Read in : English

Share the Article

கவிஞர் இந்திரன், தமிழகத்தில் வசிக்கும் மிக முக்கிய கலை விமர்சகர்; மொழிபெயர்ப்பாளர், ஓவியர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகங்கள் கொண்டவர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதிவருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், தமிழக அரசு திருவள்ளுவர் சிலையை, 2000இல் திறந்த போது திருக்குறளில், 133 அதிகாரங்களுக்கு, 133 ஓவியர்களின், வித்தியாசமான ஓவியப் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர்.

பிரிட்டீஷ் கவுன்சில் பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருங்காட்சியகங்களில் உள்ள இந்தியக் கலைப் பொருட்கள் பற்றி கூர்மையாக ஆய்வு செய்தவர். தற்போது வெளியிட்டுள்ள, ‘பிரபஞ்சத்தின் சமையல் குறிப்பு புத்தகம்’ என்ற கவிதை  நூலை, ‘எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என பதிப்புரிமையை துறந்துள்ளார். இது தமிழக படைப்புத்துறையில் முதலில் வெளிவந்துள்ள அறிவிப்பு ஆகும்.

ஒடிய மொழி கவிஞர் மனோரமா பிஸ்வால் மஹபத்ரா எழுதியக் கவிதைகளை, ‘பறவைகள் ஒருவேளை துாங்கிப் போயிருக்கலாம்’ என்ற தலைப்பில் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது படைப்புப் பணியைக் கவுரவிக்கும் விதமாக, மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை, 2012இல் வழங்கியது இந்திய அரசு. கவிதை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, கலை விமர்சனம், ஓவியம், ஆவணப்படம் இயக்கம் என பன்முகமாக இயங்கும் இந்திரன், மானுட வளர்ச்சியில் ஏற்படும் தடைகளையும் தடங்கல்களையும் பற்றி மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்கவர்.

சிறுவர் இலக்கியம், ஓவிய படைப்புகளில் தமிழகத்தின் இன்றைய நிலை பற்றி மனம் திறந்தார். பாகுபாடற்ற மானுட வளர்ச்சிக்காக முன் நின்று குரல் கொடுத்துவரும் இந்திரனுடன், ‘இன்மதி’ இணைய இதழ் நடத்திய உரையாடல்:

கேள்வி: சிறுவர் இலக்கியம் உலகின் சமநோக்கு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததுஅதன் நிலை தமிழகத்தில் இப்போது எப்படி இருக்கிறது

இந்திரன்: தமிழகத்தில் சிறுவர் இலக்கியம் எங்கு இருக்கிறது? தற்காலத்தில் அது அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கேள்வி: வாசிப்பை முன்னிலைப் படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டவர் நீங்கள். உங்கள் இளமைப் பருவம் எப்படி அமைந்திருந்தது…

இந்திரன்: அப்போது எனக்கு, 10 வயது இருக்கும். புதுச்சேரி கொம்பாட்டம் கிராமத்தில் என் உறவினர் நூலகராக பணியாற்றி வந்தார். பள்ளி விடுமுறை நாட்களில், சைக்கிளில்  நூலகத்துக்கு அழைத்து செல்வார். அங்கு மனம் போனபடிப் புத்தகங்களை வாசிப்பேன். அப்படி கண்ணில் பட்டது, கல்வி கோபாலகிருஷ்ணன் எழுதிய நூல்கள். அவை தான், உலகம் பற்றிய பார்வையை அறத்துடன் விரிவு படுத்தின

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ‘பறக்கும் பாப்பா’ என்ற தலைப்பிலான ஒரு நூல். அது இன்றும் நினைவில் பதிந்துள்ளது. அதில் வரும் குழந்தை திடீர் என பறக்கும் திறன் பெற்றுவிடும். பறந்தபடி பல நாடுகளுக்கு செல்லும். அங்குள்ள செய்திகளை சுவாரசியம் குன்றாமல் சொல்லும்.

அதுபோல் ‘எறும்பு உலகம்’ என்றொரு நூல். எறும்புகளின் வாழ்க்கை, உணவு சேகரிப்பு, தற்காப்பு, கூடி வாழும் பண்பு, முன் எச்சரிக்கை போன்றவற்றை மிக அழகாக விவரிக்கும். அதுபோன்ற நுால்களை வாசித்ததால் ஏற்பட்டப் புரிதல் தான் என்னை உயர்த்தியது.

