English தமிழ்

Share the Article

பத்திரிகையாளராக இருந்த மகாகவி பாரதியார், பத்திரிகைச் செய்திகளை மொழிபெயர்க்க உதவும் வகையில் தனது பயன்பாட்டுக்காக சில ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ் கலைச்சொற்களை உருவாக்கி இருக்கிறார். அவற்றை ஆங்கில எழுத்துகளின் வரிசையில் அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தன் கைபட எழுதி வைத்திருந்திருக்கிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் மொழிபெயர்த்து கையெழுத்துப் பிரதியாகவே தங்கியுள்ள இந்த ஆங்கிலச் சொற்கள் இருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து சிதலமடைந்த நிலையில் ஒரு சில பக்கங்கள் லேமினேட் செய்யப்பட்டு புதுச்சேரி ஈஸ்வரன் கோயில்  தெருவில் உள்ள பாரதியார் நினைவு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதைக் கண்டறிந்து கூறியவர் பத்திரிகையாளர் எல்லுசாமி கார்த்திக்.

தமிழ் பத்திரிகைகளில் வேலை பார்ப்பவர்கள் ஆங்கிலத்தில் வரும் செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து செய்தியாக்க வேண்டும். அதேபோல செய்திக் கட்டுரைகளை எழுத வேண்டியதும் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், ஆங்கிலத்துக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைக் கண்டறிவது முக்கியமானது. தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த இந்தக் காலத்தில் இந்தப் பணி எளிதாக இருக்கும் அளவுக்கு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன் இந்தப் பத்திரிகை பணி அவ்வளவு எளிதாக இருந்திருக்காது என்பது நிச்சயம்.

தந்திகள் எல்லாம் ஆங்கிலத்தில் வருவதால் ஆங்கிலப் பத்திரிகைகளை நடத்துபவர்களுக்கு, மொழிபெயர்க்க வேண்டிய சிரமம் எதுவும் கிடையாது. வந்த வார்த்தைகளை அப்படியே போட்டுவிடலாம். தமிழ் பத்திரிகைகள் அதை மொழிபெயர்த்தாக வேண்டும். சாவகாசமாக யோசித்து ஒரு தமிழ் வார்த்தையை கண்டுபிடிக்கலாம் என்ற பேச்சுக்கோ இடமில்லை. அன்று வந்த செய்திகள் அன்று மாலை பத்திரிகைகளில் போயாக வேண்டும். அதற்குள்ளாக அந்த வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு அவசரம்ÕÕ என்று ` ‘தற்கால தமிழ் பத்திரிகை’ என்ற கட்டுரையில் “தினமணியின் முதல் ஆசிரியரான டி. எஸ். சொக்கலிங்கம் கூறியிருப்பது நினைவுக்கு வருகிறது.

சென்ற நூற்றாண்டின் தொடக்க கால கட்டத்தில் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகவும், இந்தியா, சக்கரவர்த்தினி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்த சி. சுப்பிரமணிய பாரதி, செய்திகளை எழுதும்போதும் மொழிபெயர்க்கும்போதும்  பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பார்.  “”தமிழில் வசனநடை இப்போதுதான் பிறந்து பல வருஷாங்களாகவில்லை. தொட்டில்  பழக்கம் சுடுகாடு மட்டும் அதனால் இப்போதேநமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும்” என்று கனவு கண்டவர் பாரதி.

”தமிழில் வசனநடை இப்போதுதான் பிறந்து பல வருஷாங்களாகவில்லை. தொட்டில்  பழக்கம் சுடுகாடு மட்டும் அதனால் இப்போதேநமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும்”. — பாரதி  

“ஒரு தமிழ் தினசரிப் பத்திரிகைக்காரர் சென்னையில் இங்கிலீஷ் பத்திரிகைகளிலிருந்து வர்த்தமானங்கள் மொழிபெயர்க்கும்போது அர்த்தமாகாத இங்கிலீஷ் வார்த்தைகளையெல்லாம் அப்படியே தமிழெழுத்தில் எழுதிப்போட்டு விடுகின்றனர்… மேலும் அவர்கள் எழுதும் வியாக்கியானங்கள்கூட இங்கிலீஷ் தோரணையை அனுசரித்துப் பிழைத் தமிழில் எழுதப்பட்டிருப்பதால், நம் போன்ற ஸாமானிய ஜனங்களுக்குப் பொருள் விளங்குவது வெகு கஷ்டமாயிருக்கிறது” என்று தனது கவலையை பாரதி (புதுவையிலிருந்து வெளியான இந்தியா இதழ் 24.4.1909) வெளியிட்டிருக்கிறார்.

“இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை பற்றி காந்தியின் கருத்தை பாரதி விமர்சனம் செய்யும் போது, “ஸ்திரீ விதவைகளின் தொகையைக் குறைக்க வழிகேட்டால் ஸ்ரீமான் காந்தி புருஷ விதவைகளின் (அதாவது புனர் விவாகமின்றி வருந்தும் ஆண் மக்களின்) தொகையை அதிகப்படுத்த வேண்டுகிறார்…” என்று எழுதினார். மனைவியை இழந்த ஆண்களுக்குப் `’`புருஷ விதவை’ என்ற வார்த்தையைத் தேடிப் பிடித்துப் பயன்படுத்துகிறார்.

“தேசபக்தனை ஆண்பாலாக்கி ஸ்ரீ முதலியார் எழுதி வருகிறார். தேசபக்தனின் புதிய பத்திராதிபரோ நவசக்தியைப் பெண்பாலாக்கி எழுதி வருகிறார். ஆனால், இதைப் பொது வழக்கமாக்க முயன்றால், பலவித ஸங்கடங்கள் ஏற்படுமென்று தோன்றுகிறது. அன்னிய பாஷை பத்திரிகைகளைப் பேசுமிடத்தேதான் அதிகக் கஷ்டம்..” என்று குறிப்பிடும் பாரதியார், வழக்கம் போல எல்லாப் பத்திரிகைகளின் பெயர்களையும் ஒன்றன் பாலாகவே வழங்கி விடுதல் நன்றென்று நினைக்கிறேன் என்கிறார் பாரதியார்.

“இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்பட்டாவிட்டால் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம். Ðபதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்த்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால் குணங்கள், செயல்கள், நிலமைகள்  இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒரு போதும் வழங்கக்கூடாது”Õ என்பது பாரதியாரின் கருத்து.

‘தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை’ என்பது பற்றிய செய்தியை ‘காமன்வீல்’ ஆங்கில •இதழிலிருந்து மொழியாக்கம் செய்யும் போது  ‘மெம்பர்’ என்ற வார்த்தைக்கு அந்தக் காலத்தில் உரிய தமிழ் வார்த்தை கிடைக்காமல் பழக்கத்தில் இருந்த அந்த வார்த்தையை அப்படியே இருக்கும்படி விட்டு விடுகிறார்.

“மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். அவயவி சரியான வார்த்தையில்லை. அங்கத்தான் கட்டிவராது. சபிகன் சரியான பதந்தான். ஆனால் பொது ஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரை மணி நேரம் யோசித்துப் பார்த்தேன். உறுப்பாளி ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடையாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆரஅமர யோசித்து சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்கிறேன்” என்று அந்தக் கட்டுரையின் அடிக்குறிப்பில் சொல்கிறார்.

“இந்த மொழிபெயர்ப்பு வேலை எனக்கு எவ்வாறு ஒத்தாசை செய்தது தெரியுமா? இங்கிலீஷ் ரொம்ப நயமான பாஷையானதால், இங்கிலீஷின் கருத்துச் சிதைந்து போகாமல் தமிழர்களுக்கு அதை ஸ்வாரஸ்யமாகச் சொல்லும் பொருட்டு, நேரான தமிழ் சொற்களை நான் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. தமிழ் பாஷையின் கம்பீரமும், ரஸமும் அப்பொழுது எனக்கு இன்னும் தெளிவாய்த் தெரிந்தது” என்று சுதேசமித்திரனின் மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து பாரதி கூறியது குறித்து வ.ரா. எழுதியுள்ளார்.

‘முன்னோடித் தமிழ் இதழாசிரியர் சுப்பிரமணிய பாரதியார்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் பா. இறையரசன், கோரல் மில் என்பதற்கு கோரல் தொழிற்சாலை என்ற வார்த்தையை சுதேசமித்திரனில் (28.2.1908) எழுதியுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல, காண்டிராக்டர், கான்பரன்ஸ் என்ற வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தும் பாரதி, ரிஸெப்ஷன் கமிட்டி என்பதற்கு உபசரணைக் கமிட்டி என்று எழுதுகிறார். ஆர் விகுதி சேர்த்து கம்பெனியார் என்றும் கவர்மெண்டார்  என்றும் எழுதுகிறார். பின்னர், கவர்மெண்ட் என்பதற்கு ராஜாங்கத்தார் என்று சொல்லாக்கம் செய்கிறார். எஸ்கர்ஷன் என்பதற்கு யாத்திரை என்று எழுதுகிறார்.

