Read in : English

Share the Article

இளையராஜாவுக்கு அடுத்து இப்போது பாக்யராஜ் முறை, நரேந்திர மோடியை ஆதரித்துப் பேசுவதற்கு. தங்களைத் துதிபாட வைப்பதற்குத் திரைப்பட ஆளுமைகளைச் சரியாகத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பாஜக சரியாகவே குறிபார்த்து அடித்திருக்கிறது. இளையராஜா வெறும் பிரபலமானவர் மட்டுமல்ல; தமிழர்கள் தங்களில் ஒருவராக, தமிழையும் தமிழ் மண்ணையும் சார்ந்த எல்லா விஷயங்களிலும் ஆழங்கால் பதித்தவராக இளையராஜாவைக் கொண்டாடுகிறார்கள்.

பாக்யராஜும் கூட முழுக்க தமிழ்ச்சாரம் நிறைந்தவர்தான். அவரும் மண்ணின் மைந்தர்; புத்திசாலி; விவேகி. தன்னைப் பின்னிறுத்திக் கொள்பவர். ஆனாலும் இந்த உலகத்தில் தனக்கான இடம் என்ன என்பது பற்றி அவருக்கு நிச்சயமாய்த் தெரியும்.

திரையில் அவர் கொண்டுவந்த பல்வேறு வழமையான சமாச்சாரங்களில் ஒன்று ஒரு கருத்தை அழகாக விளக்குகிறது. அவர் எழுதிய ‘ஏக் காவ் மெய்ன்‘ வசனம் இந்தி கற்றுக்கொள்வதை எதிர்க்கும் தமிழர்களின் வெளிப்படையான பிடிவாதத்தைச் சரியாகவே வெளிப்படுத்துகிறது. தமிழர்களுக்கு இந்தி வராது; அதைப் பற்றிக் கவலையும் அவர்களுக்கு இல்லை என்பதை பாக்யராஜ் நக்கலாகச் சொல்லி அரங்கத்தைக் கலகலப்பாக்கியவர்.

அப்பேர்ப்பட்ட இளையராஜாவையும், பாக்யராஜையும் மோடிக்கு ஆதரவாகப் பேசவைத்தது பாஜகவின் ராஜதந்திரமான காய்நகர்த்தல். தான் சொன்ன கருத்து சொன்னது சொன்னதுதான்; அதில் மாற்றம் இல்லை என்று இளையாஜா பிடிவாதம் பிடிக்கிறார்; ஆனால் பாக்யராஜ் அந்தர்பல்டி அடித்துவிட்டார்.

ஒரு பாஜக நிகழ்வில் பேசிய பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பதிலுக்கு விமர்சித்தார். ஆனால் அடுத்தநாளே தான் ஒரு தமிழன் என்றும், திராவிட, தமிழ் தலைவர்களின் தொண்டன் என்றும் அவர் சொல்லிக்கொண்டார். தான் பயன்படுத்திய சொற்றொடரின் (‘‘குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்‘) தவறுக்காக, மாற்றுத் திறனாளிகளை அந்தச் சொற்றொடர் இழிவுப்படுத்தியதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

என்னதான் தேசிய அரங்கில் பாஜகவின் கை ஓங்கி இருந்தாலும், தமிழ்நாடு பாஜகவால் அவ்வளவு எளிதாக நுழையமுடியாத கோட்டையாகத்தான் இன்னும் இருக்கிறது.

தங்களின் வழமையான குணாதியத்தை மீறி நடந்ததற்காக அவர்களை சமூக ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. பாஜக தமிழ் மண்ணுக்கு ஒத்துப்போகாது அல்லது அந்நியத்தன்மை கொண்டது என்ற சொல்லாடல் ஆழமாகவே இங்கு வேரூன்றியிருக்கிறது. என்னதான் தேசிய அரங்கில் பாஜகவின் கை ஓங்கி இருந்தாலும், தமிழ்நாடு பாஜகவால் அவ்வளவு எளிதாக நுழையமுடியாத கோட்டையாகத்தான் இன்னும் இருக்கிறது. என்றாலும் தமிழ்நாட்டில் பாஜக சந்திக்கும் தீண்டாமையின் ஓர் இழையைக் கிட்டத்தட்ட உரித்திருக்கின்றனர் பாக்யராஜும், இளையராஜாவும். இந்த இரண்டு பேருமே மோடியை ஆதரிக்கிறார்கள் என்றால், மற்றவர்களும் நிதானம் இழக்காமல் அப்படிச் செய்ய முடியும்.

