Read in : English

Share the Article

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அடுத்த நாள், யூடியூபர் மாரிதாஸ், திமுக ஆட்சியில் தமிழகம் மற்றொரு காஷ்மீராக உருவாகிவருகிறது என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் எந்த வகையான தேசத் துரோகத்தையும் செய்யக்கூடிய குழுக்களை உருவாக்க சுதந்திரம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற நிலையில் எந்த ஒரு சதித் திட்டமும் தீட்டப்படலாம். அத்தகைய பிரிவினைவாத சக்திகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் அந்த ட்வீட்டில் அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு போலீஸ் மாரிதாஸுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. மாரிதாஸ் தமது கருத்துக்கு ஆதாரமாக எதையும் முன்வைக்கவில்லை அல்லது ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறவில்லை.

இங்கிலாந்தில் உள்ள வெள்ளையரல்லாதவர்களின் விசுவாசத்தை பிரிட்டிஷ் அரசியல்வாதியான நார்மன் டெப்பிட்  சோதிக்க முற்பட்டார். மற்ற நாடுகளின் கிரிக்கெட் அணிகளை உற்சாகப்படுத்துகிறார்களா என்பதுதான் அந்த சோதனை. அதற்கு டெப்பிட் சோதனை என்று பெயர். கருணாநிதியைப் பொருத்தவரை இது எப்படி? இந்திய அணியின் விளையாட்டை தாம் விரும்பி பார்ப்பதாகவும், ஆனால், குறிப்பாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆட்டமிழப்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருந்தார். ஸ்ரீகாந்த், இந்தியர். அதேசமயம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கருணாநிதி இந்திய அணியை ஆதரித்தார். அதே நேரத்தில், குறிப்பாக தமிழ்நா£ட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆட்டமிழந்தால் வருத்தப்பட்டார்.

பெரியார் மற்றும் திராவிட கழகத்தினர் காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள். சுதந்திரம் கிடைத்த நாளான 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியை பெரியார் துக்க தினமாக கருதினார். ஆனால், திமுக நிறுவனரான அண்ணா, பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறியதையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்ததையும் வரவேற்றார். அரசியலமைப்புச் சட்டத்தின் 16-வது திருத்தத்தின் மூலம் பிரிவினைவாதம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் வரை திராவிட நாடு கொள்கையை திமுக ஆதரித்து வந்தது.

இந்தியா பல்வேறு பிராந்தியங்களையும் கலாச்சாரத்தையும் மொழிகளையும் கொண்ட நாடு. தமிழர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவே நினைக்கிறார்கள். அதற்காக இந்தியைக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. அதேசமயம், தமிழன் என்ற அடையாளத்தையும் விட்டுவிட விரும்புவதில்லை. அத்துடன் தனிநாடாகப் பிரிந்து வாழவும் விருப்பமில்லை. அதேசமயம், எந்த மொழியையும், குறிப்பாக இந்தியை தனித்து முன்னிலைப்படுத்துவதையும் விரும்புவதில்லை. இந்தி தெரியாததால் இந்தியன் இல்லை என கருதிவிடக்கூடாது என்று பெரும்பாலான தமிழர்கள் நினைக்கிறார்கள். தமிழர்களின் இந்த உணர்வைத் தான் திமுக பிரதிபலிக்கிறது.

மாரிதாஸின் ட்வீட்டுகள் சமூக ஊடகங்களில் பொதுவாக காணப்படுபவை. தனிப்பட்ட உரையாடல்களில் கிசுகிசுக்கப்பட்டவை, ஊகங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை, பேசத் தெரியாமல் பேசுவது இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் பொதுப் பார்வையாக கூறப்படுபவை. பொதுவாக ஊடகங்களில் வெளிவரும் எந்த ஒரு விஷயத்தையும் அதை வெளியிடும் முன்பு அவற்றை சரிபார்ப்பது வழக்கம். சமூக ஊடகங்களில் அப்படி எந்த நடைமுறையும் இல்லை. அங்கு அப்படி ஒரு சரிபார்த்துக் கண்காணிக்கும் முறையும் இல்லை.

இதழியலில் கடைப்பிடிக்கப்படும் செய்தியின் முக்கியத்துவம், சமநிலை, சரிபார்த்தல், முறையான வார்த்தைகள் பிரயோகம், செயல்பாடுகளில் நிதானம் போன்றவற்றை சமூக ஊடகங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள் குறித்து வெளியான பதிவுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் மாரிதாஸ் செயல்பட்டுள்ளார். ஆனால், இதுகுறித்த ட்வீட்டுகள் நல்ல நோக்கத்தில் வெளியிடப்பட்டதாகவோ, நல்ல ரசனைக்குரியதாகவோ இல்லை.

