Read in : English

Share the Article

டூரிங் டாக்கீஸ்களில் தொடங்கி பெரிய திரையரங்களைப் பார்த்து மல்டிப்ளெக்ஸ் வரை பார்த்த தமிழ் சினிமா இன்று டிடிஹெச், ஓ.டி.டி. என்று மாறியுள்ளது. தரை டிக்கெட்டில் தொடங்கி திரைகள் மாறினாலும் தொடர்ந்து தனது இருப்பை அது தக்கவைத்தபடிதான் இருக்கிறது. விசிடி-யில் ஆரம்பித்து தமிழ் ராக்கர்ஸ் வரைப் பல விஷயங்களைப் கடந்து விட்ட தமிழ் ரசிகன், இப்போது திரையரங்கில் இருந்து ஓ.டி.டி. தளம் என்கிற என்ற நிலையில் இருக்கிறான். ஓ.டி.டி. என்ன வகையான அதிர்வலையை ஏற்படுத்தும்? சினிமாவில் என்ன தாக்கத்தை உருவாக்கும்? திரையரங்குகள் தமது இருப்பை தக்கவைக்குமா? தமிழ் சினிமா முழுவதும் ஓ.டி.டி பக்கம் திரும்புமா? இனி ஓ.டி.டி. தளத்துக்கு ஏற்றபடி தமிழ் சினிமா மாறுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இந்தியாவில் டிடிஹெச் பிரபலமானபோது ‘விஸ்வரூபம்’ படத்தை ‘டைரக்ட் டு ஹோம்’ என்கிற முறையில் வெளியிடப் போவதாக அறிவித்தார் கமல். அந்த அறிவிப்பு உச்சக் கட்ட பஞ்சாயத்து வரை போய் முடிவுக்கு வந்தது. கடைசியாக திரையரங்குகளிலேயே வெளியிட்டு லாபம் பார்த்தார் கமல். கரோனோ பொது முடக்கத்துக்கு இடையே ஓ.டி.டி. வெளியீட்டு சர்ச்சையை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ தொடங்கி வைத்ததது. இதுவும் சின்ன சின்ன சிக்கல்களை சந்தித்து நேரடியாக ஓ.டி.டி. யில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஓ.டி.டி. தளத்துக்கான காலம் தமிழ் சினிமாவில் கனிந்துவிட்டது.

ஆனால், ஒரு படத்தை எங்கே, எதில் பார்க்க வேண்டும் என்பது ரசிகனின் கையில் உள்ளது. சினிமா, கேளிக்கை என்பதைத் தாண்டி இரண்டு விஷயங்களில் முக்கியப் பங்காற்றுகிறது. நம் மக்கள் வெளியே செல்வது என்றால் பெரும்பாலும் சினிமாவாகத்தான் இருக்கும். குடும்பத்தோடு, நண்பர்களோடு, காதலியோடு வெளியே செல்ல வேண்டும் என்றால், சுலபமான தேர்வாக சினிமா தியேட்டர்கள்தான் இருக்கின்றன. தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்பது ஒரு அனுபவம். பிரமாண்டமான திரையரங்கில் நிறைய மக்களோடு அமர்ந்து பெரிய திரையில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். கைதட்டல், விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத் தாண்டி ஒரு கூட்டத்தின் உணர்வோடு தன்னையும் இணைத்துக்கொண்டு படம் பார்ப்பது என்பது எப்போதுமே சிறப்பு.

