English தமிழ்

Share the Article

பாரதியார் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக வேலை பார்த்தபோது செய்திகளை மொழிபெயர்த்திருக்கிறார். செய்திகளை எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் 22.11.1916இல் நடந்த பெரும் புயல் குறித்து சுதேசமித்திரனுக்குச் செய்தியாக அனுப்பினார்

அது 27.11.1916இல் சுதேசமித்திரனில் செய்தியாக வெளியானது. பெரிய தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்தில், அவரது நியூஸ் ரிப்போர்ட்டிங் திறமையை வெளிக்காட்டும் செய்திக் கட்டுரை இது. தற்போதைய சென்னைப் பெருமழை, பெருவெள்ளச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதைப் பார்க்கலாம்.

இந்தச் செய்திக் கட்டுரை பாரதியியல் முன்னோடி பெ. தூரனால் கண்டுபிடிக்கப்பட்டது. சீனி. விசுவநாதன் தொகுத்த காலவரிசைப்படுத்த பாரதியார் படைப்புகள் எட்டாம் தொகுதியிலும், பேராசிரியர் ய. மணிகண்டன் தொகுத்த ‘புதுவைப் புயலும் பாரதியும் – காற்றென வந்தது கூற்றம்’ என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரையை ஏற்கனவே `புதிய தலைமுறை’ இதழில் மாலன் வெளியிட்டிருக்கிறார். இதுதவிர, வேறு சில பதிவுகளும் இருக்கலாம்.

புதுச்சேரி புயல் குறித்து 28.11.1916, 30.11.1916 ஆகிய தேதிகளிலும் பாரதி எழுதிய செய்திகளை பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதனும், 11.12.1916இல் வெளியான செய்தியை பேராசிரியர் ய. மணிகண்டனும் சுதேசமித்திரன் இதழிலிருந்து தேடிக் கண்டறிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவைப் புயல் குறித்து 27.11.1916இல் சுதேசமித்திரனில் வெளியான பாரதியின் செய்திக் கட்டுரை இதோ:

புதுச்சேரியில் புயல்காற்று
சி. சுப்பிரமணிய பாரதி

இரவு
நள வருஷம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி புதன்கிழமை இரவு புதுச்சேரியில் யுகப் பிரளயத்தைப் போலே யிருந்தது.
நெடும் பொழுதாக – புதன்கிழமை மாலை தொடங்கியே – மழையும் காற்றும் கடுமையாகத்தான் இருந்தன. இடைவிடாத மழை. இடைவிடாத காற்று.

இரவு பதினொரு மணிக்குமேல் பெரிதாக வளர்ந்து விட்டது. ஊழிக்காற்று; படீல், படீல், படீல்.வீடுகள் இடிந்து விழுகின்றன; மரங்கள் சாய்கின்றன; காந்த விளக்குக் கம்பி அறுந்து போகிறது; நான்கு சுவர்களும் மேலே விழுந்துவிடும் போலிருந்தன; நல்ல கோட்டை போன்ற வீட்டிலே இருந்தேன்.

இருந்தாலும் சத்தம் பொறுக்க முடியவில்லை. ஊழிக்காற்று மருத்துக்களின் களியாட்டம் பேரச்சம். வெளியே என்ன நடக்கிறது பார்ப்போமென்று சாளரத்தைத் திறந்தால் மழைநீர் சரேலென்று வெள்ளமாக உள்ளே பாய்கிறது. ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரே பேரிருள். திறந்த சாளரத்தை மூடுவது பிரமப் பிரயத்தனம்.

காலைப்பொழுது
கார்த்திகை மாதம் 9ந் தேதி வியாழக்கிழமை நல்ல பொழுது விடிந்தது. புயற் காற்று நின்றது. ஊர்க்காரர் வெளியேறி வீதிக்கு வந்தார்கள். புதுச்சேரிப் பட்டணத்தை நேற்றுப் பார்த்த கண்ணுக்கு இன்று அடையாளம் தெரிய இடமில்லை.

தெருவெல்லாம் ஒடிந்த மரங்கள். தென்னையும் பூவரசும் வீதிகளில் அதிகம். நூற்றில் எண்பது முறிந்துகிடந்தன. ஓடுகளும் மாடங்களும் கூரைகளும் சேதப்படாத வீடு ஒன்றுகூட நான் பார்க்கவில்லை. சில கூரைகள் நெடுந்தூரந் தள்ளி விழுந்து கிடந்தன. காலையிலே தபால் வரவில்லை தந்திக் கம்பிகளும் காந்த விளக்குக் கம்பிகளும் அறுந்துபோய்விட்டன. காந்த விளக்குத் தொழிற்சாலையின் தலை விழுந்துவிட்டது. ஈசுவரன் கோயிலின் சிகரம் விழுந்துவிட்டது.

சுற்றுவீதியில் ஏழைக் குடிசைகள் அழிந்து போய்விட்டன. உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கிறது. தொகை தெரியவில்லை.

இதுவரை கிடைத்த தகவல்
முத்தியால்பேட்டையில் 6000 வீடு நெசவுக்காரருக்குண்டு. அநேகமாக அத்தனை வீட்டிலும் தறி, சாமான் எல்லாம் சேதம். பெரும்பாலும் வீடுகளே சேதம் மொத்த நஷ்டம் கணக்கிட முடியவில்லை. ஜனச் சேதம் அதிகமில்லை.

