கேரள மீன் வளத்துறையினர், அம்மாநிலத்தில் மீன் பிடிக்கும் படகுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். படகுகள் 64 அடி நீளமே இருக்க வேண்டும், 58 வகையான மீன் குஞ்சுகளை பிடிக்க கூடாது, படகுகள் எந்த மாநிலத்தை சேர்ந்தவையோ அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கையால் கடந்த சில வருடங்களாக மீன் வளம் குறைந்த நிலையில், கடந்த வருடமும், இவ்வருடமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று காலை அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறியதாக எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் கடற்கரை பகுதியில் வெளிமாநில படகு ஒன்று அதிகாரிகளின் சோதனையில் பிடிக்கப்பட்டுள்ளது. அப்படகிற்கு, கேரள மீன் வளத்துறை அதிகாரிகள் ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.