ஆனால் இவையெல்லாம் வெறும் மாயப்பின்னணிக் கட்டமைப்புகள்தான். தங்களுக்கு தமிழ் அடையாளம் என்னும் ஒரு மாய பானம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாலே தமிழர்கள் திராவிடச் சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. ஆனாலும் திராவிடக் கட்சிகளுக்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள்; ஏனென்றால் அந்தக் கட்சிகள் நன்றாக ஆட்சி செய்கின்றன என்பதால் அல்ல; ஊழலை ஒழித்த கட்சிகள் என்பதால் அல்ல; அவை சமூக நலன் சார்ந்த கட்சிகள் என்பதால்தான்.

சுதந்திரச் சந்தையாளர்கள் தமிழக அரசை ஒரு ‘செவிலித்தாய்‘ மாநில அரசு என்று அழைக்கலாம். ஆனால் இந்த அரசுதான் தமிழ்நாட்டை உருவாக்கியிருக்கிறது; இதுதான் கோடிக்கணக்கான தமிழர்களை முன்னேற்றியிருக்கிறது.

தமிழ் அடையாளமும், ஆரிய எதிர்ப்புச் சித்தாந்தமும் முக்கியம்தான்; ஆனால் அவை பண்டத்தின் மீது தூவப்பட்ட கவர்ச்சியான வெறும் பிற்சேர்க்கை அலங்காரங்கள். உள்ளிருக்கும் மாவு, சுவை, அடுமனைச் சமையல் இவையெல்லாம் ஒரு பரிவர்த்தனை உறவிலிருந்து வருபவை.

ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகச் சிந்தனைமீது ஆழமான பிடிப்பு கொண்டது இந்தப் பரிவர்த்தனை உறவு.

வெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் அண்ணா ஆட்சியைப் பிடிக்கவில்லை. அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று அவர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிதான்.

வெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் அண்ணா ஆட்சியைப் பிடிக்கவில்லை. அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று அவர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிதான். 55 ஆண்டுகள் கழித்து, இப்போது அரிசி சந்தையில் குறைந்தபட்சம் 30 மடங்கு அதிகமான விலையில் கிடைக்கும்போது, ஏழைகளுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாகவே அரிசி கிடைக்கிறது.

இதற்கு மாறாக பாஜக நடத்தும் அரசாங்கம் மிகவும் கஞ்சத்தனமான அரசுகளில் ஒன்று. நரேந்திரமோடி அடிப்படையில் குஜராத் தொழிலதிபர்; எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார்; எதையும் கொடுக்கமாட்டார்.

சமூக நலன் தான் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சொல்லாடல். ஆனாலும் அதில் குறைத்தலும், மட்டுப்படுத்தலும் நிகழ்ந்திருக்கின்றன. கோவிட் பெருந்தொற்றை விட்டு வெளியேறிய பின்பு, இந்த ஆண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசாங்கம் செலவினங்களை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். உதாரணமாக, அமெரிக்கா டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பெருந்திட்டத்தோடு வந்தது. ஆனால் நிறைய செலவழித்துப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு செலவினத்தைச் சுருக்கிவிட்டார்.

சிறுதொழில்களுக்குக் கடன் கொடுப்பதில் அரசு அசாதாரணமானதொரு தாராளத்தைக் காட்டியிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், கருமித்தனம்தான் நிஜத்தில் இருக்கிறது என்பதை இன்மதி வெளியிட்ட இரண்டு கட்டுரைகள் சுட்டிக்காட்டின. 2007-2014 காலகட்டத்துடன் ஒப்பீடு செய்கையில், தற்போது சிறுதொழில்களுக்கான வங்கிக் கடன்களின் வேகம் குறைந்துவிட்டது.

பாஜக பெருமையோடு சொன்னதுபோல, சாமான்ய தமிழர்களின் பாக்கெட்டுகளில் முத்ரா கடன்கள் வழியாகப் பணம் நிறைந்து வழிந்திருந்தால், அவர்கள் பாஜகவை நல்லவிதமாகத்தான் பார்த்திருப்பார்கள். இந்த ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஒரு திட்டத்தை மட்டும் எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள். அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து வெளிவரும் ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்லூரியில் சேர்ந்து படித்தது முடிக்கும் வரை கல்லூரிக்குச் செல்லும்போது மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தால் சுமார் ஆறு லட்சம் மாணவிகள் தாங்களாகவே கல்லூரிக்குச் செல்வார்கள். போக்குவரத்துச் செலவுக்கும், உணவுச் செலவுக்கும் அவர்களிடம் பணமிருக்கும். அவர்கள் பட்டதாரிகளாகவும், முதுநிலைப் பட்டதாரிகளாகவும் ஆன பின்பு, அவர்களுக்கென்று ஒரு புதிய உலகம் காத்திருக்கலாம்.

பக்குவப்பட்ட தமிழனை முட்டாளாக்க முடியாது; அவனுக்குத் தெரியும், தனக்கான உணவை யார் தயார் செய்கிறார்கள் என்று.


Share the Article

Read in : English