Read in : English

Share the Article

தேசிய அரசியலில் தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் சமீபகாலமாக திமுக செயல்படுகிறது. சமூக நீதி கொள்கையை தேசிய அரசியலில் பொருத்திப் பார்க்க முயல்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஜி.எஸ்.டி. வருவாயில் மாநிலங்களுக்கு கூடுதல் பங்கு அளிக்க வேண்டும் என்பதற்காக மற்ற மாநில முதல்வர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார். மற்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் இணைந்த ஓர் ஐக்கிய முன்னணியால்தான் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற முடியும் என்ற வியூகத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். திமுகவின் தேசிய அரசியலுக்கான முகமாக புதுதில்லியில் அண்ணா—கலைஞர் அறிவாலயத்தைத் திமுக தொடங்கிவிட்டது.

அதைத்தொடர்ந்து அஇஅதிமுகவும் தலைநகரில் தனது அலுவலகத்தைத் தொடங்கும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி அதைத் தொடங்கிவைப்பார் என்றும் அக்கட்சியின் பிரதிநிதி ஒருவர் சொல்லியிருக்கிறார். தில்லி நிகழ்வுகளில் பாஜகவையும் ஒன்றிய அரசின் அமைச்சர்களையும் வேண்டுமென்றே திமுக சேர்த்துக் கொள்ளவில்லை.

சமீபகாலமாகத் தேசிய அரசியலில் பங்கு வகிக்க திமுகவும் விழைகிறது; அதன் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும் விழைகிறார். சமூக நீதியை மையமாகக் கொண்ட அதன் சமீபத்திய நடவடிக்கைகளில் ஒன்று. புதுதில்லியில் தொடங்கப்பட்ட அண்ணா-கலைஞர் அறிவாலயம்.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாமல் அதிமுகவும் திமுகவும் தேசிய அரசியலில் களம் இறங்குகின்றன. அவசர நிலை காலத்தில், ஜனதா கட்சித் தலைவர்களுக்கு அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த திமுக தஞ்சம் கொடுத்தது. அதையடுத்து, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சரண்சிங் தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவின் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றார்கள்.

அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதா தேசிய அரசியலில் ஈடுபட விரும்பும் நோக்கில் மோடிக்கு எதிராகத் தன்னை சிறிது காலம் நிறுத்திக்கொண்டார். ஆனால், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்காக அவர் செய்த தந்திரம் அது. அந்தத் தந்திரம் பயனளித்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் தனது பலத்தின் அடிப்படையில் திமுக தேசிய அரசியலில் பணயம் வைக்கிறது; பாஜகவிற்குக் கொள்கை ரீதியான ஓர் எதிர்சக்தியாகவும் அது செயல்பட விரும்புகிறது.

ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசுகளில் திமுக ஆர்வத்துடன் பங்கெடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் கூட்டணியில் இருந்தது என்ற முறையில் மட்டுமே. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் தனது பலத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, திராவிட மாடல் அடிப்படையில் தேசிய அரசியலில் களம் இறங்கி வருகிறது. பாஜகவிற்குக் கொள்கை ரீதியான ஓர் எதிர்சக்தியாகவும் அது செயல்பட விரும்புகிறது.

பாஜக வளர்ச்சி என்னும் தேசியப் போக்கை தமிழ்நாடு சற்று மட்டுப்படுத்தியது என்றால் அதன் காரணம் திமுக குறிப்பாக திராவிட சித்தாந்தம். இந்த மாநிலத்தில் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தம் எடுபடவில்லை. அதற்கான பெருமை தமிழ் அடையாளத்தையும், தமிழ்மொழி சார்ந்த அரசியலையும், பெரியாரின் பிராமண எதிர்ப்புக் கருத்தியல் கட்டமைப்பையும் சாரும். பாஜக பிராமண இந்து மதத்தின் பிரதிநிதி என்றே தமிழ்நாட்டில் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் பாஜகவின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு சோதனை. அப்போது அஇஅதிமுகவின் துணையின்றி தனித்தே போட்டியிட்டது பாஜக. Ðபாரம்பரிய ரீதியிலான கோட்டைகளான கோயம்புத்தூரிலும், கன்னியாகுமரியிலும் பாஜக அதிக வாக்குகளை அள்ளியது. சென்னையில் 8 சதவீத வாக்குகளை வாங்கி அது ஆச்சரியப்படுத்தியது. அதன் வேட்பாளர்கள் 20 வார்டுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். மொத்த வார்டுகளில் நான்கில் ஒருபகுதியில் 10 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை வாங்கினர்.

