Read in : English

Share the Article

தாமதமான நீதி எப்படி அநீதியாகுமோ, அதைவிட மோசமானது உடனடி நீதியை விரும்பும் மனப்பாங்கு. அது சிறியளவில் களங்கப்பட்டாலும் அதன் விளைவுகள் மாபாதகமாக இருக்கும். தெலங்கானாவில் திஷா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டபோது நாம் கொட்டிய பாராட்டுகளும், இப்போது அது ‘போலி என்கவுண்டர்’ என்று நீதிபதி சிர்புர்கர் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலும் இதை பொட்டிலறைந்தாற்போல உணர்த்தியிருக்கிறது. இந்த உண்மைகளை முடிந்தளவுக்கு துல்லியமாகச் சொல்லியிருந்தது சமீபத்தில் வெளியான ‘ஜன கண மன’ திரைக்கதை. தற்போது ’அந்த படம் திஷாவோட உண்மைக்கதையா’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2019 நவம்பர் 26ஆம் தேதியன்று பணி முடிந்து கிளம்பிய கால்நடை மருத்துவர் திஷா வீடு திரும்பவில்லை. ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை 44இல் அவரது சடலம் எரிந்த நிலையில் கிடைத்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் இடம்பெற்றிருந்தது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பூதாகரமாக, உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற குரல் ஓங்கியது. போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில் முகம்மது ஆரிஃப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சிந்தகுந்தா சென்னகேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

“திஷா எவ்வாறு கொல்லப்பட்டார் என்று விசாரணை நடத்துவதற்காக, டிசம்பர் 6ஆம் தேதியன்று அதிகாலையில் 4 பேரும் அந்த இடத்தை நோக்கி போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டனர். போகும் வழியில் சுங்கச்சாவடி அருகே நான்கு பேரும் போலீஸிடம் தகராறு செய்து துப்பாக்கிகளைப் பிடுங்கி சுட முயன்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று தெலங்கானா காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், விசாரணை மேற்கொள்வதற்காக 10 நாட்கள் அவகாசம் தந்து அவர்கள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

தெலங்கானாவில் திஷா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டபோது நாம் கொட்டிய பாராட்டுகளும், இப்போது அது ‘போலி என்கவுண்டர்’ என்று நீதிபதி சிர்புர்கர் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலும் இதை பொட்டிலறைந்தாற்போல உணர்த்தியிருக்கிறது.  

உடனடியாக நீதி கிடைத்ததாக ஊடகங்களில் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டாலும், ’இது போலி என்கவுண்டராக இருந்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு அது எத்தகைய பேரிழப்பாக இருக்கும்’ என்ற கேள்வியும் பலமாக எழுப்பப்பட்டது. இந்த என்கவுண்டர் வழக்கில் போலீசார் வழங்கிய தகவல்களில் பல முரண்பாடுகள் இருந்ததால் அதனை விசாரிக்க 2019 டிசம்பர் 12ஆம் தேதியன்று நீதிபதி சிர்புர்கர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா சொந்தூர் பல்டோடா, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த ஆணையத்தின் காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.

இக்குழு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பரிந்துரைகளின்படி, ஹைதராபாத் சுங்கச்சாவடி அருகே தெலங்கானா போலீசார் போலி என்கவுண்டர் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. திஷாவின் மரணம் கொலையா அல்லது தற்செயலானதா என்ற கேள்வியைவிட என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பேரும் அக்குற்றத்தோடு சம்பந்தப்படாதவர்கள் எனும் உண்மை இதனால் வெளிப்பட்டுள்ளது. இதே தகவல்தான் ‘ஜன கண மன’ திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்தது ஆச்சர்யமான ஒற்றுமை.

திஷா கொலையான மூன்றாம் நாளே குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களை ஷாத் நகர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அதன்பின் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு 10 நாட்கள் விசாரிக்க அவகாசம் வாங்கிய பின்னர், நான்கு பேரையும் ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகச் சொல்கிறது காவல் துறை தரப்பு. துணை ஆணையர் சுரேந்தர் என்பவர் இவ்வழக்கை விசாரித்ததாக சொல்லப்பட, ஆணையம் கண்டறிந்த உண்மைப்படி குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் அழைத்து வந்தபிறகும் ஒருநாள் கழித்தே அவர்களிடம் சுரேந்தர் பேசியது தெரிய வந்திருக்கிறது. இது குறித்த கேள்விக்கு, வெங்கட ரெட்டி எனும் வேறொரு விசாரணை அலுவலர் விசாரித்ததாகப் பதில் சொல்லியிருக்கிறது காவல் துறை தரப்பு.

