English தமிழ்

Share the Article

தமிழ் நாட்டில் நடக்கும் பல போராட்டங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை பலர் வைக்கின்றனர். இந்த போராட்டஙகளில் பங்கு பெற்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அதன் பொருளாளர் காளியப்பன் இன்மதியிடம் உரையாடினார்.

தீவிரவாத குழுக்கள் அதிகமாக தமிழகத்தில் செயல்படுகிறது, மத்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று சுப்ரமணிய சுவாமியும் பொன்னாரும் கருத்து தெரிவித்ததற்கு உங்கள் கருத்து என்ன ?
ஹிட்லருடைய சூத்திரம், ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது. ஹிட்லருடைய வாரிசு தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அதன் உறுப்பினர்களாகிய சுப்ரமணிய சுவாமியும், பொன்னாரும். தமிழகத்தில் தீவிரவாதம் ஊடுருகுவது என்பது ஒரு அப்பட்டமான பொய்.  ஜல்லிக்கட்டில் தீவிரவாதி, ஸ்டெர்லைடில் தீவிரவாதி என்று பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதி பட்டியலில் சேர்கிறார்கள். தீவிரவாதம் தமிழ்நாட்டில் ஊடுருவதாக எங்களுக்கு தெரியவில்லை.

உங்களை பொறுத்தவரை, தீவிரவாதம் என்றால் என்ன ?
குஜராத், கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்டு, தமிழகத்தில் மக்கள் உயிரை குடித்த ஆலை ஸ்டெர்லைட் என்று நிறுப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதை எதிர்த்து போராடும் பட்சத்தில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிரான போராட்டங்களை தீவிரவாதம் என்று கூறி, அவர்களுக்கு கைகூலிகளாக திகழ்கின்றனர். தமிழகத்தில் மக்களிடம் அச்சத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் பிஜேபி அரசாங்கம் தொடர்ந்து இம்மாதிரியான கருதுக்கைளை, முக்கியமாக சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தும் விதமாக இஸ்லாமிய தீவிரவாதிகள், தமிழ் தேசியவாதிகள், நக்சலைட்டுகள் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் மட்டும் தான் தமிழகத்தில் தீவிரவாதம் என்று பேசுகிறார்கள். ‘தமிழகம் அமைதி பூங்கா’வாக தான் இருக்கிறது என்கிறது தமிழக அரசு.

‘தமிழகம் அமைதி பூங்கா’வாக தான் இருக்கிறது என்கிறது தமிழக அரசு.

தூத்துக்குடி போராட்டத்தில், மக்கள் ஆதிகார அமைப்பின் பங்கு என்ன ?
தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை அனைத்து கட்சிகளும் உரிமைகொண்டாடும் பொழுது, பொன்னாரும் 1996ல் போராடினார் என்று அவரே பெருமைக்கொண்டார். இந்த எதிர்ப்பு போராட்டத்தை மக்கள் அதிகாரம் கொண்டாடினால் அது தீவிரவாதம்!! என்ன நியாயம்? பிற காட்சிகளை போல, நாங்களும் போராடினோம், இயன்ற அளவு தூத்துக்குடிக்கு வெளியே போராட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தோம். ஹரி என்கிற தூத்துக்குடி வக்கீலிடம் மக்கள் சட்ட உதவி கேட்டு, போராட்டத்தை தொடர நீதிமன்றம் அதை முடக்கியது. இதை எதிர்த்து வாஞ்சிநாதன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதாடி போராட்டத்திற்கு அனுமதிபெற்றுத்தந்தார். இதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்திற்கு உதவி கேட்க, சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞராக வாஞ்சிநாதன் செயல்பட்டார்.

மே 22ந் தேதி போராட்டத்திற்கு இரண்டுநாள் முன்பு, பள்ளி மைதானத்தில் போராட்டத்திற்கு அனுமதியளித்த பொழுது, கலெக்டரேட்டை முற்றுகையிடவேண்டும் என்று மக்கள் அதிகாரம் செயல்பட்டது ஏன்?
காலெக்டருடனான சந்திப்பில் மக்கள் அதிகார அமைப்பை அழைக்கவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டத்தின் பிரதிநிதிகள் தான் கலந்துகொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு. இதை தடுக்க அரசு, போலீசார், ஸ்டெர்லைட் இணைந்து கலவரத்தை தூண்டவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு 13 அப்பாவிகளின் உயிரை கொன்றனர்.