இன்னொன்று, சினிமா மட்டுமே ஸ்டார்களை உருவாக்கும். இங்கே ஸ்டார் என்பது ஹீரோ மட்டும் அல்ல. ஹீரோயின், இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர் என அனைத்து விதமான ஸ்டார்களும் இங்கே சினிமாவில்தான் உருவாவார்கள். இங்கே உருவான ஸ்டார்களின் பிம்பங்களைத்தான் ஓ.டி.டி-யில் விற்க முடியும்.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோதிகாவின் ‘பொன் மகள் வந்தாள்’ படத்தை நல்ல விலைக்கு அந்த நிறுவனம் வாங்கி இருக்கலாம். ஆனால், அந்தப் படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால், அதற்குக் கிடைக்கும் மதிப்பு அல்லது அந்தப் படத்தின் தாக்கம் ஓ.டி.டி மூலம் கிடைக்காது. ஓ.டி.டி நிறுவனங்கள், தங்களை பிரபலப் படுத்திக்கொள்ள ஆரம்ப கட்டத்தில் இதைப்போல அதிக விலை கொடுத்து வாங்கும். ஆனால் குறிப்பிட்ட லாப நஷ்டக் கணக்கைப் பார்த்து, அடுத்த முறை ஓ.டி.டி நிறுவனங்கள் குறைந்த விலைக்குப் படங்களை விலை பேசலாம்.

இதுவே விஜய், அஜித் போன்ற முன்னணி கமர்ஷியல் நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி-யில் வெளியானால் வேண்டுமானால் பெரிய அதிர்வலையைக் கிளப்ப முடியும். தனிக் கலைஞர்கள்: ஓ.டி.டி-ல் பார்ப்பதற்கு என்று சில வகைப் படங்கள் உள்ளன. அவை தனி. அந்த மாதிரி படங்களை தியேட்டருக்காக தயாரிக்கவே முடியாது. அதேபோல வீட்டில் அமர்ந்துகொண்டு ஓ.டி.டி தளத்தில்தான் சினிமா படங்களையும் பார்ப்போம் என்கிற ரசிகர்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்கள், ஓ.டி.டி-யில் படம் வெளியாகவில்லை என்றால் பெரும்பாலும் சினிமா தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்க மாட்டார்கள். வரும் காலங்களில் ஓ.டி.டி-க்கு என்றே படம் எடுக்கும் தயாரிப்புக் கம்பெனிகள் அதிகம் ஆகலாம். ஓ.டி.டி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என்று தனிக் கலைஞர்கள் உருவாகலாம். ஆனாலும் இவர்களின் கடைசி இலக்கு தியேட்டர் வெளியீட்டு சினிமாவாகவே இருக்கும். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் செய்வது அதைத்தான். ஆனால், இவர்களும் தொடர்ந்து ஓ.டி.டி-யிலேயே இயங்கிக்கொண்டிருந்தால் மதிப்பு போய்விடும். மீண்டும் தியேட்டர் ரிலீஸ் சினிமாவுக்குத் திரும்பி, தன்னை நிரூபித்து விட்டுத்தான் மீண்டும் ஓ.டி.டி-க்குத் திரும்பவேண்டியிருக்கும்.

தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்பது ஒரு அனுபவம். பிரமாண்டமான திரையரங்கில் நிறைய மக்களோடு அமர்ந்து பெரிய திரையில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். கைதட்டல், விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத் தாண்டி ஒரு கூட்டத்தின் உணர்வோடு தன்னையும் இணைத்துக்கொண்டு படம் பார்ப்பது என்பது எப்போதுமே சிறப்பு.

இதுவரை ஓ.டி.டி-ல் பெரும் வரவேற்பைப் பெற்றவை தொடர்கள்தான். வெப் சீரிஸ் என்கிறார்கள். சினிமா போல ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை ஓடக்கூடியவை. இதில் எதுவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. பழங்காலத்தில் தொடர்கதைகளைப் படிக்க ஒரு பெரும் கூட்டம் இருந்தது. அதைப்போன்ற ஒரு மனநிலைதான் இப்போது காட்சி வடிவத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய ஓ.டி.டி. முறையில் கடும் கற்பனை வறட்சி நிலவுகிறது. செக்ஸ் மட்டும்தான் இதில் ஹிட் ஆகும் என்று நினைத்துக்கொண்டு, கெட்ட வார்த்தைகளை மட்டும் அள்ளித்தூவி, சில படுக்கையறைக் காட்சிகளை வைத்து ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவைகளில் உயிரும் இல்லை. எந்த புது முயற்சியும் இல்லை. இதை விட்டால், சில உண்மைக் கதைகளை எடுக்கிறேன் என நடந்தவற்றைக்கு மேலே போய் கதை சொல்லுகிறார்கள்.

