Read in : English

Share the Article

சமீபகாலமாகவே செய்திகளில் அதிகம் அடிபட்டது இலங்கைதான்; தவறான காரணங்களுக்காக. அத்திவாசியப் பொருட்கள் தட்டுப்பாடு, அரசியல் கொந்தளிப்பு, போராட்டங்கள், வன்முறை என்று ஊடகவெளியில் ஊடாடின ஏராளமான கதைகள். தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் முகமாக, தென்னிந்தியர்கள் உட்பட எல்லா இந்தியர்களையும் இலங்கையில் தொழில் தொடங்க அழைக்கிறது.

சென்னையிலுள்ள இலங்கைத் துணை உயர் ஆணையர் டி. வெங்கடேஷ்வரன் சமீப நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறார். இந்தியா தான் தரவிருக்கும் டாலர் 1 பில்லியன் கடனில் ஒருபகுதியாக 65,000 டன் யூரியா உரத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்கப் போவதாக அவர் கூறினார். இலங்கையில் இரண்டு பயிர்ப்பருவங்கள் உண்டு: யலா மற்றும் மகா. அவை குறுவை, சம்பாப் பருவங்கள் போல. மே முதல் ஆகஸ்டு வரை நீளும் யலாப் பருவத்தில் தேவைப்படும் 40,000 டன் உரத்தேவையை இந்தியா அனுப்பும் சரக்கு பூர்த்தி செய்யும் என்றார் வெங்கடேஷ்வரன். உர ஏற்றுமதியைத் தடை செய்திருக்கும் இந்தியா இலங்கைக்காக அதைத் தளர்த்திவிட்டதாக அவர் சொன்னார்.

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஆணையர் மிலிந்தா மோரகோடா வெள்ளி அன்று சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளைச் சந்தித்து இந்த விசயம் சம்பந்தமாக விவாதித்திருக்கிறார். மகாப் பருவத்தில் நெல்லுற்பத்தி சரிந்துபோனதால் வேளாண் சந்தையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க வேளாண்துறையைப் பலப்படுத்தும் இலக்கைக் கொண்டிருக்கிறது இலங்கை.

உர இறக்குமதித் தடையால் உள்நாட்டில் நிலவிய நெல்தட்டுப்பாடுதான் இலங்கையின் இப்போதைய பொருளாதார நெருக்கடியின் ஆரம்பப்புள்ளி. சுற்றுலாவில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி வீழ்ச்சி, கோவிட் பெருந்தொற்றாலும், ஈஸ்டர் குண்டுவெடிப்புகளாலும் உண்டான வருவாய் சரிவு இவைதான் உர இறக்குமதித் தடையைக் கொண்டுவந்தன. இந்தியாவிலிருந்து 40,000 டன் எரிபொருள் விரைவில் கொழும்பை வந்தடையும் என்று சொன்னார் வெங்கடேஷ்வரன்.

இதற்கிடையில், இலங்கையில் சொத்துக்களை வாங்க வெளிநாட்டார்களை அரசு அனுமதித்திருக்கிறது. உதாரணமாக, மும்பை ரியல் எஸ்டேட் விலைகளில் ஆறில் ஒருபங்கு விகிதத்தில் விலைகள் நிலவும் கொழும்பின் மேல்சந்தைப் பகுதிகளில் கட்டப்படும் அபார்ட்மெண்டுகள்தான் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டித்தரும் அதிமுக்கிய சந்தை. இதற்காக வெளிநாட்டார்களுக்கான விசா நீட்டிப்பு தாராளமாகவே வழங்கப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில் இலங்கைக் கரன்சியான ரூபாய் இலாபம் பார்த்திருக்கிறது; மேலும் பங்குச்சந்தை ஓரளவு மீண்டிருக்கிறது. இவையெல்லாம் ஆக்கப்பூர்வமான சமிக்ஞைகள் என்றார் வெங்கடேஷ்வரன்.

இலங்கையில் குழந்தைகளுக்கான இன்சுலின் மற்றும் புற்றுநோய் மருந்துகளின் பற்றாக்குறை இருக்கிறது. அவசரமாகத் தேவைப்படும் அந்த மருந்துகளை நன்கொடைகளாகப் பெற்றுத்தர இலங்கை முயற்சிக்கிறது. அவற்றை நன்கொடைகளாகத் தரும்படி வெங்கடேஷ்வரனும் மருந்து நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தொழிலதிபர்கள் தென்னிந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையின் இந்திய வங்கிகளில் டாலர் கணக்குகளை ஆரம்பித்து அவற்றின்மூலம் உணவுப்பொருட்களை இலங்கைக்கு விற்கலாம்; இதனால் உணவுப்பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தடையாக இருக்கும் அந்நியச் செலவாணிப் பற்றாக்குறையை இலங்கையால் சமாளிக்க முடியும்.

  இலங்கையில் சொத்துக்களை வாங்க வெளிநாட்டார்களை அரசு அனுமதித்திருக்கிறது. இதற்காக வெளிநாட்டார்களுக்கான விசா நீட்டிப்பு தாராளமாகவே வழங்கப்படுகிறது.

இவையெல்லாம் குறுங்காலத் தீர்வுகள். வடவிந்திய மாநகரங்களில் இருக்கும் வசதிகளை விட மிக அதிகமான வசதிகளை இலங்கையில் முதலீடு செய்யும் தென்னிந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அரசு தருமென்று வெங்கடேஷ்வரன் கூறினார். மருந்துத் துறை, சிறுதொழில்கள், மின்மோட்டார் வாகனங்கள் ஆகியவை இலங்கையில் வளரக்கூடிய முக்கியமான தொழில்கள். இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இலங்கை சுதந்திரமான  வர்த்தக ஒப்பந்தங்களைக்  கொண்டிருப்பதால், இலங்கையில் தங்களின் இரண்டாவது முதலீட்டைச் செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு புதிய சந்தைகள் கிடைக்கும் என்று குறிப்பிடுகிறார் வெங்கடேஷ்வரன்.

சென்னையிலுள்ள இலங்கை உயர் ஆணையம் வரும் ஜூனில் சென்னையில் ஒரு முதலீட்டாளர் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில் தொழில் தொடங்க அல்லது கூட்டு முயற்சிகளில் இறங்க, தமிழ்நாட்டிலிருக்கும் பெரிய வர்த்தகர்கள் மட்டுமல்ல, சிறு, குறு தொழிலதிபர்களும் அழைக்கப்படுவார்கள் என்று முடித்தார் வெங்கடேஷ்வரன்.


Share the Article

Read in : English