Read in : English

Share the Article

தரைத் தளத்திலும் தலைக்கு மேலுள்ள கூரையிலும் பல வண்ணத்தில் ஒளிரும் விளக்குகள், சுழல் விளக்குகளின் மினுமினுப்புக்கு நடுவே மெட்டாலிக் உடைகளில் ஜொலிக்கும் நாயகன் நாயகி, கூடவே உடலை வளைத்தாடும் நடனம், அதற்கு அச்சாரமிடும் துள்ளல் இசை போன்றவற்றுடன் சிவப்பொளியின் வேறுபட்ட வரிசைகள் கண்களை நிறைத்தால் அதுவே இந்திய தேசத்திற்கான ‘டிஸ்கோ’ யுகம். அதன் ராஜா ஒருவரே.  அவரது பெயர் பப்பி லஹிரி.

தமிழில் நேரடியாக இசையமைக்காவிட்டாலும், தாய் வீடு படத்தில் இடம்பெற்ற ‘உன்னை அழைத்தது பெண்’ பாடல் அவரது புகழைச் சொல்லும். ’அபூர்வ சகோதரிகள்’ படத்தில் இடம்பெற்ற ‘அன்னை எனும் ஆலயம்’ பாடலைக் கேட்பவர்களுக்கு அது டிஸ்கோ பாடலா அல்லது அம்மா செண்டிமெண்ட் பாடலா என்ற குழப்பமே மேலோங்கும். அதையும் மீறி, அப்பாடலில் நம் மனதைப் பறிகொடுப்பதே பப்பியின் வெற்றி.

 வங்காளத்தின் இசை ’தாதா’!

கூலிங் கிளாஸ், கழுத்தில் புரளும் கற்றை முடி, கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் உடை, ஆளையே தரையோடு சாய்க்கும் கணத்துடன் கைகளிலும் கழுத்திலும் தங்க நகைகள், கொஞ்சம் புஷ்டியான தோற்றம். அத்தனையையும் ஒன்று சேர்த்து தனது அடையாளமாகக் கொண்ட கலைஞன் பப்பி லஹிரி. எண்பதுகளில் இந்தி திரையுலகையே ஆட்டுவித்த இசையமைப்பாளர். மிக முக்கியமாக ‘டிஸ்கோ’ எனும் நடனம் இந்தியர்களிடம் தாக்கம் ஏற்படுத்தக் காரணமானவர்.

பாடும் வானம்பாடி’ படத்தில் இடம்பெற்ற ‘ஐ யாம் எ டிஸ்கோ டான்சர்’ பாடலின் தாக்கம் ஏறத்தாழ ஆறேழு ஆண்டுகள் வரை தமிழ் திரையுலகில் நீடித்தது என்றால் இவரது இசையின் வீரியம் பிடிபடும்.

‘பாடும் வானம்பாடி’ படத்தில் இடம்பெற்ற ‘ஐ யாம் எ டிஸ்கோ டான்சர்’ பாடலின் தாக்கம் ஏறத்தாழ ஆறேழு ஆண்டுகள் வரை தமிழ் திரையுலகில் நீடித்தது என்றால் இவரது இசையின் வீரியம் பிடிபடும்.

பப்பி லஹிரியின் இயற்பெயர் அலோகேஷ். இவரது பெற்றோர் அபரேஷ் லஹிரி – பன்சுரி இருவருமே இந்திய செவ்வியல் இசைப்பாடகர்கள். பிரபல இந்தி பின்னணிப் பாடகரும் நடிகரும் இயக்குநருமான கிஷோர் குமார், இவரது தாய் வழி உறவினர். அது மட்டுமல்ல, 3 வயதிலேயே தபலா இசைப்பதில் காட்டிய ஆர்வம்தான், பப்பியின் எதிர்காலமே இசை என்றாக அஸ்திவாரம் இட்டது.

தனது 19ஆவது வயதில் இசையமைப்பாளரான பப்பி லஹிரி, 1973இல் பெங்காலி திரையுலகிலும் தொடர்ச்சியாக இந்தியிலும் இசையமைக்கத் தொடங்கினார். 1976இல் வெளியான ’சல்தே சல்தே’ மூலமாக கவனம் குவித்த பப்பி அதன்பின் நமக் ஹலால் (வேலைக்காரன் ஒரிஜினல்), டிஸ்கோ டான்சர் (பாடும் வானம்பாடி ஒரிஜினல்), ஹிம்மத்வாலா, ஷராபி, பேவபா உள்ளிட்ட பல்வேறு இந்திப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

1986ஆம் ஆண்டில் 33 படங்களுக்கு 180க்கும் மேற்பட்ட பாடல்கள் இசையமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். 303 திரைப்படங்கள். பல்லாயிரம் பாடல்கள், அவற்றில் பெரும்பாலும் சூப்பர் ஹிட்கள் என்றிருந்த பப்பிக்கு ‘டிஸ்கோ ராஜா’ என்பது ரசிகர்கள் வைத்த செல்லப்பெயர்.

 ’டிஸ்கோ’ காய்ச்சல்!

