகிறார். அப்போராட்டங்களின் தொடர்ச்சியே அய்யாவைகுண்டரின் சமூக சீர்த்திருத்த இயக்கங்களுக்கும், அடுத்தடுத்த சீர்த்திருத்த தலைவர்களின் வருகைக்கும் காரணமாக இருந்ததாக சொல்லுகிறார்.

இதன் கூடவே, கிறிஸ்தவ மிஷனரிகளும் கூட கல்வி மற்றும் சுகாதாரத்தில் குமரி மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கியதாகக் கூறுகிறார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் சமூக கல்வி நிறுவன நிறுவனர் டாக்டர்.எஸ்.லாசரஸ். “அவர்கள், மதப் பிரச்சாரத்தூடே, ஏற்கனவேயிருந்த கல்வியையும் சுகாதாரத்தையும் முழுவீச்சில் விரிவுபடுத்தியதுடன் கைவினைத் தொழில்களையும் மக்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.” எனக்கூறுகிறார். மேலும் அவர், “கிறிஸ்தவ மிஷனரிகளால் துவங்கப்பட்ட நெய்யூர் மருத்துவமனையும், புத்தேரி கேதரின் பூத் மருத்துவமனையும் பழைய திருவாங்கூரின் மிக முக்கியமான மருத்துவமனைகளாக இருந்தது. இவை நூற்றாண்டு பழமைமிக்கவை என்பதன் மூலம் சுகாதாரம் குமரியில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றது என்பதை அறியலாம்” என சுகாதாரத்தில் குமரியின் கடந்த கால முன்னேற்றத்தைக் கூறுகிறார். இத்தகைய காரணங்களால், பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும், அதற்கேற்ற சட்டங்களை அமல்படுத்தவும் திருவிதாங்கூர் அரசு நிர்பந்திக்கப்பட்டது. அய்யங்காளி தலைமையில் நடந்த தொடர் போராட்டங்களின் விளைவாக திருவாங்கூரில் 1910 இல் தலித் மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையை அன்றைய திருவாங்கூர் அரசு ஏற்படுத்தியதன் மூலம் தலித் மக்களும் சமூக நீரோட்டத்தில் முக்கிய பங்கை பெறுவதற்கான மாற்றத்திற்கான துவக்கம் அக்காலத்திலேயே இடப்பட்டது.

இப்படிப்பட்ட தொடர் போராட்டங்களைத்  தொடர்ந்து படிப்படியாக ஜனநாயகத்தை நோக்கிய பயணம் துவங்கியதாக கூறுகிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெ.எம்.ஹசன். “மைசூரைத் தொடர்ந்து திருவாங்கூரிலும், சட்டமன்ற முறையின் ஆரம்ப வடிவம் உருவாக்கப்பட்டது. ஸ்ரீ மூலம் திருநாள் பிரஜா சபை என்ற முறையில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அதில் இல்லாமல் இருந்தது . இதன் பின்னர், இந்தியா சுதந்திரம் அடைந்த சூழலில், இந்திய ஒன்றியத்துடன் திருவாங்கூர் சேர மறுத்தது. திருநெல்வேலிக்கு செல்ல பாஸ்போர்ட் எடுத்து செல்லும்படி அன்றைய திருவாங்கூர் அரசு மக்களை வலியுறுத்தியது. இதனை எதிர்த்த போராட்டத்தை தொடர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்த பின்னர், மொழிவாரி மாநிலங்களுக்கான கோஷம் முன்வைக்கப்பட்டது. அதன் விளைவாக கொண்டுவரப்பட்ட மாநில மறுசீரமைப்புப் படி 1956 இல் குமரி மாவட்டம் உருவானது. அன்றைய சென்னை மாகாணத்தில் கல்வியில் பிற மாவட்டங்களை விட ஒரு படி மேலே இருந்த குமரி மக்கள், தமிழக மற்றும் கேரள வேலைவாய்ப்புகளை ஒருங்கே பெற்றனர். இவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அரசு ஊழியர்களாக சென்று மக்களுக்கு சேவை செய்யலாயினர்.” என கடந்த கால வரலாறுகளுடன் விளக்கிக் கூறுகிறார் அவர்.

இருப்பினும், பெரும்பாலான குமரி மக்களால், தங்கள் வாழ்வோடு ஒன்றிப்போன கலாச்சார, பண்பாட்டு அம்சங்களை களைய விருப்பமின்மையால், பிற மாவட்ட மக்களுடன் ஒப்பிடும் போது, அவர்கள் தனித்து தெரிகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.


Share the Article

Read in : English