அந்தத் தேர்தலில் அஇஅதிமுக சற்று ஒதுங்கி நின்று கடுமையாகப் போட்டியிடவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒன்றிய அரசில் அதிகாரம் கொண்டிருக்கும் கட்சி என்ற பெருமையை, பலத்தைப் பாஜக பயன்படுத்தினாலும் – முத்ரா கடன்களை வழங்குவதில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது – தேர்தல் முடிவுகள் அந்தக் கட்சிக்கு, அது தனித்துப் போட்டியிட்ட 2012ஆம் ஆண்டைவிட, சிறப்பாக இல்லை.

ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பெரும் முனைப்போடு செயல்படுகிறது. அதன் மாநிலத் தலைவரும் கர்நாடகத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலை மூலம் கட்சி திமுகவைக் கடுமையாக எதிர்த்துக்கொண்டு நிற்கிறது. தனது இந்துத்வா கொள்கைத் திட்டத்தை வளர்த்தெடுக்கும் முகமாக அது பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கிறது.

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா விஷயம் குறிப்பிடத்தக்கது. தன்னைக் கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்ய பள்ளியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அந்த மாணவி தற்கொலைக்கு முன்பு சொன்னதாக ஒரு காணொளி வெளியிடப்பட்டது. லாவண்யா ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்பது பற்றியும், அந்தக் காணொளி வெளியிடப்பட்ட சந்தேகத்துக்குரிய சூழலைப் பற்றியும், குறிப்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களே அந்த வீடியோவைத் தயாரித்திருக்கலாம் என்றும் பல்வேறு ஊகங்கள் வெளியாயின. அந்தப் பிரச்சினையைப் பிரதானப்படுத்தி பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பரப்புரைகளை மேற்கொண்டது. ஆனால் அது பெரிய அளவில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காண்பித்தன.

அந்த மையங்கள் நிஜத்தில் கசாப்புக்கடைகளாகவும், எருமை இறைச்சியைப் பதனப்படுத்தும் நிலையங்களாகவும் இருக்கும் என்று பாஜகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

சமீபத்தில் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு துபாய்க்குச் சென்றார். கேரளாவில் பிறந்த கோடீஸ்வரர் யூசுஃபாலிக்குச் சொந்தமான லூலு குழுமத்தோடு ஒரு புரிதலுணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதுசம்பந்தமாக சங்கிகள் சமூக ஊடகங்களில் பரப்புரைகள் மேற்கொண்டனர். அந்த ஒப்பந்தத்தில் தமிழகத்தில் வேளாண்மைப் பொருட்களைக் கொள்முதல் செய்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த மையங்கள் நிஜத்தில் கசாப்புக்கடைகளாகவும், எருமை இறைச்சியைப் பதனப்படுத்தும் நிலையங்களாகவும் இருக்கும் என்று பாஜகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அந்த மையங்கள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி ஒப்பந்தம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் உண்மையில் அவை இறைச்சிப் பதனீட்டு நிலையங்களாக இருந்தால் அவற்றிற்கெதிராக பாஜக பரப்புரை நிகழ்த்தும் என்பது நிச்சயம்.

திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய சட்டசபைத் தேர்தலில் அஇதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளைப் பெற்றது. அஇஅதிமுக கட்சியின் நிலையில் ஏற்பட்ட மாறுதல்களின் பின்புலத்தில் நிகழ்ந்தது அந்தத் தேர்தல். முடிவுகள், அந்த மாறுதல்களை உறுதியாக்கின.

கடந்த காலத்தில் திமுகவுக்கு இருந்த வாக்குவங்கி பெரும்பாலும் கொள்கைரீதியிலானது. கூட்டணிகள் அதன் வலிமையைப் பன்மடங்காக்கின. அந்தந்த காலகட்டத்துப் பிரச்சினைகள் அந்தக் கட்சிக்குச் சாதகமாக அமைந்தன. தலித்துகள், மலை சாதியினர், மீனவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒடுக்கப்பட்டவர்களின் கட்சி அஇஅதிமுக. கட்சி ஆட்சியில் இருக்கும்போது கொண்டு வந்த நலத்திட்டங்களாலும், தெய்வமென பெரிதும் வணங்கப்பட்ட, கவர்ச்சிமிக்க கட்சித்தலைவர்களாலும் உந்தப்பட்டவர்கள் அவர்கள்.

