English தமிழ்

Share the Article

எந்த மொழி சினிமாவானாலும், மழை என்பது எப்போதும் ஒரு பேண்டஸி. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத வேதனைகளானாலும், ஏக்கங்களானாலும், ஆசைகளானாலும், அபிலாஷைகளானாலும், கதாபாத்திரங்களின் மீது படரும் மழைத்துளி அவற்றை மனதுக்குள் இருந்து இழுத்துவரும்.

குறிப்பாக, நாயகன் மனச்சோதனைக்கு உள்ளாகும்போதெல்லாம் வானம் கண்ணீராய்க் கொட்டும். இன்று, இது ரசிகர்களுக்கு நன்கு பழகிப்போன ‘க்ளிஷே’வாகி விட்டது. சோகம்தான் என்றில்லை, சுகமான தருணங்களையும் திரையில் மழையே மொழிபெயர்த்து வந்திருக்கிறது பாடல்கள் வழியே.

சிச்சுவேஷனுக்கு பாட்டு என்ற காலம் மலையேறியபிறகு, திரையில் மழை பெய்வதுகூட பாடலுக்கான காரணமாகிப் போனது. சினிமாவில் மழையை ஒரு நுட்பமாகப் பயன்படுத்திய காலம் முதல் தற்போது வரை இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சினிமாவில் மழையை ஒரு நுட்பமாகப் பயன்படுத்திய காலம் முதல் தற்போது வரை இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்

60களில் மழைப்பாடல்கள்!
மழை என்றதுமே மனதுக்குள் ‘ரொமான்ஸ்’ துள்ளாட்டம் போடும். அதற்குக் காரணம் தமிழ் சினிமாதான். ‘மழையில நனைஞ்சா சளி பிடிக்கும்’ என்று சொன்ன தலைமுறைதான், திரையில் ஹீரோவும் ஹீரோயினும் மழையைக் கட்டிக்கொண்டால் ஆரவாரித்தது. ’சபாஷ் மீனா’ படத்தில் இடம்பெற்ற ‘காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம்தானோ’ பாடலில் காதலும் மழையும் போட்டி போட்டிக்கொண்டு நிரம்பித் ததும்பும். இப்பாடல் காட்சியில் சிவாஜியும் மாலினியும் குழந்தைகளைப் போல தம் மீது விழும் நீர்த்துளிகளை ரசித்திருப்பார்கள்.

‘தேர்த்திருவிழா’ படத்தில் வரும் ’மழை முத்து முத்து பந்தலிட்டு கிட்ட கிட்ட தள்ளுது’ பாடலில் மழையுடன் போட்டி போட்டிக்கொண்டு காதலில் நனைந்திருப்பார்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். இதே போன்றதொரு சூழலிலேயே, ‘நம்நாடு’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி’ பாடல் வரும். ஆனால், இப்பாடலில் எம்ஜிஆர் தனித்திருக்க, ஜெயலலிதா மட்டும் மழையில் நனைந்தபடி காதலைக் கூறுவார்.

‘பணக்காரக் குடும்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா’ பாடலில், மழைக்கு ஒதுங்கிய இடத்தில் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் காதல் ரசத்தைப் பிழிந்திருப்பார்கள். கிட்ட்த்தட்ட இதே ரகத்தில் ’நான்’ படத்தில் மழையில் நனையாமலேயே ‘போதுமோ இந்த இடம்’ என்று காருக்குள் ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் டூயட் பாடியிருப்பார்கள்.

70களில் ஜெய்சங்கரும் சிவகுமாரும் மழையில் நனைவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’யில் வரும் ‘இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது’ பாடலில் உஷா நந்தினியுடன் நனைய நனைய ஆடியிருப்பார் ஜெய்சங்கர். ‘குலக்கொழுந்து’ படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் ‘அட என்னங்க இது’ என்று பாடும் வரை இவ்வழக்கத்தைத் தொடர்ந்தார்.

’பொண்ணுக்கு தங்க மனசு’ படத்தில் வரும் ‘தேன் சிந்துதே வானம்’ பாடலில் ஜெயசித்ராவோடு டூயட் பாடியிருப்பார் சிவகுமார். இப்பாடலுக்கு இசை இளையராஜாவின் ஆசானாகவும் பின்னர் அவரோடு சேர்ந்தும் பணியாற்றிய ஜி.கே. வெங்கடேஷ்.

ராஜாவின் இசையில் மழை!
ஒரு இளம் விதவையின் விரகதாபத்தை ஒரு காமக் கொண்டாட்டமாக மழை மடை மாற்றுவதை அழகுறச் சொல்லும், ‘இன்று நீ நாளை நான்’ படத்தில் இடம்பிடித்த ‘பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ பாடல். இப்பாடலில் லட்சுமி ஏற்ற பாத்திரத்தின் அபிலாஷைகளை மனதின் ஆழத்திலிருந்து தூர் வாரி எடுக்க, அதனை ஏற்கமுடியாமல் தடுமாறும் சிவகுமாரின் பாத்திரம். இக்காட்சிகள் ‘லொள்ளுசபா’ கிண்டல்களுக்கு இடம்தந்தாலும், இப்பாடலும் இதன் பின்னணியும் கிளாசிக் என்பதில் ஐயமில்லை.