திஷாவின் செல்போன் உள்ளிட்ட உடமைகள் ஒரு புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக காவல் ஆணையர் சஜ்ஜனார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கு மாறாக, அது ஒரு பாலீத்தின் பையில் இருந்ததாக போலீசாரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் கைரேகைகள் அப்பொருட்களில் இருந்ததா என்பதை ஒப்புநோக்கும் வண்ணம் தடயங்கள் எதுவும் தடயவியல் துறைக்கு அனுப்பப்படவே இல்லை.

”10 போலீசார் இருக்குமிடத்தில் வெறுமனே மண்ணை தூவிவிட்டு தப்பிப்பது நம்பத்தகுந்ததாக இல்லை” என்பதையும் இப்பரிந்துரைகளில் ஒன்றாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஜொல்லு சிவா மற்றும் ஜொல்லு நவீனால் தடி கொண்டும், கற்கள் கொண்டும் போலீசார் அரவிந்த் கவுடும் வெங்கடேஸ்வரலுவும் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணையில், இவர்களுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான பதிவேட்டில் காயத்தின் அளவு குறித்த தகவல்கள் திருத்தம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளைப் பறித்த குற்றவாளிகள் தப்பியோடியவாறே சுட்டனர் என்பதும், முகமது ஆரிஃபும் சென்னகேசவலுவும் மற்ற இருவரையும் தவறுதலாகச் சுட்டனர் என்பதும் உண்மையல்ல என்பது இவ்விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இறந்தவர்கள் உடலில் குண்டுகள் முன்பக்கமாக நுழைந்து பின்பக்கமாக வெளியேறியதும் கண்டறியப்பட்டுள்ளது. தப்பியோடும் உத்தேசமுள்ளவர்கள் ஏன் போலீசாரை தாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டுமென்ற கேள்வியும் விசாரணை ஆணையத்தால் எழுப்பப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, கொல்லப்பட்ட 4 பேரில் முகமது ஆரிஃபின் வயது 26. சிவாவின் வயது 17; சென்னகேசவலு மற்றும் ஜொல்லு நவீன் வயது 15 மட்டுமே. இவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, இவர்கள் படித்த பள்ளிக்கூடத்திற்குச் சென்று போலீசார் விசாரித்ததும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்ட 4 பேரில் மூவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதை போலீசார் எங்குமே குறிப்பிடவில்லை. இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்களின் வாக்குமூலமும் யாரோ சொல்லிக்கொடுத்தாற்போல இருந்ததும் அது குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தபின்னர் காவல்நிலையத்திலேயே பதிவு செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

திஷா கொல்லப்பட்ட இடத்திற்கு விசாரிப்பதற்காக 4 பேரையும் அழைத்துச் சென்றதாக போலீசார் சொன்னாலும், என்கவுண்டர் நடந்த நேரம் என்னவென்பது துல்லியமாக விளக்கப்படவில்லை. ஏற்கனவே ஆணையர் சஜ்ஜனார் கொடுத்த விளக்கத்தில், அது காலை 5.45-6.00 மணிக்குள்ளாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. அவ்வளவு அதிகாலையில் சென்று விசாரணை நடத்த வேண்டிய அவசியம் பற்றி எங்கும் விளக்கம் இல்லை. முன்னுக்குப் பின் முரணாக அமைந்த இத்தகவல்கள் எல்லாம் விசாரணை கமிஷனால் பரிந்துரைக்கப்பட, சம்பந்தப்பட்ட போலீசார் 10 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டுமென்ற குரல் கிளர்ந்தெழுந்துள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சபா மரியம் எனும் ஆசிரியர் பேராசிரியர் ஒருவரால் வாகனமேற்றி கொல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது பிணம் அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு ஒரு பாலியல் வல்லுறவுக் கொலையாக சித்தரிக்கப்பட்டதாகவும் ‘ஜன கண மன’ திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். திஷாவின் மரணம் இப்படித்தான் நிகழ்ந்தது என்பதற்கான எவ்வித தகவலும் இதுவரை தெரியவராததால் அதுபற்றி விவாதிப்பது சரியானதாக இராது.