மிதுன் சக்கரவர்த்தி என்ற வங்காள நடிகரை இந்தி திரையுலகில் அமிதாப் பச்சன், ஜிதேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்குப் போட்டியாக மாற்றியது ‘டிஸ்கோ டான்சர்’ திரைப்படம். அப்படத்தின் அடையாளமே பப்பி லஹிரியின் இசைதான். அதுவரை துள்ளலும் மெலடியுமாக இசையமைத்தவர், இப்படத்தில் இருந்து சிந்தஸைசர் இசையைத் தனதாக்கிக் கொண்டார். இதில் இடம்பெற்ற ‘ஜிம்மி ஜிம்மி ஜிம்மி ஆஜா’ பாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனா, ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான் என்று ஆசியா முழுக்கப் பரவி பப்பிக்குப் புகழ் சேர்த்தது. இவ்வளவு ஏன், மைக்கேல் ஜாக்சன் இந்தியாவுக்கு வந்தபோது இவரை நேரில் சந்திக்க வைத்தது இப்படத்திலுள்ள ‘ஐ யாம் எ டிஸ்கோ டான்சர்’ பாடல். அந்தளவுக்கு டிஸ்கோ நடனத்தை வெறி பிடித்த மாதிரி கைக்கொள்ள வைத்தது இத்திரைப்படம். அப்போது தொடங்கிய டிஸ்கோ காய்ச்சல் 90கள் வரை நீடித்தது. தமிழில் இப்படம் ’ரீமேக்’ ஆனபோது நாகேஷின் மகனான ஆனந்த் பாபுவையும், தெலுங்கில் என்.டி.ஆர். மகன் பாலகிருஷ்ணாவையும் நாயகர்களாக அறிமுகப்படுத்த வழி வகுத்தது.

தமிழில் பெரியளவுக்குக் கோலோச்சாவிட்டாலும் தாய் வீடு, அபூர்வ சகோதரிகள், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா, டார்ஸான் என்று சில திரைப்படங்களுக்குத் தனது ஹிட் பாடல்களை அளித்தார் பப்பி. குறிப்பாக ‘அபூர்வ சகோதரிகள்’ படத்திற்காக மெனக்கெட்டு பப்பியை ஒப்பந்தம் செய்தது தேவர் பிலிம்ஸ். அந்தளவுக்கு 80களில் நகர்ப்புற இளைய தலைமுறையிடம் புகழ் பெற்றிருந்தார் பப்பி லஹிரி.

தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவிக்கு கேங் லீடர், ரவுடி அல்லுடு, பிக்பாஸ், ரவுடி இன்ஸ்பெக்டர், நிப்பு ராவா என்று சில மெகா ஹிட்களை தந்தார் பப்பி. கிருஷ்ணா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா நடித்த திரைப்படங்களுக்கும் சூப்பர்ஹிட் பாடல்கள் தந்திருக்கிறார். 2020இல் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘டிஸ்கோ ராஜா’ படத்தில், பப்பியின் டிஸ்கோ பிரபல்யத்தை கௌரவிக்கும் வகையில் ‘ரம் பம் பம்’ பாடலை அவரையே பாட வைத்தார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன்.

 இளையராஜாவும் பப்பியும்..!

எண்பதுகளில் தமிழ் திரையுலகில் வெற்றி வலம் வந்த பல இசையமைப்பாளர்கள் டிஸ்கோ நடனத்திற்கேற்ற இசையைத் தந்திருக்கின்றனர். இளையராஜாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ இதோ’ தொடங்கி ‘வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’, ’பூப்போட்ட தாவணி’, ‘மேகம் கொட்டட்டும்’, ’ஹேய் உன்னைத்தானே’, ‘தத்தோ தலாங்கு தத்தோம்’ உள்ளிட்ட பல பாடல்களில் டிஸ்கோ இசை கொஞ்சும். ‘கலைஞன்’ படத்தில் இடம்பெற்ற ‘கொக்கரக்கோ’, ’எடக்கு மடக்கான’ பாடல்கள் இன்றும் நம்மில் துள்ளலை விதைக்கும். ஆனால், இப்பாடல்களில் கொஞ்சம்கூட பப்பியின் வாசனை இருக்காது.

கிடார், சாக்ஸபோன், கீபோர்டு போன்றவை பப்பி உள்ளிட்ட இந்தி இசையமைப்பாளர்களின் இசையில் ஒலித்ததற்கும், இளையராஜாவின் இசையில் அக்கருவிகள் இடம்பெற்றதற்கும் நிரம்பவே வித்தியாசம் உண்டு. அதுவே, தமிழ்நாட்டில் டிஸ்கோ எனும் பதத்தை வேறுவகையில் தமிழர்கள் உணரக் காரணமானது. மேற்கத்திய இசையுடன் கிராமத்து மெட்டுகளை இணைத்து தந்த துள்ளல் பாடல்கள் பிற இசையமைப்பாளர்களையும் அச்சுழலுக்குள் இயங்கச் செய்தது. டி.ராஜேந்தர் உள்பட மற்ற இசைக்கலைஞர்களும் கூட டிஸ்கோ இசையைப் பெரிதாக தமிழில் கையாளவில்லை.

