Read in : English

Share the Article

நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ரசாயன உரம், பூச்சிக் கொல்லி சார்ந்த விவசாயத்துக்கு மாற்றான வழிமுறைகளில் இயற்கை விவசாயம் சார்ந்து கவனம் செலுத்த துவங்கியுள்ளனர் விவசாயிகள். சுய தேவை சார்ந்து, இயற்கை விவசாயம் முறையில் உற்பத்தி தற்போது பின்பற்றப்படுகிறது. உணவே மருந்து என கருத்து ரீதியான பிரசாரத்தின் வழியும் இது பரவி வருகிறது.

இதன் ஊடே, சென்னை போன்ற பெரு நகரங்களில், ‘நஞ்சற்றது’ என்ற பொருளில், ஆர்கானிக் தர முத்திரையுடன இயற்கை வேளாண்மை உணவுப் பொருட்கள் விற்பனை பெருகி வருகிறது. தனித்துவ அடையாளத்துடன் அதிக விலையில் கிடைக்கின்றன. அவை, உரிய தரச்சான்று முத்திரை பெற்றவை.

தரச்சான்று ஏதுமின்றி இவற்றின் ஊடாக பல பொருட்கள் மனம் போன போக்கில், பேச்சளவில் நம்பிக்கையூட்டி விற்கப்படுகின்றன. அவை நஞ்சற்ற உணவு என்ற உத்தரவாதத்துடன் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது, நுகர்வோரிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையான தரச்சான்றிதழ் பெற்ற, ஆர்கானிக் உணவு பொருட்களை தமிழகத்தில் விநியோகிக்கும் அமைப்பு, ஆரோக்கியம் ஆர்கானிக் புட்ஸ் நிறுவனம். இதன் நிறுவனர்களில் ஒருவர் ஆறுமுகசாமி. நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராகவும் பொறுப்பு வகிக்கிறார். தரச்சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனை சந்தையில் நிலவும் குழப்பநிலை பற்றி, ‘இன்மதி.காம்’ இணைய இதழிடம் விரிவாக பேசினார். அவருடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி:

ஆரோக்கியம் ஆர்கானிக் புட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆறுமுகசாமி

கேள்வி: நஞ்சற்றதாக கருதப்படும் ஆர்கானிக் உணவு உற்பத்தி, விற்பனை நிலவரம் தமிழகத்தில் எப்படி இருக்கிறது.
ஆறுமுகசாமி: ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. உற்பத்தியும் மேம்பட்டுள்ளது. சிறு விவசாயிகளிடமும் நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய சிந்தனை வளர்ந்து வருகிறது. சுய தேவைக்காக மட்டும் பல விவசாயிகள் ஆர்கானிக் சாகுபடி முறையை கடைபிடிக்கின்றனர். ஆனால், வணிக ரீதியில் இந்த உற்பத்தி மேம்படவில்லை. அதில் தேக்கம் நிலவுகிறது.

கேள்வி: இதற்கு காரணம் என்ன?
ஆறுமுகசாமி: ஆர்கானிக் உற்பத்தி நடைமுறை பற்றி சரியான புரிதல் இன்மை தான் காரணம். உரிய சந்தை வாய்ப்பு பற்றிய அறியாமையும் உள்ளது. விவசாயிகளுக்கு தன்னுணர்வு ஏற்பட்டால் மட்டுமே உற்பத்தி முறையில் மாற்றம் வரும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே கருதுகிறேன். சரியான வழிகாட்டுதலும் பயிற்சியும் கொடுக்கப்பட்டால், புரிதல் ஏற்படும். உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும்.

கேள்வி: இதை மேம்படுத்த ஏதாவது வழிமுறை உள்ளதா.
ஆறுமுகசாமி: விவசாயி முதலில் மன அளவில் முதலில் தயாராக வேண்டும். அதற்கு ஆர்கானிக் உற்பத்தி முறையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதை ஏற்படுத்தும் வழிமுறைதான் இப்போதைய தேவை. கொங்கு பகுதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சிலருக்கு ஆர்கானிக் செயல்முறைக்கு மாற விருப்பம் இருக்கும். ஆனால் சரியான வழிமுறை தெரியாது. விற்பனை வாய்ப்பு பற்றிய சந்தேகமே, புரிதல் இன்மைக்கு மற்றொரு காரணம்.

கேள்வி: தமிழகத்தில் இயற்கை விவசாயம் சார்ந்த ஆர்கானிக் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது?
ஆறுமுகசாமி: சந்தை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. சிறு விவசாயிகள் மிக குறைந்த அளவில் உற்பத்தி செய்கின்றனர். அதை உற்பத்தி செய்யும் வட்டாரத்திலே அதாவது உள்ளூரிலே விற்றால் பிரச்னை ஏதும் இல்லை. அந்த விவசாயியின் நன்மதிப்பே அந்த பொருள் விற்பதற்பதற்கு போதுமானது. தரச்சான்று எதுவும் தேவையில்லை.

