8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ‘என் நிலம், என் உரிமை’ என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். சேலம் – சென்னை வரையிலான 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் அளவிடும் செய்யும் பணிகளும் காவல்துறையினரை வைத்து முடிக்கப்பட்டிருக்கின்றன . ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையால் 4500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சுமார் 1000 ஏக்கரில் அடர்வனங்களும் அழிக்கப்படுவதோடு 159 கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
6000 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தையும் கே.பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். எந்த வகையிலும் பயனளிக்காத எட்டுவழிச்சாலை திட்டம் தேவையில்லை என வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரையிலான 190 கி.மீ தொலைவிற்கு நடையனமாக செல்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் திரண்டுள்ளனர்.