English தமிழ்

Share the Article

அரசு கோவில்களை நிர்வகிக்க வேண்டும் என்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் கொள்கையைப் பற்றி இந்த கட்டுரையின் முதல் பகுதி விவாதித்தது. இது இறுதி பகுதி.

சென்னை மாகாணத்தின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது (மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949), வழிபாட்டு தலங்கள் முழுவதுமாக அரசுடமை ஆக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்துக்கு வலு சேர்க்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவருடைய முயற்சியை எதிர்த்தவர்கள், மத விஷயங்களில் அரசு தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் எனபதையும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் குற்றச்சாட்டுப் பலரால் பலமாக முன்வைக்கப்பட்டது. ‘‘கலாச்சாரமும் மதமும் அரசியலின் கைப்பாவையானால் அவை சீரழியும்’’ என்றார், நாவலாசிரியர் கே.எஸ். வெங்கடரமணி.

புகழ் பெற்ற நவீனங்களான ‘Kandan the Patriot’ மற்றும் ‘Murugan the Tiller’ ஆகியவற்றை எழுதியவர் இவர். ‘‘மைய நிரவாகத்தின் கீழே கொண்டுவரப்பட்டு, அரசியலின், அதிலும் கட்சி அரசியலின் பிடியில் கோவில்கள் சிக்கினால், அழிவை முதலில் சந்திக்கும் நிறுவனங்களாக அவைதான் அமையும்’’ என்று தீர்க்க தரிசனத்துடன் அவர் எழுதியிருந்தார். (சுவதந்திரா பத்திரிகை, ஜனவரி 13, 1951)

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வழிவழியாக வந்துகொண்டிருக்கும் சிவாச்சாரியர்களின் பாரம்பரியமே ஊசலாடிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், அரசியல் தலையீடு பற்றிய அச்சம் தவிர்க்க முடியாததே. கோவில் நிர்வாகத்தை அரசு கையில் எடுக்க வேண்டும் என்ற ஒமந்தூராரின் முயற்சிக்கு முன்னுதாரணமாக விளங்கி , இந்து சமய அறநிலைய ஆணைய மசோதாவை இயற்றி, அதனை அமல்படுத்த முனைப்பு காட்டிய நீதிக் கட்சி அரசுகூட இத்தகைய அச்சங்கள் குறித்த பிரக்ஞையைக் கொண்டிருந்தது. அவற்றுக்கு இடம்கொடுக்காத வகையில் செயல்பட முனைந்தது.

Omandur Ramaswamy Reddiar

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

நீதிக் கட்சியின் அந்த மசோதா 1926-ம் ஆண்டு சட்டமாக இயற்றப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சர் டி.சதாசிவ ஐயர் இந்து சமய அறநிலைய ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சட்டம் இயற்றப்பட்ட பின், வழிபாட்டு முறையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என இந்து மதத்தின் மரபுபிடிப்புள்ள பிரிவினருக்கு உத்தரவாதம் அளிக்கவே சதாசிவ ஐயர் நியமிக்கப்பட்டார் என்று நீதிக்கட்சியின் முன்னணி தலைவர் பி.டி.ராஜன் குறித்திருக்கிறார் (நீதிக்கட்சியின் பொன் விழா நினைவு மலர், 1968).

‘சிவில் அதிகாரி திரு என். கோபாலசுவாமி ஐயங்காரின் நல்லாதரவை’ இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய பனகல் ராஜா பெற்றிருந்தார் எனவும் பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாக கையெடுப்பு மசோதாவை ஓமந்தூரார் முன்னெடுக்கையில், கோவில் நிதி நிலைமை ஊழலால் கெட்டுப் போனதை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைப்பார். அவருடைய சொந்த கிராமமான ஓமந்தூரில், பீமேஸ்வர ஆலயம் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவில் ஆகியவற்றுக்கு 56 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்த்து. அந்த நிலங்கள் பலருடைய உபயோகத்தில் இருந்தன. கோயில்களுக்குத் தம்படி வருமானம் இல்லை, 16,000 ஏக்கர் கொண்ட புகழ் பெற்ற வேதாரண்யம் ஆலயம் வெறும் ₹75,000 மட்டுமே வருடந்தோறும் வருமானம் ஈட்டியது. இந்த நிலையில், காலங்காலமாக கோவில்களை நிர்வாகம் செய்தவர்களை ஒமந்தூரார் கடுமையாக சாடினார்.