பாக்கமுடையான்பேட்டையில் கிராமத்தின் பெரும் பகுதி அழிந்துபோய்விட்டது. ஜனச் சேதம் அதிகம்.
அரியாங்குப்பம், குறிச்சிக்குப்பம் முதலிய பக்கத்துக் கிராமங்களி லெல்லாம் ஜனச் சேதமும் வீடு நஷ்டமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பல வாலிபர்கள் ஜனக் கஷ்டத்தை இயன்ற வரை நீக்கும் பொருட்டாக அன்னதானம் செய்து வருகிறார்கள். இன்றுகூட ஊதலடிக்கிறது.புயற் காற்றுத் தேவரை வணங்குகிறோம். அவர்கள் உலகத்திலே சாந்தி யேற்படுத்துக.

புதன்கிழமை (கார்த்திகை 8ந் தேதி) ராத்திரி அடித்தது புயற் காற்றில்லை. அது மருத்துத் தேவர்களின் களியாட்டம். தெருவெல்லாம் ஒடிந்த மரம், காடு, தோட்டமெல்லாம் அழிந்து வனம், பயிரெல்லாம் வெள்ளம் போன தரை.

வீடெல்லாம இடி சுவர்; பல கிராமங்களிலே கூரை வீடுகள் அனேகமாக ஒன்றுகூட மிச்சமில்லை யென்று சொல்லுகிறார்கள்.
கடற் பாலத்திலே போட்டிருந்த ஆஸனப் பலகைகளைக் காற்று கொண்டுபோய்விட்டது. கலவை காலேஜில் பெரிய மகிழ மரம் ஒடிந்து விழுந்துவிட்டது. ஜன்னல்கள் சேதம்.

இன்று வெள்ளிக்கிழமையான போதிலும் காற்றுக்காக ரஜா. பெரிய காலேஜிலும் ரஜா.அனேகமாக எல்லாகக் கச்சேரிகளிலும் ரஜாவே நடந்து வருகிறது. காந்த விளக்குக் கம்பிகளை இப்போதுதான் ஒருஒரத்திலே ஒட்டத் தொடங்கி யிருக்கிறார்கள். தெரிவில் வெட்டுண்டு கிடக்கும் மரங்களை இன்னும் எல்லா இடங்களிலும் எடுக்கத் தொடங்கவில்லை. பல இடங்களில் காக்கைகள் விழுந்து செத்துக் கிடக்கின்றன. இந்த மாதிரி உற்பாதம் எந்தக் காலத்திலும் பார்த்தது கிடையாதென்று பெரிய கிழவர்களெல்லாம் சொல்லுகிறார்கள்.

ராஜாத் தோட்டம்
இந்த ஊரில் ராஜாத் தோட்டம் ஒன்றிருந்தது. இருந்தது! ஆஹா! என்ன நேர்த்தியான உபவனம்! வாயு அந்தத் தோட்ட முழுவதையும் அழித்துவிட்டான். மரங்களெல்லாம் கையாலே ஒடிக்கப்பட்ட கரும்பைப் போலே ஓடியுண்டிருக்கின்றன.

காடு
ஊரைச் சுற்றிலும் காடு. குக்கிராமங்கள் ஜலத்துக்குக் கீழே இங்கே பஞ்சம். வாழைத் தோட்டங்களை இழந்தோர் பலர். வெற்றிலைத் தோட்டமிழந்தவர் பலர்.

நேற்றுப் பகலில் கலவை பங்களாவுக்கு எதிரே வயல் நடுவிலுள்ள ஒரு திட்டை மேலே ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுற்றிலும் தண்ணீர். ராத்திரி மழைக்கெல்லாம் அந்தத் திட்டை வெளியிலே நின்று விறைத்தார்கள். பகலிலே ஆட்கள் போய் நீரிலே நீந்தி இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

தண்ணீரில் எத்தனை ஜனங்கள், எத்தனை ஆடு, மாடுகள் மிதந்து போயிருக்கக்கூடுமோ? கணக்குத் தெரிய இடமில்லை.
விறகு வெட்டிகளுக்கு நல்ல லாபம். ஒரு தென்ன மரத்தை வெட்டித் தள்ளினால் இரண்டு ரூபாய் கூலி. காப்புக்காக அபாயமாகத் தோன்றும் தென்னை மரங்களை யெல்லாம் வெட்டுகிறார்கள்.

அயலூர் செய்திகள்
இன்று வெள்ளிக்கிழமை. வடக்கிருந்தும் தபால் வரவில்லை. தெற்கிருந்தும் வரவில்லை. இந்த வூர்த் தபால்கூட வெளியே இதுவரை அனுப்பவில்லை என்று தபால் ஆபீஸ் குமாஸ்தா சொல்லுகிறார். நாகப்பட்டணத்திலும், சென்னைப் பட்டணத்திலும் சேதங்களுண்டு. இன்று பரதேசித் தபால் வரத் தொடங்குகிறது.

சுற்று கிராமங்கள்
ரெட்டியார் பாளையம், அரியாங்குப்பம், வில்லியனுர் என்ற கிராமங்களிலிருந்து நகர வைத்தியசாலைக்குப் புண்பட்டோரும் இறந்தோருமாக 108 பேர் நேற்று மாலைவரை வந்ததாகத் தெரிகிறது.

அன்னதானம்
அன்னதானம் பல இடங்களில் நடக்கிறது. கஞ்சி விடுகிறார்கள். கஷ்ட நிவர்த்தி போதாது. ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலே இல்லை. தெய்வந்தான் ரஷிக்க வேண்டும்.


Share the Article