Read in : English

Share the Article

சிறுதொழில்களுக்கான கடன்வசதிகள் மோடி ஆட்சியில் எளிதாகவில்லை என்றும், 2014-க்கு முன்புவரை அந்தக் கடன்கள் சதவீதம் அதிகரித்திருந்தன என்றும் ரிசர்வ் வங்கியின் தரவுகள் சொல்கின்றன.கடந்த வாரம் முத்ரா கடன் திட்டத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படிச் சொன்னார்: “வருமானத்தைப் பெருக்கும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.18.60 லட்சம் கோடி மதிப்புள்ள 34.42 கோடிக்கு மேலான கடன் கணக்குகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.”

தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடிக் கடன்கள் நான்கு கோடி கடன் கணக்குகளில் வழங்கப்பட்டிருக்கின்றன என்று ஒன்றிய அரசு சென்னை நாளேடுகளில் கொடுத்திருந்த விளம்பரங்கள் கூறுகின்றன.

2015-இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்) பெரு நிறுவனம் சாராத, வேளாண்மை சாராத குறு, சிறு தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தருகிறது. வங்கிகள், குறுநிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதிநிறுவனங்கள் ஆகியவை இந்தக் கடன்களை வழங்குகின்றன. முத்ரா திட்டத்தின்கீழ் மூன்று விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன: ஷிஷு – ரூ.50 ஆயிரம் வரை; கிஷோர் – ரூ.50 ஆயிரத்தி-லிருந்து ரூ.5 லட்சம் வரை; தருண் – ரூ.5 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சம் வரை.

கடன் வழங்களிலும், கடன் கணக்குகளிலும் அரசு கொடுத்திருக்கும் புள்ளி விவரங்கள் தவறானவை என்று இன்மதியில் முன்பு வெளியான கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

2014-இல் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சிறுதொழில்களுக்கான வங்கிக் கடன்களின் நிஜமான வளர்ச்சி சரிந்து போனது என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கைகள் தரும் புள்ளி விவரங்களிலிருந்து தெரியவருகிறது.

குறு, சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்கள் அனைத்தும் முத்ரா கடன்கள்தான். ஏனென்றால், பிஎம்எம்ஒய் திட்டத்தின்கீழ் இந்தக் கடன்களை எளிதாக வழங்குவதற்காக விதிமுறைகளை தளர்த்தியுள்ளதாக அரசு கொள்கை வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், 2014-இல் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சிறுதொழில்களுக்கான வங்கிக் கடன்களின் நிஜமான வளர்ச்சி சரிந்து போனது என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கைகள் தரும் புள்ளி விவரங்களிலிருந்து தெரியவருகிறது. அதனால், முத்ரா கடன் தங்களது சாதனை என்ற ஒன்றிய அரசின் பெருமிதமான கூற்று இப்போது கேள்விக்குள்ளாகிறது.

குறு, சிறு தொழில்களுக்குக் கடன்கள் கொடுப்பது பொதுத்துறை, தனியார், மற்றும் பிராந்திய கூட்டுறவுத்துறை வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும், குறுநிதி அமைப்புகளும்தான். வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும், குறுநிதி அமைப்புகளுக்கும் வங்கிகள் கொடுக்கும் கடன்கள் குறு, சிறுதொழில்களுக்குக் வழங்கப்படுகின்றன. வங்கிகள் தவிர சந்தைகளில் வங்கிசாரா நிதி நிறுவனங்களும், குறுநிதி அமைப்புகளும் நிதிதிரட்டுகின்றன.

அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் குறு, சிறு தொழில்களுக்கு வணிக வங்கிகள் கொடுத்த மொத்த நிலுவைக் கடன் விவரங்களை 2007-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிக்கை சொல்கிறது.

இந்த வணிக வங்கிகள் பிரிவில் நாட்டில் பெரும்பாலான நிதிபரிவர்த்தனைகளைச் செய்யும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் வருகின்றன. இந்தப் பிரிவில் வெளிநாட்டு வங்கிகளும், மண்டலக் கூட்டுறவுதுறை வங்கிகளும் வருவதில்லை. 2007-க்கு முன்பு, ரிசர்வ் வங்கி அறிக்கைகள் பொத்தாம்பொதுவாக சிறு தொழில்கள் (ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரீஸ்) என்றே குறிப்பிட்டன. குறு, சிறு, நடுத்தர தொழில்கள் என்ற வித்தியாசங்கள் அப்போது இருந்ததில்லை.

கொடுக்கப்படும் கடன்களில் ஏற்படும் அதிகரிப்பை அந்த ஆண்டு அறிக்கை பதிவுசெய்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, எந்த ஆண்டிலும் நிலுவையில் இருக்கும் கடன்கள் அதிகமாகவே இருக்கும்.