ரஜினி, கமல் தலைமுறையிலும் கூட மழையின் பேயாட்டம் ஓயவில்லை. ‘பாயும் புலி’யில் ராதாவோடு சேர்ந்து ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ என்று ஆடியிருப்பார் ரஜினிகாந்த். அந்தபக்கம், ‘மேகம் கொட்டட்டும்’ என்று ’எனக்குள் ஒருவன்’ படத்தில் மழைக்கு டிஸ்கோ கற்றுக் கொடுத்திருப்பார் கமல்ஹாசன்.

‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடல் அக்கதைக்கு மட்டுமல்ல, நம் மனதின் குறைகளுக்கும் மழை தீர்வு கண்டது போன்றிருக்கும். இப்பாடல்களின் மழையின் ஒலியையும் இசையின் ஒரு பகுதி ஆக்கியிருப்பார் இளையராஜா. ‘சலங்கை ஒலி’ யின் இறுதியில் வரும் ‘தகிட ததிமி’ பாடல், முழுக்க முழுக்க பரதக்கலையின் தனி ஆவர்த்தனம். அதற்கிணையாக மழைக்கும் ஒரு பங்கு வழங்கியிருப்பார் இயக்குனர் கே.விஸ்வநாத்.

’மேகம் கருக்குது மழை வரப் பாக்குது’, ‘மேகம் கருக்கையிலே உள்ள தேகம் குளிருதடி’, ’ஜலக்கு ஜலக்கு சேலை அதை கட்டிக்கிட்டாலே’, ’இதயமே இதயமே’ என்று பாடல் வரிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மழையைப் படரவிட்டிருப்பார் ராஜா. அவரது காலகட்டத்திற்கு முன்னும்பின்னும் சங்கர்-கணேஷ், அம்சலேகா, தேவேந்திரன் உட்படப் பலரும் ரசிகர்களை மழைப்பாடல்களால் குளிர்வித்திருக்கின்றனர்.

எத்தனை பாடல்கள் இருந்தாலும், ‘ராஜா கைய வச்சா’ படத்தில் இடம்பெற்ற ‘மழை வருது மழைவருது குடை கொண்டு வா’ பாடல் என் மனதில் என்றும் இனிக்கும். இதுவும் சரி, ‘செந்தமிழ் பாட்டு’வில் உள்ள ‘சின்னச் சின்ன தூறல் என்ன’ பாடலானாலும் சரி. மழைச் சத்தம் கேட்டவுடன் இப்பாடல் சந்தம் நெஞ்சில் மெல்லப் பரவும்.

மழையும் மணிரத்னமும்!
இன்றைய தலைமுறைக்கு, மழைப்பாடல் என்றதுமே ‘ஓஹோ மேகம் வந்ததோ’ பாடல்தான் நினைவுக்கு வரும். வீட்டில் நடைபெறும் திருமணப் பேச்சைத் தவிர்ப்பதற்காக மாலை முழுவதும் மழையில் நனைந்தபடி ரேவதி ஆடுவதுதான் இப்பாடலின் பின்னணி. அதற்கேற்ப, ஒரு இளம்பெண்ணின் குதூகலமான மனம் இப்பாடலில் தெரியும்.

கிட்டத்தட்ட இதே சாயலில், ‘புன்னகை மன்னன்’ படத்தில் வரும் ‘வான்மேகம்’ பாடலில் மழை நடனம் புரிந்திருப்பார் ரேவதி. இரண்டுக்கும் இசை ராஜாதான். ’இதயத்தை திருடாதே’ படத்தில் இடம்பெற்ற ‘ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்’ பாடலும் கூட இதே ரகம்தான்.

‘நாயகன்’ படத்தில் வரும் ‘அந்திமழை மேகம்’ பாடல், வேலு நாயக்கர் எனும் பாத்திரத்தின் வாழ்வு ஏற்றம் பெற்றதை எடுத்துக்காட்டும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும். மழை பெய்யும் இரவில் ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு கதை சொல்வது போல ’அஞ்சலி’யில் வரும் ‘ராத்திரி நேரத்தில் ரகசியப் பேய்களின் சைலன்ஸ்’ பாடல் இடம்பெற்றிருக்கும்.
‘ரோஜா’வில் இடம்பெற்ற ‘புது வெள்ளை மழை பொழிகிறது’, ‘பம்பாய்’ படத்தில் வரும் ‘உயிரே.. உயிரே..’, ‘குரு’வில் வரும் ‘நன்னாரே..’, ‘ஆயுத எழுத்து’வில் வரும் ‘நீ யாரோ.. நான் யாரோ..’, ’உயிரே’யில் வரும் ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே..’, ‘அலைபாயுதே’வில் வரும் ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’, ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் வரும் ‘மழைக்குருவி’, ’ராவணன்’ படத்தில் இடம்பெற்ற ‘கோடு போட்டா கொன்னு போடு’ என்று பல பாடல்களை மழையின் பின்னணியில் அமைத்திருப்பார் மணிரத்னம். அவர் படங்களில் பாடல்களிலோ, காட்சியின் பின்னணியிலோ மழை இடம்பெறாவிட்டால்தான் ஆச்சர்யம்.

