English தமிழ்

Share the Article

காட்டில் எறும்பு, தும்பி போன்ற உரியினங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து கற்ற வித்தைகளை, கலையாக, சடங்காக பின்பற்றிய காணி பழங்குடியின மக்கள் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த கலைகள் அழியும் நிலையில் உள்ளன.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் வசிக்கும் காணிப் பழங்குடி மக்களின், பழக்க வழக்கங்கள் தனித்துவம் மிக்கது. பிறப்பு முதல் இறப்பு வரை பாடல், நடனங்களால் நிறைந்தது. தோற்றப்பாட்டு, தெரட்டுப்பாட்டு, ஊஞ்சல்பாட்டு, துள்ளல்பாட்டு, சாற்றுப்பாட்டு, மழைத்திரட்டுப்பாட்டு, பாசனப்பாட்டு, சம்மதப்பாட்டு, வாழ்த்துப்பாட்டு, மந்திரப்பாட்டு, கதைப்பாட்டு, தனிப்பாட்டு என பருவங்களை கலையாக மாற்றி வாழ்ந்தனர். காலத்தையும், சூழலையும் கலையாக பரிமாறும் நுட்பத்தை அறிந்திருந்தனர்.

மர உரி நடனம், கொறத்திக்களி போன்ற நடனங்கள், முக்கிய சடங்குகளின் போது நிகழ்த்தப்பட்டது. பழமொழிகள், போதனையாகவும், விடுகதைகள் வாழ்வின் சிக்கல்களை தீர்க்கும் நுணுக்கங்களாகவும் அமைந்திருந்தன. இவை, காணி பழங்குடி வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தன.
வளரிளம் பருவம் அடைந்த பெண்ணை, ‘திரண்டு விட்டாள்’ என்று கூறுவர். பருவம் அடைந்த பெண்ணை, விளை நிலத்தில் பெரிய பந்தலிட்டு, ஏழு நாட்கள் தங்க வைப்பர். அந்த நாட்களில், குளிக்க அழைத்து செல்லும்போது, ‘தெரளிப்பாட்டு’ என்ற ஒருவகை பாடல் பாடுகின்றனர். உடல் வளர்ச்சியால் ஏற்படும், மாற்றங்களை பெண்ணுக்கு அறிவிக்கும் வகையில் இது பயன்பட்டது.

  திருமண நிகழ்வுக்கு முன், சம்மதப்பாட்டு என்ற கலைவடிவம் பாடப்பட்டது. அதாவது, மணம் புரியும் ஆண் – பெண் இசைவு பெற பின்பற்றப்படும் கலை வடிவம் இது. திருமணத்தின் போது, மணமகன் – மணமகளை வாழ்த்தி உறவினர் பாடுவது, வாழ்த்துப்பாடல் எனப்படுகிறது.

திருமண நிகழ்வுக்கு முன், சம்மதப்பாட்டு என்ற கலைவடிவம் பாடப்பட்டது. அதாவது, மணம் புரியும் ஆண் – பெண் இசைவு பெற பின்பற்றப்படும் கலை வடிவம் இது. திருமணத்தின் போது, மணமகன் – மணமகளை வாழ்த்தி உறவினர் பாடுவது, வாழ்த்துப்பாடல் எனப்படுகிறது. இதன் மூலம் புதிய வாழ்வில் அடிஎடுத்து வைப்போருக்கு, ஒரு கதையை மையமாக வைத்து வாழ்க்கை நெறி அறிவுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.
குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அதை தீர்க்க மந்திரப்பாடல் பாடப்பட்டது. வனத்தில் பொருட்கள் சேகரிக்க, மீன் பிடிக்க, வேட்டையாட, விவசாயத்தின் போது என தனித்தனியே மந்திரப்படால்கள் உள்ளன. இவை, அந்த செயல்பாடுகளின் நுட்பங்களை அறிவிக்கும் வகையில் உள்ளன.

இந்த பழங்குடி சமூகத்தில் கற்பித்தல் என்பது செயல்வழியில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, இயற்கை வழியில் கற்றல் முறை தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டது. மழைத்திரட்டுப்பாடல் என்பது, பாரம்பரிய விவசாய வழிமுறையை வலியுறுத்தி, சடங்கு வழியாக புலப்படுத்த பாடப்படுகிறது. அடுத்த தலைமுறைக்கு, தொழில் நுட்பத்தை பகிரும் கலை உத்தி இது.

ஒருவர் மரணமடைந்தால், பிறப்பு முதல் இறப்பு வரை, அவரது வாழ்க்கையை உணர்த்தும் வகையில், தோற்றப்பாடல் பாடுவர். சமூகத்துக்கு அவர் செய்த நன்மைகளை குறிப்பிடும் வகையில் அமைந்தது. அந்த குடும்பத்தை, ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமையும். காணி பழங்குடி சமூகத்தில் முதியவர்களை, பிலாத்துக்காணி என்பர். நோய் நீக்கும் மருத்துவராக செயல்படுவார். நோயாளி முன், தும்பி இலையை தரையில் பரப்பி, அதன் மீது பழம், வெற்றிலை, பாக்கு படைத்து, அதன் முன் அமர்ந்து வேண்டுதல் செய்வார். மந்திரங்களைக் கூறுவார். அப்போது அந்த ஆவி பிலாத்திக்காணி உடலில் இறங்கி, நோய்தீர்க்க உதவுவதாக நம்புகின்றனர். தற்போது, இந்த பழக்கம் அனேகமாக அழிந்துவிட்டது. நோய் ஏற்பட்டால், மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

விவசாய உற்பத்தி அதிகரிக்க, மலைத்தெய்வங்களை வழிபட பல வடிவங்களில் சாற்றுப்பாடல் பாடுகின்றனர். அப்போது, ‘கொக்கறை’ என்ற இசைக் கருவியை இசைக்கின்றனர். பொதிகைமலை, அகத்தியமுனிவரிடம் இதைக் கற்றதாக நம்புகின்றனர்.