முதலில், ஓ.டி.டி.க்கான ரசனையை மேம்படுத்த வேண்டும். அதில் நல்ல அடித்தளத்தை அமைக்க வேண்டும். ஆனால், அதற்கு தமிழில் ஆளுமைகளோ, முன்னோடிகளோ ஓ.டி.டி-க்கு இல்லை. இப்போதைக்கு ஓ.டி.டி, சினிமாவை நம்பித்தான் இந்தியாவில் காலம் தள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த ஓ.டி.டி நிறுவனங்களே இந்தியாவில் தியேட்டரிக்கள் ரைட்ஸை வாங்கும் நிலைக்குக்கூட வரலாம். பெரிய பட்ஜெட் படங்களையும் அவர்களே நேரடியாகவும் தயாரிக்கும் நிலையும் ஏற்படலாம்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தியேட்டர் ரிலீஸ் சினிமா மூலம் மட்டுமே பெரும்பான்மையான ஸ்டார்கள் உருவாவார்கள். டி.வி, வி.சி.டி, ஹோம் தியேட்டர், ஓ.டி.டி, தமிழ் ராக்கர்ஸ் என எதனாலும் சினிமாவை அழிக்க முடியவில்லை. இனியும் அது முடியாது. இவைகள் எல்லாம் வந்த பின்புதான், சினிமா தன்னை இன்னும் மேம்படுத்திக்கொண்டுள்ளது.

மால்கள் வந்ததும் சினிமா புத்துயிர்பெற்றது என்பது உண்மைதான். நல்ல திரையனுபவத்தை மால்கள் வழங்கின. ஆனால், இப்போது தான் வைத்ததுதான் சட்டம் என்று தனிக்காட்டு ராஜா போல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன மால்களில் உள்ள திரையரங்குகள். ஒரு ஜம்போ சைஸ் பாப் கார்ன் 540 ரூபாய் வரை விற்கிறார்கள். அதன் அடக்க விலை 30 ரூபாயாக இருந்தால் பெரிய விஷயம். இதைப்போல விற்கப்படும் அனைத்து உணவு வகைகளிலும் கொள்ளை அடிக்கிறார்கள். வாகன நிறுத்தக் கட்டணமும் அநியாயம். வெளிநாடுகளைவிட இங்கே அதிகம் வாங்குகிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் தனிக் கட்டணம். ஒரே தடவை 4 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தாலும் 120 ரூபாய் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள். உங்கள் நிறுவனத்தில் சேவைகளை நுகர்வதற்கு உங்கள் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தினால், நான் ஏன் ஐயா கட்டணம் செலுத்த வேண்டும்? என்ற கேள்வி இங்கே எழுகிறது. சினிமா தியேட்டர் இல்லை என்றால் அந்த மாலுக்கு கூட்டமே வராது. சினிமாவைப் பயன்படுத்தி வளரும் மால்கள், இதைப்போல சினிமாவுக்கு எதிரான செயல்களைச் செய்யும்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் இதையெல்லாம் தடுக்க வேண்டும். இவையெல்லாம் நடந்தாலே, தியேட்டர் அனுபவத்துக்காக வரும் கூட்டம் இன்னும் கூடும்.

அதேசமயம், இனி தியேட்டரில் வருடத்துக்கு குறைந்த அளவிலான படங்களே வெளியாகும் என்பதால், நம்முடைய பட்ஜெட்டும் அதற்குள் அடங்கிவிடும். ஒவ்வொரு காலத்திலும் கலை தன் இருப்பை அழியாது பாதுகாத்து கொள்ளும். தற்போது திரையரங்கம் – ஓடிடி இரண்டிலும் சினிமாவை கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறான் தமிழ் சினிமா ரசிகன்.

 


Share the Article

Read in : English