Read in : English

Share the Article

தமிழ் சினிமாவை பேய்க்கதைகள் அலறவிட்ட ‘ட்ரெண்ட்’ மாறி, இப்போது ‘க்ரைம் த்ரில்லர்’க்கான சீசன் தொடங்கிவிட்டது. நகைச்சுவையில் கூட அவலம் சேர்ந்தால்தான் தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆக்‌ஷன் கதையிலும் கூட சென்டிமெண்ட் கலந்ததால் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை என்று குறைகள் எழுகின்றன. இந்தக் காலகட்டத்தில் முழுக்க முழுக்க காதலில் ஊறவைத்த ஒரு கதையைச் சொல்வதென்பது நிச்சயம் குதிரைக்கொம்பைப் பற்றுவதற்கு ஒப்பானது. அதை முயன்று பார்த்திருக்கிறார் முதன்முறையாக இயக்கத்தைக் கையிலெடுத்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.

துல்கர் சல்மான், அதிதிராவ் ஹைத்ரி, காஜல் அகர்வால் என மூவரைச் சுற்றியே காட்சிகள் அமைத்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். பெண்ணியம் சார்ந்த, நவீன காலத்திற்கேற்ப பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் சார்ந்த, இன்றைக்கு பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகள் சார்ந்த கதைகளையே பெண் இயக்குநர்கள் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ‘ஹே சினாமிகா’ இதனை அடியொற்றி பின்பற்றியிருக்கிறதா?

எப்படிப்பட்ட இனிப்புச் சுவையும் ஒருகட்டத்தில் அது திகட்டிப் போகும். முதல் பார்வையிலேயே யாழன் (துல்கர் சல்மான்) மீது காதலில் விழுந்த மோனாவுக்கும் (அதிதி ராவ் ஹைத்ரி) அதுவே நிகழ்கிறது.

கட்டுமான நிறுவனமொன்றில் உயர் பொறுப்பில் மோனா இருக்க, வீட்டைக் கவனித்துக் கொள்கிறார் யாழன். எந்நேரமும் புத்தகங்கள், சமையல், மாடித் தோட்டம், என்றிருப்பவர் வாய் திறந்து பேசத் தொடங்கினால் இடைவிடாது பேசும் இயல்புள்ளவர். பேப்பர் பாய், பால்காரர் தொடங்கி பலரும் யாழனைக் கண்டாலே அலற, மோனாவின் மனதுக்குள் இருக்கும் குமுறலும் மெல்ல வெறுப்பாக வெளிப்படுகிறது.

நவீன காலத்திற்கேற்ப பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் சார்ந்த, இன்றைக்கு பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகள் சார்ந்த கதைகளையே பெண் இயக்குநர்கள் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஒருகட்டத்தில் யாழனைப் பிரிய முடிவெடுக்கிறார் மோனா. பாண்டிச்சேரியில் செயல்படுத்தப்படும் புராஜக்டில் பணியாற்றுவதை, அதற்கான வாய்ப்பாக கருதுகிறார். ஆனால், யாழனோ வீட்டைக் காலி செய்துவிட்டு பாண்டிச்சேரி வந்துவிடுகிறார். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சைக்காலஜிஸ்ட் மலர்விழியின் (காஜல் அகர்வால்) அறிமுகம் மோனாவுக்கு கிடைக்கிறது. அவரிடம் யாழனை விட்டுப் பிரிய உதவி செய்யுமாறு கேட்கிறார். ஆண்கள் என்றாலே தவறு செய்ய ஏங்குபவர்கள் என்ற எண்ணம் கொண்ட மலர்விழியும் யாழனிடம் பழக ஆரம்பிக்கிறார். மெல்ல அவரது நடிப்பு உண்மையான காதலாக மாற, மோனாவும் யாழனும் என்னவானார்கள் என்பதே இப்படத்தின் கதை.

உருகி உருகிக் காதலிக்கும் ஜோடிகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கிய சில நாட்களிலேயே பிரிய முடிவெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்குமான வெவ்வேறு விருப்பங்கள், புரிதல்கள் காரணமாக இருக்கின்றன. ஆனால், அதுவே இல்லற வாழ்வில் சுவையை நாள்தோறும் கூட்டும் என்று சொன்ன வகையில் வித்தியாசப்படுகிறது ‘ஹே சினாமிகா’.