பிரபல ஓவியர் பிகாசோ ஒருமுறை,‘குழந்தைகள் ஓவியராகத்தான் பிறக்கிறார்கள்வளர வளர ஓவியத் திறன் மறைந்து போகிறது’ என பொன்மொழியாக சொல்லியுள்ளார். சிறுவர்களின் திறனை துலக்கி விட்டாலே போதுமானதுசிறந்த ஓவியங்களை படைப்பர்.  


கேள்வி: சிறுவர்சிறுமியருக்கு ஓவியம் கற்றுக் கொடுப்பது அவசியமான ஒன்று தானே

இந்திரன்: பிரபல ஓவியர் பிகாசோ ஒருமுறை, ‘குழந்தைகள் ஓவியராகத்தான் பிறக்கிறார்கள்… வளர வளர ஓவியத் திறன் மறைந்து போகிறது’ என பொன்மொழியாக சொல்லியுள்ளார். சிறுவர்களின் திறனை துலக்கி விட்டாலே போதுமானது. சிறந்த ஓவியங்களை படைப்பர்.

கேள்வி: ஐரோப்பிய நாடுகளில் ஓவியத்தில் எப்படி பயிற்சி கொடுக்கின்றனர்

இந்திரன்: பல ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப்பெரிய லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. அங்குள்ள சுவரில் பிரபல ஓவியர்கள் வரைந்திருந்த பெரிய அளவிலான ஓவியங்கள் இருந்தன. அவற்றின் முன் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. பள்ளி மாணவ, மாணவியர் அதில் அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு அந்த ஓவியத்தின் அடிப்படை கூறுகளை விளக்கி கொண்டிருந்தார் ஆசிரியர். ஓவியத்தின் வகை, வரைந்தவர் பற்றிய விவரங்களை கதை போல் விவரித்துக் கொண்டிரு்நதார். மிக ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். சிறு சலிப்பு கூட தென்படவில்லை. உற்சாகமாக உள்வாங்குவதை கண்டேன். அது, ஒருவகை பயிற்சி. அது போன்று எல்லாம் இங்கு எதுவும் நடக்கவில்லை.

கேள்வி: சிறந்த ஓவியங்கள் உருவாக வேண்டுமெனில் பயிற்சி அவசியமல்லவா

இந்திரன்: அவசியம் தேவை. அந்த பயிற்சி எப்படி அமைய வேண்டும் என்பது முக்கியம். கணிதம் கற்று கொடுப்பது போல், ஓவியமும் கற்பிக்கப்பட வேண்டும். வரைய உதவும் கருவிகளான பென்சில், கிரையான், தாள், பிரஷ் போன்றவற்றை கையாள்வதற்கு முறையாகப் பயிற்சி தரவேண்டும். கற்பனையும் அனுபவமும் அவர்களுக்குள் இருக்கிறது. அவை சிறந்த படைப்புகளை இயல்பாக உருவாக்கிவிடும்.

பிரபல ஓவியர் வான்கா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது ஓவியம் தொடர்பாக, லண்டன் மியூசியத்தில் நடந்த பயிற்சி வகுப்பை காணும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஓவியம் எந்த சூழ்நிலையில் வரைப்பட்டது என்று தான் கற்பித்தார்கள். ஓவியம் வரையும் போது, ஓவியர் வான்கா மனச்சோர்வில் இருந்தார் என்பதை மென்மையாக அறிவுறுத்தினர்.

வான்கா வரைந்த, சைப்ரஸ் மர ஓவியம் மிகவும் பிரபலமானது. சைப்ரஸ் மரத்தின் வளர்ச்சியை உள்வாங்கியபடி தீட்டிய அவரை, மன அழுத்தத்தில் இருந்து விடுவித்தது அந்த ஓவியம். இது போன்ற செய்திகளை போதிக்க வேண்டும்.

கேள்வி: ஓவியம் தீட்டுவதில் உங்களுக்கு துாண்டுகோலாக இருந்தது எது

இந்திரன்: சென்னை, கோடம்பாக்கம் அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு கறுப்பு நிறத்தில் கம்பீரமான தோற்றத்தில் ஒர் ஓவிய ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் பி.பெருமாள். மிகவும் கண்டிப்பும், நெகிழ்வுமாக காணப்படுவார்.

