Read in : English

Share the Article

தமிழகத்தில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் தொடர்பாக, திமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிக்கை ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டபோது, அது இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நடைபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகளின் காரணமாக, 2019 ஏப்ரல் மாதம் வரையில் இடைத்தேர்தல்களை நடத்துவது கடினம் என்று தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தபோதிலும், இந்தத் தொகுதிகளில் பல மாதங்களாகவே தேர்தல்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்ததால், பிப்ரவரியில் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நிச்சயிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

முதல் ஆச்சரியம் என்னவென்றால், இதே வெள்ள நிவாரமப் பணிகளைக் காரணம் காட்டி திமுகவும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரியதுதான்.  எனினும், இந்தத் தொகுதி தேர்தலை திமுக பிப்ரவரியில் நடத்தக் கோரும் என்றும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள மற்ற 19 தொகுதிகளின் (இப்போது 20 தொகுதிகள்) இடைத்தேர்தல்களையும் நடத்த வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இவற்றில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறமுடியும் என்றும், அதிமுகவின் எடப்பாடி  பழனிச்சாமி அரசை அகற்றிவிட்டு ஆட்சி அமைக்க முயற்சி செய்யலாம் என்றும்  திமுக நம்பியதால் இந்தத் தேர்தல்கள் முக்கியமானவையாக கருதப்பட்டன.

எனினும், ஒரு சூசகமான அறிக்கையில், திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்ததை வரவேற்ற அதே வேளையில், மாநில இடைத்தேர்தல்களை, 2019 ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒரே சமயத்தில் நடத்த வேண்டும் என்று  கூறப்பட்டிருக்கிறது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இடைத்தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்றுதான் திமுக எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது. சட்டமன்றத்தில் அதிமுக சிறுபான்மைக் கட்சி ஆகிவிட்டது என சுட்டிக்காட்டி ஆட்சி அமைக்கும் பிரச்சினைக்கு எப்படியாவது விரைவில் தீர்வு வந்துவிடாதா என்றும் அது எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் திமுக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. என்றபோதிலும், சில மாதங்களுக்கு தேர்தலை தள்ளி வைக்குமாறு ஸ்டாலின் கோரியிருக்கிறார். இதனால், அதிமுக அரசு குறைந்தபட்சம் 2019 மே  வரை தப்பிப் பிழைத்திருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடியும்.

ஒரே மூச்சில் பிப்ரவரியில் இடைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைப்பார் என்றும், அப்போதுதான் பிப்ரவரியிலேயே அதிமுக அரசை முயற்சி செய்து அவர் அகற்றக் கூடும் என்றும் ஆரம்பத்தில் கருதப்பட்டது. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் 3 மாதங்கள் போனஸ் ஆக வழங்கியிருப்பதுதான் திகைப்பூட்டுகிறது.

இரண்டு காரணங்களுக்காக வியூகத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இடைத்தேர்தல் நடந்தால், அதிமுக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகியவற்றுக்கு சமமாக திமுக திருவாரூரில் ரூ.30 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற தெளிவு முதல் காரணம். நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் வேளையில், இந்த சந்தர்ப்பத்தில் ஒரு `விலை உயர்ந்த’  இடைத்தேர்தல் தங்களுக்குத் தாங்காது என்று திமுக உணர்ந்திருக்கிறது. மேலும் 20 தொதிகளிலும் இடைத் தேர்தல்கள் நடந்தால், போட்டிபோட்டுக் கொண்டு திமுக ஏறக்குறைய ரூ.700 கோடி செலவிட வேண்டியிருக்கும்.

ஒரு சில இடைத்தேர்தல்கள் என்றால் அவற்றில் பண பலமும், படை பலமும் பொதுத் தேர்தலைக் காட்டிலும் அதிக ஆதிக்கம் செலுத்துவது சுலபம் என்பதையும் திமுக புரிந்துகொண்டிருக்கிறது. ஏனெனில் பொதுத்தேர்தல் என்றால் ஒட்டு மொத்தமாக 234 தொகுதிகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவது, தேர்தல் அறிவித்த உடனேயே, வேலையைத் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருவாரூர் தொகுதியில் புத்திசாலித்தனமாக அடிமட்ட அளவில் செய்துள்ள அமைப்புச் செயல்பாடுகள் திமுகவை திகைக்க வைத்திருக்கிறது. 10 நாட்களில் தினகரன் கட்சியினர், தேர்தல் தயாரிப்புப் பணிகளில், மற்றக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுதூரம் முன்னேறிவிட்டனர்.

மனஉறுதிக்கு வலு சேர்த்து ஊக்கம் அளிக்கும் தேர்தல் வெற்றி என்ற வியூகத்தில் இருந்து, தேர்தலை தள்ளிவைக்கும் பாதுகாப்பு-முதலில் என்று திமுக வியூகத்தை மாற்றி இருக்கிறது. அப்போதுதான் அது, தமிழகத்தில் ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்கள் என்ற அதிமுகவின் கொள்கைக்கு இணையாகப் போக முடியும்

திமுகவின் இந்த வியூகம், அதிமுகவுக்கு எதிர்பாராத ஆதாயமாக வந்திருக்கிறது. திமுகவைப் பொருத்தவரையில், மத்தியில் ஆட்சி மாற்றமும், அதைத் தொடர்ந்து மாநிலத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் வரையில் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், திமுக தானாகவே ஆர்ஏசி’ (காலி இடம் ஏற்பட்டால் அந்த இடம் ஒதுக்கீடு) என்ற நிலையில் இருந்து `வெயிட்டிங் லிஸ்ட்’ (காத்திருப்போர் பட்டியல் ) என்ற நிலைக்கு கீழே இறங்கி வந்திருக்கிறது.


Share the Article

Read in : English