கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்!

Forums Communities Farmers கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #9856
  Inmathi Staff
  Moderator

  மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.

  மடிவீக்க நோய்: கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது ரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  ஒரு மாட்டுக்குத் தேவைப்படும் மூலிகை, மருத்துவப் பொருள்களாக 250 கிராம சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் பொடி, 15 கிராம் அதாவது ஒரு கொட்டைப் பாக்கு அளவு சுண்ணாம்பு ஆகியவை தேவைப்படும்.

  மேற்கண்ட பொருள்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டுக் கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை மடிவீக்கம் குறையும் வரை குறைந்தது 5 நாள்களுக்குப் பூச வேண்டும். தினமும் புதிதாக மருந்து தயாரித்துக் கொள்ள வேண்டும்.

  வயிறு உப்புசம்: கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளால் ஏற்படக்கூடியது. இது மிக அதிகமான எளிதில் செரிக்கக்கூடிய தானிய வகை உணவு, ஈரமான பசுந்தீவனங்களை உண்பதால் ஏற்படுகிறது.
  இதைத் தவிர்க்க ஒரு மாட்டுக்கு வெற்றிலை 10 எண்ணிக்கை, பூண்டு 5 பல், பிரண்டை 10 எண்ணிக்கை, மிளகு 10 எண்ணிக்கை, வெங்காயம் 5 பல், சின்னசீரகம் 10 கிராம், இஞ்சி 100 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சிகிச்சை வாய்வழியாக இருக்க வேண்டும்.

  சின்னசீரகம், மிளகை இடித்து, பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து அக்கலவையை 100 கிராம் பனை வெல்லத்துடன் கலந்தபின் சிறுசிறு உருண்டைகளாக பிரித்து, கல் உப்பு தொட்டு மாட்டினுடைய நாக்கின் மேல் அழுத்தமாகத் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

  நன்றி:தினமணி

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This