சமூக ஊடகங்களின் எழுச்சிக்கு முன்பாக, • தகவல்களின் நம்பகமான ஆதாரமாக இருந்தது பத்திரிகைகள்தான். தற்போது சக்தி வாய்ந்த குழுமங்களின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் குறிப்பிட்ட குடும்பத்தினரால் நடத்தப்படும் வர்த்தகமாகவோ, கார்ப்பரேட் நிறுவனங்•களால் நடத்தப்படுவதாகவோ அல்லது அரசியல் சார்புடையவர்களால் நடத்தப்படுவதாகவோ ஊடகங்கள் இருக்கின்றன. செய்திகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை வெளியிடுவதிலும் தொழில்முறைத் திறனும் அறநெறிகளும் அளவுகோலாக இருக்கவில்லை. பெரும்பாலான ஊடகங்கள் எதை வெளியிட வேண்டும் எதை வெளியிடக்கூடாது என்று தங்களது தேவைகளுக்கேற்ப நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. முழுமையாக அறநெறி சார்ந்து செயல்படும் ஊடகங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

வெகுஜன ஊடகங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் தரம் வளரவில்லை. இதற்கிடையே, இந்த போக்கிற்கு மாற்றாக சமூக ஊடகங்கள் வந்தன.  தற்போது, வெகுஜன ஊடகங்களுக்கு பதிலாக பலருக்கு செய்திகள், தகவல்கள் மற்றும் கருத்துகளை தெரிவிக்கும் களமாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. வெகுஜன ஊடகங்கள் வெளிப்படையாகவும், நேர்மையுடனும், துணிச்சலுடனும் செயல்படத் தவறிவிட்டதால், பலர் சமூக ஊடகங்களை நோக்கி செல்லத் தொடங்கினர்.

பேச்சுரிமையை புனித உரிமையாக இந்திய அமைப்பு கருதவில்லை. சமூக சீர்கேடுகள் உருவாகும்போது நமது சட்டம் பேச்சுரிமையை கட்டுப்படுத்துகிறது. உண்மையாக இருந்தாலுமே மக்கள் நலனுக்கு உகந்த விஷயமாக இருந்தால்தான் வெளியிட முடியும். தனிப்பட்ட விஷயங்•களை, தனிநபருக்கு பாதகம் ஏற்படுத்தும் விஷயங்களை, அது உண்மையாக இருந்தாலும் அதைப் பிரசுரிக்கக்கூடாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதையும் மீறி பிரசுரித்தால் அது அவதூறாகக் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருப்பதால்தான், அதை அரசும் அதிகார அமைப்புகளும் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாகி விடுகின்றன. இதற்கு எந்தக் கட்சிகளுமே விதிவிலக்கு இல்லை.

ஊட்டி ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டதற்காக, நாடு முழுவதும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ப. சிதம்பரத்துக்கு எதிராக ட்வீட் வெளியிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்த தயங்கவில்லை. கந்த சஷ்டி கவசம் குறித்து தவறான பிரசாரம் செய்ததாக அதிமுக அரசு கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுத்தது. மனித உடலின் பல்வேறு பாகங்களை முருகப் பெருமானின் வேல் காக்கிறது என்று கந்த சஷ்டி கவச பாடல்களில் உள்ளதை குறிப்பிட்டு கிண்டல் செய்தற்காக அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. அந்தப் பாடலி

ன் உள்ளர்த்தைப் புரிந்து கொள்ளாமல் கொச்சைப்படுத்தியது சரியல்ல. தியான நிலை அடைய ஒவ்வொரு அங்கமும் நெகிழ்ச்சித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் பல்வேறு மதங்களில் இருந்து வரும் ஒரு கோட்பாடு. இது ஒருபுறம் இருந்தாலும், விமர்சனம் செய்ததற்காக கைது செய்ததும் சரியல்ல. அதிமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த பாஜகவின் வேல் யாத்திரை நடந்த சமயத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு கருத்தைச் சொல்வதற்கு கருப்பர் கூட்டத்திற்கும் உரிமை இருக்கிறது. மாரிதாஸ் கைதுக்கும் அரசியல் நோக்கம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

சமூக நல்லிணக்கத்துக்கு பாதகம் ஏற்படுத்தும் என்று கருதி இந்துத்துவா கருத்துகளை வெளியிடும் சமூக வலைத்தளங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரைகுறை உண்மைகள், வதந்திகள், மதவெறியைத் தூண்டுதல், மோசமான கீழ்த்தரமான ரசனை மற்றும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தவறாக சித்தரித்தல் ஆகிய விவகாரங்களில் சமூக ஊடகங்களை மத்திய, மாநில அரசுகள் எப்படி ஜனநாயக முறையில் கையாளப் போகின்றன? எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதே சமூகத்தின் ஜனநாயக முதிர்ச்சியைக் காட்டும்.

சமூக ஊடகங்கள் பேச்சு சுதந்திரத்துக்கான நமது உறுதிப்பாட்டை சோதிக்கின்றன. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 16-வது சட்டத் திருத்தம் நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க பேச்சுரிமைக்கு கட்டுப்பாடுகளை அனுமதிக்கிறது. சமூக ஊடகங்கள் அதற்கு சவாலாகத் திகழ்கின்றன.

ஊடகங்கள் என்பதே ஒரு வகையில் காட்சிப்பிழை என்றே சொல்ல வேண்டும். பல்வேறு சம்பவங்களை மட்டுமே வாழ்க்கை என்று ஊடகங்கள் காண்பிக்க முயல்கின்றன. ஆனால், அதற்கும் வெளியே மக்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகள் மண்டிக்கிடக்கின்றன.

 


Share the Article

Read in : English