ஆனால், வணிக ரீதியாக நகரத்தில் விற்க முயன்றால் தரச்சான்றிதழ் பெறுவது கட்டாயம். அத்துடன் போக்குவரத்து கட்டணம், ஏற்று கூலி, இறக்கு கூலி என செலவு கடுமையாகும். இந்த நடைமுறை எல்லாம் பொருளின் விலையை அதிகரிக்கும். வணிக நேக்கில் ஒரு பொருளை, நுகர்வோர் விரும்பும் தரத்தில் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே, விலை அதிகம் என்றாலும் விற்பனை வாய்ப்பு கிடைக்கும்.

சிலருக்கு ஆர்கானிக் செயல்முறைக்கு மாற விருப்பம் இருக்கும். ஆனால் சரியான வழிமுறை தெரியாது. விற்பனை வாய்ப்பு பற்றிய சந்தேகமே, புரிதல் இன்மைக்கு மற்றொரு காரணம்

கேள்வி: தமிழகத்தில் அப்படியான வாய்ப்புகள் உள்ளதா?
ஆறுமுகசாமி: மிகக் குறைவாகத்தான் உள்ளது. நுகர்வோர் விரும்பும் பொருளை, உரிய தரத்தில் கொடுப்பதற்கான சூழல் மிகக் குறைவு. சிறு விவசாயிகளிடம் ஒருவித மனநிலை உள்ளது. ‘மிகவும் சிரமத்துடன் இயற்கை விவசாயத்தில் பொருளை உற்பத்தி செய்கிறேன். அதை, கேட்கும் விலை தந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று குரல் கொடுப்பர். உண்மையில் அந்த பொருள், நகரச் சந்தைக்கு ஏற்ற தரத்தில் இருக்காது. ஆனால், விவசாயியின் வேதனைக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நகர்ப்புற சந்தையில் இந்த குரல் புறக்கணிக்கப்படும். உள்ளூர் சந்தை என்றால் இந்த குரலுக்கு சற்று மதிப்பிருக்கும்.

கேள்வி: இது போன்ற நிலைக்கு காரணம் என்ன?
ஆறுமுகசாமி: தமிழகத்தில் விவசாய நிலம் துண்டு பட்டு கிடக்கிறது. அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என குறைந்த அளவு நிலத்தில் விவசாயியால், வணிக ரீதியான ஆர்கானிக் உற்பத்தி முறையை செயல்படுத்துவது கடினம். நுகர்வோரை திருப்தி படுத்தும் தரத்தில் பொருளை தர முடியாது.

வட மாநிலங்கள், ஐரோப்பிய நாடுகளில், பல ஆயிரம எக்டேர் நிலத்தில் ஆர்கானிக் முறை உற்பத்தி நடக்கிறது. நுகர்வோர் விரும்பும் தரத்தில் உற்பத்தி செய்ய முடிகிறது. அது சந்தையை நிறைவு செய்துவருகிறது. விலையில் கேள்வியின்றி விற்பனையாகிறது. தமிழகத்தில் நிலைமை அப்படி இல்லை.

கேள்வி: ஆர்கானிக் முத்திரை பெயரில் பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறதே.
ஆறுமுகசாமி: தமிழகத்தில் ஆர்கானிக் உணவு பெயரில் இரண்டு வித உற்பத்தி நடக்கிறது. ஒன்று, முறைப்படுத்திய உற்பத்தி முறை. பல நுாறு எக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் இதை செய்கின்றனர். பொருட்கள் உரிய தரச்சான்று பெற்றதாக இருக்கும். நகர்ப்புற சந்தையில் இந்த பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகம்.
மற்றொன்று, சிறு விவசாயிகளின் உற்பத்தி. உள்ளூர் சந்தையில் இது விற்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்றிருக்காது.

சிறிய அளவல் தனியாக சிறு விவசாயி உற்பத்தி செய்ய முயலும்போது, சுற்றியுள்ள நிலங்களில் பயன்படுத்தும் ரசாயன உரம், பூச்சிக் கொல்லியின் பாதிப்பு, அந்த விவசாய உற்பத்தியிலும் எதிரொலிக்கும். விளை பொருளை ஆய்வுக்கு உட்படுத்தும் போதுதான் இது பற்றிய உண்மை புலப்படும். அதை நகரில் முறைப்படுத்தி சந்தையில் விற்க முடியாது.

