Read in : English

Share the Article

பொங்கலை ஒட்டி ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் சிறுவர்கள் இருவர் பிரதமர் மோடியின் மாண்பைக் குறைக்கும் வகையில் பேசியதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதற்குப் பின்னர்தான் அது என்ன காட்சி என்ற ஆர்வம் தூண்டப்பட்டது. அந்தக் காட்சி வைரலானது. மன்னரும் அமைச்சரும் உரையாடுவது போல் சித்திரிக்கப்பட்டிருந்த அந்தக் காட்சியில் இரண்டு சிறுவர்கள் பணமதிப்பிழப்பு, கறுப்புப் பண ஒழிப்பு பற்றி எல்லாம் பேசினார்கள். காட்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடாவிடினும் மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது போல் இருந்தது. அதைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பகிர்ந்திருந்தார். ஆகவே, சாமானியர் பலரும் பார்த்து மகிழ்ந்த அந்தக் காட்சி அரசியல் தலைவர்களது பார்வைக்கும் சென்றது.

ஒருபுறம் இப்படியான காட்சிகள் இயல்பாகப் பரவுகின்றனவா திட்டமிட்டு வைரலாக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. மற்றொரு புறம் உண்மையிலேயே அது சிறுவர்களுக்கான நிகழ்ச்சியா என்றும் கேட்கத் தோன்றுகிறது. முதல் கேள்விக்குப் பதிலில்லை. இரண்டாம் கேள்விக்குப் பதில், இல்லை. ஆனால், அது சிறுவர்களுக்கான நிகழ்ச்சியாகத்தான் முன்வைக்கப்படுகிறது. ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்னும் இந்த நிகழ்ச்சி மட்டும் என்றில்லை விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்னும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, கலைஞர் தொலைக்காட்சியில் செல்லக் குட்டீஸ் என்னும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இப்படிப் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

குழந்தைகள் பற்றிய பிரக்ஞையின்றியேகுழந்தைகள் பங்குகொள்ளும் பாட்டுப் போட்டிகளையும் ரியாலிட்டி ஷோக்களையும் தொலைக்காட்சிகள் தொடர்ந்து நடத்திவருகின்றன.

இந்த நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் பேசக்கூடிய விஷயங்களை குழந்தைகளை வைத்துப் பேச வைக்கும் அவலம் நடக்கிறது.  குழந்தைகள் பங்குகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் இரண்டு மூன்று வயதுக் குழந்தை ஒன்றிடம் புருஷன், பொண்டாட்டின்னா என்ன என்று கேள்வி எழுப்புகிறார் நிகழ்ச்சியை நடத்துபவர். அந்த அரங்கிலிருந்தோர் பலமாகச் சிரிக்கிறார்கள். இன்னொரு குழந்தையிடம் உனக்கு கேர்ள் ஃப்ரண்ட் இல்லையா எனக் கேட்கிறார். இப்படியான கேள்விகள் குழந்தைகள் மனத்தில் உருவாக்கும் பாதிப்புகளைப் பற்றி அறிந்துகேட்கிறார்களா, அறியாமல் கேட்கிறார்களா? இத்தகைய கேள்விகளைப் பெற்றோர் எப்படி அனுமதிக்கிறார்கள். குழந்தைகள் பங்குகொள்ளும் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏராளமானோர் சிரித்தபடியே கண்டுகளிக்கிறார்கள். இதெல்லாம்தான் சிக்கல். குட்டி சுட்டீஸ் போன்று கேரளத்தில் சூர்யா டிவியில் குட்டிப் பட்டாளம் என்னும் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த ஆட்சேபகரமான உரையாடல் தொடர்பாக எழுந்த புகாரின் காரணமாகக் கேரள சிறுவர் ஆணையம் தலையிட்டதால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

ஆண் பெண் உறவு தொடர்பான பாடல்களைப் பொருள் புரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து பாடுகிறார்கள்; அப்படியான பாடல்களுக்கு அர்த்தம் தெரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது ஒரு நேர்காணலில், ஒரு மேடையில் அண்ணன் தங்கையான இரு சிறுவர்கள் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டதைப் பற்றி வேதனையுடன் பகிர்ந்துகொள்கிறார். சில நிகழ்ச்சிகளில் குடும்ப உறவுகள் தொடர்பான கேலிப் பேச்சுகள் உருவம் தொடர்பான கேள்விகள் எனக் குழந்தைகளை வயதுக்கு மீறிய விஷயங்களைப் பேசவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். பார்ப்பதற்கே கூச்சமாக இருக்கும் நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கானோர் பார்த்து மகிழ்கிறார்கள் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு தங்களுக்கென தனி உலகங்களும் முன்னுரிமைகளும் உண்டு. ஆனால் தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அவர்களது வயதுக்குத் தகுந்த மாதிரி இருப்பதில்லை. Pic Source: Pexels