போராட்டகாரர்களை வழிநெடுவே பலமுறை கண்டித்தும் அடங்காததால் தான் துப்பாகிச் சூடு நடத்தியதாக போலீசார் கூறுகிறார்கள்.
பலஆண்டுகாலமாக நடந்து வரும் போராட்டம், 99 நாட்கள் நடந்து வந்த போராட்டம், 100வது நாள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்த பொழுது போலீசார் 144 தடை விதித்து தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. போலீசார் ஒன்றும் கடுமையாக தடுக்கவில்லை, தடுப்பது போல் நடித்து கலெக்டர் அலுவலகத்தில் கூடி கலவரத்தை உண்டாக்குவது என்பது அவர்களது திட்டம். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட படுகொலை.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, தூத்துக்குடி கலெக்டர் ஆலையில் இருக்கும் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இது உங்கள் அமைப்பை பொறுத்தவரை திருப்தியளிக்கிறதா?
இது ஒரு கண்துடைப்புச் செயல். ஆணை வெளியிட்ட அடுத்த நிமிடமே இதை சட்ட ரீதியாக எளிதாக முறியதித்துவிடலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான செயல் தான் தூத்துக்குடியில் நடந்துகொண்டிருக்கிறது. போலீசார் சில கிராமங்களில் சென்று மக்கள் அதிகாரம் தான் போராட்டத்தை திசை திருப்பி கலவரத்தை தூண்டினார்கள் என்று மிரட்டி கருத்து தெரிவிக்க சொல்கின்றனர். சில கிராம மக்களை அழைத்து சென்று ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மனு கொடுக்க சொல்கிறார்கள். 40,000 மக்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு போராட்டத்தில் வெறும் 20 நபர்களை கொண்டு மீண்டும் திறக்க மனு கொடுத்துவிட்டு, மக்கள் அதிகாரம் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மக்கள் அதிகாரம் மீனவ மக்கள் தான் போராட்டத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாக வதந்திகளை பரப்புகிறார்கள். ஒரு பக்கம் மூடுவோம் என்று கூறிவிட்டு, மறுபக்கம் போலீசார் இம்மாதிரியான செயல்களை செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களின் செயல்கள் மக்களை அரசியல் அமைப்புக்கு எதிராக தூண்டுகிறதாக இருக்கிறது என்று சிலர் விமர்சிக்கிறார்களே?
வி: மக்களை அரசிற்கு எதிராக தூண்டுகிரோம் என்பது தரமற்ற வாதமாகும். பாதிக்கப்பட்ட மக்கள் தான் எதிர்ப்பு தெரிவித்து போராடுவார்கள். அவர்களுக்கு நாங்கள் போராட உதவி செய்வோம். தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பதால் தான் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

சமீபகாலமாக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றனவே?
இங்கு இருக்கும் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அனைவரும் ஒருவகையில் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் தான் நியாயம் கேட்டு போராடுகிறார்கள். மக்கள் அதிகாரம் சென்று வாங்க போராடுலாம் என்று அழைக்காது.

அமைப்பு ரீதியாக மக்கள் அதிகாரத்தின் குறிக்கோள் என்ன?

மக்கள் ஆட்சி என்று சொல்லிவிட்டு, கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்காக அரசு சேவை செய்ய்ய வேண்டும் என்பதே மக்கள் அதிகாரத்தின் குறிக்கோள். இன்று இயங்கும் அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயல்பட்டுவருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அதில் அரசாங்கம் லாபம் பார்க்கிறது. ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களை அழித்து, தேவையற்ற 8 வழி சாலையை 10,000 விவசாய நிலங்களில் அமைக்க முன்வருகிறது.

இன்று இருக்கும் அரசியல் அமைப்பிற்கு எதிராக புரட்சி வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
பெரும்பாலான மக்களுக்கு எதிராக செயல்படுகிற அரசு அமைப்பு மாற்றியமைக்க தான் வேண்டும். முன்பு மன்னராட்சி காலத்தில் தான் மக்களுக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியாக அமைந்தது. அன்று வெடித்த புரட்சி தான் இன்று ஜனநாயக ஆட்சி அமலுக்கு வந்தது. ஆனால் மக்களின் சிறு சிறு கோரிக்கைகளை கூட கண்டுகொள்ளாத அரசிற்கு எதிராக புரட்சி உண்டாக வேண்டும். மார்க்சிய கோட்பாடுகள் கொண்ட ஆட்சி அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து.

கம்யூனிஸ்டுகள் போராளி இயக்கம், நக்சலைட் இயக்கம் என்று தொடங்கி தோல்வியுற்றது. அடையும் தொடர்ந்து மார்க்சியத்தை ஆதரிப்பதா?
பல பின்னடைவுகளை சந்தித்து தோல்வியுற்றாலும், மார்க்சியம் தவறானது என்பது தவறான கருத்து. இன்று இருக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் மனித வாழ்க்கையை சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு மாற்று மார்க்சியம் மட்டும் தான். சீன, ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொதுவுடைமை சமூகம் என்றுமே தவறாகாது என்பது மக்கள் அதிகாரத்தின் கருத்து.

தேர்தல் பாதை திருடர் பாதையா?
அதை பற்றி கருத்து கூற விரும்பவில்லை, ஆனால், தேர்தலால் இங்கு எதுவும் நடக்க வில்லை என்பது உண்மை. தேர்தலில் நின்று ஜெயித்தவர்கள் எல்லாம், அந்த பாதை அப்படித்தான் என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்.


Share the Article