1948-ம் ஆண்டு வேதாரண்யம் ஆலயத்தின் தலைமை மடாதிபதி, முதல்வர் ஓமந்தூராருக்கு மரியாதை செலுத்த மாலையுடன் வந்த போது, அதனைப் பின்னவர் ஏற்க மறுத்தார். “உங்கள் ஆலயத்தில் தெய்வீகம் இல்லை. நிர்வாக சீர்கேட்டால், ஈ.வே.ரா.வின் ஆட்கள் போல் செயல்பட்டு அவருடைய நாத்திக பிரச்சாரத்திற்குத் துணை போகிறீர்கள்” என சாடினார் ஒமந்தூராருடன் இருந்த சர்தார் வேதரத்தினம், சுமார் அரை மணி நேரம் அவரை சாந்தப்படுத்தி மாலையை ஏற்கச் செய்தார். (சோமலேவின் “விவசாய முதலமைச்சர்” என்ற புத்தகத்திலிருந்து)

எல்லா மடாதிபதிகளுடன் ஒமந்தூரார் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றாலும், அவர் மடாதிபதிகளுக்கு எதிரானவர் என்ற கருத்து உருவாகிவிட்டது.

இத்தகைய ஒரு எதிர்ப்பு நிலை அவர் பதவியை விட்டு விலகிய பின்னரும் தொடர்ந்தது! மசோதா அவையின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு காத்திருந்த நேரத்தில், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தை ஒரு குழு சந்தித்து, அனைந்து மடாதிபதிகளையும் குறைகூறும் னம்‘ மசோதாவிற்கும் கண்டனம் தெரிவித்தது.

இது மடங்களின் சுயாட்சியையும் அவற்றின் நம்பகத்தையும் சீர் குலைக்கும் என்று ஜனாதிபதியிடம் கூறப்பட்டது. “மடாதிபதிகள் நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஏற்கனவே அதிகாரம் உள்ளது. அதிகாரம் போதவில்லை என நினைத்தால் அதை அதிகரித்துக்கொள்ளலாம்.

ஆனால் மகோதா அனைத்து மடாதிபதிகளையும் ஒன்றேபோல் குற்றம்கூறுகிறது. அறநிலையத் துறை ஆணையருக்கு மிதமிஞ்சிய அதிகாரம் கொடுத்து, பூசைக்கான பட்ஜெட்டில் கூட கைவைத்துத் தினசரி வழிபாட்டில் கூடத்தலையிடுகிறது” என்று மடாதிபதிகளின் சார்ப்பாக வந்த குழுவினர் தன்னிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார்.

எது எப்படியானாலும் ஆலயங்கள் மீதான அரசின் பிடி இறுகிக்கொண்டே போனது. ஆனால் நிர்வாக சீர்கேடுகள் தொடரத்தான் செய்தன. என்ன, இம்முறை அவை துறையின் அதிகாரிகளால் அரங்கேற்றப்பட்டன! பல ஆலயங்கள் வருமானமின்றி தவித்ததை, ஓமந்தூரார் சுட்டிக்காட்டினார் அல்லவா… அதே நிலைமை தான் இன்றும் நீடிக்கிறது! கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டால், அவை நன்றாக செயல்படும் என முன்பு கூறப்பட்டது பொய்த்துவிட்டது.

தற்கால நிலையை ஆலய வழிபடுவோர் சங்கத்தலைவர், டி ஆர் ரமேஷ் புட்டுவைக்கிறார். மன்னார்குடியில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு 36 லட்ச சதுர அடி நிலம் சொந்தமாக இருந்தாலும், மாத வருமானமாக ₹1,04,166 மட்டுமே வருகிறது. இது சதுர அடிக்கு வெறும் ₹2.80 ஆகும். திருத்துறைப்பூண்டி அவுஷதீஸ்வரர் ஆலயம் (14,19,235 ஏக்கர்) சதுர அடிக்கு வெறும் 1/10 பைசா மட்டுமே மாத வருமானமாக ஈட்டுகிறது! “வருமானம் ஈட்டக்கூடிய உரிமையை கோவில்கள் ஏன் விட்டுத் தர வேண்டும்”? என்பதே திரு ரமேஷின் கேள்வி. அப்படி வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டு இந்து தர்மத்திற்கு உகந்த அறங்களை இயற்றமுடியும் அல்லவா?