சமீபத்தில், குறிப்பாக ஜெயலலிதா காலமானவுடன், திமுக தன்னைச் சிறுபான்மையினரின், தலித்துகளின், பெண்களின் கட்சியாக மீளுருவாக்கம் செய்யும் முயற்சிகளில் இறங்கியது. போட்டோவுக்குப் பொருத்தமான தனது தலைவரை முன்னிறுத்தி, திமுக பெண்களைக் குறிவைத்துத் திரட்டியது. உதாரணமாக, சமீபத்து பட்ஜெட்டில், திமுக அரசு அரசுப்பள்ளி மாணவிகள் கல்லூரியில் தொடர்ந்து படிப்பதற்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தனித்திட்டத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு ஆண்டும் இதன்மூலம் ஆறு லட்சம் மாணவிகள் பயன்பெறுவர்.

மாநகராட்சிகளில் மேயர் பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது திமுக அரசு. சென்னை மேயர், ஓர் இளம் வயது தலித் பெண்.

தலித் அரசியலை வெளிப்படையாகத் திமுக ஏற்றுக்கொண்டதை அஇஅதிமுக திசைதிருப்பி மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளை திமுகவுக்கு எதிராக ஓரளவு திருப்பிவிட்டது.

தலித் அரசியல் தற்போது பெருமளவில் திமுகவை நோக்கி நகர்ந்துவிட்டது. கடந்த காலத்தில், பறையர்களைப் பிரதிநிதிப்படுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் மாறிமாறி கூட்டு வைத்துக்கொண்டது. அஇதிமுக இன்னும் தலித்துகளால் விரும்பப்படும் கட்சி என்று விசிக நினத்தது. ஆனால் இப்போது திமுக பாசறையில் இடதுசாரிக் கட்சிகளுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் சேர்ந்து நிற்கிறது விசிக. 2016-ஆம் ஆண்டில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி முயன்றது; ஆனால் அது படுதோல்வியில் முடிந்தது.

பாஜக தனது கருத்தியல் பாசறையில் கே. கிருஷ்ணசாமி என்னும் பள்ளர் தலைவரைக் கொண்டுவந்து தலித் வாக்கு வங்கியில் பிளவை உண்டாக்க முயன்றது. ஆனால் பள்ளர்களே அதை நிராகரித்தனர் என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. தமிழகத்தில் பள்ளர்கள், பறையர்கள் மற்றும் எண்ணிக்கையில் குறைவான அருந்ததியர்கள் என்று மூன்று தலித் பிரிவினர் உண்டு.

சிறுபான்மையினரைவிட்டு அஇஅதிமுக விலகிவிட்டது என்பதை கட்சியில் இருந்த இஸ்லாமிய தலைவர் அன்வர் ராஜாவை ஒதுக்கியதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். பாஜக கூட்டணிக்காக அஇதிமுக கொடுத்த விலை ஆகப்பெரியது.

திமுகவில் நிகழ்ந்த ஒரு பிளவில் முகிழ்த்தது அஇதிமுக. திராவிடச் சித்தாந்தமற்ற அஸ்திவாரத்தையும், புவியியல் பரப்பையும் கொண்டது அந்தக்கட்சி. சமீபகாலங்களில் கவுண்டர், தேவர் போன்ற சாதிக்குழுக்களின் அரசியலை அஇஅதிமுக முன்னெடுத்துச் சென்றது.

தலித் அரசியலை வெளிப்படையாகத் திமுக ஏற்றுக்கொண்டதை அஇஅதிமுக திசைதிருப்பி மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளை திமுகவுக்கு எதிராக ஓரளவு திருப்பிவிட்டது. 2014-இல் பாஜக சாதிய அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சி அஇஅதிமுக துணையில்லாமல் தோற்றுப்போனது. இப்போது அஇஅதிமுக முற்றிலும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிட்டது.

அதீதமாகத் திராவிடமயமான திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, தலித், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் அடங்கிய வாக்காளார்களின் கூட்டணியை உருவாக்கி அதை, இந்துத்துவா வெளிப்படையாகக் கட்டமைத்திருக்கும் சாதிய கூட்டணிக்கு எதிரான ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போர் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது போலத் தோன்றுகிறது. திமுக அரசு ஒரு சின்ன தவறான அடியை எடுத்தாலும், மோசமான ஆட்சியைத் தந்தாலும் அல்லது பிரச்சினைகளைத் தப்பாகக் கையாண்டாலும் ஆகப்பெரிய பிரச்ச்னை ஒன்று உருவாகி வருங்காலத் தேர்தலில் திமுகவுக்கு எதிராகத் திரும்பிவிடலாம்.


Share the Article

Read in : English