English தமிழ்

Share the Article

தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  திரைப்படங்களில் ஒன்றான சூர்யா நடித்த `ஜெய்’ பீம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே அமேசான் பிரைமில் வெளியாகிவிட்டது. `ஜெய் பீம்’ எதைப்பற்றிய படம்?

நீதிபதி சந்துரு

நீதிமன்ற விசாரணையை தழுவி எடுக்கப்படும் கோர்ட் ரூம் ட்ராமா எனப்படும் வகையைச் சேர்ந்த திரைப்படங்கள் உலக முழுவதும் பிரபலமானவை. ஜெய் பீம், 1993இல் நடந்த ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருந்தபோது ஒரு இருளர் இனப் பெண்ணுக்காக வாதாடிய ஒரு வழக்கு இக்கதையின் பின்னணி என நிறைய சுவாரசியமான தகவல்கள் படப்பிடிப்பு நடக்கும் போதே வெளிவந்தன.

உண்மையில் இந்தப் படம் சொல்வது என்ன? `ஜெய் பீம்’ நீதிக்காக போராடும் ஒரு பழங்குடியின பெண்ணின் கதை. காவல்துறையின் மிருகத்தனமான அடக்குமுறை. அதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிவேண்டி போராடிய ஒரு கொள்கைப்பிடிப்புள்ள வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களின் கதை.

விளிம்பினும் விளிம்பில் வாழும் அடித்தட்டு மக்கள் குறித்து சமூகம் எவ்வாறு அக்கறையின்றி இருக்கிறது. உண்மையில் இருளர்கள் எனப்படும் பழங்குடியின மக்கள் இந்த மண்ணின் பூர்வக்குடிகள். மானுடவியல் ஆய்வுகள் அவர்களை இந்த மண்ணில் முதலில் குடிபெயர்ந்தவர்கள் என்று நிரூபிக்கின்றன. ஆனால் இந்த சமூகம் அவர்களை எவ்வாறு பார்க்கிறது. அவர்கள் எவ்வளவு வஞ்சிக்க படுகிறார்கள்.

செங்கல் சூளைகளிலும் பிற உடலுழைப்பு சார்ந்த இடங்களிலும் அவர்கள் உழைப்பு சுரண்டப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் இன்னும் நவீன சமூகத்தின் விளிம்பிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஒடுக்கப்பட்ட இருளர் மக்களை பற்றின இந்த `ஜெய் பீம்’ படம் நமக்கு சொல்வது என்ன?

இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்படுவதற்கு முன்பு ஒரு சமூக அமைப்பு இந்தியாவில் இருந்தது. சோவியத் யூனியன் உடைவதற்கு முந்தைய காலகட்டம் அது. சமத்துவ சமூகத்தின் ஒரு அடையாளமாக சோவியத் ரஷ்யா இருந்த காலம், அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை கட்டமைப்பது முடியக்கூடிய ஒன்று என்ற வாய்ப்புக்கு அது ஒரு அடையாளமாக இருந்தது.

மருத்துவத்தை சேவை என்று எண்ணக்கூடிய மருத்துவர்கள் அப்போது இருந்தார்கள். சட்டத்தின்பால் தீரா நம்பிக்கை கொண்ட சந்துரு போன்ற வழக்கறிஞர்கள் வாழ்ந்தார்கள்.

இடதுசாரிகள் தங்கள் கொள்கைக்காக அயராது பணியாற்றினார்கள். அனைவருக்கும் கல்வி மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டுவரும் என அவர்கள் நம்பினார்கள்.

உண்மையை உரக்கச் சொல்ல தங்களுடைய உடைமைகளையும் உயிரையும் பணயம் வைக்கத் தயாராக இருந்த பத்திரிகையாளர்கள் இருந்தார்கள். கோடிகோடியாகச் சேர்த்த செல்வம் இருந்தாலும் அதை பொதுவெளியில் காட்டிகொள்ளாத அரசியல்வாதிகள் இருந்தார்கள். வாக்குக்குப் பணம் தரும் நவீன ஜனநாயக மந்திரம் பிரபலமாகாத காலகட்டம் அது.

`ஜெய் பீம்’ இப்படி ஒரு காலகட்டத்தின் முடிவில் நடக்கும் கதை. ஏறக்குறைய சோவியத் ரஷ்யா உடைந்து கொண்டிருந்த ஒரு சிக்கலான காலகட்டம் என சொல்லலாம்.

சோவியத்தின் வீழ்ச்சி உருவாக்கின அதிர்ச்சி அலைகள் உலகம் முழுவதுமே உணரப்பட்ட காலகட்டம். ஜெய் பீம் நடக்கும் அதே காலத்தில்தான் பொருளியல் மேதையான ஒருவர் நிதியமைச்சராக இந்திய சமூகத்தில் பல முக்கிய மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தார். நடுத்தர இந்திய வர்க்கத்தினருக்கு பணக்காரர்கள் ஆவது எப்படி என அவர் சொல்லிக்கொடுத்தார். அவருடைய பொருளாதார கொள்கைகள் ஆயிரம் ஆயிரம் இந்தியர்களை செல்வந்தர்கள் ஆக்கியது.

ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் பொருளாதார இடைவெளி திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. சோசலிச இந்தியா முதலாளித்துவ நாடாக பரிணாம மாற்றம் அடைந்த காலம் அது .

மக்கள் சேவை என இருந்த மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளின் பணம்காய்ச்சி மரமாகிப்போனார்கள்.

பத்திரிகையாளர்கள் அரசியல் சதுரங்கத்தில் அங்கமாகி போனார்கள். இந்த மாறிப்போன இந்திய சமூகத்தின் போராளிகள், அரசுசாரா அமைப்புகளின் ரகசியத் திட்டங்களின் பங்குதாரர்களாக மாறியிருக்கிறார்கள்.

குறுகிய காலத்தில் செல்வம் சேர்ப்பது மட்டுமே வெற்றி என்று மாறிப்போன தற்போதைய இந்திய சமூகத்தில் சந்துரு போன்ற வழக்கறிஞர்களோ அல்லது கல்யாணி போன்ற போராளிகளோ அல்லது பெருமாள்சாமி போன்ற போலீஸ் அதிகாரிகளோ இனி நமக்கு கிடைப்பார்களா என்ற அச்சத்தை ஜெய் பீம் நமக்கு உருவாக்கி விடுகிறது.


Share the Article