Ðபாரதி 1906ஆம் ஆண்டில் தமது உரைநடைகளில் பயன்படுத்திய ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான  தமிழ் வார்த்தைகள் குறித்து பேராசிரியர் இறையரசன் தனது ஆய்வு நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்:

Methods: முறைமைகள்
Moderates:  நடுத்தரர் கட்சி, நிதானக் கட்சி
Reporters: பத்திரிகை பிரதிநிதிகள் (ரிப்போர்ட்டர்கள்)
Hero worship: வீர பூஜை
Arts college: சித்திரகலாசாலை
Proclamation: உறுதிப்பாடு
Death rate: மரணத் திட்டம் (விகிதம்)
Coronation: கிரீடச் சூட்டு
Free Trade: ப்ரீ டிரேட் (வர்த்தக நிர்பந்தமின்மை)
Bank: பாங்கி, பேங்கி
Exhibition: காட்சி, பொருட்காட்சி
Fine Arts: மதுரக்கலை
Boycott: விலக்கம்
Steamer: புகைக்கப்பல்
Collections: பணச்சேகரிப்பு
Tour: யாத்திரை
Native college: சுதேசிய கலாசாலை
East Indian Railways: ஈஸ்ட் இந்தியா இருப்புப்பாதை
Strike: வேலைநிறுத்தம், தொழில் நிறுத்தம்
Primary Education: பிரைமரி கல்வி
English Journals: ஆங்கிலேய (ஆங்கில மொழி) பத்திரிகைகள்
Dissolution: கலைவு
Social Reforms Conference: ஆசாரத் திருத்தச் சங்கம்
Reformers: திருத்தக்காரர்கள்
Revolution: புரட்சி
National Day: தேசத்திருநாள்

பாரதி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த சில கலைச்சொற்கள் குறித்து புதுச்சேரியில் பாரதியார் நினைவு நூலகத்தில் உள்ள அவரது கையெழுத்துப் பிரதி ஒரு முக்கிய ஆவணம். இந்தப் பக்கங்களில் பாரன்ஹீட், ஜியோடிராபிக் போன்ற சில ஆங்கிலச் சொற்களைக் குறித்து வைத்திருக்கிறார். ஆனால் அதற்குத் தமிழில் கலைச் சொற்களை அவர் எழுதாமல் விட்டுவிட்டார். சிதலமடைந்து இருக்கும் காகிதத்தில் சில வார்த்தைகள் தெரியவில்லை. பாரதியின் கையெழுத்துப் பிரதியிலிருந்து சில கலைச் சொற்••கள்…

 

E

Evolution : விரிவு, விஸ்தாரம், பரிணாமம்

Explore: தேடு, ஆராய்

Engineer: யந்திரக்காரன், யந்திரி

Equipment: ஸந்நாணம், முஸ்திப்பு

Ether: ஈத்தர் என்ற திராவகம்

 

 

F

Factor : குணாங்கம், அம்சம், 

Fume : புகை, ஆவி

Faith: பக்தி, சிரத்தை, விசுவாஸம், நம்பிக்கை

Fatigue : சோர்வு, களைப்பு, இளைப்பு, எய்த்தல், தகைதல்

Fluctation:அலுங்கல், ஊசல்

Fundamental: மூலாதாரமான, ப்ரதான, அஸ்திவார

Fraction : பின்னம், பாவம், அம்சம், சில்லறை

Fertilizer: எரு, உரம்

Formation: ஏற்பாடு, ஆகுதல், திறளுகை, ஆகாரம், வடிவம், ரூபம், உண்டாகுதல்

 

G

Genius: மேதை

 

M

Millennium : ஆயிரம் வருஷம், தலத்ய யுகம்

Matter: ஜடபதார்த்தம், ஜடவாஸ்து

Microscope: பூதக்கண்ணாடி, ஸூகத்மதர்சனி, அணுதர்ஷனி

Motion, Movements: சலனம், அசைவு

Method: கிரமம், விதம், நீதி, மார்க்கம், வழி, உபாயம்

Message: செய்தி

Mechanics: யந்த்ர சாஸ்திரம்

Metaphysics: ஆத்ம வித்யா, ஆத்ம சாஸ்திரம், மாலை சாஸ்திரம்

Metal : லோஹம்

Mystery: ரஹஸ்யம், மர்மம்

Mysticism: குப்த மதம், மறைபொருள்

Multidimension:  அனேக, நானா, பல, வெகுவித

Microcosm: ஸூகர்ம ஜகத், சிற்றண்டம்

Modify : விகாரப்ப(டுத்து)-, திரிபு செய், மாற்று, மட்டுப்(படுத்து), குணப்(படுத்து)

Millimeter : மில்லி மேத்ர், மேத்ரில் ஆயிரத்தில் ஒரு பங்கு

Machine: யந்திரம்

மகாகவியாகத் திகழ்ந்த பாரதி, தன்னை தேர்ந்த பத்திரிகையாளராகவும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்  என்பதை அவரது கட்டுரைகளில் மட்டுமல்ல, அவரது கலைச் சொல்லாக்க முயற்சிகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளோ கட்டுரைகளோ எப்படி இருக்க வேண்டும்? பத்திரிகையாளர் பாரதி சொல்கிறார்(சுதேசமித்திரன் 3.5.1918):

“…தமிழ்நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப் போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு அப்போது எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்.”

 

 

 


Share the Article