விவசாய உற்பத்தி அதிகரிக்க, மலைத்தெய்வங்களை வழிபட பல வடிவங்களில் சாற்றுப்பாடல் பாடுகின்றனர். அப்போது, ‘கொக்கறை’ என்ற இசைக் கருவியை இசைக்கின்றனர். பொதிகைமலை, அகத்தியமுனிவரிடம் இதைக் கற்றதாக நம்புகின்றனர். இதற்கு பல வாய்மொழிக் கதைகள் உள்ளன.

நடனத்தை, துள்ளல் என அழைக்கின்றனர். தும்பித்துள்ளல், சோணன் துள்ளல், கலித்துள்ளல், பேயன் துள்ளல் போன்றவை இவர்களின் நடன வகைகள். இவை வித்தியாசமாக இருக்கும். இயற்கையுடன் இயைந்து இருக்கும். கலை நிகழ்ச்சியில் ஆண், பெண் குழுக்களாக பிரிந்து பாடுவர். அப்போது, நடுவில் அமர்ந்திருப்பவர், தும்பி என்ற தட்டாம்பூச்சி பறப்பது போல் துள்ளிக்குதித்து ஆடுவார்.

விழா நாட்களில் இரவில் பெண்கள் கூடி பாடுவர். அதில் ஒரு பெண்ணின் உடலில், சோணன் இறங்கித் துள்ளும் என, நம்புகின்றனர். சோணன் என்பது காட்டில் வாழும் ஒருவகை எறும்பு. அந்த எழும்பு ஊர்வது போலவே, துள்ளல் நடனம் ஆடுவர் பெண்கள். பழங்காலத்தில் வாழ்ந்த ராட்சசர்களின் ஆவி, நன்மை செய்வதாக நம்பி, பேயன் துள்ளல் என்ற வகை நடனத்தை நிகழ்த்தி வந்தனர். ராட்சதனை, பேயன் என்கின்றனர். பேயனாக, பாத்திரம் ஏற்று நடனமாடுபவர், தரையில் நீண்டதுாரம் புரண்டு புரண்டு பயங்கர ஒலி எழுப்புவார். இவ்வகை நடனத்தில், அதிகம் பங்கெடுப்பது பெண்கள்தான்.

கலித்துள்ளல் என்ற ஒருவகை நடனம் ஆடிவந்தனர். இது முற்றிலும் வேறுபட்டது. கலி என்றால் தெய்வம். சங்கும், பறையும் இசைத்து, தெய்வத்தை மகிழ்விக்க பாடுவர். காட்டில் செடிகொடிகளை நினைவில் கொள்ளும் வகையில் இந்த கலை நிகழ்த்தப்பட்டது. நடனங்களை, ஆவிகளோடு தொடர்புபடுத்தும் வழக்கம் இந்த பழங்குடி மக்களிடம் உள்ளது. அவற்றில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன.
கார்த்திகை மாதத்தில், குழுவாக இணைந்து, காணிமக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு சென்று, பசனப்பாட்டு என்ற கலையை நிகழ்த்துகின்றனர். இதனால், நோய் அண்டாது என நம்புகின்றனர்.

காட்டில் உள்ள இறஞ்சி என்ற வகை மரப்பட்டையை உரித்து, ஆடை போல் உடுத்தி, ஆண்களும் பெண்களும் குழுவாக, மரஉரி என்றவகை நடனம் ஆடும் வழக்கமும் இருந்து. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையின் தொன்மைத்தை இது காட்டுகிறது. வட்டமாக நின்று, மர உரலை நடுவில் வைத்து, பெண்கள் கோலை அடித்தும், ஆண்கள், வில் அம்பு வைத்தும் ஆடும் வழக்கமும் இருந்தது. இவை எல்லாம் தற்போது வழக்கொழிந்து வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே உரப்பாறை என்ற ஊரில் சாஸ்தா கோவிலில் மட்டும் தற்போது சாற்றுப்பாட்டு நிகழ்த்தப்படுகிறது. பத்துகாணி, ஆறுகாணி ஆகிய கிராம பகுதிகளில், ஓணம் பண்டிகையின் போது, தும்பித்துள்ளல் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. இவை தவிர, மற்ற கலைகள் அருகிவிட்டன.

வனச்சட்டம், காணி பழங்குடிகளின் பண்பாட்டில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையிடம் பெற்ற அறிவை, கலையாக திரட்டி வைத்துள்ளனர் காணிகள். அதிவேக மாற்றங்களால் அவை அழிந்து வருகின்றன. அவற்றை திரட்டி பதிவு செய்தால், பண்பாட்டு ரீதியாக பொது சமூகத்துக்கு பயன்பட வாய்ப்பு உண்டு. மானுடவியல் பற்றி ஆராயும் பல்கலைக்கழகங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.


Share the Article