திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் ஐந்தாவது நாளாக சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முரசொலி செல்வம் ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விஜய் விசாரித்தார். பின்னர், மருத்துவமனையின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்றார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் என ஏராளமானோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.