‘ஆஃப் தி ரெக்கார்ட்’ ஆக ஒவ்வொரு குற்ற வழக்கு விசாரணையிலும் வெளிவராத தகவல்கள் எத்தனையோ உண்டு. அவற்றில் சில கதைகளாக, கட்டுரைகளாக, திரைக்கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. அப்படியொன்றாக ‘ஜன கண மன’ அமைந்திருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  

ஆனால், அப்படத்தின் கதைக்களம் பெங்களூரு என சொல்லப்பட்டாலும் அது ஹைதராபாத்தை மட்டுமே சுட்டும் என்பதை தினசரிகளை வாசிக்கும் எவரும் உணர முடியும். சபா மரியம் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதாக கதையில் சொல்லப்பட்டிருக்கும். உண்மையில் மத்தியப் பல்கலைக்கழகம் 4 தென்னிந்திய நகரங்களில் ஹைதராபாதில் மட்டுமே உள்ளது.

திஷாவின் வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றி அவரை வல்லுறவுக்கு ஆளாக்கி கொலை செய்து பின்னர் எரித்து கொன்றதாக தெலங்கானா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ’ஜன கண மன’விலும் இந்த விஷயம் அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கும். போலீசாரால் கைது செய்யப்படுபவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்தாலும், அவர்களுக்கும் இக்குற்றத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று காட்டப்பட்டிருக்கும்.

நிஜத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த பொதுமக்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டது போலவே படத்திலும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. திஷாவைக் கொன்றவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டுமென்று மக்கள் சிலர் ஊடகங்களில் கருத்து தெரிவித்ததும், என்கவுண்டருக்கு பின் அவர்களில் சிலர் புளகாங்கிதம் அடைந்ததும் படத்தில் அப்படியே இடம்பெற்றுள்ளது.

’ஜன கண மன’ மலையாளப் படமாக இருந்தாலும், கதைக்களம் பெங்களூரு என்பதால் கன்னடமும் சில பாத்திரங்கள் தமிழிலும் வசனம் பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில் இருந்து விடுபடும் இன்னொரு தென்னிந்திய மொழி தெலுங்கு மட்டுமே. படம் பார்க்கும்போது, அது மட்டும் துருத்தலாகத் தெரிந்தது. மிகமுக்கியமாக, அப்படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு ஏற்ற துணை கமிஷனர் கதாபாத்திரத்தின் பெயர் சஜ்ஜன் குமார். திஷா என்கவுண்டரில் தொடர்புள்ள கமிஷனரின் பெயர் சஜ்ஜனார். இது எல்லாமே உண்மைக்கு வெகு அருகில் தகவல்களை திரட்டி, அதிலிருந்து ஒரு திரைப்படத்தை எழுத்தாளர் ஷரீஸ் முகமதுவும் இயக்குனர் டியோ ஜோஸ் ஆண்டனியும் உருவாக்கியுள்ளனர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

‘ஆஃப் தி ரெக்கார்ட்’ ஆக ஒவ்வொரு குற்ற வழக்கு விசாரணையிலும் வெளிவராத தகவல்கள் எத்தனையோ உண்டு. அவற்றில் சில கதைகளாக, கட்டுரைகளாக, திரைக்கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. அப்படியொன்றாக ‘ஜன கண மன’ அமைந்திருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது சிர்புர்கர் கமிஷனின் பரிந்துரைகள். ‘ஜன கண மன’ உட்பட இதுபோன்ற போலி என்கவுண்டர்களை பேசும் திரைக்கதைகளில் புனைவுக்கும் பங்குண்டு என்பதைத் தாண்டி, உண்மையில் திஷா எப்படி கொல்லப்பட்டார் என்ற கேள்வி நம்மை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. அதற்கான பதில் கிடைத்தால் மட்டுமே, ‘ஜன கண மன’ போன்ற படங்கள் ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ தகவல்களை முழுமையாக திரட்டி உருவாக்கப்படுகின்றனவா என்பதற்கான பதிலும் தெரிய வரும்!


Share the Article

Read in : English