Read in : English

Share the Article

விவசாயத்தை தொழில் அடிப்படையாக கொண்ட சிற்றுார், சின்னியம்பேட்டை. திருவண்ணாமலை – தர்மபுரி மாவட்ட எல்லையில் தானிப்பாடி அருகே நெடுஞ்சாலையை ஒட்டி, வயல்வெளிக்கு மத்தியில் உள்ள குளத்தின் படிகட்டுகளில் காதல் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

எங்கும் காணக்கிடைக்காத காதலின் பல நிலைகளை விளக்கும் பல நூறு புடைப்பு சிற்பங்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தின் கஜுராஹோ என குறிப்பிடத்தகுந்த சிற்பங்களைக் கொண்டுள்ளது.

ஆண் – பெண் உறவில் மனித நிலை, விலங்கு நிலை, ஒரு ஆண் பல பெண்களுடன் உறவு நிலைகள், ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு நிலைகள், விலங்குகளுடன் உறவு நிலை என பல்வேறு வியப்பூட்டும் புடைப்பு சிற்பங்களைக் கொண்டுள்ளது இந்த குளத்தின் படிக்கட்டுகள். இது, 16ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த சிற்பக் குளம் உருவானதன் பின்னணியாக வாய்மொழி கதைகள் பல உள்ளன. அவற்றை வரலாற்று பூர்வமானதாக மதிப்பிட முடியாது.

அதில் ஒரு கதை. இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன் சின்னையனுக்கும், பக்கத்தில் படவேடு பகுதியை ஆண்ட குறுநில மன்னனுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதை தடுக்க எண்ணிய மன்னன் சின்னையன், தன் மகளை படவேடு மன்னன் மகனுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தான்.

மகளோ மிகவும் சிறுமி. திருமணப் பருவத்தை எட்டவில்லை. என்றாலும் இளவரசனுக்கு திருமணம் முடித்து போர் மூளாமல் தடுத்தான், சின்னையன். திருமணத்துக்கு பின் அந்த சிறுமியிடம் அத்துமீற முயன்றான் இளவரசன். வன்முறைக்கு பயந்து, நடுங்கிய சிறுமி அங்கு தங்க மறுத்தாள். தந்தை நாட்டுக்கு திரும்பினாள்.

பல்வேறு நிலைகளில் ஆண் –பெண் உறவு நிலை சிற்பங்கள், வாழ்வியல் நோக்கில் வடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சிற்பங்கள் வடிப்பது நாயக்கர் காலத்தில் ஏற்றம் பெற்றிருந்தததாக, தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

மகள் வாழா வெட்டியாக வந்ததாக எண்ணிய மன்னன் சின்னையன், கவலையுற்றான். காதல் காமக்கலை பற்றி தோழிகள் மூலம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்தான். சிறுமிக்கு புரியவில்லை. அவள் மிரட்சியுடன் இருந்தாள். மகளுக்கு காதலில் ஈடுபாடு இல்லை என எண்ணிய மன்னன் மந்திரியிடம் ஆலோசனை கேட்டான். அதன் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் இந்த சிற்பக்குளம். இதன் படிக்கட்டுகளில் காமக்கலையின் பல நிலைகளை விளக்கும் புடைப்பு சிற்பங்களை செதுக்கி, இளவரசிக்கு காதலை புரிய வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

கிராம மக்கள் பெரும்பாலும் கூறுவது இந்த கதையைத்தான்.
இதுதவிர, இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. மன்னன் சின்னையன் மகள் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தாள். எத்தனையோ இளவரசர்கள் வந்த போதும் மறுத்து வெறுத்து ஒதுக்கினாள். வாரிசுக்கு வழி இல்லாமல் போய்விடும் என்ற கவலையில் மந்திரியிடம் ஆலோசனை கேட்டான் மன்னன். இளவரசிக்கு காதல் உணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த குளப் படிக்கட்டில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டதாக மற்றொரு கதை உலவுகிறது. கிராம மக்கள், தலைமுறையாக இந்த கதையை கடத்தி வருகின்றனர்.

இது போன்ற வாய்மொழிக் கதைகளை வரலாறு என எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பாளர் பாலமுருகன். எப்படி இருப்பினும், விதம் விதமான காதல் சிற்பங்களால் நிறைந்து, தமிழகத்தின் கஜூராஹோ போல் திகழ்கிறது இந்த குளம். தமிழகத் தொல்லியல் தொல்பொருள் ஆராய்ச்சி துறை தற்போது பராமரித்து வருகிறது.

குளத்தின் படிக்கட்டு மற்றும் சுற்றுச்சுவரில் விதம் விதமான பூக்கள், அந்த பகுதியில் உலாவிய விலங்குகள், பலவித பறவைகள், கடவுள் உருவங்கள், ராமாயண, மகாபாரதக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அத்துடன் முக்கியமாக பல்வேறு நிலைகளில் ஆண் –பெண் உறவு நிலை சிற்பங்கள், வாழ்வியல் நோக்கில் வடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சிற்பங்கள் வடிப்பது நாயக்கர் காலத்தில் ஏற்றம் பெற்றிருந்தததாக, தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காதல் குளம் 120 சதுர அடி பரப்பளவு கொண்டது. கி.பி.16-17- இல் கட்டப்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

புடைப்பு சிற்பங்கள் நிறைந்த குளம் ஒன்று, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, வடச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள படிக்கட்டில் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதுவும் சின்னையன்பேட்டை காதல் குளம் போல் காட்சியளிக்கிறது

இதுபோல் படித்துறையில் புடைப்பு சிற்பங்கள் நிறைந்த குளம் ஒன்று, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, வடச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள படிக்கட்டில் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதுவும் சின்னையன்பேட்டை காதல் குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் நடுவே, கிணறு ஒன்றும் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே கீழ்ராவந்தவாடி கிராமத்தில், 45 சென்ட் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. குளத்தில் படிக்கட்டுகளில் காதல் நிலைகளை விளக்கும் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பராமரிப்பின்றி இடிந்து துார்ந்து, சிற்பங்கள் சிதையும் நிலையில் காணப்பட்டது. தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

தமிழகத்தில் விஜயநகர ஆட்சி மற்றும் நாயக்கர் ஆட்சி காலங்களில் இது போல் சிற்பங்கள் நிறைந்த குளங்கள் உருவானதாக மதிப்பிடுகிறார் திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர க.மோகன்காந்தி.

‘சிற்பக் கலையின் நுட்பத்தை விளக்கும் புடைப்பு சிற்பங்களைக் கொண்டுள்ள இக்குளங்களின் படிக்கட்டுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. ஆண்- பெண் உறவு சிற்பங்களை கோவில் கோபுரங்களில் வடிப்பது, தமிழக மரபாக இருந்தது. ஆனால், பார்ப்போருக்கு அவை தெளிவாக தெரியாது. குளப்படிக்கட்டுகளில் செதுக்கப்பட்டுள்ள ஆண் பெண் உறவு நிலை புடைப்புச் சிற்பங்கள் தெளிவாக தெரியும் படி உள்ளன. இது போன்ற சிற்பங்கள் உருவாக சமூக காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை’ என வரையறுத்தார் முனைவர் மோகன்காந்தி.


Share the Article

Read in : English