Read in : English

Share the Article

சித்திரைத் திருவிழா என்ற பெயர் ஒரே நேரத்தில் நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவையும் அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழாவையும் குறிக்கும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியமானது.

கள்ளழகர் எழுந்தருளி இருக்கும் அழகர் கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவ திருப்பதிகளில் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த கோயில் பொதுவாக சமூகத்தோடும், குறிப்பாக சிறு தெய்வ நெறியில் ஈடுபாடுடைய சாதியாரோடும் இப்பெருந்தெய்வ கோயில் (Brahmincal Deity) கொண்டுள்ள உறவையும் உறவின் தன்மையையும் பற்றி ஆய்வு செய்தவர் மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான இந்த ஆய்வு அழகர் கோயில் பற்றியது.

சமூக ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்நாட்டு வைணவம் சிறுதெய்வ வழிபாட்டு நெறிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையையும் இக்கோயிலை முன்னிறுத்தி பேராசிரியர் தொ.பரமசிவம் விளக்கியுள்ளார்.

பெரும்பாலும் கோயில் ஆய்வு என்றாலே கோயில்களில் காணப்படும் செய்திகளுமே கோயில்களின் கட்டடக்கலை, சிற்பக்கலைச் சிறப்புகளுமே பெரிதும் ஆராய்ப்படும் சூழ்நிலையில், கோவிலுக்கு வரும் அடியவர்களில் பெருந்தொகையினரான தாழ்த்தப்பட்டவர்கள், இடையர் ஆகிய சாதியாரோடும் கோயில் பணியாளரோடும் இக்கோயில் கொண்டுள்ள உறவு தமிழ்நாட்டு வைணவ சமயப் பின்னணியில் ஆராய்ந்துள்ளார். சமூக ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்நாட்டு வைணவம் சிறுதெய்வ வழிபாட்டு நெறிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையையும் இக்கோயிலை முன்னிறுத்தி பேராசிரியர் தொ.பரமசிவம் விளக்கியுள்ளார். எனவே, இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

அழகர்கோயில் கோயிலின் பரம்பரைப் பணியாளர்கள் சாதியால் பிராமணர்கள். இக்கோயிலில் பண்டாரி என்னும் பிராமணரல்லாத பணிப்பிரிவினர் இக்கோயிலில் இறைவனுக்கு மாலை கட்டித் தரும் பணியைச் செய்து வருகின்றனர். ‘’இக்கோயிலோடு தொடர்புள்ள நாட்டுப்புற மக்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதியராகவே இருப்பதை இக்கோயில் திருவிழாக்களை நேரில் காண்போர் எளிதில் உணர இயலும் குறிப்பாக கள்ளர், இடையர், தாழ்த்தப்பட்டவர்கள், வலையர் இக்கோயிலோடு உறவு கொண்டிருக்கிறார்கள். கண்ணன் வளர்ந்தது ஆயர் குலம் என்பதனால் இடையர்கள் வைணவத்தோடு பற்று கொள்வது இயல்பான ஒன்றே. இடையர்களைப் போலவே பள்ளர், பறையரும் இக்கோயிலில் காட்டும் ஈடுபாடு ஆய்வுக்குரிய செய்தியாகும்” என்கிறார் தொ. பரமசிவன்.

அழகர்கோயில் இறைவன், கள்ளழகர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார். அழகரின் கள்ளர் வேடத்திற்கும் மதுரை மாவட்டத்தில் அதிகமாக வாழும் கள்ளர் என்ப்படும் சாதியினருக்கும் உள்ள தொடர்பு முக்கியமானது.

சித்திரைத் திருவிழாவில் கள்ளர் திருக்கோலம் பூணும்போது மட்டும் அக்காலத்திய நாட்டுக் கள்ளர்களைப் போல இறைவனுக்கு உடை அணிவிக்கப் பெறுகிறது. ஒரு கருப்பு நிறப் புடவை¬யினை (காங்கு) கணுக்கால் தொடங்கி இடுப்புவரையிலான அரையாடையாகச் சுற்றி அதையே இரண்டு மார்பிலும் குறுக்காகச் சுற்றி முழங்கை வரையிலும் முழுக்கை சட்டை போலவும் சுற்றி ஆடையாக அணிவிக்கின்றனர். தலையில் உருமால் அணிவித்துள்ளனர்.

கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும்போது, தோப்பறை (பீச்சாங்குழலும் இரண்டு பக்கத் துளையுடன்கூடிய ஆட்டுத்தோல் பை) மூலம் தண்ணீரைப் பீச்சியடிக்கும் பக்தர்.

சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்து அழகர் தன் கோயிலுக்கு திரும்பும் வழியில் தல்லாகுளத்தில் சாலையில் கள்ளர் சாதியினர் சிலர் பெரும் சத்தத்துடன் பல்லக்கை எதிர்கொண்டு மறித்தது, பலக்கின் கொம்புகளை வாழக்கலை என்னும் ஈட்டி போன்ற கருவியால் குத்திக் கொண்டு இரண்டு மூன்று முறை பல்லக்கினைச் சுற்றி வருகின்றனர்.

Ðபல்லக்கை வழிமறித்து ‘வாழக்கலை’ என்னும் ஆயுதத்தால் தாக்கும் நிகழ்ச்சியில் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்களே பங்கு பெறுகிறார்கள். இதைப்போல அழகர்கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழாவிலும் கள்ளர் வேடம் பூண்டு அதற்கான கோயில் மரியாதைகளை மாங்குளத்துக் கள்ளர்களே பெறுகின்றனர். இதுபோல மதுரை செல்லும் வழியில் கள்ளழகர் இறங்கும் திருக்கண்கள் (மண்டபங்கள்) தோறும் நான்கணா வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்தினருக்கு ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. அழகர்கோயில் தேரோட்டத்தில், தேர் இழுக்கும் பொறுப்பு நாட்டுக்கள்ளர் கிராமங்களுக்கு உண்டு. எனினும், அழகர் கோயிலில் திருமலைவிடவும் பதினெட்டாம்படி கருப்பசாமியே கள்ளர் சமூகத்தினரின் வழிபாட்டுக்கு பெரிதும் உரியவராக இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அழகர் மலை அடிவார கிராமங்களில் வலையர்கள் வாழ்கின்றனர். மீன், எலி ஆகியவற்ரை பிடித்துண்ணும் இச்சாதியினர் பெரும்பாலும் விவசாயக்கூலிகள். இப்போது கோயிலுக்கும் வலையர்களுக்கும் ஒரே ஒரு தொடர்பு மட்டும் உள்ளது. சித்திரைத் திருவிழாவில் அழகர் மலைக்குச் செல்கையில் இறைவனுக்குரிய குடை, சுரட்டி முதலியவற்றை கள்ளந்திரி, சோதியாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வலையர்களே தூக்கி வருகின்றனர்.

அழகர்கோயில் இறைவன், கால்நடை வளர்ப்போரின் தெய்வமாக பன்னூராண்டுகளாகப்போற்றப்பட்ட செய்தியை அறியலாம். அழகர்கோயிலுக்கு அவர்கள் காணிக்கையாக மாடுகளை வழங்குகின்றனர். அதேபோல திரியெடுத்து ஆடுவோர், துருத்திக் கொண்டு தண்ணீர் பீச்சுவோர் பெரும்பாலும் இடையர் இனத்தைச் சேர்ந்தவர்களே.

கள்ளர்கள், வலையர்கள் ஆகியவர்களைப் போலல்லாமல் தாழ்த்தப்பட்ட இனத்தவர் நெற்றியில் வைணவச் சின்னமான திருமண்ணும், மார்பில் துளசி மாலையும் அணிந்து, பெரும்பாலும் முத்திரை பெற்றவராக, கோவிந்த நாம முழக்கத்துடன் வருகின்றனர்.

கள்ளர்கள், வலையர்கள் ஆகியவர்களைப் போலல்லாமல் தாழ்த்தப்பட்ட இனத்தவர் நெற்றியில் வைணவச் சின்னமான திருமண்ணும், மார்பில் துளசி மாலையும் அணிந்து, பெரும்பாலும் முத்திரை பெற்றவராக, கோவிந்த நாம முழக்கத்துடன் வருகின்றனர். இவர்கள் சாமியாடி வரும்போது, பெரும்பாலும் பெண்கள் உட்பட உற்றவர் உறவினர் புடைசூழ வருகின்றனர். பிற இனத்தவர்கள் சாமியாடி வரும்போது பெரும்பாலும் பெண்கள் உடன்வருவதில்லை.