இளையராஜாவின் மேதைமைஆந்திர தேசம் வரை வந்த ’பப்பி பீவர்’ தமிழகத்தின் இண்டுஇடுக்குகளில் புக அனுமதிக்கவில்லை. தமிழ் தயாரிப்பாளர்கள் பப்பியை சென்னைக்கு அழைத்துவர முயலாததும்அவர் பம்பாயிலேயே பிஸியாக இருந்ததும் அப்படியொரு வாய்ப்பு நிகழாமலேயே செய்துவிட்டது.

இளையராஜாவின் மேதைமை, ஆந்திர தேசம் வரை வந்த ’பப்பி பீவர்’ தமிழகத்தின் இண்டுஇடுக்குகளில் புக அனுமதிக்கவில்லை. தமிழ் தயாரிப்பாளர்கள் பப்பியை சென்னைக்கு அழைத்துவர முயலாததும், அவர் பம்பாயிலேயே பிஸியாக இருந்ததும் அப்படியொரு வாய்ப்பு நிகழாமலேயே செய்துவிட்டது. மலையாளத்திலும் கூட பிற்காலத்தில் ‘குட் பாய்ஸ்’ என்றொரு படத்திற்கு இசையமைத்தார் பப்பி. இது கண்டிப்பாக தமிழ் திரையிசைக்கு இழப்புதான்.

 ஒரு தலைமுறையின் ஆதர்சம்!

ஆரம்பகாலத்தில் பலவண்ணங்களில் அமைந்த ஆடைகளும் தங்க பிரேம் கண்ணாடியும் மட்டுமே பப்பியின் தோற்றத்தைக் கட்டியம் கூறும். டிஸ்கோ சாம்ராஜ்யத்தின் மன்னனாக பிறகு, ஏனோ தங்க நகைகளை அணியத் தொடங்கினார். பிரபல ஆங்கிலப் பாடகர் எல்விஸ் பிரஸ்லியின் ஸ்டைல் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும், அதையே தான் பின்பற்றினேன் என்றும் அவர் இதற்குக் காரணம் சொல்லியிருக்கிறார். ஆனந்த விகடன் இதழுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், ‘இளையராஜா 80களில் இங்கு செய்தது மாபெரும் இசைப்புரட்சி. நிச்சயமாய் கடவுளின் ஆசி நிறையப் பெற்றவர். அப்போது மும்பையில் பிஸியாக இருந்ததால் நான் சென்னைக்கு வர இயலவில்லை’ என்று தெரிவித்திருந்தார். இதுவே, தமிழ் திரையிசை குறித்த அறிதல் அவருக்கு இருந்தது என்பதைக் காட்டும்.

தமிழில் இசையமைக்காவிட்டாலும், அவரது குரல் இங்கு ஒலித்தது. 2012இல் கண்ணன் இசையமைத்த ‘கருப்பம்பட்டி’ படத்தில் ‘டி ஐ எஸ் சி ஒ டிஸ்கோ டிஸ்கோ நாட்டி ராஜா ராஜா’ (Karuppampatti {Tamil Film} Juke Box)

பாடலைத் தமிழில் பாடினார் பப்பி. இப்படம் தாமதமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தைச் சிறிதும் கவராமல் போனது மிகப்பெரும் சோகம். உண்மையில், இப்பாடல் பப்பியின் டிஸ்கோ சாம்ராஜ்யத்துக்கு தமிழ் திரையுலகின் சார்பில் வழங்கப்பட்ட கௌரவப் பரிசு.

உலகம் முழுக்க இன்றும் பப்பி லஹிரியின் பாடல்கள் இந்திய சினிமாவுக்கான ‘ரெட்ரோ’ அடையாளமாகவே கருதப்படுகின்றன. இதுவேஇந்தி திரையுலகில் அவர் அடைந்த இடத்திற்கான வெகுமதி

உலகம் முழுக்க இன்றும் பப்பி லஹிரியின் பாடல்கள் இந்திய சினிமாவுக்கான ‘ரெட்ரோ’ அடையாளமாகவே கருதப்படுகின்றன. இதுவே, இந்தி திரையுலகில் அவர் அடைந்த இடத்திற்கான வெகுமதி. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழ்ந்தவர்களின், தமிழ் திரையிசைக்கு நடுவே இந்தி பாடல்களை விடாமல் தொடர்ந்தவர்களின் மறக்கமுடியாத நினைவுகளில் சில பாடல்களும் கலைஞர்களும் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களில் முதன்மையான இடம் பப்பிக்கு உண்டு. அவர்களின் மனதில் ‘டிஸ்கோ கிங்’ என்ற சிம்மாசனத்தில் பப்பியைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை. அதனை எக்காலத்திலும் எவராலும் மாற்ற முடியாது..

போய்வாருங்கள் ‘டிஸ்கோ ராஜா’! உங்கள் பாடல்கள் எங்களிடம் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும்!


Share the Article

Read in : English