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா

அடுத்தடுத்து காட்சிகளை இழுத்து கிளைமேக்ஸை தள்ளிக்கொண்டே போவது மட்டும் அயர்ச்சி தருகிறது. போலவே, முன்பாதியில் மோனாவுக்கும் யாழனுக்குமான பிரச்சினை என்னவென்று சொல்லும் காட்சிகள் சலிப்படைய வைத்தாலும் பின்பாதியில் அதற்குச் சேர்த்து வைத்து காதலையும் காமெடியையும் பிசைந்தெடுத்திருக்கிறது திரைக்கதை. என்ன, வாய் விட்டு சிரிக்கும்படியாக இல்லாமல் லேசான புன்னகையைத் தரும்விதமாகவே நகைச்சுவை அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் டி.பி.ராஜலட்சுமி காலம் தொட்டு பானுமதி, விஜய நிர்மலா, ஜெயதேவி, சுஹாசினி, ரேவதி என்று பெண் இயக்குநர்களின் படைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு இடையிலான கால இடைவெளியும் தொடர்ச்சியின்மையும் அவர்களைக் குறித்த தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. 2000களுக்கு பிறகு ஜானகி விஸ்வநாதன், பிரியா வி, மதுமிதா, நந்தினி, சுதா கொங்கரா, ஹலீதா ஷமீம் என்று தொடரும் வரிசையில் ஒருவராக இணைந்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. சுதாவும் ஹலீதாவும் அற்புதமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன் சமகால இயக்குநர்களுக்குச் சவால்விடும் வகையில் படைப்புகள் தருவதைப் போலவே, மிகச்சிறப்பான கமர்ஷியல் படைப்பாக்கம் இவரிடமும் தென்படுவது ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.

எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் தன் உடல் மீது மோகம் கொள்ளாத ஓர் ஆணை பார்க்க முடியுமா, ஆண்கள் வேலைக்குப் போனால் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டுமா, ஆண்கள் சமையல்கட்டு பக்கம் ஒதுங்க மாட்டார்களா, இவ்வளவு ஏன் ஒரு பெண் ஜீன்ஸ் அணியும்போது ஆண் சுடிதார் அணியக்கூடாதா? சமத்துவத்தை விரும்பும் பெண்கள் மனதில் இது போன்ற பல கேள்விகள் நிரம்பியிருக்கும். அதையே கதையின் முக்கியப் பிரச்சனைகளாகக் கொண்டுவந்து, சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் எதையும் அறியாத ஒரு பெண்ணாக மோனாவைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பிருந்தா.

அதாவது, சாதாரணமாக இப்படியொரு ஆண் கிடைக்க மாட்டானா என்று பெண்கள் எதிர்பார்க்கும் கல்யாண குணங்களை ஒருங்கே கொண்டவனாக யாழனை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார். இது போதாதென்று ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் என்ற எண்ணத்தோடு வாழும் மலர்விழி பாத்திரம். இறுதியில், இம்மூன்று பாத்திரங்களில் மலர்விழியும் மோனாவும் மட்டுமே தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதாக காட்டியிருக்கிறார். அதனால், பெண் பாத்திரங்களால் ஆண்களிடம் மாற்றங்கள் உருவாதாகச் சொல்லும் சமீப படைப்புகளில் இருந்து இப்படம் பெருமளவில் வேறுபடுகிறது.

தமிழ் சினிமாவில் டி.பி.ராஜலட்சுமி காலம் தொட்டு பானுமதிவிஜய நிர்மலாஜெயதேவிசுஹாசினிரேவதி என்று பெண் இயக்குநர்களின் படைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கின்றன.

போலவே, ஒரு ஆண் மிகச்சரியானவனாக இருந்தால் இப்படித்தான் இருப்பான் என்ற பெண்களின் கற்பனைக்கு உருவம் தரும் வகையில் யாழனை வடித்திருக்கிறார் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி. நன்றாகப் படித்து நல்ல வேலையிலிருக்கும், சுயமாகச் சிந்திக்கும், பொருளாதாரரீதியாகச் சுதந்திரமாக இருக்கும் பெண் பாத்திரங்களே நிறைந்திருப்பதும், அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் திணறும் பாத்திரங்கள் மருந்துக்கு கூட இல்லாமலிருப்பதும் திரைக்கதையின் மையக்கரு காதல் மட்டுமே என்பதை அழுத்தமாக்குகிறது.

மோனா தான் படும்பாட்டை அலுவலக சகாக்களிடம் சொல்லும்போது ஆண்கள் மோனாவை பாலியல்ரீதியாக ‘கமெண்ட்’ அடிப்பது போலவே உடனிருக்கும் பெண்ணும் காமவயப்படுவது போல காட்டப்பட்டிருக்கிறது. போலவே, நட்சத்திரா நாகேஷின் பாத்திரமும் கூட யாழனிடம் நெருங்கிப் பழக முயல்வதாகச் சொல்லப்பட்டிருப்பது இப்படைப்பில் இடம்பெற்ற முக்கியப் பெண் பாத்திரங்கள் பாலியல் சுதந்திரத்தோடு இருப்பதை உணர்த்துகின்றன.

