ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான ஹரிராகவன் என்பவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்த வழக்கு விசாரணையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆஜரான பின்னர் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இன்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராகினார். அப்போது அவருக்கு உறுதுணையாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் ஆகியோரும் உடன் இருந்தனர். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அப்போது ஐகோர்ட் கிளை கடந்த 24ம் தேதி ஜாமீன் வழங்கி, நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது தெரிந்தும், 26ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் விஜயராகவனை கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒவ்வொரு தனி மனிதன் உரிமையும் முக்கியமானது, சில உத்தரவுகளில் கையெழுத்திடும் பொழுது ஒரு மனிதனின் தனிமனித உரிமைகள் மீறப்படுகிறதா, இல்லையா எனபதை ஆராய்ந்து தான் கையெழுத்திட வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை வழங்கினர். இதனைத் தொடர்நது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான ஹரிராகவன் என்பவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.