கேள்வி: ஆர்கானிக் உற்பத்தி பொருட்களை தரப்படுத்தும் அமைப்புகள் உள்ளதா?
ஆறுமுகசாமி: நகர்ப்புற சந்தை மற்றும் ஏற்றுமதி ரக ஆர்கானிக் உணவுப் பொருளின் தரத்தை அபிடா, Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) என்ற அமைப்பு கண்காணிக்கிறது. அந்த அமைப்பு சுட்டிக்காட்டும் விதிப்படி ஒரு பொருள் மாதிரியை தரச் சோதைனை செய்ய செலவு அதிகம் பிடிக்கும். சிறு விவசாயியின் விளைபொருள் மாதிரியை, இது போன்ற தரச் சோதனைக்கு உட்படுத்த அதிக செலவாகும்.

கேள்வி: சிறு விவசாயி ஆர்கானிக் உற்பத்தி முறைக்கு மாறுவது இயலாத காரியமா?
ஆறுமுகசாமி: அப்படி சொல்ல முடியாது. ரசாயன உரத்தால் பழாய் போன நிலத்தை, இயற்கை முறைக்கு மாற்றும் செயல்முறைதான் ஆர்கானிக் உற்பத்தி முறையின் அடிப்படை. நிலத்தை சிறிது சிறிதாக மாற்றி, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி தவிர்த்து, உற்பத்தியை மேம்படுத்துவதுதான் இதன் நோக்கம். சிறு விவசாயியாலும் இதை செய்ய முடியும். அதன் வழி நஞ்சற்ற உணவு தடையின்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்.

சிறு விவசாயிகள் உற்பத்தி பொருட்களை உள்ளூரிலே சந்தை படுத்தினால் பிரச்னை வராது. நகரங்களில் ஆர்கானிக் என்ற பெயரில் சந்தையில் வரும் போது, தரச் சோதனைக்கு உள்ளாக வேண்டியது கட்டாயம்.

தமிழகத்தில் விவசாய நிலம் துண்டு பட்டு கிடக்கிறது. அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என குறைந்த அளவு நிலத்தில் விவசாயியால், வணிக ரீதியான ஆர்கானிக் உற்பத்தி முறையை செயல்படுத்துவது கடினம்

கேள்வி: ஆர்கானிக் உணவு பொருள் என்றாலே விலை அதிகம் என்ற மனநிலை உள்ளதே.
ஆறுமுகசாமி: பொருள் தரத்துக்கு ஏற்ப விலை சற்று அதிகமாக இருப்பது உணமைதான். குறிப்பாக, ஆர்கானிக் உற்பத்தி பொருள் மொத்த விற்பனையில், 20 சதவீதம் வரை விலை கூடுதலாக இருக்கும். சர்வதேச சந்தை நடைமுறை இது. அது தவிர்க்க முடியாது.
ஆனால், தரச்சான்று பெறாத சில பொருட்களுக்கு, சந்தை விலையை விட, 100 சதவீதம் அதிக விலை கேட்பதும் இன்று தமிழகத்தில் நடக்கிறது. இது, ஆர்கானிக் நடைமுறையை முற்றாக சிதைத்து விடும். நஞ்சற்ற உணவு என்ற நற்சிந்தனையின் அடிப்படையையே கெடுத்து விடும்.

ஆர்கானிக் விளைபொருள் என்பது, ஏதோ பண்டிகை நாளில் சாப்பிடும் சிறப்பு உணவு என்ற தவறான மனநிலையை நுகர்வோரிடம் ஏற்படுத்தி விடும். இன்று பலருக்கும் அந்த மனநிலைதான் உள்ளது. இது பரவாமல் தடுக்க வேண்டியது மிக ஆவசியம்.

கேள்வி: இதை முறைப்படுத்த வழிவகை இல்லைா?
ஆறுமுகசாமி: ஆர்கானிக் உணவு உற்பத்தி பொருட்களுக்கு, தேசிய, சர்வதேச அளவில் சான்றிதழ் பெறும் நடைமுறையை, அபிடா என்ற அமைப்பு முறைப்படுத்துகிறது. பெரிய உற்பத்தியாளரால், குறைந்தபட்சம், 10 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயியால் மட்டுமே, அபிடா வழிகாட்டுதல் படி இயற்கை உணவு சந்தை விற்பனைக்கு தரச்சான்று தகுதி பெற முடியும். இதற்கு கட்டணமும் மிக அதிகம் என்பதால் சிறு விவசாயிகள் பின்பற்றுவது கடினம். அதை எளிமையாக்கும் நடைமுறை வரும் வரை, இது போன்ற நிலை நீடிக்கும்.

இவ்வாறு விளக்கிய, ஆறுமுகசாமி, இயற்கை விளைபொருள், இன்டிஜீனிஸ் உணவு, பாரம்பரிய உணவு, முன்னோர் முட்டாளல்ல என்ற பெயர்களில் நடக்கும் விற்பனை உத்திகள் மற்றும் முறைகேடான பிரசாரங்கள் பற்றியும் தெளிவு படுத்தினார். அந்த கருத்துக்கள் தொடர்ச்சியாக அடுத்த பேட்டிக் கட்டுரையில் வெளியாகும்.


Share the Article

Read in : English