சில பெண் இயக்குநர்களின் படங்களில் இவ்வம்சங்கள் எல்லாம் வசனங்களாலோ, காட்சிகளாலோ அடிக்கோடப்படுவதுண்டு. பிருந்தா அவற்றை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்திருப்பது, சமூகத்தின் வேறோரு மட்டத்தில் இருக்கும் பெண்களை கண் முன் நிறுத்தியிருக்கிறாரோ என்ற எண்ண வைக்கிறது. பெண் மனம் சார்ந்த உளவியல் கூறுகளின் தன்மையும் கூட, அந்த அளவுகோலோடு திரைக்கதை முழுக்க நிரம்பியிருக்கிறது.

மணி ரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘ஹே சினாமிகா’ பாடல் வரியை வைத்து இப்படத்தின் டைட்டில் அமைந்துள்ளது. அப்பாடல் வரிகளை முன்வைத்து ஒரு சிறு காட்சியும் கூட திரைக்கதையோட்டத்திற்கு உதவுகிறது.

மௌனராகம், திருடா திருடா, குரு, அலைபாயுதே என்று மணிரத்னத்தின்  அரை டஜன் படங்களில் இருக்கும் பெண் பாத்திரங்களைப் பிரதியெடுத்தது போலிருக்கிறது அதிதிராவ் பாத்திரம். போலவே, காஜல் அகர்வாலின் பாத்திரம் நமக்கு கே.பி.யின் சில படைப்புகளை நினைவூட்டுகிறது. ஆனாலும், அவற்றை மீறி அதிதி மற்றும் காஜலின் நடிப்பை பார்க்கும்போது இரண்டு சிம்ரன்கள் திரையில் தோன்றுவதாகப் படுகிறது. மிகமுக்கியமாக, அதிதியின் துறுதுறு ஆட்டமும் முகச்சுளிப்புகளும் அப்படியே ‘வாலி’ காலத்து சிம்ரனைக் கண்ணில் காட்டுகிறது. காஜலோ, ‘பார்த்தேன் ரசித்தேன்’ தொடங்கி பிற்கால சிம்ரனைப் பிரதியெடுத்தது போல வந்து போகிறார்.

இந்த சிம்ரன் ஒப்பீட்டை மறக்கடிக்கிறது துல்கர் சல்மானின் இருப்பு. தன்னாலும் ஸ்டைல் காட்ட முடியும் என்று சில காட்சிகளில் நிரூபித்தாலும், கேமிரா இருப்பதே தெரியாது என்ற பாவனையில் அவரது நடிப்பு அமைந்திருப்பதுதான் இப்படத்தின் மாபெரும் சிறப்பு. இதர கலைஞர்களின் பங்களிப்பும்கூட அருமை.

யோகிபாபு வரும் ஒரு காட்சி மட்டுமே திரைக்கதையில் ஒட்ட வைத்தது போலிருக்கிறது. அதற்கான ‘ஜஸ்டிபிகேஷன்’ முன்பாதியில் போதுமான அளவுக்கு இல்லை.

ப்ரீத்தா ஜெயராமன், ராதா ஸ்ரீதர் என்று முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்களும் பெண்களாக இடம்பெற்றிருப்பது கல்லூரிப் பெண்களின் கரகோஷங்களுக்கு வழிவகுக்கும். பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் வேறொரு உலகத்தை உணரவைக்கும் கோவிந்த வசந்தாவுக்கு இப்படம் இன்னொரு ‘96’. அதேநேரத்தில், கிளைமேக்ஸில் காஜல், அதிதி பேசும் வசனங்களை மீறி அவரது பின்னணி இசை ஒலிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

பிரபுதேவா, ஃபாரா கான் உட்பட பிரபல கொரியோகிராபர்கள் முதன்முறையாக படம் இயக்கும்போது, திரைக்கதையில் ஒரு ’டான்ஸிங் ரிதம்’ தென்படும். ஹே சினாமிகாவில் அதற்கான வாய்ப்பைத் திரைக்கதை தரவில்லை. அதை ஈடுகட்டும்விதமாக இரண்டு பாடல் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் பிருந்தா. ஒரு நல்ல காதல் படைப்பைத் தந்திருக்கிறார்.

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா வின் அடுத்தடுத்த படங்களில் அந்த ‘டான்ஸிங் ரிதம்’ இடம்பெற்றிருக்கும் என்று நம்பலாம். கூடவே, சமூகத்தின் வேறொரு அடுக்கில் இருக்கும் பெண்களின் மனவோட்டங்களையும் இன்னும் விலாவாரியாக அறியலாம். அதுவே ‘ஹே சினாமிகா’வின் பலம், பலவீனமும் கூட..!


Share the Article

Read in : English