ஒருநாள் ஆப்பிள் ஓவியம் வரையச் சொன்னார். வகுப்பில் எல்லாரும் வரைந்திருந்தனர். என் ஓவியத்தை வித்தியாசப்படுத்தும் வகையில், ஆப்பிள் அருகே சிறு ஈ ஒன்றும் வரைந்திருந்தேன். அதைப் பார்த்தவர், என்னை உற்சாகப்படுத்தினார். ஓவியனாகும் சகல திறனும் இருப்பதாக நம்பிக்கையூட்டினார். அந்த நிகழ்வு பெரும் துாண்டுகோலாக அமைந்தது. ஆர்வத்தை ஏற்படுத்தியது. பின் நிறைய வரைய ஆரம்பித்தேன்.

தமிழகத்தில் நிறைய ஓவியர்கள் உள்ளனர்அவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லைஒருங்கிணைந்து செயல்படும் தன்மை அறவே இல்லைபோட்டி பொறாமையில் உழல்கின்றனர்அதனால் ஓவிய படைப்பகள் சிறப்பாகப் பிறப்பதில்லை.

கேள்வி: தமிழகத்தில் ஓவியர்களின் நிலை எப்படி உள்ளது

இந்திரன்: தமிழகத்தில் நிறைய ஓவியர்கள் உள்ளனர். அவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லை. ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை அறவே இல்லை. போட்டி பொறாமையில் உழல்கின்றனர். அதனால் ஓவிய படைப்பகள் சிறப்பாகப் பிறப்பதில்லை. போட்டியும் பொறாமையும் படைப்பூக்கத்தைக் குறைத்துவிடும். இதை என் நேரடி அனுபவங்களில் இருந்த உறுதி செய்கிறேன். தமிழகத்தில் அறிவு நேர்மை என்பது துளி கூடயில்லை. இந்த நேர்மை இலக்கியம், ஓவியம் போன்ற கலைப்படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களுக்கு மிகவும் அவசியம். ‘இன்டலக்சுவல் இன்டிகிரிட்டி’ என்ற பண்பு குறைந்தால், முதுகெலும்பை முறையாக நிமிர்த்தி நிற்க முடியாது. எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்க தோன்றும். அப்படி வளைந்து கொடுப்பவரிடம் நல்ல படைப்புகளை எதிர்பார்க்க முடியாது. அந்த நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

கேள்வி: இந்த நிலையை மாற்றியமைக்க முடியுமா

இந்திரன்: தமிழக ஓவிய கல்லுாரிகளில், கலை வரலாறு என்ற பாடமே கற்பிக்கப்படுவதில்லை. பள்ளிகளில் அற நெறிகள் குறித்தோ, தார்மீக பொறுப்பு குறித்தோ பாடங்கள் ஏதுமில்லை. சிறுவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இவை மிகவும் அவசியம். பள்ளிகளில் எண், எழுத்து பயிற்சி மட்டுமே கொடுக்கப்படுகிறது; மனசாட்சியடன் எதையும் அணுக வேண்டும் என்பதை வலியுறுத்தி உணர்த்துவதில்லை.

சட்டக்கல்லுாரியில், மாணவ மாணவியர் சட்டங்கள் படிக்கிறார்கள்; சமூக நீதி பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அதற்கான அறங்களை கற்பிக்கும் நிலை எதுவும் அங்கில்லை. மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவம் படிப்பவர்கள், மனசாட்சியுடன் அந்த தொழிலை செய்ய வேண்டும் என்று படிப்பதில்லை.

இயந்திர மனிதன் என்ற ‘ரோபாட்’ உருவாக்கும் போது கூட, மூன்று அறங்களை முதலில் போதிக்கின்றனர். அதில் முதல் போதனை, மனிதனுக்கு தீங்கு செய்யக்கூடாது என்பதாகும். பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது, ‘ஆட்டிடியூட்’ மட்டும் கற்றுக் கொடுத்தால் போதும் என்கின்றனர் பெற்றோர். இது, ‘நான் உயர்ந்தவன்’ என்ற மனப்பான்மையைத்தான் வளர்க்கும். அறிவு மேன்மைக்கு பயன்படாது. ஆணவத்தை உண்டாக்கும். இது போன்று மாற்றியமைக்க வேண்டியவை பல உள்ளன. அப்படி அமைந்தால் தமிழகத்தில் சிறந்த படைப்புகள் மலரும்


Share the Article

Read in : English