ஏனென்றால் முந்தைய ஆண்டில் நிலுவையில் இருக்கும் சில கடன்கள் அந்த ஆண்டில் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் சதவீதத்தில் கணக்கிடப்படும் நிலுவைக் கடன்அதிகரிப்பு, புதிதாகக் கொடுக்கப்படும் கடனைப் பற்றிய அளவுகோலாக இருக்கும்.

குறு, சிறு தொழில்களுக்கான நிலுவைக் கடன்கள் 2007-08இல் 55.5 சதவீதம் அதிகரித்தது. அதற்கு அடுத்த ஆண்டில் அது 20 சதவீதமாக சரிந்தது. மறுபடியும் 2010இல் 41 சதவீதமாக உயர்ந்தது. 2012இல் இந்த அதிகரிப்பு 9 சதவீதமாகக் குறைந்தது. ஆனால் மீண்டும் உயர்ந்தது. 2008-14 காலகட்டத்தில் குறு, சிறு தொழில்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்ட நிலுவைக் கடன்கள் 20 சதவீதமும், அதற்கு மேலும் அதிகரித்தன. 2013-14-இல் நிலுவைக் கடன் அதிகரிப்பு 24 சதவீதமாக இருந்தது.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த 2014-15-இல் நிலுவைக் கடன் அதிகரிப்பு 13 சதவீதமாகக் குறைந்தது. 2020-ஆம் ஆண்டைத் தவிர, மற்ற ஆண்டுகளில் இந்த அதிகரிப்பு மீண்டுவரவே இல்லை. இந்த அதிகரிப்பு 3.6 சதவீதமாக (2015-16) இருந்தது. 2016-17இல் 7.5 சதவீதம், 2017-18இல் 7.4 சதவீதம், 2018-19இல் 14.3 சதவீதம், 2019-202இல் சதவீதம், 2020-21இல் 5.6 சதவீதம் என்று இருந்தது

முத்ரா திட்டம் 2015-இல், அதாவது 2015-16 நிதியாண்டில், தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நிலுவைக் கடன்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். இதனால், இயற்கையாகவே நிலுவைக் கடன் அதிகரிப்பு சதவீதம் குறைந்து விடும் சூழ்நிலையில், ஒன்றிய அரசை எப்படிக் குறைகூறலாம் என்று சிலர் சொல்லாம். பாஜக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறு, குறு தொழில்களுக்குக் கொடுக்கப்படும் புதிய கடன்கள் பெருமளவில் அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

பொருளாதாரத்தின்மீது இரண்டு விஷயங்கள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின: ஒன்று 2016இல் நிகழ்ந்த பணமதிப்பிழப்பு; மற்றொன்று கோவிட் பெருந்தொற்று. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவைக் கணக்கிடும் முறைகள் மாறிவிட்டதால், வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று சொல்வதை பல பொருளாதார நிபுணர்கள் ஏற்க மறுக்கிறார்கள். மின்நுகர்வு உயர்வு போன்ற மற்ற அளவுகோல்களைப் பார்க்கும்போது, 2014-லிருந்து பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குறு, சிறு தொழில்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் தொகைகள் பற்றிய சரியான தரவுகள் கிடைக்கவில்லை. நிலுவைக் கடன்கள் பற்றிய தரவுகள்தான் கிடைக்கின்றன.

பொருளாதார வளர்ச்சி இல்லாத சூழ்நிலையில் உற்பத்தி குறைந்துள்ள சூழ்நிலையில் சிறு, குறு தொழில்களுக்கான கடன் தேவையும் குறைந்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எப்போதும் கேட்ட கடன் சுலபமாகக் கிடைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குறு, சிறு தொழில்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் தொகைகள் பற்றிய சரியான தரவுகள் கிடைக்கவில்லை. நிலுவைக் கடன்கள் பற்றிய தரவுகள்தான் கிடைக்கின்றன.

உதாரணமாக, 2021 நிதியாண்டின் இறுதியிலிருந்த நிலவரப்படி, வணிக வங்கிகள் குறு, சிறு தொழில்களுக்கு வழங்கிய மொத்த நிலுவைக் கடன்தொகை ரூ.14.15 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ.80 ஆயிரம் கோடி அதிகம். வங்கிசாரா நிதி நிறுவனங்களும், குறுநிதி அமைப்புகளும் 2020-21-இல் ரூ.53 ஆயிரம் கோடி கடன்கள் கொடுத்தன என்று தொழில்துறைத் தரவுகள் சொல்கின்றன. அந்த ஆண்டில் ரூ.3.3 லட்சம் கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டன என்று முத்ரா இணையதளம் சொல்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. குறு, சிறு தொழில்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லாக் கடன்களுமே முத்ரா கடன்கள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கின்றன. கொடுத்த கடன்களை பல தடவை எண்ணிக் கணக்கில் வைத்திருக்கவும் சாத்தியம் உண்டு. பாஜக அரசு வந்த பிறகு, முத்ரா கடன் திட்டத்தின்கீழ் சிறு, குறு தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று சொல்வதில் உண்மையில்லை.


Share the Article

Read in : English