கோயில் நகைகள், கலைப்பொக்கிஷங்கள், ஏனைய கோவில் சொத்துக்கள் குறித்தும் அவர்காலத்தில் ஒமந்தூரார் கவலை கொண்டார்.

நம் காலத்து நிலையைப் பாருங்கள். 1992 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 25 ஆண்டு காலத்தில், கோவில்களை நிர்வகிக்க ஒமந்தூரார் உண்டாக்கிய துறையில், தமிழகத்திலிருந்து 1,200 பழமை வாய்ந்த சிலைகள் திருட்டு போயுள்ளன. இன்றிருந்தால் அவர் மனம் என்ன பாடுபடும்? அரசு நீர்வாகம் கோயில்களின் நடைமுறைகளை செம்மைப்படுத்திவிடும் என்று அவர் எடுத்த முடிவும் அதன் பயனும் பலரும் கண்டு விசனம் கொள்ளும் வகையில் அமைந்துவிட்டன.

1980களின் தொடக்க ஆண்டுகளில், எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில், இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராகவும் திருச்செந்தூர் கோவிலின் நகை சரிபார்ப்பு அதிகாரியாகவும் இருந்த திரு. சுப்பிரமணிய பிள்ளை, மர்மமான முறையில் இறந்தார். அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதி இதை மையமாக வைத்து, ‘‘நீதி கேட்டு நெடும் பயணம்’’ மேற்கொண்டார். இதைப் பற்றி விசாரிக்க பால் (Paul) கமிஷனை எம்ஜிஆர் நியமித்தார். ஆனால் அரசியல் சலசலப்புகளைத் தாண்டி, நியாயவானாகப் பெயரெடுத்திருந்த ஒரு அதிகாரியின் துர்மரணத்தைக் குறித்த மர்ம முடிச்சு இன்று வரை அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது.

கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என ஒமந்தூரார் வாதிட்ட அதே நேரத்தில், நேர்மைக்கு இலக்கணம் வகுத்தார். கள் இறக்குவதற்கு கோவில் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை அறிந்து கொதித்துப் போனார். தற்போதுள்ள அரசுகள் மது வகைகள் விற்பவர்களாகவும், அதன் மூலம் வரும் வருவாயில் நலத்திட்டங்களை அறிவிப்பவர்களாவும் உள்ளதை காண ஒமந்தூரார் சகித்திருக்க மாட்டார்.

காலம் மாறிவிட்டது; அரசு நிர்வாகம் செய்தால்தான் கோயில்களை சரியாக நடத்த முடியும் என்று வாதிடுவோரின் கட்சிக்கு முன்பிருந்து பலம் இப்பொழுது இருக்க நியாயமில்லை. தற்போது இந்து கோவில்கள் தர்ம சங்கடத்தில் உள்ளன. கடந்த காலத்தில் சில மடாதிபதிகள் ஆலயங்களை சரிவர நிர்வகிக்கவில்லை.

அதன் பிறகு வந்த அரசு நிர்வாகம் மோசமாகச் செயல்பட்டதுடன் மத விஷயங்களில் அரசியலை புகுத்தியிருக்கிறது, இந்நிலையில், “தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா” என்ற பாடல் வரி தான் நினைவிற்கு வருகிறது. பெற்றோர்களாக தங்களைக் காக்கும் பக்தர்கள் வரும் வரை, பிறரின் சுய லாபங்களுக்கும் அரசியல் சதிராட்டங்களுக்கும் தாங்கள் பயன்படுத்தப்படுவதை தெய்வங்கள் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் போலும்.

(கட்டுரை ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் ஆவார்.)


Share the Article