குழந்தைகளின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றை ஆழ்ந்து பரிசீலித்த பின்னர்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகின்றனவா? நிகழ்ச்சிகளின் பின்னணியில் தகுந்த ஆலோசனை வழங்க உளவியல் நிபுணர்கள் உள்ளார்களா? அப்படியெல்லாம் எந்த நடைமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகள் பற்றிய பிரக்ஞையின்றியே, குழந்தைகள் பங்குகொள்ளும் பாட்டுப் போட்டிகளையும் ரியாலிட்டி ஷோக்களையும் தொலைக்காட்சிகள் தொடர்ந்து நடத்திவருகின்றன. அவ்வப்போது, குழந்தைகளின் உளவியலில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விவாதங்களும் எழுகின்றன. என்றபோதும், அவை எல்லாவற்றையும் ஓரங்கட்டிவைத்துவிட்டுத் தமிழர்கள் குழந்தைகள் வீடியோக்களை உற்சாகமாகக் கண்டுகளிக்கிறார்கள்; பரப்பி மகிழ்கிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும்தான் இப்படி இருக்கின்றனவா? இல்லை. அண்மையில் ஒரு சிறுவனைக் கொண்டு தொடங்கப்பட்ட யூடியூப் அலைவரிசை ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் அந்தச் சிறுவன் மிகப் பெரிய வணிக நிறுவனம் ஒன்றின் விளம்பரப் படத்தில் பெரிய மனுஷத் தோரணையில் வலம் வந்தான். இதே போல் சில ஆண்டுகளுக்கு ஒரு குழந்தை சேட்டை பண்ணா அடிக்கக் கூடாது கொணமா வாயில சொல்லணும் என்று கூறியது. அதை ஒட்டுமொத்த இணைய உலகத்தினரும் பார்த்துச் சிரித்தார்கள். இன்னொரு சிறுவன், சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா என்ற கேள்விக்குச் சாப்பாடு முக்கியம் என்று சொன்ன காட்சியைக் கொண்டிருந்த வீடியோவும் பரவலானது.

குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுவதால் இந்தச் சமூக வலைத்தள யுகத்திலே அதற்கு ஒரு சந்தை மதிப்பு கிடைத்துவிடுகிறது.

குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுவதால் இந்தச் சமூக வலைத்தள யுகத்திலே அதற்கு ஒரு சந்தை மதிப்பு கிடைத்துவிடுகிறது. குழந்தைகளின் இயல்பான பேச்சு ரசிக்கத்தக்க விதத்திலே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதை ரசிப்பதுபோல் குழந்தைகள் கனமான விஷயங்களைப் பேசி நடிப்பதை ரசிக்க முடியுமா? குடும்பத்துடன் அமர்ந்து குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றைக்கூட முகம்சுளிக்காமல் இயல்பாக ரசிக்க முடிவதில்லை.

குழந்தைகள் அவர்களுக்கான அறிவுடன் பிறக்கிறார்கள். ஆகவே, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் பெரியவர்கள் அவ்வளவு எளிதில் விடையளித்துவிட முடியாது என்பது உண்மையே. குழந்தைகளின் இந்த அம்சத்தைப் பெரியவர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்களுக்கு வாகாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தாங்கள் வெளிப்படுத்த விரும்பும் கருத்தை, விமர்சனத்தைக் குழந்தைகள் வழியே பெரியவர்கள் வெளிப்படுத்திவிட்டுத் தப்பித்துக்கொள்வது ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இப்படிக் குழந்தைகள் வாயிலாக ஒரு கருத்தைச் சொல்வதும் பரப்புவதும் புராண காலத்துத் தொடர்ச்சிதான். என்ன பாட்டி பழம் சுடுகிறதா என மூதாட்டி ஔவையிடம் விநயத்துடன் வினவி, அறிவில் முதிர்ந்த ஔவை மூதாட்டியையே ஆட்டங்காண வைத்த முருகப் பெருமான் ஆண்டவன் என்றாலும் சிறுவன்தானே?

பெரியவர்கள் தாங்கள் கேட்க விரும்பிய கேள்விகளைக் குழந்தைகளைக் கொண்டு கேட்கிறார்கள்ஆகஇங்கே சூத்ரதாரிகள் பெரியவர்கள்குழந்தைகள் அவர்கள் ஆட்டியபடி ஆடும் வெறும் தோல்பாவைகள்.

புராணத்தில் வேர் விட்ட இந்தப் போக்கு திரைப்படங்களிலும் தென்படுகிறது. வேதம் புதிது திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிறுவன் ஷங்கரன், “பாலுங்கிறது உங்க பேரு பின்னாடி இருக்குற தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?” எனக் கேட்பான். இந்தக் காட்சியில் இயக்குநர் தான் வைக்க விரும்பிய விமர்சனத்தைச் சிறுவன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தகைய காட்சிகளில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்தக் கேள்விகளோ விமர்சனங்களோ சிறுவர்கள் தாமாக எழுப்பியவை அல்ல. பெரியவர்கள் தாங்கள் கேட்க விரும்பிய கேள்விகளைக் குழந்தைகளைக் கொண்டு கேட்கிறார்கள். ஆக, இங்கே சூத்ரதாரிகள் பெரியவர்கள், குழந்தைகள் அவர்கள் ஆட்டியபடி ஆடும் வெறும் தோல்பாவைகள்.

ஆகவே, தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தனி மனிதர்களும் வணிக வெற்றிக்காக குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைத் தொழிலாளிகளைக் கண்டு இரங்கும் நாம் இப்படியான காட்சிகளைப் பார்த்து ரசிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? குழந்தைகளைச் சுரண்டுகிறோம் என்று தெரிந்தபோதும், அதைப் பற்றிய கவலையின்றி அந்தக் காரியங்•களைச் செய்வது நியாயமா? பண்பாடு பற்றியும் பகுத்தறிவு பற்றியும் உலகுக்குப் பாடமெடுக்கும் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் முடிவு கிடைக்கலாம். சிந்திப்பார்களா?


Share the Article

Read in : English