மணிரத்னம் படங்களை பாடங்களாக ஏற்றுக்கொண்ட அடுத்த தலைமுறை இயக்குநர்களிடத்திலும் கூட இவ்வழக்கம் தொடர்கிறது.

ரஹ்மானின் பருவ மழை!
கிட்டத்தட்ட ராஜாவுக்கு சவால்விடும்படியாக, தனது இசையில் மழைத்துளிகளின் ஒலிகளைக் கோர்த்திருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘கருத்தம்மா’வில் இடம்பெற்ற ‘தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது..’ பாடல் இதற்கொரு உதாரணம். ’தாஜ்மஹால்’ படத்தில் வரும் ‘சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு’, ‘என் சுவாசக் காற்றே’ படத்தின் ‘சின்னச்சின்ன மழைத்துளிகள்’ பாடல், ’உழவன்’ படத்தில் வரும் ‘மாரி மழை பெய்யாதோ’, ’மின்சார கனவு’ படத்தில் வரும் ‘தங்கத்தாமரை மகளே’, ’இந்திரா’வில் இடம்பெற்ற ‘தொடத்தொட மலர்ந்த்தென்ன..’ என்று இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் வரும் ‘சுட்டும் விழிச்சுடர்தான்’ பாடல் சில நொடிகளே ஒலித்தாலும் நெஞ்சில் சாரல் வீசும். ‘ரிதம்’ படத்தில் வந்த ‘நதியே.. நதியே..’ பாடலைக் கேட்டவுடன் ஈரம் முகத்தில் வழியும்.

இசைந்தோடும் மழை!
தெலுங்கில் இருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட ‘மழை’ படத்தில் நனைந்தவாறு ஆடியதாலேயே, ரஜினியுடன் ‘சிவாஜி’யில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஸ்ரேயா. ‘மண்ணிலே மண்ணிலே..’, ‘நீ வரும்போது நான் மறைவேனா’ பாடல்கள் முழுக்க மழைக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.

இது போலவே ‘ஆதி’யில் வரும் ‘என்னை கொஞ்ச கொஞ்சவா மழையே’, ’ஈரம்’ படத்தில் இடம்பெற்ற ‘மழையே மழையே..’, ‘குஷி’யில் வரும் ‘மேகம் கருக்குது’, ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் வரும் ‘சில் சில் மழையே’, ‘தில்’லில் இடம்பெற்ற ‘உன் சமையலறையில்..’, ’வாகை சூட வா’வில் வரும் ‘சர சர சாரக்காத்து’, ‘பாரிஜாதம்’மில் இடம்பெற்ற ‘உன்னைக் கண்டேனே’ போன்ற பாடல்கள், அதிலுள்ள வரிகள் வழியாகவும் காட்சி வாயிலாகவும் மழையில் நம்மை நனையச் செய்யும்.

மழையைப் பார்த்ததும் அதில் நனைய வேண்டும், ஆட வேண்டும் என்று தோன்றினால், நம்மில் இன்னும் குழந்தைமை மறையவில்லை என்று அர்த்தம். கிட்டத்தட்டஅப்படியொரு உணர்வை ஊட்டும் பாடல், ‘பையா’வில் வரும் ‘அடடா மழைட.’

மழையில் நனைந்தவாறே பாடும் பாடல்களைக் கணக்கில் கொண்டால், தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓராயிரம் பாடல்கள் தேறும். மழையின் சிறு துளிகள் போல, இப்படிப்பட்ட பாடல்களைத் தேடும்போது ஒவ்வொன்றாகக் காணக் கிடைக்கும். சில நேரங்களில் மழைப்பாடல்களே நம் மனதுக்குப் பிடித்த கலைஞர்களை அடையாளம் காட்டியிருக்கும்.

எந்த மொழி சினிமாவானாலும், மழையைப் படம்பிடிப்பது அழகியலின் அடிப்படையாக இருந்து வருகிறது

இதனால், அடம்பிடித்தாவது மழையில் நனையும் பாடல்களில் இடம்பெற விரும்புவோரும் உண்டு. தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சிக்கான குறைந்தபட்ச உத்தரவாதமாக மழைப் பாடல்களே இருக்கின்றன. இப்போதும், மழையை பாடல்களில் சிறிதளவாவது காட்டும் முயற்சிகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்தி சினிமாவில் மழையை மிகவும் ரசித்தவர் ராஜ் கபூர். இன்றும், அவர் தொட்ட வழி துலங்கி வருகிறது. எந்த மொழி சினிமாவானாலும், மழையைப் படம்பிடிப்பது அழகியலின் அடிப்படையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், மழைப்பாடல்களில் இனிமை எப்போதும் அடிநாதமாக இருக்கும். அதனை முழுமையாக உணர, மழையில் நனையும்போது அப்பாடல்கள் ஒலிக்க வேண்டும், குறைந்தபட்சமாக நம் மனதிலேனும்!


Share the Article