தமிழ்நாட்டு வைணவம் தாழ்த்தப்பட்ட இனத்தவரை தம் சமய எல்லைக்குள் ஈர்த்துக் கொள்வதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. வைணவ சமய சீர்திருத்தவாதியான ராமானுஜருக்கு முன்னரே, ஆளவந்தாரின் மாணவராகித் திருவரங்கத்தில் வசித்த மாறனேரி நம்பி தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவரே. பெரியநம்பி என்னும் வைணவப் பிராணமரே அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தார். ராமானுஜர் அந்த நெறியைத் தொடர்ந்தார். இதற்கு ராமானுஜர் பிராமணரல்லாத திருக்கச்சி நம்பியைத் தன்வீட்டில் உண்ண வைத்து காவிரியில் நீராடியபின் பிராமணரல்லதா உறங்காவில்லிதாசரின் தோளில் கையிட்டு வந்தது, மேல்கோட்டைக் கோயிலில் தாழ்த்தப்பட்டோரை அனுமதித்தது என அடுக்கிய சான்றுகளைக் காட்டலாம் என்பதை பரமசிவன் சுட்டிக்காட்டுகிறார்.

சித்திரைத் திருவிழாவையொட்டி நீளமான குச்சியில் இறுகச் சுற்றப்பட்டக் காடாத் துணியும் அதன் மேல் மஞ்சள் நிற பருத்தித் துணி சுற்றப்பட்ட பெரிய திரியை பற்ற வைத்துக் கொண்டு கருப்பசாமி வேடம் அணிந்து ஆசி வழங்கும் திரியாட்டக்காரர்.

சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்வர்களில் பெரும்பகுதி நாட்டுபுற மக்களே. திரியெடுத்து ஆடுவோர், திரியின்றி ஆடுவோர், சாட்டை அடித்து ஆடுவோர், துருத்தி நீர் தெளிப்போர் ஆகியோர் வேடமிட்டு ஆடுகின்றனர். ஆண்கள் மட்டுமே இவ்வாறு வேடமிட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தென்கலை நாமம் இட்டுள்ளார்கள். எந்த சாதி வேறுபாடின்றி எந்த சாதியினரும் எந்த வேடமும் இடமலாம். கோனார், தாழ்த்தப்பட்டவர்கள் (பள்ளர், பறையர்), சேர்வை (தேவர்), பிள்ளை, குறவர், சக்கிலியர், நாயுடு, நாயக்கர், ஆசாரி, மூப்பனார் (வலையர்), அம்பலம், செட்டியார், வேளார் (குயவர்) ஆகிய சாதியினர் வேடமிட்டு வழிபாடு செய்கிறார்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார் அவர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது நேர்த்திக் கடன் செலுத்துவதற்காகக்க தலைப்பாகையுடன் கள்ளழகர் வேடமிட்டு வரும் பக்தர்கள் தண்ணீர் பீச்சியடிப்பதைப் பார்த்திருக்கலாம். தண்ணீர் பீச்சியடிப்பதற்காகப் பயன்படுத்தும் பிச்சாங்குழலும் இரண்டு பக்கத் துளைகளுடன்கூடிய ஆட்டுத்தோல் பை, தோப்பறை என்று சொல்லப்படுகிறது.

சித்திரைத் திருவிழாவையொட்டி நீளமான குச்சியில் இறுகச் சுற்றப்பட்டக் காடாத் துணியும் அதன் மேல் மஞ்சள் நிற பருத்தித் துணி சுற்றப்பட்ட பெரிய திரியை பற்ற வைத்துக் கொண்டு கருப்பசாமி வேடம் அணிந்து ஆசி வழங்குபவர்களுக்கான பெயர் திரியாட்டக்காரர். அதாவது, திரியெடுத்து ஆடுவோர்.

இதேபோல திரியின்றி ஆடுவோரும் வேடமிட்டு இருப்பார்கள். கையில் நான்கு ஐந்து அடி உயரத்தில் 3 அங்குல கனமுடைய இரு முனைகளிலும் வெள்ளி அல்லது வெண்கலப் பூண் கட்டியுள்ள கருப்பு நிற கம்பை வைத்திருப்பார்கள். இது நாக்குலி கம்பு என்று பெயர் பெறுகிறது. இவர்கள் அழகர் கோயில் சன்னிதியிலும் பதினெட்டாம்படி சன்னிதியிலும் இவர்கள் மருளேறி ஆடுகின்றனர். பிற இடங்களில் ஆடுவதில்லை. பிற நேரங்களில் திருவிழா கூட்டத்தில் ஒருவராகக் காணப்படுவர்.

சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளை நோக்கும்போது, பிராமணப் பூசனை நடைபெறும் வாயிலாகப் பெருந்தெய்வம் (Brahmincal Deity), சிறு தெய்வ வழிபாட்டு நெறிகளைத் தயங்காமல் ஏற்றுக் கொண்டது விளங்குகிறது.

இதைப்போலவே சாட்டையடுத்து ஆடுபவர்களும் வேடமிட்டிருப்பார். மாடுகளின் கழுத்தில் அணியும் பெருமணிச் சல்லடத்தை இடுப்பில் கட்டி இருப்பார். அழகர் கோயில் வெளிக்கோட்டை வாசல் தொடங்கி பதினெட்டாம் படி சன்னதி வரை ஒரு பெரிய சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்ண்டு பறை, மேளம் முழங்க ஆடிவருவார்கள். பின்னர் பதினெட்டாம்படி சன்னிதியில் சாட்டையை தோளிலிட்டு, கையில் பெரிய அரிவாள் ஏந்தி, காற்சலங்கை ஓசையைவிட இடுப்புமணி ஓசை பெரிதாகக் கேட்கும்படி இடுப்பைக் குலுக்கி மருளேரி ஆடுகின்றனர்.

“சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளை நோக்கும்போது, பிராமணப் பூசனை நடைபெறும் வாயிலாகப் பெருந்தெய்வம் (Brahmincal Deity), சிறு தெய்வ வழிபாட்டு நெறிகளைத் தயங்காமல் ஏற்றுக் கொண்டது விளங்குகிறது. அழகரை வழிபடுவோர் சிறு தெய்வ கோயில்களில் சாமியாடுவோரின் ஆடைகளை அணிந்து கொண்டு சாமியாடுகின்றனர். இரத்த பலி தருகின்றனர். உயர் சாதியினரால் தீட்டு வாயிலாகக் கருதப்படும் தோலினாற் செய்த பைகளில் தாங்கள் கொண்டு வரும் நீரை இறைவன் மீது பீச்சி அடிக்கின்றனர்.கோயிலுக்குள்ளே சன்னிதிக்கு எதிரில் சாமியாடுகின்றனர். வைணவ சமமயத் தலைவர் இந்த நெறிகளை எவ்வாறு ஒத்துக் கொண்டனர் என்பது விடைகாண வேண்டிய கேள்வியாகும். வைணவக் கோயில்களில் அழகர் கோயில் மட்டுமே இவ்வாறு நாட்டுப்புற மக்களின் வழிபாட்டு நெறிகளை ஏற்றுக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகிறதா அல்லது வேறு வைணவக் கோயில்கள் எவையேனும் இதுபோனற நாட்டுப்புற வழிப்பாட்டு நெறிகளை ஏற்றுக் கொண்டுள்ளனவா எனக் காண வேண்டும்” என்கிறார் தொ.பரமசிவன்.

“அரசர்களின் ஆதரவைக் குறைவாகப் பெற்ற மதம் வைணவம். எனவே, அது அன்றைய சமூகத்தில் கீழ்நிலையிலிருந்த மக்களிடம் சென்றது. அவர்களின் வழிபாட்டு முறைகளைத் தயங்காது ஏற்றுக் கொண்டது. திருவிழா காலங்களில் அவர்களைப் புலால் உண்ணாது விரதமிருக்கச் செய்ததைத் தவிர தமிழ்நாட்டு வைணவம் பெரிய வெற்றி எதனையும் பெற்றிடவில்லை. ஆயினும், தமிழ்நாடடில் பௌத்தத்தைப் போல முற்றும் அழிந்துவிடாமலும், சமணத்தைப்போல மிகப் பெரிய வீழ்ச்சிக்குள்ளாகமலும் வைணவம் தன்னைக் காத்துக் கொண்டது. அதன் ஒருபகுதியாகவே அழகர்கோயிலும் நாட்டுப்புற மக்களை ஈர்த்துக் கொண்டது எனலாம்” என்கிறார் தொ. பரமசிவம் தனது ஆய்வில்.


Share the Article

Read in : English